(நீலம் இலக்கிய விழாவில் பேசியதை முன்வைத்து ஒரு கட்டுரைத் தொடர்) 1.சமூகப் போராளியும் எழுத்தாளனும்…

ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீஸர் நாடகத்தில் ஒரு காட்சி.

ஜூலியஸ் சீஸர் கொல்லப்பட்டதால் ரோமானியர்கள் பதற்றமடைகிறார்கள்.  அந்தக் கொந்தளிப்பான சூழலில் மார்க் ஆண்டனி அவனது பிரசித்தி பெற்ற இரங்கல் உரையை ஆற்றுகிறான்.  அந்த உரையின் காரணமாகத் தூண்டப்பட்டு கடும் கோபத்துக்கு ஆளான கூட்டம் ப்ரூட்டஸையும் அவன் நண்பர்களையும் கொல்லத் துடிக்கிறது.  நகரம் முழுவதும் கூச்சல் குழப்பம்.

இங்கே சின்னா என்பவனைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.  ஜூலியஸ் சீஸர் நாடகத்தில் இரண்டு சின்னா வருகிறார்கள்.  ஒரு சின்னா, சீஸரைக் கொல்லத் திட்டமிட்டவர்களில் ஒருவன்.  இன்னொரு சின்னா கவிஞன்.  எந்தத் தப்பும் செய்திராத அப்பாவி.

இப்போது நாடகத்தின் மூன்றாவது அங்கம், மூன்றாவது காட்சி. 

கவிஞன் சின்னா சீஸரின் நல்லடக்கத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்று கொண்டிருக்கிறான்.  இன்னவென்று புரியாத ஏதோவொரு துர்க்கனாவின் காரணமாக அவன் மனம் கலக்கமாக இருக்கிறது.   அப்போது அவனை ஒரு கும்பல் தடுத்து நிறுத்தி உன் பெயர் என்ன என்று கேட்கிறது.  சின்னா தன் பெயரைச் சொன்னதும் கும்பல் ‘இவன்தான் சதிகாரன் சின்னா’ என்று சந்தேகப்படுகிறது.  

உடனே சின்னா “ஐயோ, நான் கவிஞன் சின்னா, சதிகாரன் சின்னா அல்ல, என்னை விட்டு விடுங்கள்” என்று கூவுகிறான். 

“கவிஞன் சின்னாவா?  அப்படியானால் இவனை உடனே கொல்லுங்கள்” என்று கத்துகிறது கூட்டம். 

எழுத்தாளர்களை சமூகம் நடத்தும் விதம் இதுதான். ஐரோப்பிய சமூகத்தில் மார்க்கி தெ ஸாதுக்கும் (Marquis de Sade), ஆஸ்கர் வைல்டுக்கும், அந்த்தோனின் ஆர்த்தோவுக்கும் மற்றும் பல எழுத்தாளர்களுக்கும் நடந்தது இதுதான்.  சாக்ரடீஸ் காலத்திலேயே இது ஆரம்பித்து விட்டது. 

நன்றி: ஷ்ருதி டிவி

ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய உதாரணம் தருகிறேன், கேளுங்கள். 

1973, செப்டம்பர் 23 அன்று பாப்லோ நெரூதாவின் மரணம் நிகழ்கிறது.  இந்த மரணம் எப்படி நேர்ந்தது?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரான டாக்டர் அயெந்தேவின் நண்பர் பாப்லோ நெரூதா.  அயெந்தேவின் ஆட்சி ராணுவ அதிகாரி பினோசெத்தினால் கவிழ்க்கப்படுகிறது.  அயெந்தேவின் அதிபர் மாளிகை பினோசெத்தின் ராணுவத்தினால் குண்டுவீச்சில் அழிக்கப்படுகிறது.  அயெந்தே வெளிநாடு செல்ல விரும்பினால் அதற்கு ஏற்பாடு செய்து தரப்படும் என்று அறிவிக்கிறார் பினோசெத்.  ஆனால் அயெந்தே குண்டுவீச்சில் எரிந்து கொண்டிருக்கும் மாளிகையில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார்.

இந்தக் கொடூர சம்பவம் நடந்தது 1973, செப்டம்பர் 11 அன்று.  இன்றளவும் சீலேயில் செப்டம்பர் 11 என்றால் அது டாக்டர் அயெந்தேயின் மாளிகையில் ராணுவத் தளபதி பினோசெத் குண்டு வீசிய தினம்தான்.

மறுநாளே பதவிக்கு வந்த பினோசெத் தேசத்தில் உள்ள எல்லா எழுத்தாளர்களையும் பிடித்து சிறையில் அடைத்தான்.  முக்கியமான எழுத்தாளர்களைக் கொன்றான். 

தேதிகளை கவனியுங்கள்.  பினோசெத் பதவிக்கு வந்த பன்னிரண்டே தினங்களில் பாப்லோ நெரூதா மருத்துவமனையில் மெதுவாக வேலை செய்யும் விஷ மருந்துகளால் கொல்லப்பட்டார். 

விதவிதமான துப்பாக்கிகளை வைத்திருக்கும் நீங்கள் என் கவிதையைக் கண்டு ஏன் இப்படி அஞ்சுகிறீர்கள் என்று பாப்லோ நெரூதா பினேசெத்தின் சிப்பாய்களிடம் ஒருமுறை கேட்டிருக்கிறார். 

இத்தனைக்கும் பாப்லோ நெரூதா நோபல் விருது பெற்றவர்.  உலகம் முழுவதும் பிரபலமானவர்.

இதேபோல் தென்னமெரிக்க நாடுகளில் கொல்லப்பட்ட எழுத்தாளர்கள் ஆயிரக்கணக்கில் உண்டு. 

ஆனால் தமிழ் எழுத்தாளர்களின் நிலவரம் வேறு விதமானது. தமிழ் எழுத்தாளர்களை அரசாங்கம் கொல்லவில்லை.  சமூகம் கொன்றது.  சமூகம் இலக்கியம் படிப்பதில்லை. சமூகத்துக்கு இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாது.  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலக்கியவாதிகள் அரசர்களிடம் பிச்சை எடுத்து வாழ்ந்தனர்.  இப்போது அரசர்கள் இல்லையாதலால் பட்டினி கிடந்து சாகிறார்கள்.   

இங்கே புதுமைப்பித்தனுக்குக் கதை எப்படி எழுத வேண்டும் என்று ராஜாஜி கற்றுத் தருகிறார்.  ராஜாஜிக்கு இலக்கியத்துக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்படுகிறது.  புதுமைப்பித்தனுக்குப் பட்டினி.  கொடுத்தது தமிழ்ச் சமூகம்.  புதுமைப்பித்தன் மட்டும் அல்ல.  பல நூறு தமிழ் எழுத்தாளர்கள் உண்ண உணவின்றி செத்தார்கள்.  பாரதியின் இறுதி ஊர்வலத்துக்கு வந்தது எட்டு பேர்.  பாரதியின் வாரிசான ஞானக்கூத்தன் மரணத்துக்கு வந்தது பதினாறு பேர்.  தமிழ் எழுத்துலகின் சாதனையாளரான அசோகமித்திரன் மரணத்துக்கு வந்தது இருபத்து நாலு பேர்.

இதைத்தான் நான் என்னுடைய நீலம் இலக்கிய விழா உரையில் ஒரே வாக்கியத்தில் குறிப்பிட்டேன்.

“என் புத்தகங்கள் 150 பிரதிகள்தான் விற்கின்றன.  அதனால் நான் இப்போது ஆங்கிலத்தில் எழுதப் போய் விட்டேன்.”

நன்றி: ஷ்ருதி டிவி

இது இரண்டாயிரம் ஆண்டுகள் தமிழ் வளர்த்த எழுத்தாளர்களின் வாரிசான ஒருத்தனின் ஒப்பாரிப் பாடல்.  புதுமைப்பித்தனுக்குக் காச நோய் வந்தது.  மருந்து வாங்கக் காசு இல்லை.  நானும் அப்படி ஆகக் கூடாது என்றுதான் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தேன்.  எனக்கு என்ன ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று ஆசையா?

ஜப்பானிய எழுத்தாளன் ஹருகி முராகாமியின் நாவல் ஜப்பானிலேயே ஒரு கோடி பிரதி விற்கிறது.  ஜப்பானின் மக்கள் தொகை பன்னிரண்டு கோடி. 

தமிழ்நாட்டின் மக்கள் தொகை பத்து கோடி.  என் புத்தகம் விற்பது 150 பிரதி.

நான் ஆங்கிலத்தில் எழுதப் போவேனா, மாட்டேனா?

நான் பேசிய பிறகு சிவகாமிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது.  சிவகாமியின் எழுத்தையும் அவரது செயல்பாடுகளையும் பாராட்டிப் பேச வந்த தோழர் கல்யாணி தனது பேச்சின்போது நான் குறிப்பிட்ட மேற்கண்ட கருத்துக்குத் தன் பதிலைச் சொன்னார். 

இந்த பதில் நிறப்பிரிகை காலத்திலிருந்து தோழர் கல்யாணியாலும், பழமலையாலும், அ. மார்க்ஸ் போன்றவர்களாலும் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. 

”இப்படியெல்லாம் கழிவிரக்கம் கொள்ளாதீர்கள்.  அடுத்த தலைமுறைக்காக எழுதுங்கள்.” 

பழமலய் இன்னமும் பச்சையாகச் சொல்வார்,  உங்கள் உயிரைக் கொடுங்கள் என்று.  அதனால்தான் பிணம் தின்னும் சமூகம் என்று தமிழ்ச் சமூகத்தைத் திட்டி நெக்ரொஃபோலியா என்ற கதையை எழுதினேன்.  பாரதியைக் கொன்று தின்று விட்டு இப்போது பாரதி படத்தை எல்லா சுவரிலும் மாட்டி வைத்திருக்கிறார்களே, அதுதான் நான் குறிப்பிடும் நெக்ரொஃபீலியா.

இப்போது தோழர் கல்யாணியும் இதே நெக்ரொஃபீலியா வாதத்தை முன்வைக்கிறார். 

தோழர் கல்யாணி சொன்னார்.  150 பிரதி பற்றியெல்லாம் கவலைப்படாமல் அடுத்த தலைமுறைக்காக எழுதுங்கள். 

நெக்ரொஃபீலியாவின் கொடூரம் எப்படி இருக்கிறது பாருங்கள்!

”எழுத்தாளர்களே, உங்களுக்குக் கிடைத்த ஒரே வாழ்க்கையை 150 பிரதிகள் விற்கும் சமூகத்துக்காக எழுதித் தொலைத்து விட்டு, பட்டினி கிடந்து சாகுங்கள்.  அடுத்த தலைமுறை உங்கள் எழுத்தைப் படித்து உய்யும்.”  

நாற்பது ஆண்டுகளாக தோழர் கல்யாணி போன்ற சமூகப் போராளிகள் எழுத்தாளர்களைப் பார்த்து இந்த அறிவுரையைச் சொல்லி வருகிறார்கள்.

சரி தோழர், மூவாயிரம் ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டு வாழும் தலித் மக்களிடம் சென்று இதே வாதத்தை முன்வைப்பீர்களா?

”நீங்கள் அடிமைப்படுத்தப்படுவதெல்லாம் நீங்கள் செய்த கர்மா.  இந்தத் தலைமுறையில் நீங்கள் நல்லது செய்தால் அடுத்த தலைமுறையில் சரியாகி விடும்.”

சொல்லிப் பாருங்களேன்? 

என் தலைமுறையிலேயே 150 பிரதி வாங்குபவன் அடுத்த தலைமுறையில் எத்தனை பிரதி வாங்குவான்?  என் பெயரே தெரியாமல் போய் விடும். 

தலித் மக்களின் விடுதலை எப்படி சாத்தியம்?

கல்வியின் மூலம் என்றார் அம்பேத்கர்.

அதன் பொருள் என்ன?

எங்கிருந்தோ மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஆரியர் கல்வியைத் தன் வசப்படுத்தியதன் மூலம் எல்லோருக்கும் மூத்தோராக, அரசனுக்கும் ஆசி வழங்குவோராக மாறினர்.  அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியது ஆயுதத்தால் அல்ல.  கல்வியினால் என்பதை எல்லோரும் அறிவர்.

அதே கல்வியினால்தான் எந்த ஒடுக்கப்பட்ட சமூகமும் தன் விடுதலையை அடைய முடியும்.  அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும். 

இதே காரணத்தினால்தான் நானும் ஆங்கிலத்தில் எழுத முடிவு செய்தேன்.

தமிழ் மகத்தான மொழிதான்.  ஆனால் தமிழ்ச் சமூகம் ஃபிலிஸ்டைன் சமூகமாக, லும்ப்பன் சமூகமாக வாழ்கிறதே?  அப்படிப்பட்ட சமூகத்தில் எப்படி எழுத முடியும்?  நான் நூறு புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கிறேன்.  என் ராயல்டி தொகை 1,30,000 ரூ.  அதாவது, மாதம் 10000 ரூ.  தெருவில் இஸ்திரி போடு தொழிலாளியின் சம்பளமே 25000 ரூ. 

சொல்லுங்கள் தோழர், நான் ஏன் தமிழில் எழுத வேண்டும்?

”அடுத்த தலைமுறைக்காக எழுதுங்கள்.”

இதைத்தானே தோழர் பிராமணர்கள் தலித்துகளைப் பார்த்து சொன்னார்கள்? 

பொறுத்துக் கொள்ளுங்கள்.  நல்லது செய்யுங்கள்.  அடுத்த ஜென்மாவில் தலையிலிருந்து பிறக்கலாம். 

கேட்டு நடப்போமா?  பிறகு ஏன் எழுத்தாளனிடம் மட்டும் வந்து பிராமண வாதம் வைக்கிறீர்கள்?

ஏன் தெரியுமா?  சமூகப் போராளி என்ற தகுதி கொடுக்கும் திமிர். 

சமூகப் போராளி என்றால் அரசாங்கத்தின் க்யூ பிராஞ்ச் தொந்தரவு இருக்குமே ஒழிய சமூகம் உங்களைக் கொண்டாடும்.  அந்தணர் என்போர் அறவோர் என்றார் வள்ளுவர். அதேபோல், நீங்கள் அறத்திற்காகப் போராடுபவர் என்பதால் சமூகமே உங்களை அந்தணராக எண்ணிக் கொண்டாடும்.  ஒரு சமூகப் போராளி நவீன அந்தணர். அவரைக் கண்டு சமூகமே வணக்கம் செலுத்தும்.   விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, சமூகம் இந்த கௌரவத்தை சமூகப் போராளிகளுக்குக் கொடுத்தே தீரும்.  ஒரே ஒரு நாவலை எழுதிய அருந்ததி ராய் ஏன் உலகப் புகழ் பெற்றார் என்றால், அவரது சமூகப் போராளி முத்திரைதான் காரணம்.

இப்படிப் பேசுவதால் நான் ஏதோ சமூகப் போராட்டத்துக்கு எதிரி என்று நினைத்து விடாதீர்கள்.  கேரளத்தில் சி.கே. ஜானு, அஜிதா போன்ற போராளிகளோடு சமமாக நின்று பல போராட்டங்களில் கலந்து கொண்டவன் நான்.   சாரு நிவேதிதா என்ற பெயர் தமிழ்நாட்டை விட கேரளத்தில் பல மடங்கு பிரசித்தமானது. 

ஒரு தமிழ்ப் பத்திரிகையாளர் என்னிடம் கேட்டார், கேரளத்தின் சமூகப் போராட்டங்களில் கலந்து கொள்ளும் நீங்கள் ஏன் தமிழ்நாட்டில் கலந்து கொள்வதில்லை என்று.

என் பதில்:  தமிழ்நாட்டில் நான் சமூகத்தை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறேன்.

விளக்கம் கேட்டார்.  தமிழ்ச் சமூகம் லும்ப்பன் கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கும் சில பல சினிமாக்காரர்களின் பின்னால் போய்க்கொண்டிருக்கிறது.  அதற்கு எதிராகத்தானே நான் இயங்க வேண்டும்?

இது போக, நான் சொல்ல வருவது என்னவென்றால், சமூகப் போராளிக்கு தமிழ்ச் சமூகத்தில் எழுத்தாளர்களுக்கு இல்லாத ஒரு கௌரவம் இருக்கிறது.  சமூகப் போராளிகளுக்கு இங்கே சிலை கூட வைப்பார்கள். 

ஆனால் அதே தமிழ்ச் சமூகம் எழுத்தாளனை சமூக விரோதியாக நினைக்கிறது.  தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த நிலை.  சீலேயில் போய் நான் ஒரு எழுத்தாளன் என்று சொன்னாலே போதும், மதுபானக் கடைகளில் காசு வாங்க மாட்டார்கள்.   கிட்டத்தட்ட கேரளத்தையும் அப்படிச் சொல்லலாம்.  ஏன், இந்தியாவின் எல்லா மாநிலங்களிலுமே எழுத்தாளர்களை அடையாளம் தெரியும். நான் பெயர் அடையாளத்தைச் சொல்லவில்லை.  ஒரிஸாவின் ஒரு குக்கிராமத்தில் நான் வெற்றிலைப் பாக்கு வாங்கியபோது அந்தக் கடைக்காரச் சிறுவன் (பன்னிரண்டு வயது இருக்கும்) நான் எழுத்தாளன் என அறிந்து கொண்டு காசு வாங்க மாட்டேன் என்று சொல்லி விட்டான். 

சரி, தமிழ்ச் சமூகம் மட்டும் எழுத்தாளனை ஏன் சமூக விரோதியாகக் காண்கிறது? 

சாரு நிவேதிதா என்ற எழுத்தாளன் முன்வைக்கும் அழகியல் எப்படிப்பட்டது?  அதற்கும் தலித் அழகியலுக்கும் சம்பந்தம் என்ன? 

தயிர்வடை சென்ஸிபிலிட்டி என்றால் என்ன? 

தயிர்வடை சென்ஸிபிலிட்டிக்கும் மேற்குறிப்பிட்ட இரண்டு அழகியல்களுக்கும் என்ன தொடர்பு? 

நாளை பார்ப்போம். 

நாளைய கட்டுரை:

தயிர்வடை சென்ஸிபிலிட்டியும் மாற்று அழகியலும்.