ல
சென்ற ஆண்டு ஹிந்து பத்திரிகையின் இலக்கிய விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். ஆங்கில வாசகர்கள். ஆங்கிலத்தில் உரையாடல். நந்தினியும் நானும். அந்தப் பார்வையாளர்களுக்கு என் பெயர் தெரியாது என்பதால் நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டேன். தமிழில் நான் நூறு புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கிறேன். நான் தமிழ் இலக்கியத்தின் சூப்பர் ஸ்டார்.
பேசி முடித்ததும் என் நண்பர் வந்தார். “நீங்கள் உங்களைப் பற்றி சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக்கொண்டது மிகவும் ரசக்குறைவாக இருந்தது, அப்படிச் சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை, அப்படிச் சொல்பவர்களோடு எனக்குப் பழகப் பிடிக்காது” (அதாவது, வேறு யாரேனும் அப்படிச் சொல்லியிருந்தால் நான் அவரோடு பழக மாட்டேன் என்ற அர்த்தத்தில்) என்றார்.
என்றைக்கு நான் மற்றவர்களுக்குப் பிடிப்பது போல் பேசியோ எழுதியோ இருக்கிறேன். எப்போதுமே சமூகத்துக்குப் பிடிக்காததைத்தானே எழுதிக்கொண்டிருக்கிறேன்?
நூறு புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கும் ஒருவனை – 2000 பேர் கொள்ளளவு கொண்ட காமராஜர் அரங்கத்தில் தொடர்ந்து இரண்டு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகளை அரங்கம் நிறைந்த பார்வையாளர்களோடு நடத்திய ஒரு எழுத்தாளன் தன்னைப் பற்றி இலக்கிய சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக்கொள்வதில் என்ன பிழை? நிகழ்ச்சிக்கு வந்திருந்த தருண் தேஜ்பால் நீ ஒரு ராக்ஸ்டார் போல் வாழ்கிறாய் என்றார்.
சமூகம் சொல்ல வேண்டும். சொல்லவில்லை. நானே சொல்லிக்கொள்கிறேன். அதுவும் எந்த இடத்தில் சொன்னேன்? என்னைப் பற்றி எதுவுமே தெரியாத ஒரு கூட்டத்தில். என்னைப் பொருத்தவரை அப்படிச் சொல்லிக்கொண்டது ‘என் உயரம் ஐந்தரை அடி, நான் நூறு புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்’ என்று சொல்லிக்கொள்வதைப் போன்றதுதான். ஏனென்றால், எனக்கு வரும் கடிதங்களில்கூட யாரேனும் அன்புள்ள எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களுக்கு என்று எழுதினால் தயவுசெய்து எழுத்தாளர் என்ற அடைமொழி இல்லாமல் எழுதுங்கள் என்று சொல்லுவேன்.
வேடிக்கை என்னவென்றால், அதற்கு முந்தின ஆண்டுதான் என் நண்பரே சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் தன் குடும்பத்தோடு புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். புகைப்படத்தில் நண்பர் மட்டும் நன்கு சிரித்தபடி இருந்தார்.
ரஜினிகாந்த் ஏன் தன்னைப் பற்றி சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக்கொள்வதில்லை என்றால், சமூகம் சொல்கிறது. அவர் பெயரே ரஜினிகாந்த் இல்லை. சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். ஆனால் சமூகத்துக்கு என்னைத் தெரியாது என்பதால் நானே சொல்லிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
விஷயம் என்னவென்றால், நண்பர் சொன்ன விமர்சனம் எனக்கு தினமும் காலையில் எழுந்ததும் ஞாபகம் வந்துவிடுகிறது. அது எனக்கு மன உளைச்சலைத் தருகிறது. அதனால்தான் சொல்கிறேன், என்னைப் பற்றி உங்களுக்கு விமர்சனம் இருந்தால் அதை என்னிடம் சொல்லாதீர்கள். நீ இன்னும் சாகவில்லையா என்று கேட்டு கூட எனக்குக் கடிதங்கள் வருகின்றன. அதற்கு நான் கவலைப்பட்டேனா? ஆனால் என் நண்பர்களே என்னை விமர்சித்தால் அது எனக்கு தினமும் ஞாபகம் வந்து என் லயத்தைக் கெடுக்கிறது.
நீங்கள் நினைப்பது போலவே நானும் நினைக்க வேண்டுமா? நான் என்ன பேச வேண்டும், என்ன பேசக் கூடாது என்பதை நிர்ணயிக்க நீங்கள் யார்? இலக்கியம் கற்பித்த ஒரு ஆசானிடம் சென்று “நீங்கள் அப்படிப் பேசியது ரசக்குறைவாக இருந்தது” என்று சொல்ல எத்தனை ஆணவம் இருக்க வேண்டும்? இதைத்தான் நான் கண்டிக்கிறேன். அடுத்தவரின் சிந்தனையில் குறுக்கிட உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. நான் என்னை இலக்கிய சூப்பர் ஸ்டார் என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கையின் மீது மூத்திரம் அடிக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
என்னைப் பற்றிய என் நம்பிக்கைதான் என்னை சுவாசிக்க வைக்கிறது. அந்த நம்பிக்கைதான் என்னை ஒரே மாதத்தில் ஒரு நாவலை எழுத வைக்கிறது. பெட்டியோவும் அன்புவும் ஒவ்வொரு மாதத்தில் எழுதியதுதான்.
சமீபத்தில் நான் எழுதிக்கொண்டிருக்கும் Anatomy of Dissonance நாவலின் ஒரு அத்தியாயத்தை என் நண்பர் ஒருவருக்கு அனுப்பியிருந்தேன். ஒரே மணி நேரத்தில் மூன்று முறை படித்து விட்டு அவர் எழுதியிருந்த பதில் இது:
My Dear Charu,
I got the file and went through it thrice
It has come out extra/ordinarily beautiful in English.though it unavoidably reminds me of Sanyel Beckett and Franz Kafka in its depth and gravity, it also has a unique and original voice of its own. Am so happy and very delighted to read the text, which vividly depicts the contemporary existential predicament very profoundly and powerfully..
Even the title of the novel “Anstomy of Dissonance”has come out beautifully well.
Am very eager to know how you are going to take it further..
I only pray to God to bestow upon you sufficient strength and undivided focus to scale greater heights in your English writing..
With lots of Love & Regards,
இதனால்தான் நான் என்னை லிட் ரரி சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக்கொள்கிறேன்.
இப்போது இந்த சூப்பர் ஸ்டாரின் இரண்டு புதிய புத்தகங்கள் வெளிவருகின்றன.
ஏற்கனவே வாங்கியது போல் 150 பிரதிகள் விற்றால் திருப்பதியில் மொட்டை போட்டுக் கொள்ளலாம் என்று வேண்டுதல். பார்க்கலாம்.
இரண்டு புத்தகங்களின் யூஆர் எல் கீழே :
இன்ஸ்பெக்டர் செண்பகராமனும் திருவல்லிக்கேணி டாஸ்மாக்கும்: சிறுகதைத் தொகுதி
https://tinyurl.com/Inspector-Shenba-PREBOOK
வால்ட்டேரை எப்படி நாம் கைது செய்ய முடியும்? கட்டுரைகள்
https://tinyurl.com/Volterai-PREBOOK
.