நரகம்

ArtReview Asia பத்திரிகையில் ஏன் எப்போதும் நம் நாட்டைப் பற்றித் தவறாகவே எழுதுகிறீர்கள் என்று பல நண்பர்கள் என்னிடம் கேட்பதுண்டு. அப்படிப்பட்ட கேள்வியை எதிர்கொள்ளும் போதெல்லாம் மலத்தைக் கரைத்து என் வாயில் ஊற்றுவதைப் போலவே உணர்ந்திருக்கிறேன். அதிலும் அப்படிக் கேட்பவர்கள் பெண்கள். அந்தப் பெண்களால் இரவு எட்டு மணிக்கு மேல் தெருவில் நடமாட முடிகிறதா? வன்கலவி செய்து கொன்று விடுவார்கள். வன்கலவி செய்பவர்கள் என்ன நரகத்திலிருந்தா குதிக்கிறார்கள்? பக்கத்து வீட்டு ஆறு வயதுக் குழந்தையை வன்கலவி செய்து கொன்றவன் ஒரு 25 வயது சாஃப்ட்வேர் எஞ்ஜினியர். மூன்று தினங்களுக்கு முன் என் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த அவந்திகாவின் கழுத்து செயினைப் பறிக்க முயன்றிருக்கிறான் ஹெல்மெட்டில் வந்த பைக் திருடன். இங்கே எங்கள் தெருவில் வாரம் ஒரு முறை – கவனியுங்கள் – வாரம் ஒருமுறை செயின் பறிப்பு நடக்கிறது.

பெண்களால் தெருவில் நடமாடவே முடியவில்லை. சினிமா நடிகர்கள் 30 கோடி 40 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டு அது போதாமல் முதல் மந்திரி நாற்காலியிலும் உட்கார முயற்சி செய்கிறார்கள். இங்கே துப்புரவுத் தொழிலாளி 6000 ரூ சம்பளத்தில் நக்கிக் கொண்டிருக்கிறான்.

மேட்டுக்குடியில் வாழும் குழந்தைகள் பத்தாம் வகுப்பிலேயே சரளமாக ஆங்கிலம் பேசுகின்றன. உலக அறிவில் அசத்துகின்றன. படித்து முடித்த கையோடு மாதம் ரெண்டு லட்சம் சம்பளம். இல்லாவிட்டால் அமெரிக்காவில் வேலை. ஆனால் கிராமத்துப் பள்ளிக்கூடங்களில் அஞ்சு வகுப்புகளுக்கும் ஒரே வாத்தியார் தான். அதிலும் ரெண்டு மணி நேரம்தான் வருவார். அந்தப் பள்ளிக்கூடங்களுக்கு பிள்ளைகள் அஞ்சு கிலோமீட்டர் தூரம் நடந்து வர வேண்டும். அஞ்சு கிலோமீட்டர் நடந்து வீடு திரும்ப வேண்டும். எதற்கு? அஞ்சாம் வகுப்பு வரை ஒரே ஆசிரியர், அதிலும் ரெண்டு மணி நேரம் வரும் ஆசிரியரைக் கொண்ட பள்ளிக்கூடத்துக்கு. குழந்தை பள்ளிக்கூடம் போய் விட்டால் வீட்டில் ஒரு கை கூலி குறையும். குடும்பம் பட்டினி கிடக்கும் என்பதால் பெண் குழந்தைகளைப் பள்ளிக்குப் போகாதே என்று அடிக்கும் பெற்றோர்கள். முன்னாள் துணைவேந்தர் வே. வசந்திதேவியிடம் அந்தக் குழந்தைகள் அழுது புலம்பியிருக்கின்றனர். எதற்கு? எங்கள் பள்ளிக்கூடத்துக்கு ஆசிரியர் போடச் சொல்லுங்கள் என்று.

நம் நாட்டைப் பற்றிப் பெருமையாக எழுத என்ன இருக்கிறது நண்பர்களே? சோழர் காலத்துக் கோவில் சிற்பங்களை எழுதவா? உங்கள் மனசாட்சியைத் தொட்டு நான் மேலே எழுதியுள்ளவைகளுக்கு பதில் சொல்லுங்கள். நீங்கள் அப்படி என்னிடம் சொல்லும் போதெல்லாம் எனக்கு ரத்தக் கண்ணீர் வருகிறது. என் எழுத்து எல்லாவற்றையும் படித்து விட்டுமா இப்படி என்னிடம் கேட்கிறீர்கள்?

ஒவ்வொரு ஏரியாவிலும் அரசியல்வாதிகள்தான் லோக்கல் தாதாக்களாக வலம் வருகிறார்கள். மைலாப்பூரில் அந்தப் பிரச்சினை இல்லை என்பதற்காக தேசமே அப்படி இருக்கிறது என்று நினைக்கக் கூடாது இல்லையா?

இப்போது மெர்சல் பிரச்சினை ரெண்டு நாட்களுக்கு மறந்து போகும். தன் இரண்டு குழந்தைகளையும் நெருப்பில் தீய்த்து விட்டுத் தங்களையும் தீயூட்டிக் கொண்ட அந்தத் தம்பதி நமக்கு என்ன செய்தி சொல்கிறார்கள் தெரிகிறதா? இது ஒரு தாக்குதல். அவர்கள் வாங்கிய ஒன்றரை லட்சத்துக்கு இரண்டரை லட்சம் ரூபாய் வட்டியே கட்டி விட்டார்கள். ஆனாலும் கடன் கொடுத்தவர்கள் லோக்கல் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் இவர்களிடம் லஞ்சம் கொடுத்து இந்தக் குடும்பத்தை மிரட்டி இருக்கிறார்கள். போலீஸே மிரட்டியிருக்கிறது. கலெக்டரிடம் வந்து ஆறு முறை மனு கொடுத்துப் பார்த்தார் தீக்குளித்தவர். கலெக்டர் யார்? மேட்டுக்குடிகளின் பாதுகாவலர். ஏழைகளின் எதிரி. அவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. போலீஸ் மிரட்டுகிறது. பார்த்தார். தன் மீதும் மனைவி மீதும் தன்னுடைய இரண்டு குழந்தைகள் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொளுத்திக் கொண்டார். வேறு என்னடா செய்ய முடியும் இந்த நாட்டில்? செய்தால் நக்ஸலைட் என்று சொல்லி சாமானில் மின்சாரம் பாய்ச்சுவாய்.

வெறும் பிட் நோட்டீஸ் கொடுத்த மாணவியையே நக்ஸலைட் என்று சொல்லி குண்டர் சட்டத்தில் அடைத்த அரசாயிற்றே இது?

இந்த முறை ஆர்ட் ரெவ்யூ ஏஷியாவில் சினிமா நடிகர்களை ஒரு வாங்கு வாங்கியிருக்கிறேன். அடுத்த முறை மேலே சொன்ன விஷயங்களையெல்லாம் எழுத இருக்கிறேன். நான் சாகும் வரை இந்த தேசத்தின் அதிகார வர்க்கத்தின் மீதும் மேட்டுக்குடியின் மீதும் காறித் துப்பிக் கொண்டே தான் இருப்பேன்.

இந்தக் கொலைகார நாட்டில் வாழாமல் ஐரோப்பா சென்றிருப்பேன். குழந்தைகளைப் போன்ற என் நாய்கள் நான் இல்லாமல் செத்துப் போகும். அதனால் இந்த நாதாரி நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறேண்டா assholes…