ரெண்டு பேர்

எனக்கு இரண்டு ஸ்வீகார புத்திரர்கள்.  ரெண்டு பேர் மீதுமே எனக்குப் படு காட்டமான பொறாமை எப்போதுமே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் – நம்மால் முடியாததைச் செய்கிறான்களே என்று.  ரொம்ப முக்கியமான பொறாமை, முதல்வன் முகநூலில் போடும் போஸ்டுகளுக்கு அழகிகளும் பேரழகிகளும் உலகப் பேரழகிகளும் போட்டி போட்டுக் கொண்டு போடும் லைக்ஸ்.  அப்படி ஒவ்வொரு லைக் விழும் போதும் அடியேனுக்கு டிஸ்லைக் தான்.  எனக்குத் தெரிந்த அழகிகள், பேரழகிகளிடம் அவனுக்கு லைக் போடாதீர்கள் என்று கண்டித்தும் இருக்கிறேன்.  ஆனால் ஏன் என்று சொன்னதில்லை.  ஏனென்றால், எனக்கே ஏன் என்று தெரியாது.  மேலும், பச்சையாக “பொறாமைதான் காரணம்” என்று அழகிகளிடமும், பேரழகிகளிடமும், உலகப் பேரழகிகளிடமும் வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?  நம்மைப் பற்றிக் கேவலமாக நினைத்து விட்டால்?

சின்னவன் அமெரிக்காவுக்குச் சுற்றுலா போய் அங்கேயே மாதக் கணக்கில் தங்கி அமெரிக்கனைப் போலவே தோற்றமும் கொண்டு விட்டான்.  சரி, இவன் இனி இங்கே வர மாட்டான் என்று அவனை நான் மறந்து விட்டேன்.  அடப் பாவி, நமக்கு அறுபத்தைந்திலும் அமெரிக்க மண்ணை மிதிக்க முடியவில்லை; இந்தத் தறுதலைப் புள்ளை முப்பதிலேயே உலகம் சுற்றுகிறதே என்ற பொறாமை வேறு நெருப்பாய் தகித்துக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் இன்று மூத்தவனுக்கு போன் போட்டு, 19-ஆம் தேதி வந்துருவீல்ல என்று கேட்டேன்.  அதுதான் ஏற்கனவே வந்துட்டனே, இப்போ மெட்றாஸ்லதான் இருக்கேன் என்று பதில் வந்தது.  ”சரி, அது இருக்கட்டும், என்னை நீங்கள் பொறுக்கிட்டுத் திரியிறான்னு சொன்னதா கேள்விப்பட்டேன். என்னை நீங்கள் என்ன வேணும்னாலும் திட்டலாம்; உங்களுக்கு அந்த உரிமை இருக்கு” என்று சொல்லி மேலும் ஏதேதோ சொல்லி அன்பைப் பொழிந்தான்.  அவன் சொன்னதெல்லாம் சத்தியமான வார்த்தை.  போலியான அன்பு அல்ல.  ஆனால் எது இடித்தது என்றால், எந்த முட்டாப் புடுங்கி நான் அவனைப் பொறுக்கிட்டுத் திரியிறான் என்று சொன்னது?  நான் அதை விடக் கேவலமாக அல்லவா திட்டினேன்?  பொறுக்கி என்பது பாராட்டு வார்த்தை அல்லவா?  நானே 57 வயது வரை பொறுக்கியாகத் திரிந்தவன் தானே?  கடந்த எட்டு ஆண்டுகளாகத்தானே நான் கனவானாக மாறியிருக்கிறேன்?  கலைஞன் என்பவன் பொறுக்கியாகத்தானே திரிய வேண்டும்?

சரி, நான் அவனைக் கேவலமாகத் திட்டியது என்ன என்று இங்கே சொல்லி விடுகிறேன்.  உலகில் எங்காவது சுனாமி, பூகம்பம், எரிமலை வெடிப்பு என்று வந்தால் இந்தப் புடுங்கி அங்கே முதல் ஆளாகப் போய் நின்று கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ப்ரெட், ஜாம், ஜமுக்காளம் என்று விநியோகம் செய்து கொண்டிருப்பான்.  பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஸானிட்டரி நாப்கின்களும் வாங்கி அளிப்பான்.  லாரி லாரியாக ஸானிடரி நாப்கின்களே போய்ச் சேரும்.  ஓ, அவ்ளோ பெரிய பணக்காரனா என்று கேட்கிறீர்களா?  ம்ஹும்.  கொஞ்சம் கையில் பசை உண்டு.  அவ்ளோதான்.  இதெல்லாம் ப்யூர் மனிதாபிமானம்.  மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.   இதைத்தான் வண்டை வண்டையாகத் திட்டிக் கொண்டிருந்தேன்.  டேய், உன் தகப்பன் நான் சீலே போக வேண்டும், ப்ரஸீல் போக வேண்டும் என்று 30 வருடமாகக் கத்திக் கொண்டிருக்கிறேன்; அதுக்குப் பணம் இல்லை; நீ ஒரு individual தாயளி, உனக்கு என்னடா மனிதாபிமான மயிரு?  இதெல்லாம்தான் என் வசை.  மயிரு என்றது இங்கே பொதுவெளியில் நாகரீகம் கருதி.  வாஸ்தவத்தில் அது வேறு வார்த்தை.

இப்போது அது – எது, மூத்ததுதான் – நினைத்தாலும் என்னை சீலே அனுப்ப முடியாது.  காஃப்காவின் கே திடீரென்று ஒருநாள் கரப்பான்பூச்சியாக மாறியது போல் இந்தப் பயல் திடீரென்று டாங்கியாக மாறி விட்டான்.  சென்னை வந்திருக்கிறானா?  வா, லஞ்சுக்குப் போகலாம் என்றேன்.  குடித்துக் கொண்டிருக்கிறானாம்.  போடா புடுங்கி.  போதையில் இருப்பவர்களைச் சந்திப்பதில்லை என்று நீண்ட நெடுங்காலமாக நான் முடிவு எடுத்திருக்கிறேன்.  லயம் பிசிறும் என்பது மட்டுமே காரணம்.  உன் லயம் ஒரு இடத்தில் இருக்கும்.  என் லயம் வேறு ஒரு இடத்தில் இருக்கும்.  ரெண்டும் சேராது.  கஷ்டம்.

பேசிக் கொண்டிருக்கும் போதே ”இளையவன் சொன்னான், ’நம் அப்பனைப் பாரு; யார் யாரையோ அழைத்திருக்கிறார்.  என்னை அழைக்கவில்லை’ என்று” என்றான் மூத்தவன்.  ஓ, அவன் எப்போது அமெரிக்காவிலிருந்து வந்தான்?  ”இதோ இங்கேதான் என் பக்கத்தில் இருக்கிறான்.”

ஆமா, அமெரிக்காவிலிருந்து வந்தா எனக்கு போன் பண்ண வேண்டாமா?

பண்ணியிருப்பேன், நீங்க திட்டுவீங்களோன்னு பயம்.

இதோ திட்டிட்டேன்.