ஒரு கடிதம்

வணக்கம் ,                     

நான் உங்கள் நெடுநாள் வாசகன்.ஆம் நானும் ஒரு பிராமணன்தான்.அதை சொன்னாலே தமிழ்நாட்டில் எள்ளிநகையாடப்படுவேன் என்று தெரியும்.அதில் விதிவிலக்காக இருந்த ஒரே எழுத்தாளர் நீங்கள்தான்.தமிழ்நாட்டின் அத்தனை எழுத்தாளர்களும் இடதுசாரி-அம்பேத்கரிய-பெரியாரியவாதிகளாக பிராமணர்களை வசைபாடிக்கொண்டிருந்த போது அவர்களுக்கு ஆதரவாக எழுந்த ஒரே குரல் உங்களுடையது.உங்கள் எழுத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட காரணம் நீங்கள் எவர் மீதும் வெறுப்பை உமிழாது இருப்பவர் என்பதாலேயே!இங்கே இஸ்லாமியர்களையோ கிறிஸ்தவர்களையோ திமுகவினரையோ  கிண்டல் செய்துவிட்டு வெளியே நடமாடிவிட முடியாது .ஆனால் பிராமணர்களை எப்படி வேண்டுமானாலும் வசைபாடலாம்!சினிமாவில் இஸ்லாமியர்களை தீவிரவாதியா காட்டுறான் என்று கூச்சல் போடுவோர் ஒருவர் கூட அதே சினிமாவில் பிராமணர்கள் இழிவுபடுத்தப்பட்ட விதம் குறித்து வாய் திறக்க மாட்டார்கள்…ஆனால் சமீப காலமாக தாங்களும் இந்த பிராமண வசை பாடும் வைபவத்தில் இணைந்துள்ளதை காண்கிறேன்.இபாவின் நாடக அரங்கேற்றம் நடந்த நிகழ்வரங்கில் அத்தனை பேரும் பிராமணர்கள்.பாத்தாலே தெரியாதா?என்கிறீர்கள்.அப்படியா?தயாநிதி மாறன்,தமிழச்சி தங்க பாண்டியன்,எம்ஜி ஆர் போன்றோரை பார்த்தால் பிராமணர்கள் போலத்தான் இருக்கும்.நீங்கள் மறைமுகமாக சாட வருவது என்னவெனில் பிராமணர்கள் உடல் உழைப்பு செய்யாததால் அவர்கள் சிகப்பாக உள்ளார்கள் என்பதே!மேற்குறிப்பிட்ட நபர்கள் கைவண்டி இழுக்கிறார்களா?சென்ற தலைமுறையில் நிறம் கறுத்து(நான் உங்களை போல தோல் நிறத்தை வைத்து ஒரு நபரின் சாதியை கணிப்பதில்லை)இருந்த பிராமணர் அல்லாதோரின் பிள்ளைகள் இன்று சிகப்பாக பாரின் ரிட்டர்ன் போலத்தான் இருக்கிறார்கள்.அதற்கு காரணம் வாழ்வியல் மாற்றம்.நீங்கள் அருகில் இருக்கும் ஏதேனும் பள்ளிக்கு சென்று நான் சொன்னதை உறுதி செய்து கொள்ளலாம்!மேலும் இனியும் இந்த பிராமண எதிர்ப்பு சுழலில் சிக்காமல் வெளியே வர வாழ்த்துக்கள்!                                                                                                      -விக்னேஷ்.

டியர் விக்னேஷ்,

காலையில் எழுந்ததும் நான் கண் விழிப்பதே ங்கொம்மா, ங்கோத்தா என்று என்னை வசை பாடும் கடிதங்களைப் பார்த்துத்தான். படிப்பேன். கோபப்பட மாட்டேன். அவர்களுக்காகப் பிரார்த்திப்பேன். ஏனென்றால், வெறுப்பு குஷ்டம் போன்றது. உங்கள் கடிதத்தில் அப்படிப்பட்ட வெறுப்பு இல்லை. ஆனால் எனக்கு வரும் ங்கொம்மா, ங்கோத்தா கடிதங்களை விட உங்கள் கடிதம் மோசமானது. அவர்களாவது என் மீது வெறுப்பில் எழுதுகிறார்கள். அவர்களைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் சாதி மதம் இனம் தேசம் கடந்து ஒரு நாடோடியைப் போல் வாழ்ந்து வரும் என்னைப் பார்த்து பிராமணத் துவேஷி என்று விடுதலை வீரமணியோடு சேர்த்து எழுதும் உங்களை என்ன சொல்வது என்று புரியவில்லை. உங்களுக்கு நான் எழுதியது புரியவில்லை. அல்லது உங்களுக்குப் புரிகிறாற்போல் எனக்கு எழுதத் தெரியவில்லை.

எத்தனையோ வசைகளைக் கடந்து வருகிறேன். இப்போது பிராமணத் துவேஷி என்ற அதிபயங்கரமான வசையையும் கடக்க வேண்டும். எதார்த்தவாதி வெகுஜன விரோதி. உங்களோடு இனியும் நான் தொடர்பு கொள்ள விரும்பவில்லை. பிராமண சாதியில் பிறந்த என் எல்லா நண்பர்களுக்கும் அந்தக் கட்டுரை பிராமண துவேஷமாகத் தெரியவில்லை. உங்களுக்கு மட்டும்தான் தெரிகிறது. இந்த தேசத்தில் சாதி வெறி தலைவிரித்து ஆடுகிறது. எப்போது ஒவ்வொரு இந்தியனும் தான் பிறந்த சாதியிலிருந்து வெளியே வருகிறானோ அப்போதுதான் இந்த நாசமாகப் போன நாடு உருப்படும்.

இனிமேல் நீங்கள் எனக்கு எழுதினால் அதைப் படிக்கக் கூட மாட்டேன்.

சாரு