கேம் ஓவர்

என்னுடைய வாசகர் வட்டத்தின் உள்ளே நுழைய ஒரு எளிய வழிமுறையைக் கையாளுங்கள் என்றால் ஒருத்தர் கூடக் கேட்பதில்லை. இது பற்றி சுமார் 50 முறையாவது எழுதியிருப்பேன். கொஞ்சமும் பயனில்லை. தொட்டில் பழக்கத்தை விடுவேனா என்கிறார்கள். பச்சை விளக்கு என்றால் போகலாம்; சிவப்பு விளக்கு என்றால் நிற்க வேண்டும் என்ற சாதாரணமான ஒரு விதிமுறை இது.  நான்கு ஐந்து பேர் இருக்கும் சபையில் நீங்கள் மட்டுமே அரை மணி நேரம், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என்று எடுத்துக் கொண்டு பேசி அராஜகம் செய்யாதீர்கள் என்று நான் ஐம்பது முறை எழுதிவிட்டேன்.  யாருமே கேட்பதில்லை.  மற்றவன் உங்கள் பேச்சைக் கேட்கத் தயாராக இருக்கிறானா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளாமல் நீங்களே மொத்த நேரத்தையும் எடுத்துக் கொண்டு பேசுவது சர்வாதிகாரம் இல்லையா?  நம் நட்புக்குள்ளேயே நாம் சர்வாதிகாரிகளாக இருக்க வேண்டுமா? 

எத்தனையோ சம்பவங்களை எழுதி விட்டேன்.  பெங்களூருக்கு என்னோடு வந்த நண்பர் பெங்களூரில் அராத்து வீட்டில் கொஞ்சமும் நிறுத்தாமல் ஐந்து மணி நேரம் பேசினார். நாங்கள் ஏழெட்டு பேர் இருந்தோம்.  ராஜேஷ் “இப்படியே நீ மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் உன்னை உதைப்பேன்” என்று சொல்ல பெரிய ரசாபாசமே ஆகி விட்டது. நான் ஐந்து மணி நேரம் பேசியவரைக் கண்டிக்காமல் ராஜேஷைக் கண்டித்ததால் அவர் கோபித்துக் கொண்டு தூங்கப் போய் விட்டார். நானும் மற்ற நண்பர்களும் அந்த ஐந்து மணி நேர ஆசாமியை அன்பாகவும் அதட்டியும் பார்த்தோம்.  அவர் பேச்சை நிறுத்தியபாடு இல்லை.  நள்ளிரவாகியும் தொடர்ந்தது.  என்னோடு பேச வேண்டும் என்று ஈரோட்டிலிருந்து வந்திருந்த ஸ்ரீதரால் ஒரு வார்த்தை பேச முடியவில்லை. அன்பரின் பிரசங்கம் போய்க் கொண்டே இருந்தது.  ஒரு மணி அளவில் என்னால் பொறுக்கவே முடியாமல் அவரை நான் மிக மூர்க்கமாக வெளியே போங்கள் என்று சொல்லி விட்டேன்.  அதற்கு மேல் அவரை நான் சந்திக்கவே இல்லை.   குமார் கதையை ஏற்கனவே பலமுறை எழுதியிருக்கிறேன்.  என்னை சந்திக்க வேண்டும் என்று ஆர்வமாக இருப்பார்.  எனக்கு நிறைய உதவிகளும் செய்வார்.  சந்திப்பேன்.  என்னைப் பேசவே விடாமல் ரெண்டு மணி நேரம் மூணு மணி நேரம் பேசிக் கொண்டே இருப்பார்.  பாருங்க குமார், ரெண்டு மணி நேரமா நீங்களே பேசுறீங்க, இனிமே நீங்க பேசக் கூடாது என்று நான் பேச ஆரம்பித்ததும் வெட்டி மீண்டும் பேசத் தொடங்குவார். எழுந்து விடுவேன்.  அப்படியே போனது அவர் நட்பு. 

நேற்று நடந்த கதையைக் கேளுங்கள். முந்தாநாள் நண்பர்கள் எல்லோரும் கேம் ஓவர் என்ற படத்துக்குக் கிளம்பினார்கள். நான் சங்கரா கண் மருத்துவமனை டாக்டர் ரமணியைப் பார்க்கக் கிளம்பிப் போய் விட்டேன். நேற்று நான் ஒரு காரிலும் அராத்து, ராஜா வெங்கடேஷ், ரங்கநாதன் ஒரு காரிலும் விமான நிலையத்துக்குக் கிளம்பினோம்.  விமான நிலையம் வந்து சேர்ந்ததும் ரங்கநாதனோடு எப்படி நீங்கள் பழகுகிறீர்கள் என்றார் அராத்து. ஏன், மிக இனிமையான நண்பர் ஆயிற்றே என்றேன். ஓ அப்படியா என்று யோசித்தவர், உங்களிடம் அவர் இனிமையாகப் பழகுகிறார் என்றால் பராயில்லை, அவரை நாங்கள் சகித்துக் கொள்கிறோம் என்றார்.   என்னவென்று விபரம் கேட்டதில் கிடைத்தது இது:  மூவரும் காரில் விமான நிலையம் வந்து கொண்டிருந்த போது ராஜா வெங்கடேஷ் ”அராத்து, நேத்துப் பார்த்த கேம் ஓவர் படத்துல…” என்று ஆரம்பிக்கிறார்.  உடனே குறுக்கே புகுந்த ரங்கநாதன் “ஹாஹ்ஹா… அந்தப் படத்துல பாருங்க…” என்று ஆரம்பித்து பத்து நிமிடம் ராஜ பிளவை போடுகிறார்.  மூச்சு வாங்குவதற்காகவோ இருமுவதற்கோ நிறுத்திய ஒரு நொடி இடைவெளியில் புகுந்த ராஜா வெங்கடேஷ் மீண்டும், “அராத்து, அந்த கேம் ஓவர்ல…” என்று ஆரம்பிக்க மீண்டும் குறுக்கே வெட்டிய ரங்கராஜன், மீண்டும் – இந்த முறை பதினைந்து நிமிடம் கேம் ஓவர் படத்தைப் பற்றிப் பேசுகிறார்.   இடையிடையே ஹாஹ்ஹா என்ற சிரிப்பு வேறு.  “இவரை எப்படி சகிச்சிக்கிறீங்க?” என்று கேட்டார் அராத்து.  கடைசி வரை ராஜா வெங்கடேஷ் அவர் கேட்ட நினைத்ததை என்னிடம் கேட்கவே இல்லைங்க என்று சோகத்துடன் சொன்னார் அராத்து. 

அடப்பாவி, இப்படியெல்லாம் ரங்கநாதன் என்னிடம் ஒருநாள் கூட  நடந்து கொண்டதில்லையே என்று சொன்னேன்.  உண்மைதான்.  ரங்கநாதன் ஒருநாள் கூட அப்படி என்னிடம் நடந்து கொண்டதில்லை.   மற்றவர்களைப் பார்த்தால் ஏன் என் நண்பர்களுக்குப் பேய் பிடித்து விடுகிறது என்று தெரியவில்லை.   ஒருவேளை 25 வருட வயது வித்தியாசம்தான் இவர்களை இப்படி சர்வாதிகாரிகளாக ஆக்கி விடுகிறதோ என்று நினைக்கிறேன்.  மேலும், நீங்கள் ஐந்தாறு மணி நேரம் கூடப் பேசலாம். தப்பே இல்லை. ஆனால் எதிராளி அதைக் கேட்கத் தயாராக இருக்கிறானா என்று தெரிந்து கொண்டு பேசினால் இது போன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்கலாம்.  இந்தக் கடைசி வரியை வேறொரு சந்தர்ப்பத்தில் என்னிடம் சொன்னதே ரங்கநாதன் தான்!