சமீபத்தில் நாகூருக்குச் சென்றிருந்தேன். நான் வசித்த கொசத்தெருவில் உள்ள நான் வளர்ந்த வீட்டுக்கும் சென்றேன். எப்போது நாகூர் போனாலும் கொசத்தெருவில் நான் வளர்ந்த வீட்டுக்குப் போவதுண்டு. ஆறு வயதிலிருந்து இருபத்தைந்து வயது வரை வளர்ந்த வீடு. அதற்கு முன்னால் வெங்கட்டு சந்து. அது இப்போது பஸ் ஸ்டாண்டாக மாறி விட்டது. நாங்கள் இருந்த கொசத்தெரு வீட்டில் இப்போது வேறு ஒரு குடும்பம் வாழ்கிறது. ரொம்ப அருமையான மனிதர்கள். ஒவ்வொரு முறை நான் அங்கே போகும் போதும் என்னை வீடு பூராவும் சுற்றிக் காண்பித்து டீ போட்டுக் கொடுத்து அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுத்தான் அனுப்புவார்கள். என்னோடு எத்தனை பேர் வந்தாலும் அத்தனை பேருக்கும் டீ உண்டு. டீ குடிக்காமல் போனால் அதை அவமரியாதை என்று நினைப்பார்கள். இந்த முறையும் அப்படியே. (டீயின் சர்க்கரை அளவு இந்தியா முழுதும் உள்ளபடியே நான் சாப்பிடும் சர்க்கரை அளவில் ஆறு மடங்கு அதிகம் இருக்கும்.) வீட்டின் வெளிப்புறத்தைப் போலவே உள்ளேயும் மாற்றமில்லை. தரையில் மட்டும் மாற்றம் தெரிந்தது. நாங்கள் இருந்த போது செங்கல் தரை. இப்போது சலவைக்கல். அதே கோழிகள். ஆடுகள். ஒரு மாடு. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு என் அம்மா எப்படி இருந்தார்களோ அப்படியே ஒரு மாது. நாகூரிலேயே ஸ்கூல் டீச்சராக இருக்கும் ஒரு மகள். கொல்லைப் புறமும் அப்படியே இருந்தது. எல்லாவற்றையும் விடியோ எடுத்துக் கொண்டார் செல்வா.
தரையில் மாற்றம் செய்து விட்டதால் அம்மாச்சிக்காக தாத்தா செய்து கொடுத்திருந்த தாயக் கட்டைக் கல் இப்போது காணோம். தாத்தா ராமசாமி இரண்டாம் உலகப் போரின் போது பர்மாவிலிருந்து வங்காளம் வழியாக கால்நடையாக இந்தியா வந்து நாகூர் வந்து குடியேறியவர். பர்மாவில் பெரும் பணக்காரர். நாகூரில் வந்து கள்ளுக்கடை வைத்து, எல்லா புலம்பெயர் அகதிகளையும் போலவே நாள் பூராவும் குடித்து, குடியோடு சூதும் சேர்ந்து ஆடி இளம் வயதிலேயே செத்து விட்டார். பனிரண்டு குழந்தைகள். பெரிய பெண்ணுக்கு மட்டும் நாகூர் வந்த புதிதிலேயே வசதி இருக்கும் போதே புதுக்கோட்டை ராஜாவுக்குக் கணக்குப் பிள்ளையாக இருந்த ஒரு வசதியானவருக்குக் கல்யாணம் செய்து கொடுத்து விட்டு இறந்து விட்டார். மற்ற பதினோரு குழந்தைகளையும் அம்மாச்சியே (பெயர் பாப்பாத்தி) கொத்துவேலை செய்து காப்பாற்றினார். ராமசாமிக்கு பாப்பாத்தி மேல் ரொம்பக் காதல். பாப்பாத்திக்கு தாய விளையாட்டு மேல் பிரியம் அதிகம். நாகூருக்கு வந்த புதிதிலேயே கொசத்தெருவில் ஒரு வீட்டைக் கட்டினார் ராமசாமி. அதில்தான் நான் வளர்ந்தேன். புகைப்படத்தில் நீங்கள் பார்க்கும் வீடு அதுதான். வீட்டைக் கட்டிய போது செங்கல் தரையின் நடுவே ஒரே ஒரு பளிங்குக் கல்லைப் பதித்தார். அதுதான் தாயக் கல். அதில்தான் நான் இளம் பிராயம் முழுவதும் தாயம் ஆடினேன். அது இப்போது இல்லை.
சீனி கேட்டார், பர்மாவில் இருந்த ராமசாமி, தமிழ்நாட்டில் எல்லா ஊரையும் விட்டு விட்டு நாகூரில் வந்து ஏன் குடியேறினார்? ஆகா, இந்த மாதிரி ஆயிரம் கேள்விகள் இப்போது உண்டு. பாப்பாத்தி அம்மாள் உயிரோடு இருந்தபோது எந்தக் கேள்வியும் தோன்றவில்லை. பிறகு நானே யூகமாகச் சொன்னேன். அவருடைய நண்பர் யாராவது நாகூரைச் சேர்ந்தவராக இருந்திருக்கக் கூடும். பானை பானையாக தங்க நகைகள் கொண்டு வந்திருக்கிறார். எல்லாம் சூதில் போய் விட்டது. அந்தக் காலத்தில் சூது பெரிய பிரச்சினையாகத்தான் இருந்திருக்கிறது. பல குடும்பங்கள் சூது சுனாமியில் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருக்கின்றன. அப்படிப் போனதுதான் ராமசாமியின் தாயக்கல். ராமசாமி கட்டிய வீட்டில் நாங்கள் எப்படி வாடகைக்குப் போனோம்? பானை பானையாகக் கொண்டு வந்த தங்க நகைகள் எல்லாம் சூதில் போன பிறகு கடைசியாக வீட்டை வைத்து ஆடியிருக்கிறார். எதிரே ஆடியவர் அபீன் கடைக்காரர். வீடு போய் விட்டது. அபீன் கடைக்காரர் என் நைனாவிடம் சொல்வார். உங்க மாமனார் என்னிடம் தோற்ற வீடு. ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். இருபது ஆண்டுகளாகச் சொன்னார். அப்போது ஆயிரம் ரூபாய் என்பது எங்களுக்கு ஒரு கோடி.

கொசத்தெருவில் போய் கிருஷ்ணசாமி வாத்தியார் பையன் ரவி என்றதும் பழைய ஆட்கள் எல்லோரும் குழுமி விட்டார்கள். என்னைப் பார்ப்பதற்காக அத்தாச்சியும் வந்தார். நான் பதின்பருவத்தில் இருந்தபோது அத்தாச்சியும் பதின்பருவம். அத்தாச்சியின் நிஜப் பெயர் தெரியாது. எல்லோருக்கும் அத்தாச்சிதான். அத்தாச்சியோடு ராவுகளில் கண் விழித்து தாயம் விளையாடுவோம். பாலுவும் வந்தான். பாலு என் க்ளாஸ்மேட். சிங்காரவேலு எப்படி இருக்கிறான் என்று கேட்டேன். செத்து விட்டான் என்றான் பாலு. ஹார்ட் அட்டாக். எக்கச்சக்கமான பானைகளை ஒரு அகலமான மூங்கில் கூடையில் போட்டுக் கொண்டு மார்க்கெட்டுக்குப் போய் விற்று விட்டு பள்ளிக்கு வருவான். அரசு வேலை கிடைத்தது. அதோடு போனது உடல் உழைப்பு. பள்ளியில் என் நெருங்கிய நண்பனான அல்வாக் கடை பஷீரை சந்திக்க முடியவில்லை.
நாணயக்காரத் தெரு பேபி வீட்டுக்குப் போனோம். திண்ணையில் அமர்ந்திருந்தது பேபியின் அண்ணன் அசோகனா?
அசோகன்?
டேய் ரவி, பிரகாஷ்டா.
ஓ, பிரகாஷா? ஸாரிடா, அசோகன் மாதிரியே இருந்தே, அதனால்தான். ஸாரி. ஸாரி.
இட்ஸ் நேச்சுரல்டா. தூக்கமே இல்ல. தூங்கியே இருபது வருஷம் ஆச்சு. ஆமா, உன் ஸிஸ்டரோட நம்பர் ஒம்போது இல்ல. நீ முன்னே செப்டம்பர் பதினாறாம் தேதி ரெண்டாயிரத்துப் பதினஞ்சுல வந்தே, ஞாபகம் இருக்கா? (நம்பர் என்றால் பிறந்த நாளின் கூட்டுத் தொகை)
ஆ, பேபி தான். பேபி என்றால் பேபிக்குப் பிடிக்காது. பேபி பிரகாஷ் என்ற பெயரை அருண் பிரகாஷ் என்று மாற்றிக் கொண்டு விட்டான். பேபி பற்றி எக்ஸைலிலும் எக்ஸிஸ்டென்ஷியலிஸம் ஃபேன்ஸி பனியனிலும் எக்கச்சக்கமாக எழுதியிருக்கிறேன். நன்றாக இளைத்து விட்டான். தாடி வைத்திருந்தான். ஆனால் அதே அழகான கண்கள். கூர்ந்து பார்த்தால் கண்களில் ஒரு விஷயம் தெரியும். (எக்ஸைலில் விபரம் உண்டு) நான்கு ஆண்டுகளாக இந்தத் திண்ணைதான் என்றான். வீட்டை விட்டு வெளியே போய் 20 ஆண்டுகள் ஆயிற்று. நாவலுக்கான விஷயம். இப்போது வேண்டாம்.
அடுத்த முறை நாகூர் போகும் போது அவசியம் வாடா சாப்பிட வேண்டும். ஆனால் கீழத் தஞ்சை மாவட்டத்தில் மட்டுமே கிடைக்கக் கூடிய தம்ரூட்டை சாப்பிட முடிந்தது. காரைக்காலில் கிடைத்தது.
கொசத்தெருவை ஒட்டியிருக்கும் கொசமேட்டுத் தெருவில் திரௌபதி அம்மன் கோவிலும் ஒரு சின்னஞ்சிறிய சர்ச்சும் இருந்தன. கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவில் பக்தி அதிகமாகி விட்டதால் திரௌபதி அம்மன் கோவில் பெரிதாகக் கட்டப்பட்டிருக்கிறது. சர்ச்சுக்கு ரோமிலிருந்து ஏகப்பட்ட பணம் வருகிறது போலும். எங்கள் சாந்தோம் சர்ச் அளவுக்கு பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டிருக்கிறது. பக்தி பெருகப் பெருக மனிதம் சிறுத்துக் கொண்டு போகிறது. பக்தி பெருகப் பெருக பரஸ்பர துவேஷமும் பெருகுகிறது. அது மிகத் தெளிவாகத் தெரிகிறது. இந்த முறை நாகூர் சென்ற போது பல விஷயங்களைச் செய்ய நேரமின்றிப் போய் விட்டது. முக்கியமாக குஞ்ஜாலி மரைக்கார் தெரு முனையில் கிடைக்கும் வாடா சாப்பிட முடியவில்லை. வாடாவை நீங்கள் நாகூரைத் தவிர மலேஷியாவில் மட்டுமே பார்க்க முடியும். தோற்றத்தில் வடை மாதிரி தான் இருக்கும். ஆனால் அதை விட மொறுமொறுவென்று இருக்கும். உள்ளே ரால் இருக்கும். நீங்கள் இறால் என்பதை நாங்கள் ரால் என்று சொல்வோம். வாடாவுக்கு வெங்காயச் சட்னி தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் அது தனி. நாகூர் ஓட்டல்களில் கூட வாடா கிடைக்காது.
பிரபு, நீங்கள் மட்டுமே வாடா சாப்பிட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அமீரகத்தில் வாடா கிடைக்கிறதா? நாகூருக்குச் சென்ற அன்று சீனியும் நானும் செல்வாவும் தர்ஹாவின் எதிரே உள்ள ஓட்டலில் கொத்துப் பராட்டா சாப்பிட்டு விட்டு வெளியே வந்தால் தள்ளுவண்டியில் சூடாக வாடா போட்டுக் கொண்டிருந்தார் ஒருத்தர். ஆனால் வயிற்றில் இடமில்லை. பிறகு மூவரும் சில்லடிக்குப் போனோம். (சில்லடி = கடற்கரை) உலகின் மிகச் சிறந்த கடற்கரைகளில் சில்லடியும் ஒன்று. பார்த்தவர்களே அதை உணர்வார்கள். அந்தி மயங்கும் நேரம். அங்கேயும் வாடா சூடாக இருந்தது. ஆனால் அதைப் போடும் எண்ணெய் க்ரூட் ஆயில் போல் இருந்ததால் வயிற்றுக்குக் கேடு செய்யும் என்று சீனி சொன்னதால் விட்டு விட்டோம். திடீரென்று பேய் மழை பிடித்துக் கொண்டது. அருகே இருந்த கீற்றுக் கொட்டகைக்குள் செல்வதற்குள் தொப்பலாக நனைந்து விட்டோம். மழை விட்டதும் நாங்கள் தங்கியிருந்த காரைக்கால் சென்றோம்.
என் பள்ளி நண்பன் ஜலாலுத்தீனையும் சந்திக்க முடிந்தது. தெக்குத் தெரு கௌஸ், தெக்குத் தெரு இஹ்ஸானுல்லா ஆகியோரைச் சந்திக்க முடியவில்லை. எங்கள் காலத்தில் பள்ளியின் பேரழகி என்று கருதப்பட்ட காஞ்சனாவைப் பார்த்தேன். காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. பல ஆண்டுகள் என் வகுப்புத் தோழியாக இருந்த விஜயலட்சுமி சென்னையிலிருந்து வந்திருந்தார். அப்போது பார்த்த மாதிரியே இருந்தார். நாகூரில் நான் செய்ய நினைத்திருந்த ஒரு முக்கியமான விஷயம், சேதுராமய்யர் ஓட்டலில் டிஃபன் சாப்பிடுவது. அப்படி ஒரு டிஃபன் உலகில் வெறு எங்குமே கிடைக்காது. சென்ற ஆண்டு ஓட்டலை மூடி விட்டார்களாம். கடனாம். வெங்கட்ராமய்யரின் சகோதரி பையன் ரமணி – என் நெருங்கிய நண்பன் – செத்து விட்டானாம். குடியாம்.
எஜமானிடம் பிரார்த்தனை செய்து கொண்டேன். தெக்குத்தெரு கௌஸ், இஹ்ஸானுல்லா பெயரையெல்லாம் சொன்னதெல்லாம் பிரார்த்தனைப் பணம் வேண்டாம் என்று சொல்லி விட்டார் சாபு. சீனியிடம் பணம் கேட்டாராம். நூறு ரூபாய் கொடுத்திருக்கிறார். திருப்பிக் கொடுத்து விட்டு, உங்களுக்கு நல்ல நிலைமை வர எஜமான் உதவி செய்வார் என்றாராம் சாபு. எவ்வளவு வேண்டும் என்று சீனி கேட்க, அன்னதானம் செய்யவே பணம் கேட்கிறேன்; ஒரு ரெண்டாயிரமாவது இருந்தாதான் முடியும் என்று சொல்ல சீனி ஐநூறு ரூபாய் கொடுக்க, போனால் போகிறது என்று வாங்கிக் கொண்டாராம். இதெல்லாம் நடக்கும் போது நான் உள்ளே எஜமானிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன்.
முன்பெல்லாம் எஜமான் உறங்கும் இடத்தில் திருநீறு கொடுப்பார்கள். இப்போது கிடைக்கவில்லை. கொமஞ்சான் சட்டியில் முகத்தைக் காண்பித்து விட்டு பக்கத்தில் இருந்த நெய் விளக்கிலிருந்து நெய்யை எடுத்து புருவத்தில் தடவிக் கொண்டேன்.
2.
இதெல்லாம் நேற்று எனக்கு ஞாபகம் வந்தது. கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல வேண்டும். மாலை நான்கு மணிக்கு சீனியிடமிருந்து போன். ராயர் கஃபேவில் டிஃபன் சாப்பிடலாமா? கிளம்பிப் போனேன். நேற்று எனக்குப் பிடித்த பருப்பு உருண்டைக் குழம்பு என்பதால் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிட்டிருந்தேன். அதனால் ராயர் கஃபேவில் எதுவும் சாப்பிடவில்லை. மாலையில் அங்கே ஆனியன் ரவாவும், அடையும் ஸ்பெஷல். அடைக்கு அவியல் இல்லை. (எனக்கு அடைக்கு அவியல் பிடிக்காது!) அடைக்குத் தொட்டுக் கொள்ள சாம்பார், தேங்காய் சட்னி, அதோடு ஒரு அற்புதமான சட்னி உண்டு. அது ராயர் கஃபேவில் மட்டும்தான் கிடைக்கும். பச்சை மிளகாய் சட்னி. வெறும் பச்சை மிளகாயில் அரைத்த சட்னி. தாளிக்கக் கூட மாட்டார்கள். அற்புதமாக இருக்கும். அப்படியும் நான் சாப்பிடவில்லை. பருப்பு உருண்டை சாதாரணமானதா என்ன? சீனியும் அவரோடு வந்திருந்த நண்பர் பிரபாகரனும் அடை, ஆனியன் ரவாவைத் தொடர்ந்து காஃபி குடித்தார்கள். ஆனால் மூவரும் சேர்ந்து பேச வேண்டும். குடித்துக் கொண்டிருந்த போது என்றால், நேராக சவேரா ஓட்டல் பேம்பூ பார் போயிருப்போம். இப்போது வடை போண்டா பஜ்ஜி. சரி, ப்ரூ ரூம் போகலாம் என்று முடிவு செய்தோம். அங்கே போனால் கேப்பச்சினோ குடிக்கலாம் என்று திட்டமிட்டு ராயர் கஃபே காபி குடிக்கவில்லை. ஆனால் இப்போதெல்லாம் ப்ரூ ரூம் எப்போது போனாலும் நிரம்பி வழிகிறது. இடம் இல்லாவிட்டால் என்ன செய்வது என்று யோசனை ஓடிக் கொண்டிருந்தது. நினைத்தது போலவே ப்ரூ ரூமில் இடம் இல்லை. பேம்பூ பார் ஞாபகம் வந்தது. ஏன் குடியை நிறுத்தினோம்? மூன்று ஆண்கள் எங்கேதான் உட்கார்ந்து பேசுவது? மூன்று பேரும் முழித்துக் கொண்டு நின்றுகொண்டிருந்த போது பார்க் ஷெரட்டனில் தங்கியிருந்த நண்பரிடமிருந்து போன் வந்தது. மூவரும் கிளம்பினோம். ரெண்டு கிலோமீட்டர் தூரத்தைக் காரில் கடக்க ஒரு மணி நேரம் ஆனது. போய்ச் சேர்ந்த போது ஏழு மணி.
பார்க் ஷெரட்டன் பதினைந்து ஆண்டுக் காலம் என் இரண்டாம் வீடாக இருந்தது. அங்கே உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பாரில்தான் வாரத்தில் மூன்று நாள் முன்மதியம் பதினோரு மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை குடித்தபடியே எழுதிக் கொண்டிருப்பேன். சில சமயங்களில் ஆறு ஆகும். ஒரே இருக்கைதான். வாரம் முழுவதும் அது முன்பதிவு செய்யப்பட்டிருக்கும். ஒன்றரைக்கு மணியும் பாலுவும் வருவார்கள். மூன்று மணிக்குக் கிளம்பி விடுவார்கள். பில்லில் கையெழுத்துக் கூட போட வேண்டியிருக்காது. மாதாமாதம் பில்லை மணி செட்டில் பண்ணி விடுவார்.
பார்க் ஷெரட்டனில் நண்பரோடு பழைய நண்பர் முரளியும் இருந்தார். முரளியை நான்கு ஐந்து முறை சந்தித்திருக்கிறேன். ராஜேஷின் நண்பர். மெஹிகோவில் மூன்றரை ஆண்டுகள் இருந்திருக்கிறார். இப்போது யு.எஸ்.ஸில் இருக்கிறார். அவரிடம் மெஹிகோ பற்றிக் கேட்டுக் கொண்டேன். முக்கியமாக, சினாலோவா, சிவ்வாவா ஆகிய ஊர்களைப் பற்றி. அதெல்லாம் பெரிய கதை. மே மாதம் யு.எஸ். வருகிறேன். அப்படியே பத்து நாள் மெஹிகோ போகலாமா என்றேன். திட்டம் போட்டோம். அவர் மூன்றரை ஆண்டுகள் மெஹிகோவில் இருந்த போது அப்போது நான் மிகச் சுலபமாக அங்கே போய் வந்திருப்பேன். இது பற்றி என்னிடம் சொல்லாத இரண்டு நண்பர்களையும் மனதுக்குள் கடிந்து கொண்டேன்.
சரியாக எட்டே முக்காலுக்கு அவந்திகாவிடமிருந்து போன். உடனே வந்து சேர்.
பூனைகளுக்கு சாப்பாடு போட்டு விட்டேன். இப்போது ச்சிண்ட்டூவுக்கு உணவு எடுத்துக் கொண்டு போக வேண்டும். வருகிறாயா?
ச்சிண்ட்டூ வேலை இல்லாவிட்டாலும் அழைத்திருப்பாள். ஒன்பது மணிக்குள் வீட்டில் ஆஜராக வேண்டும். ச்சிண்ட்டூவுக்கு உணவு கொடுக்கும் வாட்ச்மேன் ரெண்டு நாள் விடுமுறை. ச்சிண்ட்டூவுக்கு உணவு கொடுப்பதில் என்ன பிரச்சினை என்றால் சாந்தோம் நெடுஞ்சாலையைக் கடக்க வேண்டும். அது கிட்டத்தட்ட ஹராகிரி செய்து கொள்வது மாதிரி. சாலையைக் கடக்க மட்டும் ஆட்டோ பிடிப்போம் என்றேன். நான் எது சொன்னாலும் அது தப்பாக இருக்கும். உலகம் பூராவும் பெண்டாட்டிகளின் மனோபாவம் அதுதானே? நடந்தே கடந்தோம். ச்சிண்ட்டூவைப் பார்த்து ஒரு ஆண்டு இருக்கும். அடையாளமே தெரியவில்லை. முகத்தின் பக்கவாட்டில் வீங்கினது போல் சதை போட்டு விட்டது. தூக்கப் போனேன். வரவில்லை. அவந்திகாவின் கைகளில் ஏறிக் கொண்டு வாலை ஜம்மென்று ஆட்டியது.
ச்சிண்ட்டூ வேலை முடிந்து வீடு திரும்பிய பிறகு அவந்திகாவிடம் சொன்னேன். ”மெஹிகோவின் கதை கேட்க வேண்டும். பார்க் ஷெரட்டன் போய் விட்டு காலையில் வருகிறேனே?” அப்போது இரவு பத்து மணி இருக்கும். அனுமதி கிடைக்கவில்லை. போய்த் தூங்கி விட்டேன்.
***
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai