பூச்சி – 36

க்ரனாடா நாவலை எழுதியவர் ராத்வா அஷூர்.  இடதுசாரி.  கெய்ரோவில் 1946-இல் பிறந்தார்.  அதே ஆண்டில்தான் அந்நகரின் புகழ்பெற்ற அப்பாஸ் பாலத்தில் பிரிட்டிஷ் அதிகாரத்தை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது பிரிட்டிஷ் ராணுவம் துப்பாக்கியால் சுட்ட சம்பவமும் நடந்தது.  ஒரு பக்கம் நைல் நதி – எதிர்ப் பக்கம் துப்பாக்கிச் சூடு என்ற நிலையில் அன்றைய தினம் பல நூறு மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 

சிறு வயதிலிருந்தே கலக மனோபாவம் கொண்டிருந்த ராத்வா அஷூர் தன் 14-ஆம் வயதில் ஃப்ரெஞ்சுப் பள்ளியிலிருந்து விலகி அரசாங்கத்தின் அரபிப் பள்ளியில் சேர்ந்தார்.  வெளிநாட்டுக் கல்விமுறையை எதிர்த்தாரே தவிர மூன்று ஐரோப்பிய மொழிகளில் புலமை பெற்றவராக இருந்தார் ராத்வா. 

1967-இல் கல்லூரிப் படிப்பை முடித்த அஷூர் 1970-இல் Mourid Barghouthi என்ற பாலஸ்தீனிய கவிஞரை மணந்தார்.  மிகப் பெரும் கல்வியாளராகவும், புகழ் பெற்ற ஆசிரியராகவும் விளங்கிய ராத்வா, எகிப்திய அரசை எதிர்த்து பல போராட்டங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பாலஸ்தீனிய விடுதலையை முன்னிட்டு எகிப்தில் பர்கோத்தி ஈடுபட்ட அரசியல் நடவடிக்கைகளுக்காக 1977-ஆம் ஆண்டு அவர் எகிப்திய அரசினால் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.  அப்போது ராத்வா அஷூர் – பர்கோத்தி தம்பதியினரின் ஒரே மகன் சிறு குழந்தையாக இருந்தான். 

பின்னர் பர்கோத்தியும் ராத்வா அஷூரும் ஒன்று சேர்வதற்கு 17 ஆண்டுகள் ஆயின.  அதுவரை அவர்கள் அரசுக் கெடுபிடிகளால் வெவ்வேறு நாடுகளிலேயே வாழ நேர்ந்தது. 

தன்னுடைய நாவல் ‘க்ரனடா’ பற்றி ராத்வா அஷூர் சொல்கிறார்:

“குழந்தையாக இருக்கும் போது அல்ஜீரியா மற்றும் பாலஸ்தீனிய விடுதலைக்காக நான் பிரார்த்தனை செய்வதுண்டு.  1967-ஆம் ஆண்டு எனக்குள் ஒரு பயம் ஏற்பட்டது.  அப்படி ஒரு பயத்தை அதுவரை நான் உணர்ந்ததில்லை.  ஒருவருக்கு ஏற்படக் கூடிய மோசத்திலும் மோசமான ஒரு துயரம் அது.  ஆகாயவெளியில் ஒரு பலூனுக்குள் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.  அந்த பலூன் வெடித்து விட்டால் உங்கள் கதி என்ன ஆகும்?  பூமியிலும் இருக்க மாட்டீர்கள்; ஆகாயத்திலும் இருக்க மாட்டீர்கள். அப்படி ஒரு பயம்தான் 1967-இல் எனக்கு ஏற்பட்டது… அப்போதுதான் நான் ‘க்ரனடா’வை எழுதினேன்.  அந்த நாவலின் மூலமாகவே நான் அந்தப் பயத்திலிருந்து வெளியே வர முடிந்தது.  கிட்டத்தட்ட மரணத்துக்கும் எழுத்துக்குமான போராட்டமாக இருந்தது அது.”

2014-இல் அவர் மரணம் அடையும் வரை கெய்ரோவில் Ain Shams பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறைத் தலைவராக இருந்த ராத்வா அஷூரின் மற்ற சில முக்கியமான நூல்கள்: Gibran and Blake: A Comparative Study (1978), The Novel in West Africa (1980), I Saw the Palm Trees (1989), The Reports of Mrs. R (2011).  இவரது முக்கியமான பயண நூல்: The Journey: An Egyptian Student’s Days in America (2018).    

ஒவ்வொரு சமகாலத்திய அரபி நாவலைப் படிக்கும்போதும் ‘இப்படி ஒரு நாவலை வாழ்நாளில் படித்ததில்லை’ என்ற எண்ணமே எனக்கு மேலிடுகிறது. சமீபத்தில் ராத்வா அஷூர் எழுதிய Granada என்ற நாவலைப் படித்த போதும் அவ்வாறே எனக்குத் தோன்றியது.

கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டு வரை சுமார் 800 ஆண்டுகளாக ஸ்பெய்னில் இஸ்லாமிய வாழ்நெறியையே அந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் கடைப்பிடித்து வந்தனர். அதே சமயத்தில் அங்கு வாழ்ந்த சிறுபான்மையினரான கிறித்தவர்களையும், யூதர்களையும் அவர்கள் தங்களுக்குச் சமமாகவும், சகோதரத்துவத்துடனும் எண்ணிப் பழகி வந்தனர். ஸ்பெய்னின் வரலாறு நமக்குத் தெரிவிக்கும் செய்திகள் இவை. ஆனால் பதினைந்தாம் நூற்றாண்டில் இஸ்லாமிய ஸ்பெய்ன் முழுமையும் ஸ்பானியர்களின் ஆக்ரமிப்பில் வந்ததும் அந்தப் பன்முகக் கலாச்சார வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்தது. 1492-ஆம் ஆண்டு ஸ்பெய்னின் தெற்கிலுள்ள Granada நகரம் ஸ்பானியர்களின் கீழ் வந்தது. ஸ்பெய்ன் முழுவதுமிருந்த ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் மதமாற்றம் செய்யப்பட்டார்கள். சித்ரவதை செய்யப்பட்டார்கள். கொல்லப்பட்டார்கள். மீதமிருந்த முஸ்லீம்கள் 1609-ஆம் ஆண்டு ஸ்பெய்னிலிருந்து விரட்டப்பட்டார்கள்.

ஸ்பெயினில் வாழ்ந்த முஸ்லீம்கள் ஸ்பானியர்களால் Morisco என்று கிண்டலாக அழைக்கப்பட்டனர். இதிலுள்ள Moro என்பதன் பொருள்: Moorish. அதாவது, மொராக்கோவிலிருந்து வந்த முஸ்லீம்கள். 16-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர், மொரிஸ்கோ என்பது ஸ்பெனிலேயே தங்கி கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்ட முஸ்லீம்களைக் குறிக்கும் வார்த்தையாக ஆனது.

15, 16-ஆம் நூற்றாண்டுகளில் ஸ்பெய்ன் தேசத்து முஸ்லீம்கள் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்டதற்கு சில சமூகவியல் காரணங்களும் இருந்தன. மொரிஸ்கோ முஸ்லீம்கள் கடுமையான உழைப்பாளிகளாகவும், அதனால் மற்றவர்களை விட வசதி படைத்தவர்களாகவும் இருந்தனர். மேலும், அவர்கள் தங்களுடைய பூர்வீகமான வட ஆஃப்ரிக்கப் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் அழிந்துவிடாமல் பின்பற்றி வந்தனர்.

இந்த மொரிஸ்கோ இன முஸ்லீம் மக்களைப் பற்றி அரபி, ஆங்கிலம், ஃப்ரெஞ்ச் மற்றும் எஸ்பஞோல் மொழிகளில் கிடைக்கும் வரலாற்றுக் குறிப்புகளை பல ஆண்டுகள் ஆய்வு செய்து ராத்வா அஷூர் எழுதிய நாவல்தான் : க்ரனடா.

இந்த நாவலின் தொடர்ச்சியாக Mariama, Exodus என்ற மேலும் இரண்டு நாவல்களை எழுதினார் ராத்வா அஷூர்.

சலீமா என்ற பெண்ணின் குடும்பம் முழுமையும் ஸ்பானியர்களால் எவ்வாறு அழித்தொழிக்கப்பட்டது என்பதே க்ரனடா Trilogy-இன் கதை.

                                      0

என்னைத் தவிர வேறு யாரேனும் இந்த சமகாலத்திய அரபி எழுத்தாளர்களைப் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.  ராத்வா அஷூரின் க்ரனாடா நாவலிலிருந்து மேற்கண்ட பகுதியை நான் மொழிபெயர்த்து 20 ஆண்டுகளாவது இருக்கும்.  என்னை இஸ்லாமின் விரோதி என நினைக்கும் இஸ்லாமிய நண்பர்கள் இது போன்ற அரபி எழுத்தாளர்களைப் படிக்க வேண்டும்.  இதையெல்லாம் நான் மாத்யமம் என்ற இஸ்லாமியப் பத்திரிகையில் தப்புத் தாளங்கள் என்ற தலைப்பில் எழுதி வந்தேன்.  கேரளத்தின் மலப்புரம் பகுதி இஸ்லாமியரிடையே இப்போதும் நான் ஒரு பிரபலம்தான்.   ஒரு இஸ்லாமிய கலாச்சார அமைப்பால் நடத்தப்படும் மாத்யமமில் நான் எழுதி வந்ததால் இஸ்லாமியத் தீவிரவாதிகளோடு கை கோர்த்தவன் என்ற பெயரும் எனக்கு அங்கே உண்டு.  உண்மையில் மாத்யமம் பத்திரிகையை நடத்தி வரும் அமைப்பு முழுக்க முழுக்க கலாச்சாரம் சார்ந்தது.  அதற்கும் தீவிரவாதத்துக்கும் சம்பந்தமே இல்லை.  இங்கே தமிழ்நாட்டில் பார்த்தால் சாரு இஸ்லாமிய விரோதி என்று கதை!  பாவம், அவர்கள் என்னைப் படித்ததில்லை.  அவ்வளவுதான். 

ஆமாம், தப்லீக் ஜமாதை விமர்சித்தால் அது எப்படி இஸ்லாமிய விரோதம் ஆகும்?  நீங்கள் நித்யானந்தாவை விமர்சித்தால் அது இந்து விரோதமா?  தப்லீக் ஜமாத் செய்த காரியத்தை முஸ்லீம்கள் அல்லவா விமர்சித்து இருக்க வேண்டும்?  சவூதியில் இப்படி ஒரு மாநாட்டை நடத்தி விட முடியுமா?  இங்கே மோடி ஆட்சியில் சிறுபான்மையினர் என்று கண்டு கொள்ள மாட்டார்கள் அல்லது இந்தியாவில் மதம் என்று வந்தாலே அது எந்த மதமாக இருந்தாலும் போலீஸும் அதிகார வர்க்கமும் ஒதுங்கிப் போய் விடும் என்ற எண்ணம்தானே இத்தனை விபரீதங்களுக்கும் காரணம்?

***

பெரியார் சொன்னதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.  உண்மையோ கட்டுக்கதையோ தெரியாது.  ”எனக்குப் படித்தவர்கள் தேவையில்லை.”  ஏன் அப்படிச் சொன்னார் என்று மிகவும் குழம்பியிருக்கிறேன்.  ஆனால் கணேஷ் அன்புவின் கடிதத்தைப் படித்த பிறகு பெரியார் சொன்னது கொஞ்சம் புரிகிறாற்போல் இருக்கிறது.  வெறும் அஜித் ரசிகனாக இருந்தவரை கணேஷை ரசித்தேன்.  அப்புறம் அவர் படித்த பிறகு இப்படி ஒரு மனித வெடிகுண்டாக மாறுவார் என்று எதிர்பார்க்கவே இல்லை.  அதிலும் தமிழ்த் தேசிய மனித வெடிகுண்டு.  நஷ்டம் எனக்குத்தான்.  ஏனென்றால், எனக்கு கணேஷின் பிரியாணி பிடிக்கும்.  என்றைக்காவது ஒருநாள் அவர் மட்டன் பிரியாணி செய்து சாப்பிட வேண்டும் என்று இருந்தேன்.  இப்போது அதற்கு ஹானி வந்து விட்டது.  நான் இப்போதெல்லாம் மட்டனே சாப்பிடுவதில்லை.  வெறும் மீன்.  அதுவும் வாரம் ஒருமுறை.  எப்போதாவது மதுரைக்குப் போனால் குமார் மெஸ்ஸில் மட்டன் சாப்பிடுவேன்.  இல்லாவிட்டால் வேணு பிரியாணி.  ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை யாரேனும் இஸ்லாமிய நண்பர் வீட்டு திருமண வைபவத்தில் மட்டன் பிரியாணி சாப்பிடுவதுண்டு.  அதுவும் பணக்கார நண்பராக இருந்தால்தான் பிரியாணி நன்றாக இருக்கும்.  இல்லாவிட்டால் அம்பேல்.  குஸ்காவைப் போட்டு விட்டு பிரியாணி என்று பேர் பண்ணி விடுவார்கள்.  அம்மாதிரி இடங்களைப் பார்த்தாலே மோப்பத்தில் தெரிந்து விடும்.  வெறுமனே வாழ்த்து சொல்லி விட்டு நழுவி விடுவேன்.  பிரியாணி எப்படி இருக்கும் என்று அங்கே வரும் கூட்டத்தை வைத்தே கண்டு பிடித்து விடலாம்.   அமீரகம் சென்றால் அற்புதமான நாகூர் பிரியாணி கிடைக்கும்.  அது என்ன நாகூர் பிரியாணி?  அரபு நாடுகளில் கிடைக்கும் பிரியாணிதான் நாகூர் பிரியாணி.  அபுதாபியில் ஒரு அரபி கடையில் பிரபு, தேவா, ஃபுஜைராவில் வசிக்கும் ஷபீர் மற்றும் நண்பர்களோடு சாப்பிட்ட பிரியாணி இப்போது ஞாபகம் வருகிறது

நான் சொல்ல விரும்புவது இதுதான்.  நாம் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருக்கிறோமோ அது குறித்த விமர்சன மனோபாவம் கொண்டிருக்க வேண்டும்.  இது இந்துக்களிடம் அதிகம் உண்டு என்பதை எல்லோரும் கவனித்திருக்கலாம்.  முகநூலில் நீங்கள் யாரை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் தீவிர மோடி எதிர்ப்பாளராக இருப்பதோடு தீவிர இஸ்லாமிய ஆதரவாளராகவும் இருப்பார்.  ஆனால் அவர் இந்துவாக இருப்பார்.  விட்டால் இம்ரானைக் கொண்டு வந்து இங்கே லுட்யனின் தில்லியில் அமர வைத்து விடுவார்கள்.  அந்த அளவுக்குப் பாகிஸ்தானிய மோகம்.  நீங்கள் எந்த இந்து புத்திஜீவியை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.  அதிலும் அவர் பிராமணர் என்றால் கேட்கவே வேண்டாம்.  பெரியாரின் நேரடி வாரிசு மாதிரிப் பேசுவார்.  இப்படிப்பட்ட சுய விமர்சனம் முஸ்லீம் நண்பர்களிடையே உண்டா?  உண்டென்றால் தப்லீக் ஜமாத் விஷயத்தில் அவர்களின் சமூகத்து விரோத மான கொரோனா நடவடிக்கைகளைக் கண்டித்திருக்க வேண்டாமா?  காந்தி எப்படி இருந்தார்?  சுய விமர்சனத்தில் அவர் நமக்கு முன்னோடியாக இருந்தாரா இல்லையா?  அவர் ஒரு இந்துத்துவா நபரால் சுட்டுக் கொல்லப்பட்டது எதனால்?  காந்தி அல்லவா உங்கள் நண்பராக இருந்திருக்க வேண்டும்?  இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த மதக்கலவரங்களில் அவர் முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருந்தார் என்பதால்தான் அவர் இந்துத்துவவாதியால் கொல்லப்பட்டார்.  இதுதான் நாம் காந்தியிடமிருந்து கற்க வேண்டியது.  அவர் இந்து.  ஆனால் முஸ்லீம்களின் ஆதரவாளராகவே இருந்தார், செயல்பட்டார்.  இதிலிருந்து நான் என்ன பெறுகிறேன்?  ஒரு இந்துவாக இருந்தும் நமக்காக உயிர் நீத்தாரே ஒரு மாமனிதர் என்று ஒவ்வொரு முஸ்லீமும் நினைக்க வேண்டாமா?  நான் ஒரு இஸ்லாமியத் தலைவராக இருந்தால் வாருங்கள் இந்துக்களே, உங்கள் ராமர் கோவிலுக்கு நான் முதல் கல்லை வைக்கிறேன் என்று சொல்வேன்.  நான் ராமர் கோவில் கட்டித் தருவேன்.  அதுதானே மதச்சார்பின்மையின் முதல் அடி?    

இந்தப் பின்னணியில்தான் கணேஷின் செயல் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  அவர் ஒரு கிறித்தவர்.  கிறித்தவர் என்றால் தம்முடைய மதத்தின் இருண்ட பக்கங்களை அல்லவா ஒருத்தர் முதலில் பார்க்க வேண்டும்?  கிடைத்த இடமெல்லாம் இந்து மதத்தையா மூர்க்கத்துடன் தாக்குவார்கள்?  ”கணேஷ் அப்படித்தாங்க, இந்துக்களைத் தாக்குவாரு” என்றா ஒரு கிறித்தவர் பெயர் எடுப்பது? 

கிறித்தவத்தைப் பற்றி நான் இத்தனை எதிர்மறையாக எழுதினாலும் ஒரு விஷயத்தில் கிறித்தவம் எனக்குப் பிடிக்கும்.  அங்கே இருக்கும் சுதந்திரம்.  உதாரணமாக, சென்ற ஆண்டு இதே மாதம் Armonia Somers (1914 – 1994) என்பவரின் The Fall என்ற கதை பற்றிக் குறிப்பிட்டிருந்தேன், ஞாபகம் இருக்கிறதா?

உருகுவாயைச் சேர்ந்த அர்மோனியா ஸோமர்ஸ் (Armonia Somers) உலகின் வெகு சில transgressive எழுத்தாளர்களில் ஒருவர்.  அவருடைய சகாக்கள் என்று பார்த்தால் ஸில்வினா ஒக்காம்ப்போ (Silvina Ocampo), லூயிஸா வாலென்ஸுவெலா (Luisa Valenzuela), எலேனா கார்ரோ (Elena Garro), க்றிஸ்டினா பெரி ரோஸ்ஸி (Cristina Peri Rossi).  இவர்களின் பெயர்களையெல்லாம் ஏன் இங்கே குறிப்பிடுகிறேன்?  இங்கே இணையத்தில் இதை வாசிக்கும் உங்களுக்கும் மேலே குறிப்பிட்ட எழுத்தாளர்களுக்கும் என்ன சம்பந்தம்?  ஐந்தே நிமிடத்தில் இதைப் படித்து விட்டு அடுத்து கொரோனாவினால் அமெரிக்காவில் எத்தனை பேர் செத்தார்கள் என்ற செய்தியைப் பார்க்கப் போய் விடுவீர்கள்.  அப்படியிருக்க இந்தப் பெயர்களெல்லாம் இங்கே எதற்கு?

காரணம் இருக்கிறது.  தமிழ் இலக்கியச் சூழலில் சி.சு. செல்லப்பா பெயர் மட்டுமா இருக்கிறது?  செல்லப்பாவோடு, க.நா.சு., க.நா.சு.வோடு ந. பிச்சமூர்த்தி, ந.பிச்சமூர்த்தியோடு கு.ப. ராஜகோபாலன், கு.ப.ரா.வோடு தி.ஜானகிராமன் என்று ஒரு பெரிய சங்கிலித் தொடர் போகிறது அல்லவா?  அதேபோல் ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தில் மேற்கண்ட பெயர்களெல்லாம் மிக முக்கியமானவை.  நீங்கள் என் எழுத்துக்களை மிகக் கூர்ந்து கவனித்து வருகிறீர்களா என்பதற்கு இந்தக் கணத்தில் ஒரு சோதனை வைக்கலாம்.  க்றிஸ்டினா பெரி ரோஸியைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.  சுமார் ஐம்பது முறை அவர் பற்றி எழுதியிருக்கிறேன்.  அவருடைய Ship of Fools நாவல் பற்றி மிக விரிவாக எழுதியிருக்கிறேன்.  மட்டுமல்ல.  க்றிஸ்டினா பெரி ரோஸியும் உருகுவாயைச் சேர்ந்தவர்தான்.  இவருடைய பதிப்பகத்தின் பெயர் Ecks.  என்னுடைய புத்தகங்களை நானே பதிப்பிக்க நேர்ந்த காலகட்டத்தில் இதே Ecks என்ற பெயரில்தான் பதிப்பித்தேன்.  இவர் உருகுவாயிலிருந்து 1972-இல் நாடு கடத்தப்பட்டதால் அப்போதிருந்து ஸ்பெய்னின் பார்ஸலோனா நகரில்தான் வாழ்ந்து வருகிறார்.  இவருடைய ஷிப் ஆஃப் ஃபூல்ஸ் நாவலைப் படிக்காதவர்கள் வாழ்வில் ஓர் அற்புதத்தை இழந்தவர்கள் என்றே சொல்வேன்.  மிகச் சிறிய நாவல்.  ஆனால் அதை ஒரே அமர்வில் படித்து விட இயலாது.  மிகவும் சிக்கலானது.  ஒருவித மனோவசியத்துக்குள் ஆட்பட்டு விட்டதைப் போல் உணர வைக்கும் நாவல் அது. 

The Fall கதையில் ஒரு கறுப்பன் போலீஸிடமிருந்து தப்பி ஒரு மாதா கோவிலை நோக்கி வருகிறான்.  அவன் இன்று ஒரு கொலை செய்து விட்டான்.  பெரிய பணக்காரப் புள்ளி.  வெள்ளை இனத்தவன் வேறு.  இரவு நேரம்.  ஒரே நசநசவென்று மழை.  வழியெல்லாம் சேற்றிலும் சகதியிலும் சிக்கி ஒரு ஷூ பிய்ந்து விட்டது.  பிய்ந்து போன ஓட்டை வழியே தெரியும் காலிலேயேதான் கற்கள் குத்துகின்றன.  நல்ல கூர்மையான பாறாங்கற்கள்.  தொடர்ந்து அந்த இடத்திலேயே குத்துகிறது.  பட்ட காலிலேயேதான் படுமா?  தூரத்தில் அவன் கேள்விப்பட்டிருந்த மாதா கோவில் தெரிகிறது.  கோவிலைச் சுற்றிலும் ஒரே புதரும் இடிபாடுகளுமாக இருந்தது.  இந்த இடத்தில் ஒரு காலத்தில் விபச்சாரம் கூட நடந்து கொண்டிருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறான்.  இப்போது இல்லை.  ஆனால் இந்த மேரி சக்தி வாய்ந்தவள் என்றே பேசிக் கொள்கிறார்கள்.  அவளாவது இந்த மழையை நிறுத்தக் கூடாதா?  ஏண்டி மேரிக்குட்டி… இந்த ஏழை நீக்ரோவின் மீது உன் கடைக்கண்ணைக் காட்ட மாட்டாயா?  ஏதோ காதலியிடம் கொஞ்சுவது போல் கொஞ்சுகிறான்.   இந்த இடத்துக்கு வந்து சேரத்தான் எவ்வளவு பாடுபட்டான்.  இதுதான் இந்தப் பகுதியிலேயே பாதுகாப்பான இடம்.  கதவு சாத்தியிருந்தது.  தட்டினான்.  உள்ளே தாளிடப்பட்டிருந்தது.  மழை இன்னும் நிற்கவில்லை.  மழை சத்தத்தில் கேட்கவில்லையோ?  மீண்டும் தட்டினான்.  மூன்றாவது முறை கொஞ்சம் பலமாகத் தட்டினான்.  ம்ஹும்.  நான்காவது முறை மேலும் பலமாகத் தட்டினான்.  கேட்டு விட்டது போல.  தாழ்ப்பாள் திறந்தது.  ஒரு ஆள் கையில் லாந்தர் விளக்கோடு நின்று கொண்டிருந்தார்.  “ஐயா, இந்த நீக்ரோவுக்குக் கொஞ்சம் இடம் கொடுங்கள்” என்று கெஞ்சினான்.  கதவைத் திறந்து உள்ளே வரச் சொன்னார் அவர்.  அவர் வாயின் இடது ஓரத்திலிருந்து புருவம் வரை ஒரு கடுமையான வெட்டுக் காயம் இருந்தது.  “எவ்வளவு ஐயா” என்று கேட்டான் வந்தவன். 

“மெத்தை என்றால் பத்து செண்ட், தரை என்றால் இரண்டு செண்ட்.”  வந்தவன் இரண்டு செண்ட்டைத் தெர்ந்தெடுத்தான்.  இவனிடம் காசு இருக்கிறதா இல்லையா என்று கூடக் கவலைப்படாமல் போய்க் கொண்டிருந்தான் விளக்குக்காரன்.  அதையெல்லாம் இவன் உறங்கின பிறகு கண்டு பிடித்து விடலாம்.  பொதுவாக இங்கே வருபவர்கள் பஞ்சைப்பராரிகளாகத்தான் இருக்கிறார்கள்.  ஒருத்தர் கூட மெத்தையைத் தேர்ந்தெடுத்ததாக அவனுக்கு ஞாபகமே இல்லை.  இப்போது மெத்தைப் படுக்கையை அவன்தான் பயன்படுத்துகிறான்.   தரையில் பல உடல்கள் தெரிந்தன.  கடைசியில் அவனுக்கான இடத்தைக் காண்பித்தான் விளக்குக்காரன்.  எதிரே மேடையில் புனித மேரியின் சிலை. 

“ஐயா, உங்களை ஒன்று கேட்கலாமா?”

”வாயை மூடிக் கொண்டு படு.”

அவன் சொன்னதைக் கண்டு கொள்ளாமல் கறுப்பன் கேட்டான், “நீங்கள் புனித மேரியை நம்புகிறீர்களா?”

”அட முட்டாள் நீக்ரோ… அவள் மட்டும் அங்கே இல்லாவிட்டால் இந்தப் பழைய மேல்கூரை இந்நேரம் என் தலையில் அல்லவா விழுந்திருக்கும்?”

இடியும் மின்னலுமாக மழை இன்னும் பெய்து கொண்டிருந்தது.  கறுப்பன் தன் நனைந்த ஆடையோடு படுப்பதா அல்லது எல்லாவற்றையும் கழற்றி விட்டுப் பிறந்த மேனியாகப் படுக்கலாமா என்று யோசித்தான்.  நனைந்த ஆடையோடு படுத்தால் தண்ணீரில் கிடப்பது போல் இருக்கும்.  அதனால் அம்மணமாகவே படுப்பது என்று முடிவு செய்தான்.  

மேரியின் அருகே இருந்த சுவருக்கும் எதிரே இருந்த சுவருக்கும் இடையே இருந்த கொடிக்கயிற்றில் ஒரு பழந்துணி தொங்கியதைப் பார்த்தான் கறுப்பன்.  காற்றில் அந்தக் கொடி ஆடியது அருவருப்பாக இருந்தது.  அது எழுப்பிய சப்தம் வேறு நாராசமாக இருந்தது.  ’ஆனால் நான் செவிடாக இருந்திருந்தால் கூட அது ஆடும் ஆட்டத்தைப் பார்த்து செத்திருப்பேன்’ என்று நினைத்துக் கொண்டான்.   

அவன் உடல் நடுங்க ஆரம்பித்தது.  நெற்றியைத் தொட்டுப் பார்த்தான்.  அனலாய்க் கொதித்தது.  உடம்பும் கொதித்தது.  சமயங்களில் உடம்பு ஐஸ் மாதிரி ஆகி வேர்த்தது.  முதுகு வேறு கத்தியால் குத்தியது போல் வலித்தது.  தூங்குவதற்காகக் கண்களை மூடிப் பார்த்தான்.  தூக்கத்திலாவது இது எல்லாவற்றையும் மறக்கலாம்.  மறப்பதற்கு எவ்வளவோ இருந்தது.  இந்த உடம்பு வலி மட்டும் அல்ல; இந்தக் கரங்களினால் அவன் இன்று என்ன செய்தானோ அது இப்போது அவன் உடம்பில் வலியாக மாறியிருக்கிறது. 

அவன் அந்த சீமாட்டியைப் பார்த்தான். அந்த வெந்நிற சீமாட்டி மிக மென்மையாக அங்கே உறங்குபவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  இத்தனை அசிங்கத்துக்கு இடையில், ஆன்மாவை இழந்து விட்ட இவ்வளவு கேவலமான உடல்களுக்கு இடையில் அந்த சீமாட்டியால் எப்படி இருக்க முடிகிறது?  தரையிலே குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கும் அந்த மலினமான மனிதக் கூட்டத்தைப் பார்த்தான்.  இத்தனைக்கும் இடையில் சீமாட்டி அமைதியாக ஒளிர்ந்து கொண்டிருந்தாள். 

அது சரி, அவன்?  அவன் தன்னைப் பற்றி நினைத்தான்.  தன் அம்மண உடலைப் பார்த்தான்.  அந்தக் கும்பலில் அவனுடைய நிலைதான் ஆக மோசம்.  குறைந்த பட்சம் அவர்கள் தங்கள் உடலையாவது மறைத்திருக்கிறார்கள்.  அவனோ அந்தக் கன்னி மேரிக்கு முன்னே நிர்வாணமாகக் கிடக்கிறான்.  தன்னை மறைத்துக் கொள்ள முயன்றான்.  குளிர், நடுக்கம், சூடு, முதுகு வலி.  அவனால் முடியவில்லை.  அவன் இந்தப் படுகுழியிலேயேதான் கிடந்து சாகப் போகிறான்.   அவன் அன்று செய்த காரியத்துக்கோ, அங்கே இப்படி அம்மணமாகக் கிடப்பதற்கோ அந்தப் புனித சீமாட்டியிடம் மன்னிப்புக் கூட கேட்க முடியாது.  அழவும் முடியாது.

அப்போதுதான் அது நடந்தது.  அந்த வெண்ணிற ’ரோஜா’ தன் மேடையிலிருந்து இறங்கி அவனை நோக்கி மெல்ல நடந்து வந்தது. மேடையிலே பொம்மை போல் இருந்த அந்த உருவம் இப்போது மனித உருக் கொண்டு உயிர் பெற்று வந்தது.  கறுப்பன் தான் செத்துக் கொண்டிருப்பதாக எண்ணினான்.  பயமும் ஆச்சரியமும் அவனைச் சூழ்ந்து கொண்டது.  அவன் தன்னையே தொட்டுப் பார்த்துக் கொண்டான்.  இதெல்லாம் நிஜமா, கனவா?  ஆனால் தொட்டால் எதுவுமே உணர முடியவில்லை.  உடம்பு வலியிலும் குளிரின் நடுக்கத்திலும் அவன் உணர்ச்சிகள் மரத்துப் போய் விட்டன.  ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு இடத்தில் தொலைந்து போய் விட்டது போல் தோன்றியது.  அந்த நேரத்தில் ஒன்றே ஒன்றுதான் நிஜம்:  அது அவனை நோக்கி நடந்து வரும் அந்தப் பெண்.

அந்த வெண்ணிற ரோஜாவிடம் எந்தத் தயக்கமும் இல்லை.  ஓடும் நீரைப் போல அது தீர்மானமாகத் தொடர்ந்து நடந்து வந்து கொண்டிருந்தது.   ஆனால் பயங்கரம் என்னவென்றால், அவள் வந்து கொண்டிருந்த திசைதான்.  எப்படி இது சாத்தியம்?  இருப்பதிலேயே மட்டமான, அதுவும் அம்மணமாகக் கிடக்கும் ஒரு கேவலமான பிறவியான தன்னை நோக்கி எப்படி வர முடியும்?  இப்போது பக்கத்திலேயே வந்து விட்டாள்.