பூச்சி – 38

புவி என் நெடுநாள் தோழி.  அவர் என்னுடைய சமீபத்திய பூச்சி கட்டுரைகளைப் படித்து விட்டு “நீங்கள் ரொம்பவும் மென்மையாகி விட்டீர்கள்.  ரெண்டு பத்திகளைத் தாண்டிய பிறகுதான் நீங்கள் அவரைப் பாராட்டவில்லை, விமர்சிக்கிறீர்கள் என்றே தெரிய வந்தது.  முன்பெல்லாம் முதல் வாக்கியத்திலேயே சொருகி எடுத்தால் குடல் வெளியே சரிந்து விடும்.  அதோடும் விடாமல் அந்தக் குடலை எடுத்து மாலையாகப் போட்டுக் கொண்டு ஒரு ருத்ர தாண்டவம் வேறு.  பார்க்க ஜோராக இருக்கும்.  அந்த சாரு இப்போது இல்லை.  அது எனக்குத் தனிப்பட்ட முறையில் வருத்தம்தான்” என்றார்.  அப்படியே அவர் அனுப்பின மெஸேஜை மேற்கோள் காட்டுவது என்றால், “You have toned down a lot… which personally I don’t like but I think that’s good for others.”  ஒன்றுமில்லை.  மற்றவர்கள் கனிந்து விட்டீர்கள் கனிந்து விட்டீர்கள் என்று சொல்லி திட்டு வாங்கிக் கொண்டிருப்பதால் அம்மணி நைஸாக toned down என்று ஆங்கிலத்தில் சொல்லித் தப்பித்து விட்டார். 

சரி, இத்தனை நாள் சொல்ல வேண்டாம் என்று இருந்தேன்.  இப்போது சந்தர்ப்பம் வந்து விட்டதால் இனிமேலும் சொல்லாமல் இருக்க முடியாது.  ஆனால் இப்போது சொல்வது தவறாகவும் இருக்கலாம்.  எப்படியென்றால், ஒரு ஜோதிட அறிஞர் என் வாழ்க்கையின் முக்காலத்தையும் கணித்தார்.  அதில் இரண்டு காலமும் மிகச் சரியாக இருந்தது.  எதிர்காலம் இனிமேல்தான் தெரியும்.  ஆனால் கடந்ததும் நடப்பதும் அப்படி அப்படியே.  பிரமித்தேன்.  உடனே ஜோதிடம் என்பது முழுக்க முழுக்க சரியாக இருக்கும் என்றும் சொல்லி விட முடியாது என்றார்.  என் வாழ்க்கையை அப்படி அப்படியே புட்டுப் புட்டு வைத்து விட்டு இப்போது ஏன் இப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டேன்.  அதற்கு அவர் மஹாபாரதத்திலிருந்து ஒரு கதை சொன்னார்.  பாண்டவர்களில் கடைக்குட்டி சகாதேவன் ஒரு ஞானி.  எல்லாம் தெரிந்தவன்.  அதனாலேயே பிரஹஸ்பதி என அழைக்கப்பட்டவன்.  (பிரஹஸ்பதி கடவுளருக்கே ஆசானாக விளங்கியவர்.)  சகாதேவன் ஜோதிட சாஸ்திரத்தைக் கரைத்துக் குடித்தவன்.  அவனுக்கு அதில் தெரியாததே இல்லை.  பனிரண்டு ஆண்டு வனவாசமும் ஓர் ஆண்டு அஞ்ஞாதவாசமும் முடிந்து பாண்டவர்கள் துரியோதனனிடம் கிருஷ்ணரைத் தூது அனுப்புகிறார்கள்.  பேசினபடி ராஜ்ஜியத்தைக் கொடுத்து விடுகிறாயா அல்லது போரில் முடிவு செய்யலாமா?  சகாதேவன் தன்னுடைய ஜோதிட  ஞானத்தின் அடிப்படையில் போர் வரப் போவதை அறிந்து கிருஷ்ணனிடம் ஒரு வரம் கேட்கிறான்.  குந்தியின் ஐந்து புதல்வர்களும் போரில் வெல்ல வேண்டும்.  நன்கு யோசித்து வரத்தை சரியாகக் கேள் என்கிறான் கிருஷ்ணன்.  கொஞ்சம் யோசித்த சகாதேவன் குந்தியின் ஐந்து புதல்வர்களின் உயிருக்கும் ஹானி ஏற்படாமல் போரில் வெல்ல வேண்டும் என்கிறான்.  வரத்தைக் கொடுத்து விட்டுப் போய் விடுகிறான் கிருஷ்ணன்.  வரத்தை சரியாகக் கேள் என்று சொல்லியும் சகாதேவனுக்குக் கேட்கத் தெரியவில்லை.  குந்தியின் புதல்வர்களின் உயிருக்கு ஹானி ஏற்படக் கூடாது என்று கேட்டிருந்தால் கர்ணன் பிழைத்திருப்பானே?  ஆனால் வரம் கேட்ட போது குந்திக்கு இன்னொரு மகனும் இருக்கிறான் என்று சகாதேவனுக்குத் தெரியாது. 

போரில் கர்ணன் இறந்ததும் குந்தி துயரம் கொள்கிறாள்.  பாண்டவர்களும் இதுவரை தெரிய வராத தங்கள் சகோதரனின் மரணத்துக்காகத் துயருறுகிறார்கள்.  அப்போது சகாதேவன் தன்னுடைய ஒரு வார்த்தையினால் கர்ணன் இறந்து விட்டானே என நினைக்கிறான்.  ”’குந்தியின் ஐந்து புதல்வர்களும்’ என்று ஏன் சொன்னோம்?  குந்தியின் புதல்வர்கள் என்று கேட்டிருந்தால் இந்நேரம் கர்ணன் பிழைத்திருப்பானே?  இது நமக்குத் தெரியாமல் போயிற்றே?  நாம் கரை கண்ட ஜோதிடம் உதவிக்கு வரவில்லையே?” என்று வருந்தி தன்னிடம் இருந்த அத்தனை ஜோதிட சாஸ்திர சுவடிகளையெல்லாம் தீயிட்டுக் கொளுத்தி விட்டான். 

சகாதேவனுக்கே இப்படியென்றால், நானெல்லாம் எம்மாத்திரம்?  அதனால் சொல்வது தவறாகவும் இருக்கலாம்.  ஏழெட்டு ஆண்டுகளாக ரத்த அழுத்தத்துக்கு சர்ப்பகந்தா என்ற மூலிகையைச் சாப்பிட்டு வருகிறேன்.  இது ஸ்கீஸோஃப்ரீனியா என்ற மனநோய்க்கும் அதீத ரத்த அழுத்தத்துக்கும் நல்ல மருந்து.  எனக்கு ஸ்கீஸோ இல்லையென்றாலும் ரத்த அழுத்தம் அதிகம் உண்டு.  அதனால்தான் முன்பு ரௌத்திரம், இப்போது சாந்தம்.  வெறுமனே ஒரு இலை பண்ணுகிற வேலை.  அவ்வளவுதான். 

***

புவி வேறொரு மெஸேஜ் அனுப்பியிருந்தார்.  அதற்குள் செல்வதற்கு முன் ஒரு சம்பவம்.  உங்கள் முன் கடவுள் தோன்றி வரம் தருகிறேன் என்று சொன்னால் என்ன கேட்பீர்கள் என்று கேட்டார் சீனி.  ஒரு ரெமி மார்ட்டின் பாட்டில் கேட்பேன் என்றேன்.  ஏனென்றால், அப்போதைய தேவை ஒரு ரெமி மார்ட்டின் பாட்டிலாக இருந்தது.  அவ்வளவுதான்.  என்னால் ரொம்பவும் முன்னோக்கியெல்லாம் சிந்திக்கத் தெரியாது.     இப்போது பாருங்கள்.  என் நண்பர் ஒருவரிடம் “இப்படி லாக் டவ்னாக இருக்கிறதே, சரக்குக்கு என்ன பண்ணுகிறீர்கள்?” என்று அக்கறையுடன் கேட்டேன்.  கேட்டிருக்கவே வேண்டாம்.  ஏனென்றால், 2022 ஆகஸ்டுக்கான திட்டத்தையே இப்போது வைத்திருப்பார்.  இன்னும் ஐந்து மாதத்துக்கான சரக்கை வாங்கி ஸ்டாக் செய்திருக்கிறேன் என்றார்.  ”எப்படி, அந்த டெக்னிக்கை மட்டும் சொல்லுங்கள்” என்றேன்.  ஏனென்றால், சரக்கு வேண்டாம் என்றாலும் பிற சாதனங்களுக்கு அந்த டெக்னிக்கைப் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லவா?  “டெக்னிக்கும் இல்லை, ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.  கொரோனாவுக்கு சமூக விலகல்தான் ஒரே தீர்வு என்று தெரிந்து விட்டது.  அப்புறம் என்ன?  கொஞ்சம் கொஞ்சமாக அதைத்தான் செய்யப் போகிறார்கள் என்று யூகித்து மொத்தம் ஆறு மாதத்துக்கான சரக்கை வாங்கி ரெடி பண்ணி விட்டேன்.”  நல்லவேளை, சரக்குக்கு ஒன்றும் ரேஷன் இல்லை.  எலீட்டுக்குப் போனால் அள்ளிக் கொண்டு வரலாம்.  என்னென்ன அள்ளினீர்கள் என்று கேட்கவில்லை.  கேட்டால் பொறாமையாக இருக்கும்.  எதற்கு?

கடவுள் வரம் கொடுப்பது மாதிரி புவி ஒரு மெஸேஜ் அனுப்பினார்.  இதோ:

Dearest  Charu ,

I have been reading you for last 10 years and over these years you have never ceased to amaze me with your energy. Even a 20 year today cannot match you in anyways.  இப்போது நீங்கள்  எழுதி வரும் பூச்சி படிக்கும் போது இன்னும் உங்களிடம் நூறு  வருஷத்துக்கான content இருக்கிறது என்று புரிகிறது.  அதை  எல்லாம் எப்போதுதான் எழுதி முடிக்கப் போகிறீர்கள்!  படிக்கும் எனக்கே அப்பாடா என்று இருக்கிறது.  இது அத்தனையும் வாசித்து, சேகரித்து, எழுதுகின்ற உங்களுக்கு எப்படி இருக்கும்! You  are a boon and a blessing to us. உங்கள் அளவுக்கு இனிமேல் யாராலும் எழுத முடியும் என்று எனக்குத் தோணலை. உங்க சிஷயர்கள் என்று சொல்கிறவர்களிடம் கூட உங்களி style of writing இருக்குமே தவிர உங்க content and information அவங்களால் கொடுக்க முடியுமா, தெரியவில்லை.  உங்கள் அளவுக்கு வாசிப்பை யாராலும் பண்ண முடியும் என்றும் தோணலை. We are so blessed to have lived in the same time period as yours. Thank You and Thank You. 

இதில் என்ன வரம் இருக்கிறது?  இருக்கிறது.  அடுத்து வந்த மெஸேஜில் உங்களுக்கு என்ன வேண்டும், கேளுங்கள், அனுப்பித் தருகிறேன் என்றார்.   என்ன கேட்டிருப்பேன் என்று நினைக்கிறீர்கள்?  ஒருமுறை ஒரு பெரியவர் என்னிடம் ஒரு ப்ளாங்க் செக் கொடுத்து எவ்வளவு வேண்டுமானாலும் போட்டு நிரப்பி எடுத்துக் கொள்ளுங்கள் என்று கொடுத்தார்.  பெரும் பணக்காரர்.  கற்பனை என்று நினைக்காதீர்கள்.   என் வாழ்வில் நடக்கும் பல சம்பவங்கள் கற்பனையை விட நம்ப முடியாததாக இருக்கும்.  அதையெல்லாம் உடனிருந்து பார்த்தவர் சீனி.  அந்த ப்ளாங்க் செக்கை ரொம்ப பத்திரமாக வைத்திருந்தேன்.  எனக்கு அப்போது ஒரு கோடி ரூபாய் தேவையாக இருந்தது.  எல்லாம் இந்தத் தென்னமெரிக்க நாடுகளைச் சுற்றிப் பார்க்கத்தான்.  சீலேவை நன்கு சுற்ற வேண்டும்.  அர்ஜெண்டினா.  ப்ரஸீல்.  உருகுவாய்.  இல்லையா பின்னே?  நீங்களே சொல்லுங்கள், நேற்று ஆர்மோனியா சோமர்ஸ் வாழ்ந்த உருகுவாயைப் பார்க்க வேண்டுமா வேண்டாமா?  அப்புறம் மத்திய அமெரிக்காவில் பல நாடுகள்.  முதலில் மெக்ஸிகோ.  எல் ஸால்வதோர்.  கூபா.  தொமினிகன் ரிபப்ளிக்.  இப்படி ஏராளமான நாடுகள்.  எப்படியும் ஒரு கோடி தேவை.  ஆனால் நம் எழுத்தை ரசித்து, நம்மையும் மதித்து ஒரு மனுஷர் ஒரு ப்ளாங்க் செக்கைக் கொடுத்தால் அதில் ஒரு கோடியை எழுதி வாங்குவேன் என்றால் அது என்ன நியாயம் என்றும் என் மனசாட்சி உறுத்தியது.   சரி, ஒரு பத்து லட்சம் போட்டு எடுத்து சீலே மட்டுமாவது சென்று வருவோம் என்று எண்ணினேன்.  ஒரு ஐந்து வருடம் இருக்கும்.  அப்போது சீலே சென்றிருக்கவில்லை.  பிறகு பத்து லட்சத்துக்குமே அந்த ஒரு கோடி மாதிரியே மனசாட்சி உறுத்தியது.  நம் எழுத்தை மதித்து, நம்மை மதித்து ஒருத்தர்… இத்யாதி, இத்யாதி.  கடைசியில் அது ஒரு லட்சத்துக்கு வந்து நின்றது.  அப்புறம் தீவிரமாக யோசித்தேன்.  ஒரு லட்சத்தை வைத்துக் கொண்டு உருப்படியாக ஒரு வேலையும் செய்ய முடியாதே?  அந்தக் காலத்தில் பப்புவுக்கும் ஸோரோவுக்குமே மாதம் இருபதாயிரம் ரூபாய் செலவாகிக் கொண்டிருந்த காலகட்டம்.  யோசித்துக் கொண்டிருந்தேன்.  கடைசியில் சீனியைக் கேட்கலாம் என்று முடிவு செய்தேன்.  அப்போதுதான் அந்த முக்கியமான சம்பவம் நடந்தது.  அந்த ப்ளாங்க் செக் மேஜிகல் ரியலிஸக் கதைகளில் வருவது போல் எப்படியோ காணாமல் போய் விட்டது.   நானும், அப்பாடா, ஒரு சிக்கல் தீர்ந்தது என்று விட்டு விட்டேன்.  கொடுப்பதுதான் கொடுத்தார், ஒரு லிமிட் சொல்ல வேண்டாமா?  நான் பாட்டுக்கு ஒரு கோடி என்று எழுதினால் எனக்குக் கெட்ட பெயர் வந்து விடாதா?  எப்படியும் வங்கியில் அவருக்கு ஒரு போன் போட்டுக் கேட்பான்.  உடனே அவர் அடடா, எழுத்தாளர் கஷ்டப்படறாரே, ஒரு அஞ்சாயிரம் பத்தாயிரம் போட்டு எடுத்துக்குவார்னு பார்த்தால் ஒரு கோடியா, என்னய்யா இது அநியாயம் என்று என் மீது கேஸ் கீஸ் போட்டு விட்டால் என்ன ஆவது?  ஆனால் லிமிட் என்று சொன்னால் நான் அந்த லிமிட்டைத்தான் செக்கில் எழுதுவேன்.  ஒரு லட்சம் என்று சொன்னால் பத்தாயிரம் என்று எழுதும் அளவுக்கு நான் பெவகூஃப் இல்லை.  ஒரு லட்சம் என்றே போட்டு எடுப்பேன்.  என் பிரச்சினை அப்போது ஒரு லட்சமா ஒரு கோடியா என்பதாகவே இருந்தது.  முடிவுக்கு வருவதற்குள் செக்கும் தொலைந்தது, பிரச்சினையும் தீர்ந்தது. 

அந்த மாதிரி புவி ஒரு கொக்கி போட்டார்.  என்ன வேண்டுமோ கேளுங்கள்.  ஆஹா, நானே ஒரு பிரச்சினையில் இருந்தேன்.  அதை எழுதினால் எல்லோரும் அடிக்க வருவார்கள் என்பதால்தான் இத்தனை நாளாக எழுதாமல் இருந்தேன்.  தலையிலும் முகத்திலும் வளரும் முடிதான் பிரச்சினை. தமிழ்நாட்டு லேடீஸ்களுக்கு சரியான டெய்லர் கிடைக்க மாட்டார்.  அவந்திகா மட்டுமல்ல; நான் பார்த்த வரை அப்படித்தான்.  அலுவலகத்திலும் பலர் அது பற்றியே பேசிக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.  முக்கியமாக ஒரு லேடீஸும் ஒரு டெய்லர் நல்லபடியாக ஒரு ப்ளவுஸ் தைத்தார் என்று சொல்லி நான் கேள்வியே பட்டதில்லை.  அது ஒரு தீராத பிரச்சினை.  அப்படித்தான் எனக்கு முடிவெட்டுபவர்.  இதுவரை ஒருத்தருக்குக் கூட நான் சொல்வது புரிந்ததே இல்லை.  ஆனால் புரியாமலேயே ஒருத்தர் எனக்கு நான் என்ன விரும்பினேனோ அதேபோல் வெட்டி விட்டார்.  முத்து என்று பேர்.  நாகூரில் கொத்தாச்சாவடியில் கடை வைத்திருந்தார்.  பிரமாதமாக வெட்டுவார்.  அது என்ன ஸ்டைல் என்றால், ஏர்ஃபோர்ஸ்காரர்கள் வைத்திருப்பார்கள் இல்லையா அந்த மாதிரி.  ஸம்மர் க்ராப்.  சுற்றி வர மண்டையின் தோல் தெரிகிறாற்போல் ஒட்ட வெட்டி, மேலே கொஞ்சூண்டு முடி.  இவ்வளவுதான்.  ஆனால் ஒரு கலைஞர் கூட நான் சொன்னதுபோல் வெட்டினதில்லை.  ரமேஷ் மட்டும் கொஞ்சம் நெருங்கி வந்தார்.  ஆனால் அவரும் கூட நான் எதிர்பார்த்த அளவு போகவில்லை.  ஒரே வாரத்தில் கிருதாவில் முடி மண்டி விடும்.  பதினஞ்சு நாட்களுக்கு முடியே தெரியக் கூடாது.  அந்த மாதிரி ஒட்ட வெட்ட வேண்டும்.  ஒருத்தருக்கும் துணிச்சல் வராது. 

முடி விஷயத்தில் எனக்கு ஒரு பிரச்சினை உண்டு.  கொஞ்சம் வளர்ந்து விட்டால் ஜலதோஷம் வந்து விடும்.  ஜலதோஷம் ஜுரமாக மாறும். ரிஷப ராசிக்காரன் படுக்கவே மாட்டான்.  படுத்தால் பதினஞ்சு நாள் காலி.  என்னால் ஜுரத்திலோ ஜலதோஷத்திலோ ஒரு காரியம் பண்ண முடியாது.  அப்படியே படுத்தே கிடப்பேன்.  ஹார்ட் அட்டாக்கெல்லாம் எனக்கு ஜுஜுபி.  ஆனால் ஜலதோஷம் உயிரை வாங்கி விடும்.  இரவில் மூச்சு விட முடியாது.  அது ஒரு கொடுமை.  அதனால் ஒரு மில்லிமீட்டர் அதிகம் வளர்ந்து விட்டாலும் பார்பர் ஷாப்புக்கு ஓடி விடுவேன்.  இப்போது கொரோனாவில் எங்கே ஓடுவது?  லாக் டவுன் ஆரம்பிக்கும்போதே – அதாவது போன மாதமே முடி வளர்ந்து லிமிட்டைத் தாண்டி விட்டது.  ஐயோ.  இப்போது ஜலதோஷம் என்றும் வெளியே சொல்ல முடியாதே?  தப்லீக் ஜமாத்காரர்கள் மாதிரி ஓடி ஒளியவும் முடியாது.  நாம் சமூகப் பொறுப்புணர்வு கொண்டவர்கள்.  அதிலும் எழுத்தாளன் என்றால் ஏதோ ரமண மகரிஷி ரேஞ்சுக்கு சொஸைட்டி எதிர்பார்க்கிறது.  (ம்க்கும், புக்ஸ் எதுவும் வாங்குவதில்லை.  ஆனால் எதிர்பார்ப்பில் மட்டும் குறைச்சல் இல்லை.  இதில் இந்தத் தமிழர்கள் அமெரிக்கர்கள் மாதிரிதான்.  அமெரிக்கன் குடிப்பான்.  கூத்தியாவிடம் போவான்.  எல்லா அட்டகாசமும் பண்ணுவான்.  ஆனால் தன் ஜனாதிபதி மட்டும் பெரிய ஒழுக்கசீலனாக, குடும்பஸ்தனாக, எந்தக் காலத்திலும் ட்ரக் போடாதவனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பான்.  மோனிகா லெவின்ஸ்கியும் க்ளிண்டனும் அப்படி என்ன தப்பு செய்து விட்டார்கள்?  ஆஃப்டர் ஆல் ஒரு ப்ளோ ஜாப்.  அதற்குப் போய் தி ஹிண்டுவில் பெரிய தலையங்கமே எழுதி என்ன ஆர்ப்பாட்டம்?  ஓ, அமெரிக்காவுக்கும் ஹிண்டுவுக்கும் என்ன சம்பந்தமா?  ஹிண்டுதான் அமெரிக்காவின் மனசாட்சி.  பெரூ என்ற நாட்டில் ஆயிரம் பேர் செத்தாலும் செய்தி இல்லை.  அமெரிக்காவில் ஜனாதிபதி மாளிகையில் ஒரு ப்ளோ ஜாப் நடந்தால் தலையங்கம்!  சரி, விஷயத்துக்கு வாருங்கள்.  அந்த இம்மாரலான ப்ளோ ஜாப் மேட்டரால் க்ளிண்டன் வீழ்ந்தார் இல்லையா?  இங்கே தமிழ்நாட்டில் எழுத்தாளன் என்றால், அமெரிக்க ஜனாதிபதி மாதிரிதான்.  ஒழ்க்கமாக இருக்க வேண்டும்.  அதிலெல்லாம் தமிழ் மகாஜனம் ரொம்பக் கறாராக இருக்கும்.  எழுத்தாளன் சோத்துக்கு இல்லாமல் பட்டினி கிடந்து சாவான்.  அதைப் பற்றிக் கவலையில்லை.  ஒழ்க்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி மாதிரி அல்லது ரமண மகரிஷி மாதிரி இருக்க வேண்டும்.  எதற்குச் சொன்னேன்?  ஆங்… இப்போதைய நிலையில் ஜலதோஷம் வந்தால் தப்லீக் ஜமாத்காரர் மாதிரி (எப்படி மரியாதையாக ர் விகுதி போட்டிருக்கிறேன் பாருங்கள்… இந்த nuanceஐ எல்லாம் என்னைத் திட்டும்போது நீங்கள் கவனிக்க வேண்டும்!) ஓடி ஒளியக் கூடாது, முடியாது.  ஏனென்றால், நான் எழுத்தாளன்.  ஜலதோஷம் என்றும் சொல்ல முடியாது.  தினமும் வந்து கார்ப்பொரேஷன் அதிகாரிகள் வந்து கேட்கிறார்கள்.  இங்கே உங்கள் வீட்டில் யாருக்காவது ஜுரம், ஜலதோஷம் இருக்கா?  இல்லீங்க.  இருக்கிறது என்று சொன்னால் இந்த மைலாப்பூர் ஏரியாவே அலெர்ட்டாகி விடுகிறது.  உடனேயே நம்மை மனித வெடிகுண்டு போல் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.  என் நண்பர் ஒருத்தர் தாய்லாந்து போய்த் திரும்பினார்.  அவர் வீட்டு வாசலில் “இது தனிமைப்படுத்தப்பட்ட வீடு” என்று நோட்டீஸ் ஒட்டி விட்டார்கள்.  முடிந்தது கதை.  ஒரு மாதம் போல் அந்த வீட்டு ஆட்கள் யாரையும் யாரும் வெளியிலேயே விடவில்லையாம்.  அடப்பாவிகளா, இங்கே யாருக்கும் கோவிட் 19 பாஸிட்டிவ் இல்லடா. வெறும் தனிமைப்படுத்தல்தான்.  எவன் கேட்கிறான்.  நீ ஒரு நடமாடும் வெடிகுண்டு. 

இந்தக் காலகட்டத்தில் ஜலதோஷமோ ஜுரமோ வரக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.   டச்வுட் டச்வுட் டச்வுட்.  எதற்கும் சொல்லி வைத்துக் கொள்வோம்.  கடவுளிடம் போய் அகந்தையாகப் பேசி விடக் கூடாது.  ஆனால் முடி இப்படிக் காடாய் வளர்ந்திருக்கும் போது எப்படி கவனமாக இருக்க முடியும்?  முதல் நாள் தும்மினேன்.  அவந்திகா மிரண்டு விட்டாள்.  அவளுக்கு என்னுடைய முடிப் பிரச்சினை தெரியும்.  உடனே கத்தரிக்கோலை எடுத்துக் கொண்டு வந்து விட்டாள்.  எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.  எப்படிக் குதறித் தள்ளினாலும் கவலையில்லை.  இப்போது எங்கே வெளியிலா போகிறோம்?  தலையைக் கொடுத்தேன். 

இங்கேதான் கொஞ்சம் அய்யங்கார்களைப் பற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறது.  ஜாதியைக் குறிப்பிடுகிறேன் என்று பா.ராகவன், பத்ரி சேஷாத்ரி போன்ற என் நண்பர்கள் கோவிக்கக் கூடாது.  ஆண் பெண் யாராக இருந்தாலும் அய்யங்கார் என்றால் கொஞ்சம் அதிபுத்திசாலியாகத்தான் இருக்கிறார்கள்.  அதி என்றால் ரொம்ப ரொம்ப அதி.  இந்த அதி முத்தி சிலபேர் ஸ்கீஸோ அளவுக்கும் போய் விடுகிறார்கள்.  அது தனிக் கதை.  ஏன், ராமானுஜத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்.  அவர் உருவாக்கிய கணிதச் சூத்திரங்களின் விரிவாக்கத்தை, process-ஐ இன்னமும் அவிழ்க்க முடியாமல் பல மேதைகள் திணறுவதாகப் படித்திருக்கிறேன்.  இந்த பத்ரி, இந்த பா.ரா., என்னுடைய அத்யந்த நண்பர்கள் சீனி, ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவன் எல்லோருமே எக்ஸ்ட்ரா ஆர்டினரி ரகம்தான்.  கடவுள் இந்த அய்யங்கார்களுக்கெல்லாம் மூளையில் விசேஷமாக ஏதோ ஒன்றை வைத்து அனுப்புகிறான் போல என்று நினைத்துக் கொள்வேன்.   நானெல்லாம் எந்த ரகம் என்றால், ரோகு டைப். 

ரோகு மீன். 

ரோகினி. 

இல்லிங்க ஜான்.  ரோகு. 

ரோகினி. 

எத்தனை தடவை சொன்னாலும் ரோகு ஜானுக்கு ரோகினி தான்.  மேலே சொன்ன எக்ஸ்ட்ரா ஆர்டினரி பட்டியலில் சேர்க்க வேண்டிய இன்னொரு நபர் இந்த அவந்திகா.  நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேனே, அவளைப் போல் மீன் குழம்பு, கருவாட்டுக் குழம்பு, மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, வாத்துக் குழம்பு, காடை வறுவல், நத்தை வறுவல் என்று யாரும் வைத்து நான் சாப்பிட்டதில்லை.  மதுரை குமார் மெஸ், விளக்குத் தூண் மெஸ், திண்டுக்கல் வேணு பிரியாணி, எல்லாமே எல்லாமே அவள் தளிகைக்கு – சீ, மீன் குழம்பைப் போய் தளிகை என்று சொல்வது அவமானம் – அவளுடைய சமையலின் மணத்தைக் கூடத் தொட முடியாது.  சைவத்திலும் ஆனானப்பட்ட பட்டப்பாவே அவளுக்கு அடுத்துதான்.  அவளோடு போட்டி போட – சைவத்தில் – ஒரே ஒத்தரைத்தான் என் வாழ்நாளில் பார்த்திருக்கிறேன், அவர் என் நண்பர் ராம்ஜியின் அம்மா –  இப்படிப்பட்ட சமையல் நிபுணர் அவந்திகா.  சமையலில் பல பரிசோதனைகளும் பண்ணுவாள்.  ஒருநாள் வஞ்சிரத்தை மேரினேட் பண்ணி அதை இரண்டு வெற்றிலைகளின் நடுவே வைத்து இரண்டு முனைகளிலும் கிராம்பைச் சொருகி விட்டாள்.  இது நடந்தது பத்து மணிக்கு.  பிறகு மூன்று மணி நேரம் கழித்து ஒரு மணிக்கு அதை எடுத்து கிராம்புத் துண்டை நீக்கி விட்டு வெற்றிலையோடு கல்லில் போட்டு வறுத்தாள்.  அடடா, அற்புதம். 

இன்னொரு ஆளை மறந்து போனேன்.  இந்த சுந்தர் பிச்சை.  ஏதோ சென்ற ஆண்டு வருமானம் 3000 கோடி ரூபாய் என்று பேப்பரில் பார்த்தேன்.  ஏய்யா, இங்கே எங்கள் எடப்பாடியார் கொரோனா நிவாரண நிதிக்கு 90 கோடி ரூபாய் சேர்ந்திருப்பதாகப் பெருமையாக அறிவித்திருக்கிறார்.  எல்லாம் தமிழ் மகாஜனங்கள் நன்கொடை அளித்தது.  அடப் பெருமாளே.  எங்கள் டாஸ்மாக்கில் மாதம் 1500 கோடி ரூபாய் அஸால்ட்டாக வந்ததே?  அதை இந்த மோடி மூடி விட்டதால் இப்படி பிஸாத்து 90 கோடியை இந்தப் பிஸாத்து மக்களிடமிருந்து பிச்சை வாங்க வேண்டி வந்தது.  ஆனால் சுந்தர் பிச்சை பாருங்கள்.  பெயரில்தான் பிச்சை.  சம்பளம் 4000 கோடி.  பார்த்தால் அய்யங்கார்.  சரி, சரி.  லூசு அய்யங்கார்களும் இருக்கிறார்கள்தான்.  ஆனால் விஷயதாரி என்று பார்த்தால் அவர் தவறாமல் அய்யங்காராக இருக்கிறார்.  அதுதான் புதிராக இருக்கிறது.

சரி, சாதிப் பிரச்சினை போதும்.  நேராக அவந்திகாவுக்கு வருகிறேன்.  அவளிடம் சரியான கத்தரிக்கோலும் இல்லை.  கடைசியில் பார்த்தால், நான் வாழ்நாள் பூராவும் முடிதிருத்தும் கலைஞர்களிடம் என்ன வேண்டும் என்று கேட்டுப் போராடிக் கொண்டிருந்தேனோ அதை அசால்ட்டாகக் கொண்டு வந்து விட்டாள்.  பத்தே நிமிடம்.  தூள்.  உங்களுக்கு இந்தத் திறமையெல்லாம் எப்படி எங்கேர்ந்து வருகிறது என்று கேட்டேன்.  பிடிச்சுருக்குல்ல விடு என்று சொல்லி விட்டுப் போய் விட்டாள்.  இனிமேல் இவளிடம்தான் இந்த வேலை என்று இன்று மீண்டும் இரண்டாவது தடவையாக வெட்டிக் கொண்டேன்.  அதற்குள் ஒரு மாதம் ஆகி விட்டது.  அதே அச்சு அசலாக போன மாதம் மாதிரியே ஒரு அசத்தல்.

ஆமாம், இதை எதற்குச் சொல்ல வந்தேன்?  ஆங்.  புவி.  என்ன வேண்டும் சாரு, சொல்லுங்கள்.  ஐ வில் கெட் இட். 

புவி, கெட் மீ அ ஜில்லட் ஃப்யூஷன் ப்ளேட்.

அடப் பாவி.  உங்களைப் போன்ற cranky guyயைப் பார்த்ததே இல்லை.  ஒரு ப்ளேடையா போய் கேட்பார்கள்.

இல்லை புவி,  உனக்குத் தெரியாது என் பிரச்சினை என்று ஆரம்பித்து பெரிய கதை சொன்னேன். 

என்னவென்றால், என்னுடைய கன்னம் குழந்தையின் கன்னத்தைப் போல் மிருதுவாக இருக்கும்.  பளிங்கு போல் வழுக்கும்.  ஆனால் ப்ளேடு போட்டால் முடி போகாது.  நான் சவரம் செய்து கொள்ள ஆரம்பித்தபோதுதான் ஆர்க்கே சார் பற்றிய ஒரு விஷயமே எனக்குப் புரிந்தது.  ஆர்க்கே சார் கணக்கு சார். கோபம் வந்தால் பிரம்பை எடுத்து விளாசித் தள்ளி விடுவார்.  வகுப்பில் ஒரு புத்திசாலிப் பையன் அவர் எப்போது கோபப்படுகிறார் என்று கண்டு பிடித்தான்.  அப்படிக் கண்டு பிடித்ததால்தான் புத்திசாலி என்கிறேனே தவிர மார்க் வாங்கும் விஷயத்தில் அவன் ஒரு கடைசி பெஞ்சுதான்.  பட்டாம்பூச்சி நாவலில் ஹென்றி ஷாரியர் அந்தத் தீவிலிருந்து எப்படித் தப்பிப்பார், ஞாபகம் இருக்கிறதா?  மலையிலிருந்து கீழே சுற்றிலும் பார்த்தால் கடல்.  ஒரே பாறைகள். மேலே இருந்து கடல் அலைகளையே பார்த்துக் கொண்டிருப்பார் ஷாரியர்.  ஒருநாள் அவருக்குத் தெரிந்தது, வருகின்ற அலைகள் அனைத்துமே பாறையில் மோதுவதில்லை.  ஆறு அலைகளுக்குப் பிறகு ஏழாவது அலைதான் பாறியில் மோதுகிறது.  இந்தக் கணக்கில் தவறுவதே இல்லை.  அதன் பிறகு மேலேயிருந்து குதிக்க எவ்வளவு நேரம் ஆகிறது என்றெல்லாம் ஆராய்ந்து, ஒரு படகு செய்து தப்பிக்கிறார் ஷாரியர்.  அதுபோல அந்தப் பையன் வாரம் இரண்டு நாட்கள்தான் ஆர்க்கே சார் பிரம்பு எடுக்கிறார் என்று கண்டுபிடித்தான்.  அந்த இரண்டு நாட்களும் அவர் சவரம் செய்து கொண்டு மழமழ என்று வருகிறார்.  சரி, இதற்கும் ஆர்க்கே சார் பிரம்புக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்குக் கன்னத்தில் முடி வளர்ந்து பனாமா ப்ளேடால் சவரம் செய்து கொண்ட போதுதான் தெரிய வந்தது.  அடடா, முப்பது வயதுக்கு உட்பட்ட நீங்களெல்லாம் அதிர்ஷ்டசாலிகள்.  உங்களுக்கு முளைத்தவுடன் கையில் அலைபேசி கிடைத்து விட்டது, கம்ப்யூட்டர் கிடைத்து விட்டது.  உலகமே உங்கள் கையில்.   நீங்கள் செய்த இன்னொரு அதிர்ஷ்டம் என்னவென்றால், நீங்கள் பனாமா ப்ளேடைக் கொண்டு சவரம் செய்ததே இல்லை.  எடுத்த எடுப்பில் ஜில்லட்.  அதிலும் ஃப்யூஷன்.  45 ஆண்டுகளுக்கு முன்னால் ஜில்லட் ஏது?  இருந்திருக்கும்.  அதெல்லாம் சபுராளிகளிடம்தான்.  நாங்களெல்லாம் கேள்வியே பட்டதில்லை.  வெறும் பனாமாதான்.  அதைக் கொண்டு சவரம் செய்து கொண்டவுடன் யாருடனோ கத்திச் சண்டை போட்ட மாதிரி இருக்கும்.  கன்னமெல்லாம் ரத்தமாய் வழியும்.  ஒரே எரிச்சல்.  யாரையாவது கொலை பண்ணி விடுவோமோ என்று கிலியாக இருக்கும்.  நாள் பூராவும் அப்படியே இருக்கும்.  அதில் ஆஃப்டர் ஷேவ் லோஷனை வேறு போட்டால் வெந்த புண்ணில் ஆல்கஹாலை ஊற்றியது போல் எரியும்.  நரகம்.  நானோ தினந்தோறும் சவரம் செய்து கொள்பவன்.  முகத்தில் முடி முளைத்த நாளிலிருந்து சவரம் செய்து கொள்ளாத நாளே இல்லை.  தில்லியில் கொஞ்ச காலம் தாடி வைத்திருந்தேன், அந்தச் சில காலத்தைத் தவிர.  கடைசியில்தான் ஒரு நாற்பது வயது வாக்கில்தான் ஜில்லட் வாங்கக் கூடிய வசதி கிட்டியது.  அதன் பிறகு கொஞ்சம் பரவாயில்லை.  ஆனால் ஜில்லட்டும் எரிந்து கொண்டுதான் இருந்தது.  சமீப காலமாய் ஃப்யூஷன் என்று ஒரு மேஜிக் ப்ளேட் வந்த பிறகுதான் சவரம் ஒரு இன்ப காரியமாக மாறியது. 

லாக் டவுன் ஆரம்பிக்கும் முன்பே கடைகளில் இந்த ஜில்லட் ஃப்யூஷன் தீர்ந்து விட்டது.  வெறும் ஜில்லட் தான்.  அது ஒரு வேஸ்ட்.  பனாவை விடத் தேவலாம் என்றாலும் ஃப்யூஷனைப் பயன்படுத்திய பின் இது தண்டம். 

இந்தப் பின்னணியில்தான் புவியிடம் கெட் மி எ ஜில்லட் ஃப்யூஷன் என்றேன்.