பூச்சி 82

நேற்று அல்ஹலாஜின் கவிதைகளை ஆறு மணி நேரம் படித்து மூழ்கியதில் முக்கியமான விஷயத்தை விட்டு விட்டேன்.  பரமஹம்ஸா பற்றி நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்த போது – இல்லை, இல்லை, பரமஹம்ஸாவின் வாழ்க்கையில் நடந்ததைப் போலவே ஒரு விஷயம் என் வாழ்வில் அடிக்கடி, ஏன், தினமுமே, நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்லி, காசும் கல்லும் ஒண்ணுதான் எனக்கு, மண்ணும் பொன்னும் ஒண்ணுதான் எனக்கு என்று சொல்லிக் கொண்டிருந்தபோது என் வாய்க்குள் ஒரு ஈ போய் விட்டது.  இப்படியெல்லாம் எதிர்பாராத பிரச்சினை வரும் என்று யாருக்குத் தெரியும்?  கண்ணிமைக்கும் நேரத்தில் பதற்றமாகி, தொண்டைக்குள் போய் விடப் போகிறதே எனப் பயந்து காறித் துப்புவது போல க்ஹ்ரா க்ஹ்ரா என்றேனா, தவறான இடத்துக்கு வந்து விட்டோம் என வெளியே போக இருந்த ஈ அதுவும் என்னைப் போலவே மிரண்டு போய் உள்ளே போய் விட்டது.  அல்லது க்ஹ்ரா க்ஹ்ரா என்ற சப்தம் அதை உள்ளே இழுத்து விட்டது போல.  பார்த்தீர்களா, ராமகிருஷ்ணர் எப்பேர்ப்பட்ட மகான், பகவான்! அவரோடு உங்களை ஒப்பிட்டுக் கொண்டீர்களே, அதனால்தான் தண்டித்து விட்டார் கடவுள் என்றார் நண்பர்.  அது பரவாயில்லை, அல்ஹலாஜைப் போட்ட மாதிரி எண்ணெய்க் கொப்பரையில் போடாமல் இருந்தால் போதும் என்றேன். 

எப்படி இருந்தாலும் தன்னடக்கம் கருதி நமக்கு நாமே ஏன் பொய் சொல்ல வேண்டும் என்பதுதான் என் கருத்து.  ஓரிருவரைத் தவிர என்னைச் சுற்றி இருப்போர் அனைவரும் தன்னடக்கத் திலகங்களே ஆவர்.  அதனால் நான் இப்படி நான் ஒரு துறவி, பரமஹம்ஸாவுக்கு நடந்தது எனக்கு தினமும் நடக்கிறது என்றெல்லாம் சொன்னால் தலைக்கனம் என்கிறார்கள்.

என் முன்னால் இருப்பது ஒரே ஒரு கதைதான்.  நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்.  நான் என்னைத் துறவி என்று நினைக்கிறேன்.  அதுவாகவே ஆவேன்.   இதற்கு ஒரு கதை சொன்னேன் அல்லவா, ஞாபகம் இருக்கிறதா? பவானி பவாய் படத்தில் வரும் கதை.  மீண்டும் சொல்ல வேண்டுமா?  ஒரு ஆளுக்கு ஊரெல்லாம் கடன்.  ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொண்டால்தான் கடன் கொடுத்தவர்களிடமிருந்து தப்ப முடியும் என்ற நிலை.  தற்கொலை செய்து கொள்ள அவனுக்கு மனசில்லை.  யோசித்தான்.  கடன்காரர்கள் வந்த போது பயத்தில் கியா முய்யா என்று உளறினான்.  அடித்தார்கள்.  அப்போதும் உளறினான்.  கன்னாபின்னா என்று உளறினான்.  ஆளுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று போய் விட்டார்கள்.  ஆஹா,  இது நல்ல உபாயமாக இருக்கிறதே என்று அதையே பின்பற்ற ஆரம்பித்தான்.  ஊரில் பைத்தியம் என்றார்கள்.  பிறகும் அவனும் தன்னைப் பைத்தியம் என்றே நம்ப ஆரம்பித்தான்.  அதனால் என்ன?  அவன் பாட்டுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து வந்தான்.  அப்படியாக…

***

ஒரு நண்பர்.  எனக்கு எத்தனையோ உதவிகள் செய்தவர்.  செய்து கொண்டிருப்பவர்.  அற்புதமான மனிதர்.  யாரையும் தீது சொல்ல மாட்டார்.  நேற்று பேசிக் கொண்டிருக்கும்போது நான் வாயை வைத்துக் கொண்டு சும்மா இராமல் பூச்சி படிக்கிறீர்களா என்று கேட்டு விட்டேன்.  அட்டகாசமாக சிரித்துக் கொண்டே படிக்கிறேன், இன்றைக்கு யார் மாட்டப் போகிறார்களோ என்ற ஆர்வத்துடனேயே பார்ப்பேன் என்றார்.  அதாவது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆளை காலி பண்ணுகிறேன் என்ற அர்த்தத்தில்.  இதையே பலப் பல ஆண்டுகளாகக் கேட்டு சலித்துப் போய் விட்டேன்.  பிறகு நீண்ட நேரம் இது பற்றி யோசித்தேன்.  ஒருவருடைய எழுத்தை விட அவர் பற்றிய பிம்பம்தான் முக்கியமாகிறது.  அதுதான் கடைசியில் மனதிலும் நிற்கிறது.  ஒருமுறை பூச்சியை ஒரு சேர ஓட்டினேன்.  யாரையும் விமர்சித்ததாகவோ திட்டியதாகவோ தெரியவில்லை.  அப்புறம் நண்பர் ஏன் அப்படிச் சொன்னார்?  ஒன்றிரண்டு கட்டுரைகளைப் படித்திருப்பார்.  துரதிர்ஷ்டவசமாக அதில் கமல் இடம் பெற்றிருப்பார்.  முடிந்தது கதை.  இப்படியா ஒரு எழுத்தை வாங்கிக் கொள்வது? 

சலித்துப் போய் விட்டது.  ஒரு ப்ரீவ்யூ நிகழ்ச்சி.  என் முன் இருக்கையில் ரோகினி.  என்னைப் பார்த்து வணக்கம் சொல்லவே நானும் மரியாதைக்கு ஒன்றிரண்டு வார்த்தை பேச வேண்டுமே என்று தி.ஜானகிராமன் பற்றி எழுதியிருக்கிறேன் என்றேன்.  ரோகினி தீவிர இலக்கிய வாசகியாக அறியப்பட்டவர்.  மேலும், அப்போது தி.ஜா. பற்றி தினமணி இணைய இதழில் தொடர்ந்து ஏழு எட்டு வாரங்களாக எழுதிக் கொண்டிருந்தேன்.  தி.ஜா. தவிர அப்போது எனக்கு வேறு சிந்தனையே இல்லை.  நான் சொன்ன அடுத்த க்ஷணம் ரோகினி கேட்டார், திட்டி எழுதியிருக்கீங்களா?  கன்னத்தில் அறை வாங்கினது போல் இருந்தது எனக்கு. 

இன்னொரு சம்பவமும் எனக்கு மறக்காது.  ஒரு கல்லூரி மாணவன்.  இலக்கியம் வாசிப்பவன்.  இந்தக் காலத்து இளைஞர்களைப் போலவே ஆங்கிலத்தில் வாசிப்பான்.  தமிழ் வாசிக்கத் தெரியாது.  ரொம்ப நல்லவன்.  ஒரு philanthropist.  ஒரு ஆண்டு கழித்து என்னைப் பார்க்கிறான்.  முதல் கேள்வி என்ன தெரியுமா?  என்ன அங்கிள், என்னைத் திட்டி என்னா எழுதியிருக்கீங்க? 

அடப்பாவி, என் எழுத்தில் ஒரு அட்சரத்தைக் கூடப் படிக்காதவனே என்னைப் பற்றி இப்படித்தான் நினைக்கிறான் என்றால், மற்றவர்களைப் பற்றி என்ன சொல்ல? 

அவர் ஒரு பியெம்ஜி.  அஞ்சல் துறை அந்தக் காலத்துப் பண்ணை மாதிரி இருக்கும்.  பியெம்ஜியைப் பார்த்து விட்டு எல்லோரும் பின்னோக்கியபடியே நடந்து வாசல் கதவைத் திறப்பார்கள்.  சிலர் செருப்பையும் வெளியே போட்டு விட்டுச் செல்வர்.  இப்படிப்பட்ட சூழலில் அந்தப் பியெம்ஜி ரொம்ப நல்லவர்.  அவர் பெயரைக் குறிப்பிட்டு இன்ன மாதிரி ரொம்ப நல்லவர் என்று எழுதியிருந்தேன்.  மறுநாள் அவரிடமிருந்து எனக்கு போன்.  அறிவழகன், என்னமோ என்னைத் திட்டி எழுதியிருந்தீங்களாமே? 

ஐயோ யார் சார் சொன்னா?

நான் படிக்கலே.  யாரோ சொன்னாங்க. 

மனசுக்குள் அவரிடம் தப்பாகப் போட்டுக் கொடுத்த ஆளைக் கெட்ட வார்த்தையால் திட்டிக் கொண்டே “இல்ல சார், பாராட்டி எழுதியிருந்தேன், நீங்களே படிச்சுப் பாருங்க” என்று கோபமாகச் சொல்லி விட்டு போனைத் துண்டித்து விட்டேன். 

இனிமேல்கொண்டு யாரையும் விமர்சித்தோ திட்டியோ எழுதுவதில்லை என்று முடிவெடுத்தே ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.  இடையில் அதை மீறினால் அதை விதிவிலக்கு என்றே கொள்ள வேண்டும்.  சொல்லப் போனால், கமல் செய்யும் திருவிளையாடல்கள் பற்றி தினந்தோறும் எழுதலாம்.  என் நண்பரான கமல் ரசிகர் கமல் மோடிக்கு எழுதிய கடிதத்தை எனக்கு அனுப்பியிருந்தார்.  தூக்கிக் கடாசி விட்டேன்.  அந்தக் கடிதத்தை விமர்சித்து நாலு பக்கம் எழுதியிருக்கலாம்.  இரண்டொரு தினங்கள் முன்பு ரஹ்மானைப் பேசவே விடாமல் இவரே பேசி அடாவடி பண்ணியது பற்றி எழுதியிருக்கலாம்.  தினந்தினம் இவருடைய திருவிளையாடல்தான்.  எனக்கு இதையெல்லாம் விடப் பெரிய பெரிய வேலை இருக்கிறது.  சிந்தனா உலகம் நடிகர்களைச் சுற்றியே இருப்பது எரிச்சலூட்டுகிறது.  நடிகரைத் திட்டு, இல்லாவிட்டால் பாராட்டு.  நடிகன் தான் மய்யம். 

சமீபத்தில் ஒரு சினிமாக்காரர் ரெண்டு வருஷம் சாருவோடு பழகினேன்.  ரெண்டு வருஷமும் குடித்தோம்.  ஆனால் முதல் நாளே சொல்லி விட்டேன் அவரிடம். உங்கள் எழுத்தைப் படிக்க மாட்டேன் என்று.  இப்படி பேட்டி கொடுத்திருக்கிறார்.  பத்து வருடத்துக்கு முன்பு அவர் இப்படி உளறிய போது 100 பக்கங்களுக்கு அவருக்கு பதில் எழுதினேன்.  ஆனால் இப்போது உடம்பிலிருந்து முடி விழுந்தது போல் கடந்து விட்டேன்.  வேலை இருக்கிறது சாமி.  இந்த வெட்டி ஆட்களுக்கெல்லாம் பதில் சொல்ல நேரம் இல்லை.  அப்படியே விட்டு விட்டேன்.  இப்போது கூட இதை ஒரு உதாரணத்துக்காகத்தான் எழுதுகிறேன்.  என் எழுத்தைப் படிக்க மாட்டேன் என்று ஒருத்தன் சொன்னால், அப்படிச் சொல்ல அவனுக்கு உரிமை இருக்கிறது – அவனுக்கு நான் ஹலோ கூட சொல்ல மாட்டேன்.   நூறு புத்தகங்கள் எழுதிய ஒருவனிடம் – தமிழ்நாட்டிலேயே சொல்லி ஐந்து பேர் மட்டுமே பார்த்திருக்கக் கூடிய அலெஹாந்த்ரோ ஹொடரோவ்ஸ்கி போன்ற நூற்றுக்கணக்கான அபூர்வமான இயக்குனர்களின் எல்லாப் படைப்புகளையும் பார்த்திருக்கின்ற ஒருத்தனோடு ரெண்டு வருஷமாகக் குடித்தேன் என்று சொல்பவனை முழு மூடன் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?  உன் கையில் பாத்திரம் இருந்தால்தானே அள்ளிக் கொண்டு போகலாம்?  நீ வெறும் ரெமி மார்ட்டினோடு வந்தால் அதைக் குடித்து விட்டு வெறும் பாட்டிலைத்தான் தருவேன்.  அட மூடனே, ஒரு காட்டருவியின் முன்னே போய் ஒன்றுக்கிருந்தேன் என்கிறாயே, உன்னை என்னவென்று சொல்வது?  

மேலும், எனக்கு இந்தக் கச்சடா விஷயத்துக்கெல்லாம் செலவு செய்ய நேரம் இல்லை.  நான் எத்தனை perfectionist என்பது என் எழுத்தைத் தொடர்பவர்களுக்கும் என்னோடு பழகுபவர்களுக்கும் தெரிந்திருக்கும்.  ஜெயமோகனுக்கும் எனக்கும் தத்துவார்த்த ரீதியாக மட்டும் அல்ல; பழக்கவழக்கங்களிலும் கூட துருவ வித்தியாசம் உள்ளது.  அவர் நகத்தைக் கடிப்பார்.  சினிமாப் பாடல்களை முணகுவார்.  இந்த இரண்டையும் என் ஆயுளில் செய்ததில்லை.  செய்பவர்களையும் கண்டிப்பேன்.  தாராளமாகச் செய்யுங்கள் நான் இல்லாதபோது என்று சொல்வேன்.  இரண்டுமே எனக்கு எரிச்சலூட்டும் விஷயங்கள்.  ஆனால் ஒரு வாரமாக நகம் கடிக்கும் பழக்கம் இருந்திருக்கலாமோ என்று நினைத்தேன்.  நகங்கள் ட்ராகுலா மாதிரி வளர்ந்து விட்டன.  ஆயுளில் இப்படி ஆனதில்லை.  ரெண்டு நிமிஷம் ஆகும் நகம் வெட்ட.  அந்த ரெண்டு நிமிஷம் கிடைக்கவில்லை. 

ஒரு உதாரணம் சொல்கிறேன்.  எல்லா வியாழனும் எனக்குக் குமுதம் நாள்.  பத்து மணிக்கு ஆரம்பித்து மூன்று மணி அளவில் முடித்து அனுப்பி விடுவேன்.  கடந்த வியாழன் அன்று அது முடியவில்லை.  150 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட ஒரு புத்தகம் பற்றி எழுதலாம் என்று நினைத்துப் படிக்க ஆரம்பித்தேன்.  ஏற்கனவே படித்த புத்தகம் என்பதால் பிரச்சினை இல்லை.  மூன்று மணி நேரம் படித்த பிறகு விஷயம் ரொம்பவும் கனமாக இருப்பது போல் தோன்றியது.  இங்கே ஒரு விஷயம்.  என் நண்பர்கள் யாரும் குமுதம் படிப்பதில்லை.  படிக்கச் சொன்னால் வெகுஜன இதழ்கள் படிப்பதில்லை என்கிறார்கள்.  நான் ஒரு விஷயத்தை எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் அவர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.  நான் இலக்கியப் பத்திரிகைக்கு ஒன்றும் குமுதத்துக்கு ஒன்றும் எழுதுவதில்லை.  ரெண்டுமே ஒன்றுதான்.  எனக்கு.  அந்த சுதந்திரத்தை எனக்குக் குமுதமும் கொடுத்திருக்கிறது.  மேலும், இலக்கிய இதழுக்கு எழுதுவது சுலபம்.  காரணம், பக்க வரம்பு இல்லை.  குமுதத்தில் அதிக பட்சம் 900 வார்த்தைகள்.  முகமறியா வாசகர்கள்.  இருந்தாலும் நான் வெகுஜனப் பத்திரிகைக்கு ஜனரஞ்சகமாக எல்லாம் எழுதுவதில்லை. 

பிறகு மதியம் வேறொரு புத்தகத்தை எடுத்தேன்.  அதுவுமே 150 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.  படித்து முடிக்கவே இரவு பத்து ஆனது.  பனிரண்டரைக்கு எழுதி முடித்து அனுப்பி விட்டுத் தூங்கினேன்.  பனிரண்டு மணிக்கு அவந்திகா வந்து எப்போது தூங்க வருவாய் என்ற போது எப்போது முடியுமோ அப்போது என்றேன்.  எப்போது என்றாள்.  காலை நான்கு மணி கூட ஆகலாம் என்றேன்.  மறுபேச்சு இல்லாமல் நகர்ந்து விட்டாள்.  இந்த நிலையில் எங்கே நகம் வெட்டுவது?  இதெல்லாம் சாமான்ய மனிதர்களுக்குப் புரியவும் நியாயம் இல்லை.  இதைக் கிண்டல் செய்வதற்கான பொருளாகத்தான் எடுத்துக் கொள்வார்கள்.  அதுவும் எனக்குத் தெரியும். 

நான் சொல்ல வந்ததை விட்டு விட்டு வேறு எங்கோ போய் விட்டேன்.  வியாழன் மதியம் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது.  ஏ.ஆர். ரஹ்மானிடமிருந்து.  நான் போடும் மின்னஞ்சலுக்கு அவரிடமிருந்து ஒரு மணி நேரத்தில் பதில் வந்து விடும்.  அதே மரியாதையைத்தானே நாமும் காண்பிக்க வேண்டும்?  ஆனால் அந்தப் புத்தகத்தில் மூழ்கியிருந்தபோது என்னால் ஒருக்கணம் கூட அங்கே இங்கே கவனம் நகரவில்லை.  நகர முடியவில்லை.  வெள்ளிக்கிழமை காலையில்தான் பதில் எழுதினேன். 

இதுதான் என் சூழ்நிலை.  நான் செய்து கொண்டிருக்கும் பணியின் விளைவை நீங்கள் கொஞ்ச காலத்தில் தெரிந்து கொள்வீர்கள்.  அதுவரை நண்பர் சொன்ன மாதிரி “இன்னிக்கு யாரைத் திட்டி எழுதியிருக்கீங்களோ!” போன்ற ஜாலிகளையும் தாண்டித்தான் போக வேண்டும்.  இப்போது நண்பர் என்ன சொல்வார் தெரியுமா, ஆஹா, ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் என்னையேவா சார்…  இந்தக் கட்டுரையைக் கூட அவர் திட்டு என்றுதான் புரிந்து கொள்வார்.  இந்தக் குறிப்பின் அடிச்சரடாக ஓடும் என் வலியை அவர் புரிந்து கொள்வாரா என்று தெரியவில்லை.  பூச்சி மொத்தம் ஆயிரம் பக்கங்களைத் தாண்டியிருக்கும் என்று நினைக்கிறேன்.  எப்பேர்ப்பட்ட விஷயங்களெல்லாம் இருக்கின்றன.  ஒருநாள் அல்லாஹ் அக்பர் பாடலைக் கேட்டு விட்டு என் நண்பர் சொன்னார்.  பெயரைக் குறிப்பிடலாமா என்று தெரியவில்லை.  அதனால் நண்பர் என்பதோடு விடுகிறேன்.  இரவில் நாலைந்து முறை கேட்டேன்.  இன்னொரு முறை கேட்டால் முஸ்லீமாக மாறி விடுவேன்.  எப்பேர்ப்பட்ட வார்த்தை பாருங்கள்.  இதை விடப் பாராட்டு எனக்கு வேறு எதுவும் வேண்டுமா?  நாலைந்து வரிகளே கொண்ட அந்தக் கட்டுரையை நான் நாள் முழுதும் எழுதினேன் என்று குறிப்பிட்டேன்.  ஏனென்றால், நாள் முழுதும் அந்தப் பாடலை நான் கேட்டேன்.  இன்னொரு தோழியும் அவ்வாறே குறிப்பிட்டார்.  அவர் ஒரு இந்துத்துவா என்பது இன்னொரு விசேஷம்.  அப்படிப்பட்டவரையே உலுக்கி விட்டது அந்தப் பாடல்.  இப்படி ஆயிரம் விஷயங்கள் இருக்கும் இந்தப் பூச்சி என் நண்பருக்கு வசை கட்டுரைகளாகத் தோன்றுவதற்குக் காரணம், என்னைப் பற்றிய பிம்பம்.  

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai