பூச்சி 83

கடந்த இரண்டு தினங்களாக அரூ பத்திரிகைக்கான நேர்காணலுக்காக எழுதிக் கொண்டிருந்தேன்.  இரண்டு தினங்களும் வேறு எந்த வேலையும் பார்க்கவில்லை.  அதற்காகப் படிக்கவும் வேண்டியிருந்தது என்பதால் இரவு பகலாக அந்த வேலைதான்.  அநேகமாக என் நேர்காணல்களில் மிக முக்கியமானதாக இருக்கும்.  நேர்காணல் என்கிற போது 2014-ஆம் ஆண்டு நாட்டியக் கலைஞரும் எழுத்தாளருமான Tishani Doshi எடுத்த நீண்ட நேர்காணல்தான் ஞாபகம் வருகிறது.  அது என்னுடைய ஆங்கிலத் தளத்தில் Author’s Parole என்ற தலைப்பில் உள்ளது. (www.charunivedita.com)  அது ஆங்கில வாசகர்களுக்கானது என்றபடியால் என்னைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் அதிகமாக இருக்கும்.  அரூ நேர்காணல் உங்களுக்கு ஜூலையில் வாசிக்கக் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.   

அரூ நேர்காணலுக்காக ஹெலன் சிஸூவின் மெதூஸாவின் சிரிப்பு என்ற நீண்ட கட்டுரையை மீண்டும் ஒருமுறை படித்தேன்.  அது தனியாக புத்தகமாகவே வந்திருக்கிறது.  சிஸூவின் எழுத்துக்களை சிஸூ பற்றிய ஆய்வு நூல்களில் மட்டுமே படித்திருக்கிறேன்.  பல பக்கங்களுக்கு நீளும் மேற்கோள்களும் அவர் எழுத்துக்களிலிருந்து சில பகுதிகளையும் கொடுத்திருப்பார்களே அன்றி அவர் எழுதிய புத்தகங்களைப் படித்ததில்லை.  காரணம், அதன் விலை.  ஒவ்வொரு புத்தகமும் நூறு டாலர், நூற்றிமுப்பது டாலர் என்று போகிறது.  கிண்டில் என்றால், எண்பது தொண்ணூறு டாலர். 

இந்த விலைகளைப் பார்க்கும்போது ஒரு விஷயம் ஞாபகம் வந்தது.  சில தினங்களுக்கு முன்பு நான் லூயி மஸிஞ்ஞோ (Louis Massignon) எழுதிய The Passion of Al-Hallaj, Mysic and Martyr of Islam என்ற புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.  நான்கு தொகுதிகளும் சேர்த்து விலை 45000 ரூ.  அது எங்காவது பல்கலைக்கழக நூலகங்களில் வாசிக்கக் கிடைக்குமா என்று கேட்டிருந்தேன்.  ஃப்ரெஞ்ச் மாணவர் ஈஷ்வர் அதன் மென்நகலை அனுப்பியிருந்தார்.  அவருடைய கடிதத்தை இங்கு தருகிறேன்.

சாரு, 

பேசி நிறைய நாள் ஆகிவிட்டது.

கடந்த சில நாட்களாக பூச்சி படிக்க முடியவில்லை. நேற்று பூச்சி 80 படிக்கும்போது, நீங்கள் Louis Massignon புத்தகம் குறித்து எழுதியிருந்தீர்கள். ஏனோ தெரியவில்லை, பூச்சியை அப்படியே நிறுத்திவிட்டு, இந்தப் புத்தகம் கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். JSTOR தளத்தில் இலவசமாகக் கிடைத்தது. இது திருட்டு PDF ஆக இருக்குமோ என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். இந்த JSTOR, ஆராய்ச்சி மாணவர்களுக்காக இயங்கும் ஒரு தளம். இங்கே பதிவிடப்படுபவை எல்லாம் முறையான அனுமதி பெற்றுத்தான் பதிவிடப்படுகின்றன. இதைப் பயன்படுத்த, கல்லூரி அல்லது பல்கலைக்கழக Wifi access தேவைப்படும். மற்றவர்கள் படிக்கலாம், பதிவிறக்கம் செய்ய முடியாது. என்னுடைய access விரைவில் காலாவதியாகிவிடும் என்று நினைக்கிறேன். அதற்குள் உங்களுக்குத் தேவையான இந்தப் புத்தகத்தைப் பதிவிறக்கம் செய்துவிட்டேன். 

—————–என்னும் ஒரு செயலி மூலம் அனுப்புகிறேன். உங்கள் மெயில் இன்பாக்ஸிலே கிடைக்கும். 

File details:

Name : The Passion

Format : —————-

Size : 184 MB

Password : ———————— 

சில குறிப்புகள்:

1) நான்கு தொகுதிகளிலும் ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியாக இருக்கிறது. எல்லாவற்றையும் கோர்க்க எவ்வளவோ முயற்சி செய்தேன், முடியவில்லை. இது உங்களுக்கு ஒரு தொல்லையாக இருக்குமோ என்று கவலையாக இருக்கிறது.  

2) இந்த file அவர்கள் server-ல் ஏழு நாட்கள்தான் இருக்குமாம். அதற்குள் பதிவிறக்கம் செய்ய முடியுமா என்று பாருங்கள்.

மாற்று வழி: 

ஒருவேளை, உங்கள் மெயிலுக்கு வராவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தேன். ஒரு மாற்று வழி கிடைத்தது.

——————————-

மேற்கண்ட லிங்க்கில் சொடுக்கி, பாஸ்வார்ட் போட்டு, நேரடியாகவும் பதிவிறக்கிக் கொள்ளலாம். அதன் பிறகு file-ஐ extract செய்துகொள்ளுங்கள்.

Password :  ———————— 

எல்லா ஃபைல்களையும் random sampling முறையில் பரிசோதித்துப் பார்த்தேன், ஏதேனும் கோளாறு உள்ளதா என்று. எனக்குத் தெரிந்து எதுவும் இல்லை. அப்படி ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சரி செய்யப் பார்க்கிறேன். 

File கிடைத்துவிட்டால், முடிந்தால் சொல்லுங்கள். 

நீங்களும் உங்களைச் சேர்ந்தவர்களும் நலமாய் வாழ பிரார்த்தித்துக் கொண்டு, பூச்சி எண்பதைத் தொடர்கிறேன். 

உங்கள் மாணவன்

ஈஷ்வர். 

மேற்கண்ட அஞ்சலில் உள்ள தொழில்நுட்ப சமாச்சாரம் எதுவும் எனக்குப் புரியாததால் இதை அப்படியே முத்துக்குமாருக்கு அனுப்பி அவர் மூலம் டவுன்லோடு செய்து கொண்டேன்.  அஞ்சலில் ஈஷ்வர் குறிப்பிடுவது போல் திருட்டு பிடிஎஃப்பாக இருக்குமோ என்றெல்லாம் ஒருபோதும் நான் யோசிப்பதில்லை.  ஏனென்றால், நான் தான் சொன்னேன் அல்லவா, எனக்குக் கல்லும் காசும் ஒன்றுதான் என்று.  அப்படிப்பட்டவனுக்கு எதுவாக இருந்தால்தான் என்ன?  பாலா சார் என நான் அழைக்கும் பால சுப்ரமணியம் என்ற மூத்த வாசகர் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் அல்லவா, அவர் சேக்கிழார் எழுதிய ஒரு பாடலை அனுப்பியிருந்தார். 

ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்

இதன் கதை என்னவெனில், அப்பர் பெருமான் முதிய வயதில் புகலூர் என்ற ஊரில் மடம் ஒன்றை நிறுவி சைவத் தொண்டு செய்து கொண்டிருந்தார்.  அப்போது ஒருநாள் உழவாரக் கருவியைக் கொண்டு சாலையைச் சீர்திருத்திக் கொண்டிருந்தபோது தரையில் கற்களோடு நவமணிகளும் கிடக்க எல்லாவற்றையும் வாரிக் கொண்டு போய் அருகில் இருந்த குளத்தில் வீசி எறிந்தார்.  அப்பர் பெருமானுக்குக் கல்லும் ஒன்றுதான், மாணிக்கமும் ஒன்றுதான் என்பதை அடியார்களுக்குக் காண்பிப்பதற்காக சிவபெருமானே இப்படி நவமணிகளை வீசியெறிந்தான் என்கிறது புராணம். 

அடுத்து ஸ்திதப் பிரக்ஞன் என்பது பற்றியும் ஒரு வார்த்தை கோடி காட்டினார் பாலா.  அனல் ஹக் என்பதும் அஹம் பிரம்மாஸ்மி என்பதும் நான் கடவுள் என்பதும் ஒன்றே.  கீதையில் கிருஷ்ணன் எல்லாம் என்னிலிருந்து உருவாகிறது; எல்லாம் என்னில் அடங்குகிறது என்று சொல்வதும் இதுவே.  இதுதான் ஸ்திதப் பிரக்ஞை நிலை.  அப்படிப்பட்ட நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பவனுக்கு இது திருட்டு பிடிஎஃப்பா ஆய்வு மாணவர்களுக்கானதா என்றே தோன்றாது.  இன்னும் புரிகிறாற்போல் சொல்ல வேண்டுமானால், கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் ஆய்வாளனுக்கு சோதனைக் குழாய் இல்லை என்றால் பக்கத்து அறையிலிருந்து எடுத்து வருவான் இல்லையா, அதற்குப் பெயர் திருட்டா?  கலைஞர்களிடம் இது போன்ற லௌகீக வாழ்வின் சொல்லாடல்கள் செல்லாது.  ஜான் ஜெனே செய்த குற்றங்கள் சாமான்ய மனிதனின் பார்வையில்தான் குற்றங்கள்.  அதற்கு ஃப்ரெஞ்ச் நீதிமன்றம் தண்டனை கொடுக்க வேண்டுமானால் 300 ஆண்டுகள் கொடுத்திருக்கும்.  இப்போது நான் சொன்னதைத்தான் பிக்காஸோவும் சார்த்தரும் ஃப்ரெஞ்ச் அதிபரிடம் சொன்னார்கள்.  ஜெனே ஒரு மகத்தான கலைஞன்.  ஞானி.  அவனிடம் உங்கள் சட்டதிட்டங்களைப் போடாதீர்கள்.  அதிபர் ஜெனேயை வெளியே விட்டார்.  இனிமேல் ஜெனேயின் மேல் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்ற உறுதிமொழியும் கொடுக்கப்பட்டது.  ஆனாலும் ஜெனே ஃப்ரெஞ்சுக்காரர்களையும் ஃப்ரெஞ்ச் சமூகத்தையும் ஐரோப்பிய மதிப்பீடுகளையும் மதிக்கவில்லை.   என்னைக் குற்றவாளி என்று மதிப்பிட்டது ஐரோப்பிய சமூகம்; என் பிணம் கூட அந்த மண்ணில் மடியக் கூடாது என்றே சொன்னார். 

அதெல்லாம் இருக்கட்டும், இப்போது இன்னும் சில நூல்கள் தேவைப்படுகின்றன.  Helene Cixous.  83 வயது ஆகும் சிஸூ இன்னமும் தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கிறார்.  இதுவரை அவர் எழுதியுள்ள ஏராளமான புத்தகங்களைப் படிக்க இப்போது எனக்குக் காலம் கிடைக்குமா என்று தெரியவில்லை.  ஆனால் அவருடைய நாடகங்களைப் படிக்க வேண்டும்.  எனக்குச் சேர வேண்டிய பத்து இருபது புத்தகங்கள் அமெரிக்காவில் நண்பர்களிடம் மாட்டிக் கொண்டிருக்கிறது.  உலகமே அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும்போது புத்தகம் பற்றிப் பேசுவது அராஜகம் என்பதால் கம்மென்று இருந்து விட்டேன்.  மேலும் தபால் துறையே மூடப்பட்டு விட்ட நிலையில் என்ன பேசுவது?  ஆனால் உயிர் இருக்கும் வரை எழுதாமலும் வாசிக்காமலும் இருக்க முடியாதே?  அது உணவு மாதிரி அல்லவா?  அதனால் கிண்டிலில் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.  அந்தக் கிண்டில் டிவைஸ் கூட இப்போதைக்கு அனுப்ப முடியாது என்று அமேஸான்காரர்கள் கை விரித்து விட்டார்கள்.  என்னென்னவோ பொருட்களெல்லாம் அமேஸானில் வீடு தேடி வருகின்றன.  ஆனால் படிப்பு சம்பந்தமான எல்லாப் பொருட்களுக்கும் தடை.  நல்ல நாடு.

கிண்டிலை டெஸ்க் டாப்பில் டவுன்லோடு செய்து படிக்கிறேன்.  ஆனாலும் சில புத்தகங்கள் கிண்டில் டிவைஸில் மட்டுமே படிக்க முடியும் என்று சொல்லுகின்றன.  போகட்டும்.  Helene Cixous வின் புத்தகங்கள் யானை விலை குதிரை விலை போகிற நிலையில் அவரது நாடகத் தொகுப்பை மட்டுமாவது கிண்டிலில் வாங்கலாமா என்று யோசிக்கிறேன்.  The Selected Plays of Helene Cixous என்று ஒரு புத்தகம்.  இதில்தான் நான் மெதூஸாவின் மதுக்கோப்பையில் குறிப்பிட்ட இந்தியா நாடகம் இடம் பெற்றுள்ளது.  இதில்தான் காந்தி வருகிறார்.  இதன் கிண்டில் விலை 9 – 47 டாலர் என்று போட்டுள்ளது.  9 டாலராக இருந்தால் மட்டும் யாரேனும் எனக்கு அதை அனுப்பித்தர முடியுமா?  என்னுடைய மெயில் ஐடியில்தான் இதுவரையிலான கிண்டில் புத்தகங்களும் வாங்கப்பட்டுள்ளன.  லிங்க்:

அதேபோல் ஹெலன் சிஸூ ரீடர்

இந்த இரண்டு புத்தகங்களும் கிடைத்து விட்டால் ஹெலன் சிஸூ நம் கையில்.  உடனடியாக இவற்றின் சாரத்தை உங்களிடம் கொடுத்து விடுவேன்.  எனக்குத் தகவல் தெரிவிக்காமல் வாங்கி விட வேண்டாம்.  ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வாங்கி விடும் சாத்தியத்தைத் தவிர்க்கவே இதை எழுதுகிறேன்.  எனக்கு முதலில் எழுதுங்கள். 

charu.nivedita.india@gmail.com