23. முன்னோடிகள்

அன்புள்ள சாரு, 

நான் மதுரையில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது கண்டடைந்தேன். உங்களுடைய கட்டுரைகளைப் படித்த பிறகு உங்கள் நாவலை படிக்கலாம் என்று எண்ணி ராஸ லீலா வாங்கினேன். அதை மூன்று நாட்களில் படித்து முடித்தேன். அது எனக்கு என்றென்றைக்கும் நான் விரும்பிப் படிக்கும் புத்தகமானது. ராஸலீலா படித்து உங்கள் ரசிகன் ஆகி விட்டேன். நீங்கள் குறிப்பிடும் புத்தகங்கள், இசை, திரைப்படம் என அனைத்தையும் தேடி பார்த்து படிக்க ஆரம்பித்தேன்.

நீங்கள் குறிப்பிடும் மரியோ பர்கஸ் யோசாவின் Feast of the Goat மற்றும் The Discreet Hero படித்தேன். மிகவும் பிடித்துப் போனது. சென்ற வாரம்தான் தங்களின் எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் மற்றும் ஸீரோ டிகிரி இரண்டையும் படித்தேன். கேட்கவா வேண்டும் மிகவும் பிடித்து போனது. தங்களின் புதிய எக்சைல் எங்கு தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. சென்ற மாதம் நீங்கள் உங்கள் இணையத்தில் Catch – 22 வை குறிப்பிட்ட பிறகு அதையும் வாங்கி வைத்திருக்கிறேன். எனக்கு தினமும் எங்கள் வீட்டில் 20 ரூபாய் தருவார்கள். அந்தப் பணத்தை சேர்த்து வைத்துத் தான் புத்தகங்கள் வாங்குகிறேன். எனவே என்னால் தங்களுக்குக் கட்டணம் அனுப்ப முடிய வில்லை. எனக்கு கோபி கிருஷ்ணன் உரையை அனுப்பி வைக்க முடியுமா.

மிக்க நன்றி சாரு

அஷ்வின்

டியர் அஷ்வின்

நான் மாணவர்களிடமிருந்து பணம் வாங்குவதில்லை.  (ஆனால் வேலைக்குப் போனதும் மறந்து விடக் கூடாது!)  அதனால் நீங்கள் பணம் அனுப்ப வேண்டாம்.  நான்கு உரைகளையும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

புதிய எக்ஸைல் அடுத்த ஆண்டு வரும்.  அதில் கொஞ்சம் வேலை இருக்கிறது.  அதற்கு முன் நான் எழுதிக் கொண்டிருக்கும் நாவலைக் கொண்டு வர வேண்டும்.  நாவல் வந்து ரொம்ப காலம் ஆகிறது.

***