பூச்சி 131 : மாசிக் கருவாடு செய்வது எப்படி?

சமையல் பற்றி புத்தகம் எழுதினால் பிய்த்துக் கொண்டு போகும் என்று நினைக்கிறேன்.  நான் எழுதிய மிளகாய்ச் சட்னிக்கு ஏகப்பட்ட எதிர்வினைகள் வந்தன.  என் நண்பர் டாக்டர் சிவராமன் சவூதியிலிருந்து தான் செய்த மிளகாய்ச் சட்னியைப் படம் பிடித்தே அனுப்பியிருந்தார்.  அதுவும் படிப் படியாக.  அதாவது, மிக்ஸியில் போட்ட நிலையில்.  பிறகு அரைத்து வந்த பிறகு.  செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் சவூதியில் கிடைத்ததா என்று கேட்க மறந்து போனேன்.  ஆனால் உலகம் சுருங்கிய பிறகு எல்லாமும் எல்லா இடத்திலும் கிடைக்கிறது.  அதிலும் இப்போது இந்த ஆர்கானிக் பைத்தியம் பிடித்த பிறகு செக்கு எண்ணெய் கிடைக்கும் வாய்ப்பு சவூதிலும் இருக்கும் என்றே நினைக்கிறேன்.  அவர் கடிதம்:

சாரு

அற்புதம்…. வாய்ப்பே இல்லை. ரொம்ப மகிழ்ச்சியாக சாப்பிட்டேன். பொதுவாக 4 அல்லது 5 இட்லி தான் சாப்பிடுவேன். இப்போது 12! துகையல் மிக்ஸியில் அரைத்தால் கொஞ்சம் கொஞ்சமாக சிறிய அளவில் தண்ணீர் விட்டு அரைப்பது நல்லது. மற்ற சட்னி போல ஒரே முறை தண்ணீர் விட்டு அரைத்தால் பிசிறாக போகும்.   I really enjoyed the dinner to the core. என் அம்மா பிரமாதமான ஒரு பொடி செய்வார்கள். 2 ஸ்பூன் மிளகாய் தூள் (சாம்பார் வைக்கப் பயன்படுவது) 2-3 பல் தோலுரிக்காத பூண்டு, தேவைக்கேற்ப கல் உப்பு. இந்த மூன்றையும் அம்மியில் வைத்து நுணுக்கி அரை நிமிடத்தில் தயார் செய்து விடுவார்கள். இந்தப் பொடியில் மிதமிஞ்சிய நல்லெண்ணெய் ஊற்றி சூடான இட்லியோடு சாப்பிட்டால் மண்ணில் தெரியும் வானம்.

சிவராமன்

கொரோனா போகும் வரை அல்லது கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை அந்த மிளகாய்ச் சட்னி செய்ய முடியாது போல் இருக்கிறது.   மிக்ஸி கெட்டு விட்டது.  புது மிக்ஸி வாங்க வேண்டும்.  ஒரு எட்டு போட்டால் லஸ் கார்னரில் வஸந்த் அண்ட் கோ.  ஆனால் போக முடியாது.  அதுவரை வேறு வேறு சட்னிகளை வைத்து சமாளிக்க வேண்டியதுதான்.  இன்று ஒரு சட்னி பண்ணினேன்.  சின்ன வெங்காயத்தை உரித்துத் துண்டு துண்டாக நறுக்கினேன்.  தக்காளியும்.  பிறகு காய்ந்த மிளகாய் மூன்று (நீளம்), உளுந்து, கடுகு, கறிவேப்பிலையெல்லாம் போட்டு தாளித்து வெங்காயத்தை அதில் கொட்டி வதக்கி, அதன் பிறகு தக்காளியைப் போட்டு, தேவையான அளவு நீரும் உப்பும் சேர்த்தால் சட்னி தயார்.  இதில் தாளிப்புதான் கவனம் கோருவது.  கடுகு வெடிக்கக் காத்திருந்தால் உளுந்து கருகி விடும்.  உளுந்து கருகினால் எல்லாமே கசக்கும்.  இந்தக் காரணத்தினால்தான் ஒரு சமையல்கார அம்மாளையே நிறுத்தினோம்.  கடுகு வெடிக்காவிட்டாலோ ருசி இருக்காது.  இப்படி ஒரு நுணுக்கம் உள்ளது.  சூடான இட்லி மேல் அந்த சட்னியில் மேல் மிதக்கும் காரமும் தக்காளியும் கலந்த நீரைக் கொட்டி ஊற வைத்துச் சாப்பிட்டால் அள்ளும். 

சமையல் பற்றி எழுத என்னிடமே எக்கச்சக்க சரக்கு இருந்தாலும் என்னிடம் இன்னொரு புதையல் உள்ளது.  அது சர்ஃபோஜி மன்னர் எழுதிய சமையல் புத்தகம்.  சைவம் அசைவம் ரெண்டும்.  எழுதினால் தனித்தனியேதான் எழுதுவேன்.

எனக்கு இந்த சுந்தர் பிச்சை, பத்ரி சேஷாத்ரி, பா. ராகவன் போன்றவர்களைப் பார்க்கும் போதும், இலக்கியத்தைத் தவிர வேறு எதுவுமே என் மண்டையில் ஏற மறுப்பதைப் பார்க்கும் போதும் அய்யங்காராகப் பிறக்காமல் போனோமே என ஏக்கம் ஏக்கமாக இருக்கும்.  பத்ரி ஸூம் மூலம் பன்னண்டாம் வகுப்புக்குக் கணக்கு ட்யூஷன் எடுக்கிறாராம்.  மைலாப்பூரில் பன்னண்டுக்குக் கணக்கு ட்யூஷன் எடுப்பவன் சுந்தர் பிச்சையை விடப் பணக்காரன் ஆக வாய்ப்பு இருக்கிறது.  ஆனால் நம் பத்ரி இலக்கிய(மு)ம் படித்தவர்.  அதனால் இலவசமாக எடுக்கிறாரோ என்னமோ.  இந்த இலக்கியம்தான் என்னென்ன தப்பான வேலையெல்லாம் செய்கிறது!   அதை விடுங்கள்.  பன்னண்டாம் வகுப்புக்குக் கணக்கு எடுப்பவர் எல்லாம் என்னைப் பொறுத்தவரை மேதை.  ஏனென்றால், எனக்கு ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு, ரெண்டும் மூணும் அஞ்சு என்பது போன்ற எண் கணிதம் மட்டுமே கணிதம்.  ஆனால் அவர்களோ ஏதோ சுமேரிய எழுத்துக்கள் போலவும் நம் மந்திரவாதிகள் செய்வினை செய்யும் போது போடும் குறியீடுகளைப் போலவும் போட்டு இதுதான் கணக்கு என்கிறார்கள். ஒரு எழவும் புரியவில்லை.  கணக்கு என்றால் ஒண்ணு ரெண்டு மூணு எல்லாம்தானே கணக்கு?  இல்லாவிட்டால் ஒண்ணாங்கிளாஸில் ஏபீசீடி கற்றுக் கொடுக்கும்போதே இந்த மந்திரவாதக் குறியீடுகளையும் கற்றுக் கொடுக்க வேண்டியதுதானே? 

எல்லாம் இந்த ஜெனடிக் பிரச்சினைதான்.  எதுவுமே மூளையில் ஏற மாட்டேன் என்கிறது.  மண்டையில் உட்கார மாட்டேன் என்கிறது.  அய்யங்கார் இல்லாவிட்டாலும் அட்லீஸ்ட் ஒரு அய்யராகவாவது பிறந்திருக்கலாம்.  ஏதோ கொஞ்சத்துக்குக் கொஞ்சமாவது கிடைத்திருக்கும்.  அதுவும் போச்சு.  இப்போதைக்கு இருப்பதை வைத்துக் கொண்டு ஓட்ட வேண்டியதுதான்.  ஆனால் கெட்டதிலும் நல்லது என்னவென்றால், மேலே கேட்ட ரெண்டில் ஒன்று கிடைத்திருந்தால் கணக்கு வந்திருக்கும், நானும் மைலாப்பூரில் பன்னண்டாம் கிளாஸுக்குக் கணக்குப் பாடம் எடுத்து  பத்ரிக்குக் கடும் போட்டியை உண்டாக்கியிருப்பேன்.  ஆனால் மாசிக் கருவாடு சாப்பிட்டிருக்க முடியாது.  மாசிக் கருவாடு சாப்பிடாவிட்டால் அப்புறம் மனிதப் பிறவியை எடுத்து என்ன?  எல்லாமே அடிபட்டுப் போச்சு. எனக்குத் தெரிந்த மட்டில் பா. ராகவன்  ஒரு படு பயங்கர கனாய்ஸியர் என்றாலும் இந்த ஜென்மத்தில் மாசிக் கருவாடு சாப்பிடும் வாய்ப்பு அவருக்குக் கிடையாது.  சீனியைப் போல் அவர் ஆதி திராவிடர் பள்ளியிலும் படிக்கவில்லை.  டீஈஓ பையன்.  எங்கியோ ஒரு கலெக்டராக ஆகாமல் இப்படி உலகறிந்த எழுத்தாளனானதே பெரிய விஷயம்.  ஒரு டீஈஓ பையன் கலெக்டர் ஆகாமல் கல்கியில் போய் உட்கார்ந்த கதையை ஒருநாள் கேட்க வேண்டும். 

சரி, சுந்தர் பிச்சைக்கும் பா. ராகவனுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?  ராகவன் சுந்தரை விடப் பணக்காரர்.  அது என்ன கதை என்றால், ஒரு வாசகர் ராகவனின் புத்தகத்தைப் படித்து விட்டு, இதுக்கு விலை ஐநூறு என்பதெல்லாம் பிஸாத்து, உங்களுக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய் அனுப்ப வேண்டும், கொடுங்கள் உங்கள் அக்கவுண்ட் நம்பரை என்று சொன்னால், எனக்குப் பணமெல்லாம் வேண்டாம், நேரில் வாருங்கள், என் செலவில் சிற்றுண்டி வாங்கித் தருகிறேன் என்று எழுதுகிறார்.  சொல்லுங்கள், இவர் சுந்தர் பிச்சையை விடப் பெரிய ஆள்தானே?  பிச்சையாவது ரொம்பப் பெரிய சரக்கை விற்கிறார்.  இவரோ யாருக்குமே உதவாத சரக்கை விற்பவர்.  அப்படி விற்றுமே இந்த பொஸிஷனில் இருக்கிறார் என்றால் இவர்தானே வித்தைக்காரர்?  (சே, அந்த வாசகரின் அட்ரஸைக் குறித்துக் கொள்ளாமல் போய் விட்டேன்.  பத்தாயிரம் நஷ்டம்.  ம்ஹும்.  அப்படியும் சொல்ல முடியாது.  உன் எழுத்து ஆபாசம். நீதான் எனக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று சொன்னாலும் சொல்லலாம்.  என் எழுத்து அப்படி.  என் எழுத்து என்றால் கொண்டு வந்த எழுத்தைச் சொல்கிறேன்.) 

மாசிக் கருவாடு பற்றி ஏன் இப்படி மாய்ந்து மாய்ந்து எழுதுகிறேன் என்றால், அசைவ ஆட்களே மாசிக் கருவாடு சாப்பிட்டிருக்க மாட்டார்கள்.  உங்களுக்கெல்லாம் அசைவம் என்றாலே அதன் கவுச்சிதான் பிரச்சினையாக இருக்கிறது இல்லையா?  காரணம், இங்கே உள்ள அசைவக்காரர்கள் அப்படிப் பண்ணுகிறார்கள்.  இங்கே உள்ள கடைக்காரர்கள் அப்படி விற்கிறார்கள்.  வெளிநாடுகளுக்குச் செல்லுங்கள்.  ஆயிரம் லாரிகளில் அடைக்கக் கூடிய அளவுக்கு மீன்கள் கொட்டிக் கிடக்கும்.  உயர்த்திச் சொல்லவில்லை.  ஆயிரம் லாரியே கம்மி.  அந்த அளவுக்கு மலை மலையாகக் குவிந்திருக்கும் மீன்கள்.  ஒரு கவுச்சி இருக்காது.  காரணம், அந்த அளவுக்கு மானாங்கண்ணியாக ஐஸைப் பயன்படுத்துவார்கள்.  இங்கே ஐஸ் விலைக்குப் பயந்து கொண்டு ஐஸில் சிக்கனம் பிடிப்பதால்தான் அவ்வளவு கவுச்சி. 

சமையலில் ஏன் அவ்வளவு கவுச்சி அடிக்கிறது என்றால், மீனை சரியாகக் கழுவுவதில்லை.  இங்கே என் வீட்டில் மீனோ மற்ற எந்த அசைவ ஐட்டமோ செய்தால் கடம்ப மலர் பூத்தது போல் மணக்கும்.  நான் மாசிக் கருவாடு செய்தால் தெருப் பூராவும் கடம்பப் பூதான்.  மாசிக் கருவாடு இங்கே கிடைக்காது.  மாலத் தீவிலும் இலங்கையிலும் கிடைக்கும்.  இது கிடைக்கும் கிடைக்காது பிரச்சினை இல்லை.  சூரை மீனில் அதைச் செய்வது மிகப் பெரிய வேலை.  இதோ பாருங்கள், இது விக்கியில் உள்ள விபரம்:

(Tuna) சூரை மீனைத் தோல் உரித்து செதிளையும் குடலையும் நீக்கியபின், தலை, நடுமுள் (முதுகெலும்பு) போன்றவற்றை அகற்றி பின் வயிற்றுப் பாகம் தனியாகப் பிரிக்கவேண்டும்.

பின்னர் இதை நான்காகத் துண்டாக்கி- பெரிய சூரைமீனாக இருந்தால் இந்தத் துண்டங்கள் மேலும் சிறுதுண்டங்களாக்கப்படும் – அரியப்பட்ட சூரைமீன் துண்டங்களை (கண்டங்கள்) அண்டாவில் அரைவேக்காடாக வேக வைக்கவேண்டும். ஒரு கொதி வந்ததும், இந்த மீன் துண்டங்களை இறக்கி, மெல்லிய ஒரு துணியில் இட்டு, திருகித் திருகி சொட்டுத் தண்ணீரின்றி பிழிந்து பின்னர் மூன்று நாட்கள் வரை இந்தத் துண்டங்கள் வெய்யிலில் காய வைக்க வேண்டும்.

வெய்யிலில் காய்ந்த பின் இந்த மீன் கண்டங்கள் பூட்டிய ஓர் அறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கே அடுப்பின் மேல் பரண் அமைத்து, வைக்கோல் பரப்பி சூரைத் துண்டங்களை அடுக்கிப் புகையூட்ட வேண்டும். இந்தத் துண்டங்கள் இரண்டு நாள்களுக்குப்பின் மரக்கட்டை வடிவத்தில், மாசிக்கருவாடாக மாறி இருக்கும்.

எப்பேர்ப்பட்ட செய்முறை பாருங்கள்.  ஆனால் இதெல்லாம் நாம் செய்ய வேண்டியது இல்லை.  மாசிக் கருவாடு நம் கைக்கு வரும்போது சாண் அளவில் மரக் கட்டைகள் போல் கிடைக்கும்.  கருங்கல் போல் இருக்கும்.  அதை கருங்கல்லில் – சின்ன உரலில்  இடித்தால் – உடைத்து எடுத்தால் திப்பித் திப்பியாக வரும்.  சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் போட்டு கடுகு தாளித்து அதில் இந்த மாசிக் கருவாட்டைக் கலந்து வதக்கினால் மாசிக் கருவாடு தயார்.  தெருவே மணக்கும்.  ருசி வார்த்தையால் விளக்க முடியாது.  மாசிக் கருவாட்டை எனக்கு அறிமுகப்படுத்தி அதை சவூதியிலிருந்து தருவித்துக் கொடுத்தவர் என் நண்பர் நிர்மல்.  அவர் ஊரில் (ஏரல், தூத்துக்குடி பக்கம்) மாசிக் கருவாடு உண்டாம். 

ஆறு ஆண்டுகளுக்கு முன் மாசிக் கருவாடு பற்றி எழுதியிருக்கிறேன்.  அது:

நறுக்கிய சின்ன வெங்காயம் வதக்கி, வற்றல் பொடி சிறிதளவு, மஞ்சள் பொடி சிறிதளவு. மாசி சிறிதளவு (ஒரு கை அளவு) எடுத்து மிக்ஸியில் மூன்று அல்லது இரண்டு சுற்று அரைக்கவும். அரைத்த மாசியை வதக்கவும், உப்பு சேர்க்கவும், துருவிய தேங்காய்ப் பூவை அதன் மீது தூவி இறக்கவும்.  

இன்னொரு வகை: வெங்காயம், மிளகாய் இரண்டையும் எண்ணையில் வதக்கி அரைத்த மாசி & தேங்காய்ப் பூ துருவியது போட்டு இறக்கி விடுவார்கள்.

இந்த இரண்டு வகையிலும் தக்காளி சேர்க்கலாமா என்று கேட்டேன்.  தக்காளி இதற்கு ஒத்து வராதாம். 

மாசிக் கருவாடு சாப்பிட்டும் ரொம்ப நாள் ஆகிறது. 

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai