5. இசை பற்றிய சில குறிப்புகள்

தமிழில் இசை பற்றி எழுதுபவர்களில் லலிதா ராமின் கட்டுரைகளை நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.  அடுத்து, சேதுபதி அருணாசலம்.  என்னுடைய பழுப்பு நிறப் பக்கங்களில் தி. ஜானகிராமன் பற்றிய நீண்ட கட்டுரையில் சேதுபதி அருணாசலத்தின் தி.ஜானகிராமன் பற்றிய கட்டுரைகளிலிருந்து பல மேற்கோள்களை எடுத்திருக்கிறேன்.  சேது அருணாசலத்தின் கட்டுரைகளை என் source-ஆக அதில் குறிப்பிட்டும் இருக்கிறேன்.

இன்று காலையில் பாலாசுப்ரமணியன், இசை குறித்து தி.ஜா. எழுதியவற்றை சேதுபதி அருணாசலம் தொகுத்து எழுதியிருக்கும் கட்டுரையின் (தி. ஜானகிராமனின் இசையுலகம்) இணைப்பை அனுப்பினார். மிக முக்கியமான அந்தக் கட்டுரையை முழுதாக நீங்கள் வாசிக்க வேண்டும். கீழே அந்த இணைப்பு:

இப்போது அந்தக் கட்டுரையில் உள்ள தி.ஜா.வின் மேற்கோள்களை மட்டும் இங்கே தருகிறேன்.  இதற்கான உழைப்பு அத்தனையும் சேதுபதி அருணாசலத்தினுடையது.  அவருக்கு நன்றியுடன் அந்த மேற்கோள்கள் இங்கே:

நெல்லு மிஷின் தாண்டியாயிற்று. உடையார் சவுக்கைத் தோப்புத் தாண்டியாகிவிட்டது. நடேசண்ணாவின் பியாகடை ராகம் என் உடல், உள்ளமெல்லாம் ஒரு தடவை வளைவிட்டு ஓடிற்று. கண்ணை மூடி அதைப் பார்த்தேன். இந்த மூங்கில் தோப்பைப் பார்க்கும்போதெல்லாம் இன்னும் தெளிவாக நடேசண்ணாவின் பாட்டு என் காதில் விழும். எப்படி இந்த சம்பந்தம் என் மனதில் ஏற்பட்டது என்று நினைவில்லை. நடேசண்ணா பாடும்போது கையை நீட்டி வளைக்கிறாரே, இந்த மூங்கில் கொத்து, சாலையின் இக்கரையில் நின்றவாறு அக்கரையில் உள்ள வாய்க்கால் மேலும் வளைந்து நிற்பது போல, அதனாலா? இல்லை, அவர் ராகம் வீச்சும் கணுவும் வளைவுமாக மூங்கில் போல் வியாபிப்பதனாலா? மூங்கில் போல எளிய நேர்மையும் ஆடம்பரமற்ற அழகுமாக இருப்பதனாலா?”

‘நடேசண்ணா’ சிறுகதையில் தி.ஜானகிராமன்.

ஜானகிராமன் சங்கீதம் பற்றி தன் புனைவுகளினூடே அதிகமாக எழுதியிருக்கிறார்.  அதற்கான பின்னணியையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.  மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர் அளவுக்குப் பாடக் கூடியவராக இருந்திருக்கிறார் தி.ஜா.  ஆனாலும் கச்சேரியெல்லாம் செய்து பிரபலம் ஆகவில்லை.  சங்கீதம் என்பது பக்தியைப் போல ஒரு அந்தரங்க விஷயம் என்று நினைத்திருக்கிறார்.  அது சங்கீத உலகுக்குப் பெரிய இழப்புதான். 

பின்வருவது தி.ஜா. பற்றி கரிச்சான் குஞ்சு:

”இளமை முதலே இசைப் பயிற்சி உண்டு அவனுக்கு. அவன் தந்தையாருக்கு நல்ல ஸங்கீத ஞானமுண்டு. அவர் ராமாயணம் சொல்லும் முறையே ஒரு அருமையான அபூர்வமான முறை. அதாவது கதையில் வர்ணனை உரையாடல் முதலியவை எல்லாம் அந்தந்த சந்தர்பங்களுக்கு ஏற்ப பல ராகங்களில் வரும். அவர் வாக்கிலிருந்து அந்தக் காலத்துத் தஞ்சாவூர் சுருதிப்பெட்டி தம்பூராவை விடச் சுத்தமாய், அந்தர காந்தாரம் பேசும். ஒரு கட்டை சுருதியில் நாட்டையில் மங்களம் சுலோகம் – பூர்வ கதைச் சுருக்கம், பின்னால் ஒருவர் – அநேகமாக ஜானகிராமனுடைய அண்ணன் அல்லது அவனே மூலசுலோகங்களைச் சிறிதளவு ராகத்துடன் வாசிப்பார்கள். தொடர்ந்து அதே ராகத்தில் – கமகங்கள் குழையும் ஆலாபனைக் கிரமத்தில் கதை கூறுவார் தந்தை. அப்பொழுது வீட்டில் ஜானகிராமனுடைய சகோதரிகளுக்கு இசைப்பயிற்சி நடக்கும். இந்த வகையில் வயதுடன் கூடவே வளர்ந்தது அவனுக்கு ஸங்கீதம். பின்னர் கும்பகோணம், குற்றாலம், அய்யம்பேட்டை, சென்னை எல்லா இடங்களிலும் மேலும் மேலும் பயிற்சி செய்தான். பாடுவான். மேடை ஏறிக் கச்சேரி செய்யவில்லையே தவிர, ஒரு வித்துவானுக்குரிய அத்தனை லக்ஷண, லக்ஷிய ஞானம் உண்டு அவனுக்கு.”

பின்வருவது கரிச்சான் குஞ்சு தி.ஜா. பற்றி எழுதிய கட்டுரையின் இணைப்பு:

அதே கட்டுரையில் கரிச்சான் குஞ்சு:

கும்பகோணத்தில் சுப்பையர் என்பவர் மஹாமகக்குளத் தெரு அருகில் கௌதமேசுவரன் கோயில் தெருவில் இருந்தார். மிருதங்க வித்வான். சங்கீதம் மிக நன்றாகத் தெரியும். பாடாந்தரங்கள் சுத்த கர்னாடகப் பாணி. அப்போதே அவருக்கு வயது அறுபதுக்குமேல். அவருக்கு மகாராஜபுரம் விசுவநாதய்யர் தலைமுறைக்கு முன் தலைமுறைச் சங்கீதம் பற்றி நிறையத் தெரியும். அவர் ஜானகிக்குப் பாட்டுச் சொல்லிக்கொடுத்தார்.

கீழே வருவது வெங்கட் சாமிநாதன் தி. ஜானகிராமனோடு உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

வெங்கட் சாமிநாதன்: காவிரின்னா சங்கீதம்னு சொல்றபடி இருக்கு. இது நமக்கு பிதுரார்ஜிதம், நீங்க எழுத ஆரம்பிச்சபோதும் சரி… இப்போதும் சரி… சுற்றியிருக்கிற எழுத்தாளர்கள் இந்தக் காவிரிக் கரையிலிருந்து வந்தவர்கள் தான் உங்க எழுத்தில வர்ற சங்கீதம் ஒரு சூழலா ஒவ்வொருத்தவர் உள்ளேயும் ஒரு ஆத்மிக உத்வேகமா வந்திருக்கு. பிரமாதமான விஷயம் அது… நான் பார்த்து ரொம்பவும் சந்தோஷப்பட்டது… வியப்படைந்தது. பிரமாதமான விஷயம். மோகமுள்ளில் கூட ஒரு இடத்தில் தாம்பாளம் விழறசத்தம் கூட… வெந்நீர் தவலை பட்டு எழுப்பற ஒலி கூட சங்கீதமா உங்க காதில விழுந்திருக்கு. இது ஏதோ ஒரு additional accomplishment-ன்னு இல்லாம ஒரு sensibility-னு தான் பாக்கணும்தான் தோன்றது. எழுத்தை ஒரு கலையா பாத்தா அதுவும் sensibility, கலையுணர்வு பற்றிய ஒரு விஷயம். பலர் எழுத்துல இது வரலை. அவர்கள் தஞ்சாவூர்க்காரர்களா இருந்தபோதும் கூட, இந்த sensibility-ங்கிறது எல்லாம் ஒண்ணை ஒதுக்கி இன்னொண்ணை எடுத்துக்கிடுமா என்ன? sensibility-ன்னா என்ன? பொதுவாகவே sensibility தானே!

தி. ஜானகிராமன்:  தி.ஜா.: இது மற்ற எழுத்தாளர்கள் கிட்ட வந்திருக்கா என்கிறது தர்க்கத்துக்கு இடமான விஷயமா இருக்கலாம். ஆனா, மெளனி, லா.ச.ரா. இவங்களுக்கு வந்து – சங்கீதத்தின் இழைகளை அவர்களின் எழுத்தில் பார்க்கலாம். நீங்க முன்னாடி கேட்டதுணால சொல்ல வேண்டியிருக்கு எனக்கு வந்து… முன்னாடியே சொன்னேன். என் தகப்பனார்… அப்புறம் சங்கீதத்துல ஆசை இருக்கறது என்பது பிறவியிலேயே வருவது எல்லாக் குழந்தைகளுக்கும் உண்டு… குழந்தைகள் எல்லாம் சங்கீதத்தைக் கேட்டு பிரமிக்கிறது, ஒரேயடியா சங்கீதத்துல ஈடுபாடு கொண்டு புரியறதோ புரியலியோ அதுகள் எல்லாம் சங்கீதத்தைப் பற்றி மோகம் அடையறது. வயசானப்புறம் இது போயிடலாம். எல்லாக் குழந்தைகளும் சங்கீதத்துக்கு react பண்றது, இது வயசானப்புறம் குறைந்து போயிடலாம். ஆனால் எங்களுக்கு வந்து குடும்பத்துலேயே சங்கீதக்காரர் தொடர்பு உண்டு. என்னுடைய தாத்தா ரொம்ப நல்லா பாடுவார்னு கேள்விப்பட்டிருக்கேன் – என்னுடைய தாய்வழி தகப்பனார் ரொம்ப நன்னாப் பாடுவாராம் அவருக்கு மகா வைத்யநாத பாகவதரோட தொடர்பு. ஏன் தகப்பனாரோட தாக்கமும் உண்டு. அதனாலதான் 11, 12 வயசுல எனக்கு சங்கீதம் சொல்லித்தர ஆரம்பிச்சாங்க. சங்கீதத்துல இருந்திருந்தா இப்ப ஒரு சமயம் பாடகனா இருந்திருக்கலாம் அப்படி ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்னு வச்சுக்கோங்களேன். ஆனா எனக்கு பெரிய ஆசிரியர்களோடு பயிற்சி எல்லாம் கிடைச்சது.

தி.ஜா.: (அப்பா) தஞ்சாவூர்ல வாசுதேவன் என்கிறவர்கிட்ட கொண்டுபோய் விட்டார். அவர்கிட்ட படிச்சேன் கொஞ்சநாளக்கி. ரெண்டு மூணுவருஷம் – அப்புறம் மன்னார்குடி சுவாமிநாதையர்னு ஒருத்தர் அவர் கிட்டேயும் படிச்சேன். அப்புறம் உமையாள்புரம் சுவாமிநாதையர்னு மகா வைத்யநாதய்யரோட சிஷ்யர். அவர்கிட்ட கொஞ்சநாள் படிச்சேன். தியாகராஜர் பரம்பரையில வந்தவர்னு அவரைச் சொல்வார்கள் அவர்தான் இந்த சுருதி… வாழ்க்கையை பாக்கறபோது… எல்லாம்… வாழ்க்கையே ஒரு இசை மாதிரி அவர் பாத்துண்டு இருப்பார். அவர்கிட்ட நான் அடிக்கடி பாத்துருக்கேன். அதுக்கு முன்னாடியே என் தகப்பானார்கிட்டேயும் இந்தக் குணம் உண்டு. எதைப் பார்த்தாலும்… அதிகமான, முரட்டுத்தனமா பேசறது… முரட்டுத்தனமா சத்தங்ளைக் கேக்கறது இதெல்லாம் பிடிக்காது.   

தி.ஜா.: அந்த உமையாள்புரம் சுவாமிநாதைய்யர் ரொம்ப நுணுக்கமான செவி கொண்டவர். அவர் சுதி சேக்கறதுக்கு ஒரு மணி நேரமாகும். சுதி சேக்கத் தெரியாதுன்னு அர்த்தமில்லே. சுதில அவருக்கு அத்தனை லயிப்புண்டு. சரியா நூறு பெர்செண்ட் வர்ற வரையில் தம்பூராவில சுதி சேத்துண்டே இருப்பார். அவ்வளவு இம்மி குறையாம இருக்கணும் அவருக்கு. அதாவது கிட்டத்தட்ட ஒரு fantastic செவி அது. அவர் பேசிண்டேயிருக்கறப்ப ஏதாவது சத்தம் கேட்டதுண்ணா கவனிக்கச் சொல்வார். பறவைகள் சப்தம், செக்கு சப்தம், யாராவது பேசற சப்தம், குழந்தை அழற சப்தம் – இதெல்லாம் கேட்டுண்டு இருக்கச் சொல்வார். அதாவது இந்த உலகம் முழுக்க ஒலி மயம், பேசறபோது கூட பேசறவர்கள் எந்த சுதியில் பேசுகிறார்கள் – சுதி concept இருக்கே – சுதியப்பற்றி அடிக்கடி சொல்லிண்டே இருப்பார். இது வந்து எனக்கு ஒரு பெரிய விழிப்பா இருந்தது. ‘என்னடா’ எங்க பார்த்தாலும்… தாம்பாளம் விழறது… சமையல் உள்ள சத்தம் கேக்கறது… வாசல்ல மசியில்லாம வண்டி போகும் – இதையெல்லாம் கவனிக்கச் சொல்வார். உங்களுடைய basic note-லேருந்து எவ்வளவு தூரத்திலே இருக்கு என்பதையெல்லாம் பார்க்கச் சொல்வார். இது நமக்கு உள்ளுக்குள்ள இருந்த உணர்ச்சியை அதிகமா உத்வேகப்படுத்திக் கொண்டே இருந்தது. பிறகு நான் சென்னைக்கு வந்தப்புறம் பத்தமடை சுந்தரமய்யர் என்பவர் கிட்டக்க, முத்துசாமி தீட்சிதருடைய கீர்த்தனைகள் பல பாடம் பண்ணினேன். அவரும் சங்கீதத்துல ரொம்ப ஆராய்ச்சி பண்ணினவர். உமையாள்புரம் சுவாமிநாதைய்யர் போலவே ரொம்ப நுணுக்கமான பிரக்ஞையும், நுணுக்கமான நாத பிரக்ஞையும் கொண்டவர். அவரோட பழகினதுனாலேயும் எனக்கு பற்பல விஷயங்கள் தெரிந்தது. வாழ்க்கையப் பற்றி… சங்கீதத்தைப்பற்றி… வாழ்க்கையில் உள்ள அடிப்படையான தொடர்புகளைப் பற்றி அடிக்கடி என்கிட்ட பேசிண்டிருப்பார். அவர் என்னை ஒரு சீடனா கருதாமல் ஒரு நண்பனா கருதி எல்லாம் சொல்லிண்டு வருவார். அவர்கிட்டேயும் எனக்கு பல நுணுக்கங்கள் தெரிஞ்சிக்க முடிஞ்சது. நல்ல சங்கீதத்தை அனுபவிக்க தெரியறது… என்கிறதுக்கு நாம் இறைவனுக்கு கடமைப்பட்டிருக்கணும். அந்த மாதிரி ஒரு ஆற்றல் கொடுத்ததுக்கு. அதனால்தான்… ofcourse சங்கீதத்தை அனுபவிக்கறது அதிர்ஷ்டம்தான்… நல்ல சங்கீதம் கேக்கறது…

மேற்கண்ட பேட்டி நீலமலைப் பனிமலர் என்ற பத்திரிகையில் இதழ் 12-14, ஆகஸ்ட், 1980இல் வெளி வந்தது.

“ஜானகிராமனுக்கு நல்ல செவி இருந்தது. ஒருமுறை கேட்டதை அப்படியே பாடிவிடுவார். மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் பாட்டென்றால் எங்கள் இருவருக்குமே மிகவும் பிடிக்கும். அவர் பாடிக் கேட்டதும், அந்தப் பாட்டுமுறையை அப்படியே திருப்பிப் பாடிவிடுவார். பல வித்வான்களோடு ஜானகிராமனுக்கு நல்ல பரிச்சயம் இருந்தது. லால்குடி ஜெயராமன், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் போன்றோருக்கு ஜானகிராமனின் பாட்டென்றால் மிகவும் பிடிக்கும். அவரைப் பாடச்சொல்லிக் கேட்பார்கள். ஜானகிராமன் கச்சேரிகள் செய்வதில்லையென்று அவர்கள் ஆதங்கப்பட்டுக்கொள்வார்கள். லால்குடி ஜெயராமன் ஜானகிராமனின் சங்கீத அனுபூதியை வியந்து போற்றுவார். நாங்கள் நண்பர்களெல்லாம் கூடியிருக்கும்போது அவரைப் பாடச்சொல்லிக் கேட்போம். ஒருமுறை வானொலியில் மதுரை மணி ஐயர் கச்சேரிக்கு ஜானகிராமன் ஒரு அறிமுக உரையைப் போலப் பேசியிருக்கிறார். தஞ்சாவூரிலிருந்தபோது ஜானகிராமன் வீணை வாசிக்கவும் கற்றுக்கொண்டார்.” 

இது ஸ்வாமிநாத ஆத்ரேயன் சேதுபதி அருணாசலத்திடம் சொன்னது. 

அடுத்து ஒரு கட்டுரை:  கு..ராவுக்கு தி.ஜானகிராமன்கலாமோகினி’ – 01.06.1944 – இதழில் எழுதிய இரங்கல் கட்டுரை சொல்வனம் இணைய இதழில் மறுபிரசுரம் ஆகியுள்ளது.  அதிலிருந்து:

ந்தக் கரிச்சான் குருவி இலக்கியத்திற்கு ஒரு புது விருந்தாளி. பட்டுக்கருப்பு. நல்ல அழகு. சுறுசுறுப்பே வடிவம். நிமிஷத்தில் நூறு முறை கழுத்தைத் திருப்பி அது எட்டுத்திக்கும் பார்ப்பதிலேயே ரொம்ப சூட்டிகையான பிரகிருதி என்று தெரிந்துவிடும். சன்னமான சாரீரம். சங்கீதத்தில் தேட்டையான ஞானம். சம்பிரதாயத்தையும் இலக்கணத்தையும் உண்டு பிழைத்துக் கொண்டிருந்த கவிமகாசயர்களுக்குக் குயிலோடு சங்கீதம் அற்றுப் போய்விட்டதுபோல் தோன்றிற்றோ என்னவோ? அலுக்காமல் சலிக்காமல் குயிலைக் கூப்பிட்டுப் பாடச்சொல்லி, தாங்களும் பாடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆயுஸில் ஒரு தரமாவது அதை நேரே பார்த்திராவிட்டாலும் அது மாம்பூவைத் தின்று கம்மல் குரலில் பாடிற்று, அதற்கு அஜீரணம் என்று அதன் போஜனத்தைக் கூடப் பாடினார்கள். அந்த அதிஸ்தோத்ரத்தில் இன்னும் பல பெரிய பாடகர்கள் அவர்களுடைய கண்ணில் படவில்லை. அதிர்ஷ்டக்கலம் பூஜ்யமாகி இருளில் வீழ்ந்து கிடக்கும் பல சங்கீத மேதைகளைப் போல பிரகிருதியின் சில பெரிய பாடகர்களும் தங்களுக்கு உரித்தான புகழைப் பெறவில்லை. இந்த துரதிர்ஷ்டக் கோஷ்டியில் கரிச்சானும் ஒன்று. ஆனால் அது புகழைப் பற்றிக் கவலைப்படவில்லை. வெறும் இனிமைக்காக ஆத்மார்த்தமாக தன்னுடைய ஆனந்தத்திற்காகவே நாதோபாசனை செய்தது.

இந்தக் கரிச்சானுக்கு பாரத்வாஜம் என்று சமஸ்கிருதப் பெயர். வால்மீகி இதைப் பார்த்துவிட்டு மற்ற பறவைகளோடு இதுவும் பாடிற்று என்று சொல்லிக்கொண்டே போவார். ஆனால் அவர் ஆதிகவி. குயிலைப் போல இது அவருடைய கவனத்தை அவ்வளவாக இழுக்கவில்லை. பின்னால் வந்த கவிகள் கவனித்திருக்கலாம். ஆனால் கவனிக்கவில்லை.

கரிச்சானைக் கேட்கும்போதெல்லாம் கு.ப.ரா சொல்வார், “நல்ல இருட்டில் வெளிச்சத்தினாலே கோடு எழுதுகிறாற்போல மின்னல் மாதிரி. என்ன சன்னமான சாரீரம் பார்த்தேளா?”

தற்காலத்திய இசைக் கலைஞர்கள் பற்றிய என் அதிருப்தியை எழுதுகிறேன் அல்லவா?  இவர்கள் பற்றிக் கணையாழியில் தி.ஜா. எழுதியது:

”இப்பொழுது அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் இல்லை. பெரிய நஷ்டம்தான். ஆனால் சின்ன வாரிசுகள் அவர் மறைவை நஷ்டம் என்று ஆக்கிவிடாமல் பார்த்துக்கொண்டுவிட்டார்கள். தொண்ணூறு நிமிஷத்தில் தொண்ணூறு பாட்டுப் பாடுவார்கள். ஜட்கா வண்டி சக்கரத்தைச் சாட்டைக் கழியால் சீந்துவது போலவும், ஜன்னல் கம்பிகள் மீது கம்பை ஓட்டுவது போலவும் சுரம் பாடி உண்மையான இசையை எழுப்பி வருகிறார்கள்.” கணையாழியில் எழுதிய ஒரு இசை விமர்சனத்தில் தியாகராஜ ஆராதனையில் கூட, கணக்கு வழக்காக ஸ்வரம் பாடி, தங்கள் திறமையைக் காட்டும் இசைக்கலைஞர்களை விமர்சித்திருக்கிறார்.”

மேற்கோள்: சேதுபதி அருணாசலம் (சொல் வனம்)