6. இசை பற்றிய சில குறிப்புகள்

இப்போது நாம் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்.  ஒருமுறை அரியக்குடியைத் தன் இடத்துக்கு வரவழைத்த மஹாப் பெரியவர் அவரிடம் முத்துஸ்வாமி தீட்சிதரின் ஒரு கிருதியை வாசிக்கச் சொல்லிக் கேட்டு, பிறகு, அதை ஒவ்வொரு வரியாகப் பாடச் சொல்லி அதற்கான அர்த்தத்தை விளக்கியிருக்கிறார்.  1961 ஜூனில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.  மஹாப் பெரியவர் தேவகோட்டையில் நீண்ட காலம் முகாமிட்டிருந்தார்.  மௌன விரதத்தில் இருக்கிறார்.  ஜாடையில் கூட எதுவும் தெரிவிக்காத காஷ்ட மௌனம்.  ஒரு வாரம் பத்து நாள் என்று மௌன விரதம் நீண்டு கொண்டே போகிறது.  காஷ்டம் என்றால் கட்டை.  கட்டையைப் போல் ஆடாமல் அசையாமல் இருத்தல்.  இந்த நிலைக்கு அடிக்கடிப் போகிறவர் மஹாப் பெரியவர்.  அவர் அடிக்கடி தன்னை சாமான்யன் என்று சொல்லிக் கொண்டாலும் அவரை நான் ஒரு அவதார புருஷன் என்றே நினைக்கிறேன்.  குஜராத்தில் ஒரு சிற்றூர்.  ஒரு நடுத்தர வயதுத் தம்பதி.  ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை அந்த வீட்டு அம்மாள் தன் கணவரிடம் இன்றைய தினசரியை வாங்கி வாருங்கள் என்கிறாள்.  ஒரு நாளும் தினசரி படித்திராத தன் மனைவிக்கு என்ன ஆயிற்று என்ற ஆச்சரியத்துடன் கடைக்குப் போய் ஒரு தினசரியை வாங்கி வருகிறார் கணவர். தினசரியை வாங்கி அவசர அவசரமாகப் புரட்டுகிறார் அம்மணி.  கடைசிப் பக்கத்தில் பார்த்தால் முழுப்பக்கத்தில் அந்தத் துறவியின் படம்.  அவர் ராமேஸ்வரத்தில் ஏதோ ஒரு ஆன்மீகப் பணியின் நிமித்தமான ஒரு விஷயத்துக்கு அகில இந்திய அளவில் வந்திருக்கும் ஒரு விளம்பரம் அது.  அந்தப் பெண்மணிக்கு பக்திப் பரவசத்தில் அழுகையே வந்து விடுகிறது.  இதே துறவியைத்தான் அவள் இரண்டொரு நாட்களுக்கு முன் தன் வீட்டு வாசலில் பார்த்தாள்.   

அன்றொரு நாள் இந்தத் துறவி தன் வீட்டைக் கடந்து செல்வதைப் பார்த்து எங்கள் வீட்டுக்கு வர வேண்டும் ஸ்வாமி என்று இந்தப் பெண்மணி சொல்ல,  துறவியும் வீட்டின் உள்ளே வருகிறார்.  அந்தத் துறவியை அந்தப் பெண்மணி அதற்கு முன் பார்த்ததில்லை.  நீங்கள் யார் ஸ்வாமி என்று கேட்கிறாள் பெண்மணி. வரும் ஞாயிறு அன்று தினசரியைப் பார் என்று குஜராத்தி மொழியில் சொல்லி அவளை ஆசீர்வதித்து விட்டுக் கிளம்பி விடுகிறார் துறவி.

அந்த விளம்பரத்தைப் பார்த்து அந்தத் துறவி பற்றித் தெரிந்து கொண்டு, தன் கணவரை நச்சரித்து அழைத்துக் கொண்டு நேரில் அவர் இருப்பிடத்துக்கே சென்று தர்சிக்கக் கிளம்புகிறார்.  குஜராத்திலிருந்து காஞ்சீபுரம்.  இந்தப் பெண்மணியைப் பார்க்கும் மஹாப் பெரியவர் நீங்கள் யார், என்னை உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்க, நடந்த கதையைச் சொல்கிறார் பெண்மணி.  உன்னை இங்கே வரவழைப்பதற்காகவே நான் அங்கே வந்தேன் என்று புன்சிரிப்போடு சொல்கிறார் பெரியவர்.  ஆனால் அந்தக் காலகட்டத்தில் அவர் காஞ்சீபுரத்தை விட்டு நகரவே இல்லை.  இப்படி மஹாப் பெரியவர் பற்றி ஓராயிரம் சம்பவங்கள்.  எல்லாமே மக்காலே கல்வித் திட்டத்தில் படித்தவர்களுக்கு புருடா என்றே தோன்றும். 

”நம்பிக்கையாளர்களுக்கு ஆதாரம் தேவையில்லை; நம்பாதவர்களிடம் பேசிப் பயனில்லை” என்று சொல்வார் என் குருநாதர்.  இப்படி ஒரு இடத்தில் ஸ்தூல உருவாக இருந்து கொண்டே இன்னொரு இடத்தில் தன் ஸ்தூல உருவைக் காண்பிப்பது யோகத்தில் ஒரு வகை.  அதை விட்டு விட்டு அரியக்குடி மஹாப் பெரியவரை சந்தித்த கதைக்கு வருவோம்.  ஏனென்றால், இது சங்கீதம் சம்பந்தப்பட்டது. 

ஒருமுறை பக்தர்களிடம் அவரிடம் ‘காஷ்ட மௌனத்தில் என்ன செய்வீர்கள்?’ என்ற போது, அந்த மகான், ‘பிரார்த்தனை பண்ணிக்கொண்டு இருப்பேன்’ என்றார்.

‘உங்களுக்கென்று என்ன பிரார்த்தனை பண்ணுவீர்கள்?’ என்று கேட்கிறார்கள் சிலர்.

அப்போது மஹாப் பெரியவர் சொன்னது:

‘எனக்கு என்ன அபிலாஷைகள் இருக்கு? பிரார்த்தனைகள் இருக்கு? என்கிட்டே நிறைய பேர் வந்து அவாவாளோட கஷ்ட நஷ்டங்களை சொல்லி, நீங்க ஆசிர்வாதம் பண்ணினா நிச்சயம் கஷ்ட நிவர்த்தி ஆகிடும் ன்னு சொல்றா. நானும் ஷேமமா இருப்பேள் ன்னு சொல்றேன். ஆனா, எனக்குன்னு அவா கஷ்டத்தை தீர்க்கற சக்தி ஏதாவது இருக்கா என்ன? அதனால் தான் அந்த பகவான் கிட்ட ‘இன்னிக்கு இத்தனை (ஒன்னோட) கொழந்தேள் இவ்ளோ கஷ்டத்தோட வந்திருக்கா, அவளோட கஷ்டத்தை தீர்த்து, அவாள க்ஷேமமா வை அப்பா – ன்னு ப்ரார்த்திச்சிண்டு இருக்கத் தான் இந்த மௌனம். இல்லேன்னா, பூஜை, புனஸ்காரங்கள், வர்ற மனுஷாளோட பேச்சு, இத்யாதி இத்யாதி லே மனம் ஒருமிச்சு அவாளுக்காக பிரார்த்தனை பண்ண முடியலே’ என்றாராம்.

மேலும் சொன்னார்:

‘வரவாளுக்காகப் பிரார்த்தனை பண்றதை விட எனக்கு வேற என்ன பெருசான வேலை இருக்கப் போறது? லோக க்ஷேமம் தானே எங்களுக்குப் பிரதானம், அதுக்குத் தான் இதெல்லாம்’ என்றாராம். 

ஏதோ ஜனங்களுக்குப் புரிவதற்காக இப்படிச் சொல்லியிருக்கிறார்.  உண்மையில் அவர் இருப்பது போன்ற காஷ்ட மௌனத்தில் இருந்தாலே அவரைச் சுற்றியிருப்போர் பூரண நலமும் பெறுவார்கள்.  துறவிகளின் சக்தி அத்தகையது.

மக்காலேவின் வாரிசுகளான நம்முடைய நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது.  மஹாப் பெரியவர் பற்றி நம்மில் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம்.  தன் வாழ்நாளில் பலமுறை நடைப் பயணமாக தேச யாத்திரை செய்தவர் அவர்.  எந்த வித முன் தயாரிப்புகளும் இன்றி செல்வார்.  கண்ணுக்குப் புலப்படும் குளங்களில்தான் அவரது அனுஷ்டானங்கள்.  இப்படி எண்பத்தைந்தாவது வயதில் கூட தென்னிந்தியா முழுக்கவும் நடந்திருக்கிறார்.  கூட ஐந்தே பேர்தான். 

ஆரம்பத்தில் குறிப்பிட்ட அரியக்குடி – மஹாப் பெரியவர் சந்திப்பு பற்றி இணையத்தில் ஆங்காங்கே காணக் கிடைத்தது என்றாலும், அது பற்றிய முழுமையான தகவல் எங்கே என்று தேடிக் கொண்டிருந்தேன்.  முக்கியமாக, முத்துஸ்வாமி தீட்சிதரின் ஸ்ரீ ஸுப்ரமண்யாய நமஸ்தே என்ற கிருதியின் ஒவ்வொரு வரிக்கும் மஹாப் பெரியவர் கொடுத்த வியாக்கியானம்.  எனக்கு அந்தப் பகுதி மட்டும் கிடைக்கவில்லை.  அது பற்றி முகநூலில் எழுதியிருந்தேன்.  உடனடியாக அது வெளிவந்துள்ள மஹா பெரியவாள் விருந்து என்ற புத்தகத்தின் அந்தப் பகுதியை புகைப்பட நகல் எடுத்து அனுப்பியிருந்தார் நான் அடிக்கடி பாலா எனக் குறிப்பிடும் மூத்த நண்பர் பாலசுப்ரமணியன்.  அவருடைய அன்புக்கும் அக்கறைக்கும் என் நன்றி.  ரா. கணபதி எழுதியுள்ள இந்த நூலிலிருந்து நான் கிட்டத்தட்ட ஐம்பது பக்கங்களை எடுத்து இங்கே வெளியிட்டிருக்கிறேன்.  பதிப்பகத்தாருக்கு இதில் பதிப்புரிமை பிரச்சினை இருந்து தெரிவித்தால் உடனடியாக இதை நீக்கி விடுகிறேன்.  இதை இன்றைய இளைஞர்கள் வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் எடுத்துக் கொடுத்திருக்கிறேன்.  அமிர்தவர்ஷினி இணைய இதழிலும் இது வந்திருக்கிறது என்பதால் இதை எடுத்துக் கொடுப்பதில் எந்தத் தவறும் இருக்காது என்று நம்புகிறேன்.  ஒருத்தராவது இதை முழுமையாகப் படித்தீர்களானால் சங்கீதம் பற்றிப் பல விஷயங்களைப் புரிந்து கொள்ளலாம்.  அரியக்குடி ஒரு சங்கீத மேதை.  அவருக்கே சங்கீதமும் சாஹித்யமும் கற்பிக்கிறார் ஞான குரு மஹாப் பெரியவர்.  மஹாப் பெரியவர் ஒரு சங்கீதக் கடல்.  அது அவருக்குப் பிதுரார்ஜிதமாக வந்தது. 





1961 ஜீன் மாதம் ஸ்வாமிகள் தேவகோட்டையில் நீண்ட முகாமிட்டிருந்தார்கள். ஜாடையில்கூட ஏதும் தெரிவிக்காத காஷ்ட மௌனம் பூண்டு, அது ஒரு வாரம். பத்து நாளென்று நீண்டுகொண்டே போயிற்று. அடியாரின் விண்ணப்பங்களைச் செவி கொள்கிறாரா என்றுகூடத் தெரியவில்லை. இந்த நிலையில் ஒரு நாள் காலை, அடுத்துள்ள காரைக்குடியைச் சேர்ந்த நகரத்தார் பெருமக்கள் சிலர் அவரைத் தரிசித்துத் தங்கள் விஞ்ஞாபனங்களை ஸமர்ப்பித்தனர். அவர்கள் பேச்சிடையே அரியக்குடியவர்கள் காரைக்குடியில் இருப்பதாகப் பிரஸ்தாவம் வந்தது.

உடனே அனைவருக்கும் ஆச்சரியமாக, அவரை அழைத்து வர முடியுமா என ஸ்ரீ ஸ்வாமிகள் சைகையில் கேட்டார்கள்.

உத்தரவானதாக அரியக்குடிக்குச் சொல்வதாகக் கூறி அவர்கள் விடைபெற்றனர்.

அன்று பிற்பகல் மூன்று மணியளவில் அரியக்குடி ஸ்வாமிகளின் முகாமுக்கு வந்துவிட்டார். பரவசம் என்றே சொல்லக்கூடிய பரபரப்புடன் வந்தார். காஷ்ட மௌனத்திலிருந்த ஜகதாசாரியர்கள் தம்மைக் கூப்பிட்டனுப்பியிருக்கிறாரென்பதில் ஏற்பட்ட உணர்ச்சி மிகுதி!

ஜகதாசாரியர்கள் ஜகத்திலேயே எளியவற்றை உவப்பவரல்லவா? அதற்கேற்கவே இருந்தது அவர் தேவகோட்டையில் தங்கியிருந்த ஜாகை. ஒரு விடுதியின் தோட்டப்புறத்திலிருந்த சிறிய அறையில் ஸ்வாமிகளின் வாஸம் அமைந்திருந்தது. வாயிற்பக்க வழியாக பக்தர்கள் தரிசிப்பதற்கின்றித் தோட்டம் பார்க்க அமைந்த சிறிய ஜன்னலொன்றைத் திறந்து வைத்துக் கொண்டு அதன் வழியேதான் தரிசனம் தந்து வந்தார். அடியார்கள் செடியும் கொடியும் புல்லும் மண்டிய பின்புறப்பகுதிக்கு வந்து சாளரம் வழியே ஸ்வாமிகளைக் கண்டு சென்றனர். சுகஜீவன சொகஸுகளை விரும்பும் நமக்கும் தமது எளிய வாழ்முறையில் சிறிதேனும் பழக்கம் தரவோ என்னவோ, ஸ்வாமிகள் இவ்விதம் செய்வதுண்டுதானே?

அரியக்குடி வந்துவிட்டாரென்று ஸ்வாமிகளிடம் அறிவிக்கப்பட்டவுடன் அவரையும் பின்புற ஜன்னலுக்கே அழைத்து வருமாறு ஸமிக்ஞை செய்தார்கள்.

அரியக்குடி அவ்விதமே தோட்டப்புறம் வந்து ஸாஷ்டாங்கமாகத் தண்டனிட்டெழுந்தார்.

அவ்வளவுதான். அனைவருக்கும் மகிழ்ச்சியாக, ஒன்று நடந்தது – அத்தனை நாட்கள் தக்ஷிணாமூர்த்தியாக இருந்த குரு மூர்த்தியின் மணிக்குரல் அதற்கே உரிய ஜீவச்செழிப்போடு ஒலிக்கலாயிற்று. கடகடவென பேசிக் கொண்டே போனார்கள்.

“நீ ராஷ்ட்ரபதி அவார்ட் வாங்கினதெல்லாம் கேள்விப்பட்டேன். அப்போ ஒனக்கு ரெட் கார்ப்பெட் போட்டு – அப்படின்னா என்னன்னு தெரிஞ்சுண்டிருப்பே; நடைபாவாடையா ரத்னக் கம்பளம் போட்டு – பெரிய ஸதஸுலே கௌரவப்படுத்தியிருப்பா. நான் என்னடான்னா இங்கே கல்லும் முள்ளுமா ஒரு கீக்கிடத்திலே ஒன்னை ஒக்காத்தி வெக்கறேன்.”

”எதுக்குக் கூப்பிட்டேன்னா, ‘ஸ்ரீ ஸுப்ரமண்யாய நமஸ்தே’ இருக்கே*, அதை யாராவது சுத்தமாகப் பாடிக் கேக்கணும்னு ஒரு ஆசை. ஒன் பேரு காதுல பட்டவுடனே அந்த நினைப்பு வந்துடுத்து… சுத்தமாகப் பாடறதுன்னா ஸங்கீதமும் சுத்தமாயிருக்கணும்; ஸாஹித்ய உச்சரிப்பும் சுத்தமாயிருக்கணும். ரொம்பப் பேர் தெலுங்கு, ஸம்ஸ்க்ருதக் கீர்த்தனங்களிலே வார்த்தைகளை விரூபமாக்கிடறா.

”ஸங்கீத அம்சத்தையும், தாளத்தையும், ஸாஹித்ய சந்தஸையும் – ‘சந்தம்’னு தமிழ்ல சொல்றாளே, அது, அதையும் – அநுஸரிச்சுச் சில கீர்த்தனங்களிலே வார்த்தைகளை ஒரு தினுஸாச் சேர்த்து, பிரிச்சு எல்லாம் கொடுத்திருக்கும். அதாவது ஸாஹித்யம்னு எழுதிப் பார்க்கிறதுக்கு இப்படி ரூபம் பண்ணியிருக்கும். அதையே ஸங்கீதமா – அர்த்தபாவம் கலந்த ஸங்கீதமா – பாடறப்போ ஸங்கீதம், தாளம் இதுகளோடகூட அர்த்தத்துக்கும் ஹானி இல்லாம எப்படி ஸந்தி பிரிக்கணுமோ, சேர்க்கணுமோ அப்படிப் பாடணும். நல்ல வாக்யேகாராள் க்ருதிகள் இதுமாதிரி சுத்தமாப் பதம் பிரிச்சுப் பாட நிச்சயமா எடம் குடுக்கும். ஆனா, பாடறவாள்ள ரொம்பப் பேர் அர்த்தத்தைக் கவனிக்காம ஸங்கீதத்தை மட்டும் கவனிக்கிறதுல, எழுத்தில இருக்கிற பாட்டே காதுல கேட்கிறப்போ விபரீதமா அர்த்தம் கொடுக்கும்படியாப் பண்ணிடறா….

“இந்த ‘ஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே’யிலேயே ஒரு எடத்துல ‘குருகுஹாயாஜ்ஞான த்வாந்த ஸவித்ரே’ன்னு வரது. அது ‘குருகுஹாய, அஜ்ஞான த்வாந்த ஸவித்ரே’ன்னு பிரிஞ்சாதான் ஸரியான அர்த்தம் குடுக்கும். ‘குருகுஹனுக்கு, அஞ்ஞான இருட்டுக்கு ஸுர்யனாயிருக்கிறவனுக்கு (நமஸ்காரம்)’னு அர்த்தம். சில பேர் என்ன பண்ணறான்னா ‘குருகுஹாயா’ன்னு அப்படியே நீட்டி அதை ஒரு தனி வார்த்தை மாதிரிக் காட்டிட்டு, ‘ஞான த்வாந்த ஸவித்ரே’ன்னு – அதாவது, ஞான இருட்டுக்கு ஸுர்யன்னு – விபரீதமாப் பாடறா!”

-” ‘சங்கராசார்யம்’ க்ருதி இருக்கே,1 நீ பாடறயோ என்னவோ, (வீணை) தனம்மா குடும்பத்துல வந்து, செம்மங்குடி சீனு2, எம்.எஸ்.கூட பாடறா – அதிலே ‘பரமாத்வைத ஸ்தாபன லீலம்’னு வரது. ‘விளையாட்டாவே பரம தத்வமான அத்வைதத்தை ஸ்தாபிச்சவர்’னு அர்த்தம். பாடறச்சே ‘பரம அத்வைத ஸ்தாபன லீலம்’னு (பாடியே காட்டுகிறார்கள்) ‘அ’வுல அழுத்தங் குடுத்துப் பதம் பிரிச்சுப் பாடினாத்தான் ஸரியா அர்த்தம் குடுக்கும்.

1. ஆதி சங்கரர் பற்றி சங்கராபரண ராகத்தில் ஸுப்பராம தீக்ஷிதர் இயற்றிய பாடல்.

2. செம்மங்குடி ஸ்ரீநிவாஸய்யர்

நான் ஏதோ காமாசோமான்னு பாடறச்சேயே இந்த மாதிரி ஸங்கீதத்துக்கும் ஹானியில்லாம, தாளத்துக்கும் ஹானியில்லாம, அதோடகூட அர்த்தத்துக்கும் ஹானியில்லாமப் பாட முடியறதுன்னு தெரியறதோல்லியோ? நான் சொன்னவாள்ளாமும் இப்படித்தான் பாடறா. ஆனா, புரிஞ்சுக்காதவா, புரிஞ்சுண்டு பாடணும்கிற கவலை இல்லாதவா, ‘பரமா’ன்னு அப்படியே நீட்டிண்டே போய் ‘த்வைத ஸ்தாபன லீலம்’னு பாடி அத்வைத ஆசார்யாளை த்வைத ஆசார்யாளா கன்வெர்ட் பண்ணிடறா! (வெகு நேரம் சிரிக்கிறார்கள்.)

“ஸங்கீதத்தில் த்வைதம்-அத்வைதம் முதலான எந்த பேதமும் இல்லைதான். ஸங்கீதத்தில் ஸங்கீதந்தான் முக்யம். ஸாஹித்யம் எதைப் பத்தினதோ, யாரைப் பத்தினதோ அதிலே பாடறவா மனஸை ஸங்கீதமே ஐக்யப்படுத்தி விடறது. அதனாலதான் நீ, வைஷ்ணவன், ஒங்கிட்ட ‘ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யாய’ ஒட்டிண்டிருக்கு; இல்லாட்டா, நீ அதுகிட்ட ஒட்டிண்டிருக்கே; எதுவோ ஒண்ணு. அந்த க்ருதி நீ பாடிக் கேட்டிருக்கேன். ஸங்கீத அம்சத்துல நீ சுத்தம்கிறதுக்கு நான் சொல்ல வேண்டாம். ஸாஹித்யமும் நீ சுத்தமாப் பாடறேன்னு கவனிச்சேன். அதனாலதான் ஒனக்குச் சொல்லி அனுப்பினேன்.”

“என் தர்பார்ல கல்லும் முள்ளும்தான்! பக்க வாத்தியமும் இல்லாம, தம்பூர்கூட இல்லாம வந்திருக்கே. எத்தனை ச்ரமமானாலும் ஸஹிச்சுண்டு எனக்காகக் கொஞ்சம் அந்த க்ருதியைப் பாடு”.

கடல் மடையாகப் பேசிப் போன ஸ்வாமிகள் நிறுத்தியதும் அரியக்குடி கடல் மடையாகவே கண்ணீர் பெருக்கிவிட்டார். மீண்டும் ஒரு முறை ஸ்வாமிகள் முன் நெடுஞ்சாண்கிடையாக வணங்கி எழுந்தார். ‘பெரியவா’ பாடச் சொல்லிப் ‘பெரியவா’ளுக்காகப் பாடுவதை விட எந்தப் பெரிய கௌரவமும் தமக்கில்லை என்று கூறினார். “தாஸனையும் பொருட்டாக எண்ணி வலிந்து ஸந்தர்ப்பம் கொடுத்து அநுக்ரஹித்திருக்கிற கருணைக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ச்ருதி, பக்க வாத்தியம் எல்லாவற்றுக்கும் பெரியவாள் அநுக்ரஹமேதான் இட்டு நிரப்ப வேண்டும். ‘அவ்விடத்தில்’ எதிர்பார்க்கும் அளவுக்கு சரியாகப் பாடவும் அநுக்ரஹந்தான் ஸஹாயம் செய்ய வேண்டும்” என்று விண்ணப்பித்துக் கொண்டு பாட ஆயத்தமானார்.

இடங்களின் பெயர்களில் ராகங்கள்

ஸ்வாமிகள், “(கிருதியின் ராகம்) காம்போதி-ன்னு சொல்றோம். புஸ்தகப் பேரு காம்போஜிதானே?” என்று கேட்கிறார்கள்.

அரியக்குடி ஆமாம் என்றவுடன் ஸ்வாமிகள் கூறாலானார். “காம்போஜம் என்கிறது கம்போடியான்னு பல பேருக்குத் தெரிஞ்சிருக்கும். அங்கே பாரத கலாசாரம் ரொம்ப ஆழமாப் பரவியிருக்கிறதும் தெரிஞ்சிருக்கலாம். ஒரு வேளை அந்தத் தேசத்திலேருந்து இறக்குமதி பண்ணிண்ட ராகம்தான் காம்போஜியோன்னா, அப்படியில்லைன்னு ஸாம்பமூர்த்தி* மாதிரியான ரிஸர்ச்காரா சொல்றா. நம்ம கிட்டேயிருந்துதான் அவா அநேக ஸமாசாரம் கடன் வாங்கிண்டாளே தவிர, நாம அந்தக் காலத்திலே நாகரிகத்திலே ரொம்பப் பின்தங்கியிருந்த அவாகிட்டேயிருந்து எதுவும் எடுத்துக்கலை; நிச்சயமா, ஸங்கீதத்திலே ரொம்ப முன்னேறியிருந்த நாம ஏதோ folk music தான் இருந்த கிழக்காசிய தேசங்களிலிருந்து எதுவும் கடன் வாங்கலைன்னு சொல்றா. பின்னே ஏன் காம்போஜின்னு பேருன்னா இன்னொண்ணு தோணறது.

கம்போடியாவை மாத்திரம் காம்போஜம்னு சொல்லலை. இந்தியாவோட வடக்கத்தி எல்லையை ஒட்டினாப்பல இருக்கிற ஒரு ப்ரதேசத்தையும் காம்போஜம்னே சொல்லியிருக்கா-ன்னு தெரியறது. காளிதாஸன் ரொம்ப விஷயம் தெரிஞ்சவர். ‘மேக ஸந்தேச’த்துல ‘இந்தந்த வழியா போ’ன்னு மேகத்துங்கிட்ட யக்‌ஷன் சொல்லிண்டு போறதை வெச்சே கரெக்டா map போட்டுடலாம்! அவ்வளவு ஸரியா சொல்லியிருப்பார். அவர் ‘ரகுவம்ச’த்துல ரகு தேசம் தேசமாப் படை எடுத்துண்டு போய் ஜயிச்சதை வரிசையாச் சொல்லிண்டு போறச்சே, ஸிந்து நதியைத் தாண்டி வடக்கே இமயமலையை ஒட்டினாப்போலேயே காம்போஜத்தைச் சொல்லியிருக்கார். இதிலேருந்து அகண்ட பாரதம்னும் விசால இந்தியான்னும் சொல்ற தேசத்துக்குள்ளேயே ஹிண்டுகுஷ் பிராந்தியத்திலே ஒரு காம்போஜம் இருந்திருக்கிறதாத் தெரியறது. அங்கே விசேஷமாயிருந்த ஒரு ராகத்திலேயிருந்து காம்போஜி உண்டாச்சு போலேயிருக்கு.

“அநேக ராகங்கள் ஒவ்வொரு சீமையிலேருந்து வந்ததாலேயோ என்னமோ, அந்தச் சீமையின் பேரை வெச்சுண்டிருக்கோல்லியோ? ‘ஸௌராஷ்டிரம்’, ‘நவரஸ கன்னட’ – ‘கன்னட’ன்னேகூட ஒரு ராகம் – ‘ஸிந்து பைரவி’, ‘யமுனா கல்யாணி’, இப்படியெல்லாம் இருக்கோல்லியோ? அந்த மாதிரி, காம்போஜப் பிரதேச ஸம்பந்தமா காம்போஜி ராகம்னு இருக்கலாம்.

“ரிஸர்ச் பண்றவா என்ன சொல்றா-ன்னா காம்போதி, மோஹனம் மாதிரி சில ராகங்கள் தேசம் பூராவுமே ரொம்ப ஆதி காலத்திலேருந்து இருந்திருக்குங்கிறா. அப்பறம் அதுக்கு நன்னா மெருகேத்தினவா எந்தச் சீமைக்காராளோ அதன் பேரு ராகத்துக்கு வந்திருக்கலாங்கிறா…”

“கேதாரம்கிறது இமயமலையில இருக்கிற க்ஷேத்ரம். ‘கேதார்நாத்’ என்கிறது. ‘கௌள’ என்கிறது கௌட தேசம்; பெங்கால். கேதாரம்னு ராகம் இருக்கு. கௌளைன்னு ராகம் இருக்கு. ரெண்டையும் சேர்த்துக் கேதார கௌளைன்னும் இருக்கு. இந்த மூணு ராகமும் ப்ராசீனமா தக்ஷிணத்திலே இருந்திருக்குங்கிறா. அப்படியிருக்கச்சே வடகோடி இமயமலை, கீழ்க்கோடி பெங்கால் பேர்கள் சேர்ந்திருக்குன்னா இதுகளை ஸ்பெஷலைஸ் பண்ணினவா – ஒருத்தரோ, பல பேரோ – அந்தச் சீமைகளிலே இருந்திருக்கலாம்னுதானே தோணறது? மநுஷாளை, குறிப்பா ஸங்கீத வித்வான்களை அவாளோட ஊர்ப் பேரிலேயே சொல்ற வழக்கம் ஒன்னையே ‘அரியக்குடி’ங்கிறதுலேந்து தெரியறது. இப்படி ஓரொரு ராகத்தைப் பிரஸித்தி பண்ணின வித்வானோட சீமைப் பேரிலயே கன்னட, கௌளை, கேதாரம், காம்போஜி-ங்கிற மாதிரிப் பேர்கள் வந்திருக்கலாம்.

தேவாரப் பண்கள்

”ஒனக்குப் பண்ணாராய்ச்சியிலே பரிசயம் உண்டோ?”

“அவ்வளவாக இல்லை”.

“திருப்பாவைக்கு ராகம் போட்டிருக்கியே! ஆனா, தேவாரம் மாதிரி திவ்ய ப்ரபந்தங்களிலே பண் பேர் கொடுக்கவுமில்லை; பாசுரம் ஸேவிக்கிறவா ஸங்கீதமாப் பாடறதுமில்லையே! திவ்ய ப்ரபந்தத்தை ப்ராம்மணாளே சொல்றதாலே வேதம் மாதிரியா ஒரு தினுஸா அதை ஏத்தல் எறக்கல் ப்ராஸத்தோட சொல்றதுன்னுதானே ஏற்பட்டிருக்கு? நீ ஒன் மனோபாவப்படி, மனோதர்மப்படி (திருப்பாவைக்கு ராகம்) போட்டாயாக்கும்?”

“ஏதோ எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு.”

”அதுவேதான் ஸ்டாண்டர்டா மத்த வித்வான்களும் ஒத்துண்டு பாடற மாதிரி ஆயிருக்கே!… நம்மோட பழைய ராகங்கள் ஒரிஜினல் ரூபம் மாறாம, ரொம்பக் காலமா வந்துண்டிருக்கிறது தேவாரப் பண்களிலேதான்னு தெரியறது. வேதத்தை ஸ்வரம் தப்பாம வைதிகாள் வம்ச பரம்பரையா ரக்ஷிச்சுக் கொடுத்திருக்கிற மாதிரியே ஓதுவாமூர்த்திகள் வழிவழியா தேவாரங்களை ரூபம் மாத்தாம – செய்யுள் ரூபம் மாத்ரமில்லை; பண்ணோட ரூபமும் மாறாம – காப்பாத்திண்டு வந்திருக்கா. பக்திக்குத் தொண்டே ஸங்கீதத்துக்கும் பெரிய தொண்டாயிருக்கு. இப்போ சங்கராபராணம், பைரவி, நீலாம்பரின்னுல்லாம் சொல்ற ராகங்கள் வேறே பேருல இன்னின்ன பண்ணாயிருந்து, அப்படியே தொடர்ந்து பாடிண்டு வரா-ன்னு ரிஸர்ச் பண்ணி நிச்சயப்படுத்தியிருக்கா. இதுல ஸௌராஷ்ட்ரம், கேதாரகௌளை இருக்கு. காம்போதியும் இருக்கு. யதுகுல காம்போதிகூட இருக்கு. காம்போதிக்குத் ‘தக்கேசி’ன்னோ என்னமோ பண்ணிலே பேர் சொல்றா…1 காம்போதி மேளராகம்2 இல்லையோல்லியோ?”

“இல்லை, ஹரிகாம்போதிதான் மேளம், காம்போதி (அதன்) ஜன்யம்3.”

“ஆனா ஹரிகாம்போதியைவிட ஃபேமஸா இருக்கு. அப்பாவைவிட பிள்ளை ஒசத்தியாயிருக்காப்பல இப்படி சில ஜன்ய ராகங்கள் ஜனக ராகத்தைவிட ப்ரபலமாயிருக்கு இல்லியா?”

“பைரவியும் பெரியவா சொல்கிற மாதிரிதான். அது நடபைரவி ஜன்யம்.”

“ஸரி, நீ பாடு. வரவழைச்ச கார்யத்தைப் பண்ணவிடாம ஊர்க்கதையிலே போயிண்டிருக்கேன்.”

காம்போதி தக்கேசிப் பண்ணேதான்.
ஏறுவரிசை, இறங்கு வரிசை இரண்டிலும் ஏழு ஸ்வரங்களும் கிரமமாகவும், அன்னிய ஸ்வரம் கலக்காமலும் அமைந்த ஸம்பூர்ண ராகம்.
ஒரு மேளராகத்தின் ஸ்வரங்களில் ஒன்றையோ சிலவற்றையோ விட்டுவிட்டது. ‘ஜன்யம்’ என்றால் மூலமான மேளராகத்திலிருந்து ‘பிறந்தது’ என்று பொருள்.

‘ஸுப்ரஹ்மண்யர்’ என்றால் வைதிக தெய்வம்

“ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே, நமஸ்தே”:

”ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிக்கு மறுபடி மறுபடி நமஸ்காரம்” என்று எல்லோருக்கும் புரியும். மங்களமாக ‘ஸ்ரீ’ என்று ஆரம்பித்து ஒன்றுக்கு இரண்டாக ‘நமஸ்தே’ சொல்லியிருக்கிறார். ஒரு தடவைக்கு மேல் சொல்லி விட்டால் அனந்தம் தடவை சொல்லிவிட்டதாக அர்த்தம். முக்யமான ஒரு விஷயத்தை அழுத்தமாகச் சொல்வதென்றால் இப்படி டூப்ளிகேட் பண்ணுவது வழக்கம். ‘போற்றி, போற்றி’ என்பது அப்படித்தான். ‘ஜய ஜய சங்கர’ என்கிறோம். ப்ரஹ்மஸுத்ரம்கூட ஒரே வாக்யத்தை இரண்டு தடவை திருப்பித்தான் முடிகிறது.

“நமஸ்தே நமஸ்தே” – “தே” – உனக்கு; ”நம:” – நமஸ்காரம். ‘நம: தே’ என்பது ’நமஸ்தே’ என்றாகும். “தே” – உனக்கு. “ஸுப்ரஹ்மண்யாய” – ஸுப்ரஹ்மண்யனுக்கு. பாட்டு முழுக்க ‘க்கு’ போட்டுக்கொண்டு நாலாம் வேற்றுமையிலேயே போகிறது.

ஸுப்ரஹ்மண்யனான உனக்கு நமஸ்காரம். அனந்த கோடி நமஸ்காரம்.

ஸுப்ரஹ்மண்யன் என்றால்? நல்ல ப்ரஹ்மண்யன். தேர்ந்த ப்ரஹ்மண்யன். ப்ரஹ்மண்யன் என்றால்?

‘ப்ரஹ்மம்’ என்றால் ஸத்யமான பரமாத்ம ஸ்வரூபம் என்று மாத்ரமே அர்த்தம் பண்ணிக்கொள்கிறோம். ‘ப்ரஹ்ம’ பதத்துக்கு இன்னொரு முக்யமான அர்த்தம் ‘வேதம்’ என்பது. வேதத்துக்கு ‘ப்ரஹ்ம’ என்று ஒரு பெயர். அதனால்தான் வேத மந்திரத்தில் ஒரு குழந்தைக்கு தீக்ஷை கொடுப்பதான உபநயனத்தை ‘ப்ரஹ்மோபதேசம்’ என்பது. வேதம் கற்றுக் கொள்வதாலேயே அந்தக் குழந்தை ‘ப்ரஹ்மசாரி’ ஆகிறான். ‘ப்ரஹ்ம யஜ்ஞம்’ என்கிற மாதிரியான பல இடங்களிலும் ‘ப்ரஹ்ம’ என்றால் வேதம் என்றே அர்த்தம். வேதத்தை அநுஸரிப்பது, அநுஷ்டிப்பது – அதாவது வைதிகம் என்பதுதான் ப்ரஹ்மண்யம். அதை முக்கியமாகக் கொண்டவர்களே ப்ராஹ்மணர்கள். வேதங்களின் பரம தாத்பர்யமான ப்ரஹ்மமாகிற பரமாத்ம ஸ்வரூபமாகவே இருப்பதால் ஸுப்ரஹ்மண்யராக இருக்கப்பட்ட மூர்த்தி வைதிகத்தின் விசேஷ தெய்வமாக வைதிகர்களின் விசேஷ தெய்வமாக இருப்பதாலும் ஸுப்ரஹ்மண்யராகிறார்.

வேதத்துக்கு முக்கியமென்ன? அக்னி உபாஸனை. ஸுப்ரஹ்மண்யர்தானே அக்னி ஸ்வரூபமாயிருப்பவர்? பரமேச்வரனின் நேத்ராக்னிப் பொறி ஆறு சேர்ந்துதானே அவராக ஆனது? அதனால் அவர் வேத தேவராக இருப்பவர். வேதம் படிப்பதும் சொல்லிக் கொடுப்பதுமே தொழிலாயுள்ள ப்ராஹமணர்களின் தெய்வமாயிருப்பவர் ஸுப்ரஹ்மண்யர்.

ஆசார்யாளும் ‘ஸுப்ரஹ்மண்ய புஜங்க’த்தில், “மஹீதேவ தேவம், மஹாதேவ பாவம், மஹாதேவ பாலம்” என்று சொல்லியிருக்கிறார். ‘மஹீதேவர்’ என்றால் ‘ப்ராஹமணர்’. ‘மஹீதேவ தேவர்’ என்றால் ப்ராஹ்மணர்களின் தெய்வம் என்று அர்த்தம்.

தமிழிலுள்ள பக்தி நூல்களில் ரொம்பவும் புராதனமான ‘திருமுருகாற்றுப்படை’யிலும் இப்படியே தான் சொல்லியிருக்கிறது. ஷண்முகனின் ஆறு முகங்களில் ஒவ்வொன்றும் ஒருவிதமான அநுக்ரஹம் செய்வதாக நக்கீரர் சொல்லிக்கொண்டு போகும்போது

ஒரு முகம்

மந்திர விதியின் மரபுளி வழாஅது

அந்தணர் வேள்வியோர்க்கும்மே

என்று சொல்லியிருக்கிறார். திருவேரகம் என்கிற ஸ்வாமிமலையை வர்ணிக்கிற இடத்திலும் அங்கே நல்ல ப்ரஹ்மசர்ய அநுஷ்டானமுள்ள ப்ராஹமணர்கள் முத்தீ வளர்த்து யஜ்ஞாதிகள் செய்து ஸுப்ரஹ்மண்ய மந்திர ஜபமும் பூஜையும் செய்வதையே சொல்லியிருக்கிறார்.

யஜ்ஞ கர்மத்தில் பங்கு கொண்டு செய்கிற ப்ராஹ்மணர்களுக்கு ரித்விக் என்று பெயர். பதினாறு வகையான ரித்விக்குகளில் ஒருவருக்குப் பேர் ‘ஸுப்ரஹ்மண்ய’ என்பது.

‘ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி’ என்பதே குமாரஸ்வாமிக்கு ப்ரஸித்த நாமாவாக இருப்பதிலிருந்தே அவர் வேதத்துக்கும் வைதிகத்துக்கும் அதிதேவதை என்று நிச்சயமாகிறது.

தீக்ஷிதரும் முருகனும்

முத்துஸ்வாமி தீக்ஷிதருக்கு ஸுப்ரஹ்மண்ய ஸம்பந்தம் ஜாஸ்தி. அவர் ஸகல க்ஷேத்ரங்களுக்கும் போய் ஸகல தெய்வங்களையும் பாடி வைத்தவர். ஆசார்யாள் மாதிரி. ஆனாலும் உபாஸனையில் அவரை அம்பாள் பக்தராகவே விசேஷமாகத் தெரிந்து கொண்டிருக்கிறோம். கடைசியிலும் அவர் மீனாக்ஷியம்மன் பேரில் ‘பாசமோசனி’ என்று பாடிக்கொண்டேதான் சரீரத்தை விட்டிருக்கிறார். ஆனால் அவருடைய பிறப்பு, அவருக்கு ஸாஹித்ய வ்யுத்பத்தி (ஆற்றல்) ஏற்பட்டது முதலியவற்றிலெல்லாம் ஸுப்ரஹ்மண்ய ஸம்பந்தமே இருக்கிறது.

முத்துஸ்வாமி என்கிற பேரே வைத்தீச்வரன் கோவில் முத்துக்குமாரஸ்வாமியின் பெயரை வைத்துத்தான் அவருக்கு நாமகரணமாயிருக்கிறது. அப்பா ராமஸ்வாமி தீக்ஷிதர் – அவரும் பெரிய பண்டிதர். ஸங்கீதத்தில் நிரம்பத் தெரிந்தவர். ஸாஹித்யங்கள் பண்ணியிருப்பவர். பெரிய ஸ்ரீவித்யா உபாஸகருங்கூட. அவருக்கு நாற்பது வயசு வரை புத்ர பாக்யமில்லை. பத்னியோடுகூட வைத்தீச்வரன் கோவிலுக்குப் போய் முத்துக்குமாரஸ்வாமி ஸந்நிதியில் ஒரு மண்டலம் விரதம் இருந்தார். அந்த அம்மாளுக்குத் தன் மடியிலே தேங்காய், பழம் முதலான மங்கள வஸ்துக்களை யாரோ கட்டுவதாக ஸ்வப்னம் ஏற்பட்டது. அடுத்தாற் போலவே கர்ப்பமும் உண்டாயிற்று. முத்துக்குமாரஸ்வாமி புத்ரவரம் தந்ததற்கே அப்படி ஸ்வப்னத்தில் ஸமிக்ஞையாயிருக்கிறதென்று புரிந்து கொண்டார்கள். அதற்கேற்றாற் போல் பிள்ளையும் ஒரு க்ருத்திகா நக்ஷத்திரத்திலேயே – அது பங்குனி மாஸ க்ருத்திகை – பிறந்தது. அப்படிப் பிறந்தவர்தான் முத்துஸ்வாமி தீக்ஷிதர்.

அப்புறம் அவர் வளர்ந்து ஸங்கீத அப்யாஸம், ஸ்ரீவித்யா அப்யாஸம், காசியில் ஸந்நியாஸ குருவுடன் வாஸம் எல்லாம் பண்ணினார். காசியிலேயே குரு ஸித்தியானார். ஸித்தியாகிற ஸமயத்தில் அவர் தீக்ஷிதரிடம் ‘தக்ஷிணத்துக்குத் திரும்பிப் போய்விடு. அங்கே முதலில் திருத்தணிக்குப் போ. நீ எதற்காக ஜன்மா எடுத்திருக்கிறாயோ அது ஸபலமாகும்படியாக (பலிதமடையுமாறு) ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி அநுக்ரஹம் பண்ணுவார்” என்று சொன்னார்.

அப்படியே தீக்ஷிதர் திருத்தணிக்குப் போனார். அடிவாரத்தில் திருக்குளத்தில் ஸ்நானம் பண்ணிவிட்டு அவர் மலை ஏறிப் போய்க் கொண்டிருக்கும்போது முன்பின் தெரியாத ஒரு கிழ ப்ராஹ்மணர் அவரை, “முத்துஸ்வாமி!” என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டு, “வாயைத் திற” என்றார். அவர் அப்படியே பண்ணியதும் வாயிலே ஒரு கல்கண்டைப் போட்டுவிட்டு போன இடம் தெரியாமல் போய்விட்டார். வந்தது யாரென்று தீக்ஷிதருக்குப் புரிந்து விட்டது. இவர் வந்த கார்யமும் தத்க்ஷணமே ஆரம்பித்துவிட்டது – ஸாஹித்ய வ்யுத்புத்தி ஏற்பட்டுவிட்டது! தகப்பனாரான பரமேச்வரனுக்கும் குருவாக இருந்த குஹன் மீது அப்போதே எட்டு வேற்றுமைகளில் ஒவ்வொன்றிலும் ஒரு க்ருதியாக எட்டு க்ருதிகளைப் பாடிவிட்டார்.

க்ருதிகளில் தம் முத்ரையாக அவர் ‘குருகுஹ’ என்ற ஸுப்ரஹ்மண்ய நாமாவையே வைத்திருப்பதையும் குறிப்பாகக் கவனிக்க வேண்டும். குகையில் இருப்பவன் குஹன். ஹ்ருதய அந்தரங்கம் என்ற குகையில் ஆத்ம ஸ்வரூபமாக உள்ள குருதான் குருகுஹன்.

தீக்ஷிதர் சரீர யாத்திரையை முடித்தது ஒரு தீபாவளியில். அதற்கு அடுத்த ஆறாம் நாள்தான் மஹா ஸ்கந்த ஷஷ்டி வருவதும். ஷஷ்டியன்று பூர்த்தியாகிற விதத்தில் ஆறு நாள் வ்ரத உபவாஸங்களிருப்பது வழக்கம். அதாவது தீக்ஷிதர்வாளின் பிறப்பு மட்டுமில்லாமல் முக்தியடைந்ததிலும் ஒரு ஸுப்ரஹ்மண்ய ஸம்பந்தம் தெரிகிறது….

தீக்ஷிதர் க்ஷேத்ரம் க்ஷேத்ரமாகப் போய் அங்கேயுள்ள மூர்த்தியை – அது என்ன மூர்த்தியானாலும் அதை – வித்யாஸமில்லாமல் பாடினார் என்றேன். அந்தந்த க்ருதியிலேயே அது எந்த க்ஷேத்ரத்தைப் பற்றியது என்பதற்கு அகச் சான்று என்கிறார்களே, அப்படிப்பட்ட internal evidence இருக்கும். குறிப்பிட்ட க்ஷேத்ரத்தில் அந்த ஸ்வாமிக்கு உள்ள பெயர், அதற்கான மந்த்ர ரஹஸ்யம், அந்த ஸ்தல புராணக் குறிப்பு என்று ஏதாவது இருக்கும். இந்த ‘ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யாய’வில் குறிப்பாக அது இன்ன க்ஷேத்ரத்தில் பாடியது என்று காட்டுவதாக ஒன்றுமில்லை.

அத்தனை ஸுப்ரஹ்மண்ய க்ஷேத்ரங்களிலுள்ள மூர்த்திகளையும் சேர்த்துத் தம்முடைய பாட்டினாலேயே மூலமூர்த்தியாக அவர் பண்ணிவைத்து விட்ட மாதிரி இந்த க்ருதி பிரகாசிக்கிறது!

அனந்தகோடி நமஸ்காரத்தோடு ஆரம்பித்திருக்கிறார். அப்புறம் –

முருகனின் அழகும் அருளும்

”மநஸிஜ கோடி கோடி லாவண்யாய”:

இரண்டு தடவை ‘நமஸ்தே’ போட்ட மாதிரி இரண்டு தடவை ‘கோடி’ போட்டிருக்கார். கோடியைக் கோடியால் பெருக்கினால் எவ்வளவு பெரிசு? அதுதான் ‘கோடி கோடி’.

‘மநஸிஜ கோடி கோடி’ – கோடி கோடி மன்மதர்கள். மநஸிஜன் என்பது மன்மதன் பெயர். மனஸிலிருந்து ஜனித்தவன் மநஸிஜன். காமம் மனஸில் பிறப்பதுதானே? புராண ரீதியிலும் கதை இருக்கிறது. மஹா விஷ்ணுவின் புத்ரனே மன்மதன். ஆனாலும் ரொம்ப விசித்ரமாக, காமனான அவன் மஹாலக்ஷ்மியிடம் பெருமாளின் காமத்தினால் அவளுடைய கர்ப்பத்திலிருந்து பிறந்தவனில்லை. விஷ்ணுவின் மனஸிலிருந்தே – அவர் மனஸால் எண்ணின மாத்திரத்திலேயே அவன் உண்டாகிவிட்டான். இன்னொரு பிள்ளை ப்ரம்மாவும் நேரே தகப்பனாரான விஷ்ணுவின் நாபியிலிருந்தே உண்டானவர். இப்படி எல்லாமே ஸ்வாமி வேடிக்கை விசித்ரமாகப் பண்ணுகிறார்!

அழகுக்குப் பெயரெடுத்தவன் மன்மதன். ‘மன்மதன்னு எண்ணம்!’ என்று தான் பரிஹாஸம் பண்ணுகிறோம். அப்படிப்பட்ட மன்மதர்கள் கோடி கோடி பேரின் அழகு சேர்ந்தால் எவ்வளவு அழகாயிருக்குமோ அத்தனை அழகானவர் ஸுப்ரஹ்மண்யர். ‘மநஸிஜ கோடி கோடி லாவண்யர்’.

க்ருஷ்ண பரமாத்மாவைப் பற்றி (பாகவதத்தில்) “ஸாக்ஷாத் மன்மத மன்மத:” என்று சொல்லியிருக்கிறது. மன்மதனுக்கும் மன்மதனாக இருக்கப்பட்ட அப்பேர்ப்பட்ட ஸௌந்தர்யவான் என்று அர்த்தம். அவர் மன்மதனையே படைத்தவர். அவருடைய மனஸுக்குள்ளேயிருந்துதான் அவன் ஸ்ருஷ்டியானது. மன்மதனுக்கும் மூலமானவர் மன்மத மன்மதனாக இருப்பதில் ஆச்சர்யமில்லை. க்ருஷ்ணனாக அவர் வந்தபோதும் மன்மதனே தான் அவருடைய பிள்ளையான ப்ரத்யும்னனாக வந்து தனக்கு அவரே மூலபுருஷர் என்று காட்டியிருக்கிறான்.

ஸுப்ரஹ்மண்யர் கோடி கோடி மன்மத லாவண்யராக இருப்பதுதான் ஆச்சர்யம். இவர் யார்? பரமேச்வரனின் புத்ரர். அந்தப் பரமேச்வரனோ மன்மதனை அப்படியே பஸ்மம் பண்ணினவர். எந்த நேத்ராக்னியினாலே அவர் மன்மதனைப் பொசுக்கினாரோ அதே நேத்ராக்னியிலிருந்து உண்டானவர் ஸுப்ரஹ்மண்யர். காமத்திலே பிறக்காமல் ஞானத்திலே பிறந்தவர். ஞானமே லோகத்தை ரக்ஷிக்க வேண்டும் என்று கருணாமூர்த்தியாக ஆன ஸ்வரூபம் என்று தத்வார்த்தம். தத்வார்த்தம் இருக்கட்டும். நான் வேடிக்கையாகச் சொல்ல வந்தேன் – மன்மதனை தஹனம் பண்ணினவரின் பிள்ளை கோடி கோடி மன்மதனாக இருக்கிறார்!

குமாரன் என்பது அவருக்கு ஒரு விசேஷப் பேர் அல்லவா? தெற்கே எப்படிப் பிள்ளை என்றாலே பார்வதி பரமேச்வரர்களின் மூத்த பிள்ளைதான் என்று வைத்துப் ‘பிள்ளையார்’ என்கிறோமோ, அப்படி வடக்கே இளைய பிள்ளையைத்தான் கொண்டாடி ‘குமார்’, ‘குமார்’, என்றே சொல்கிறார்கள். நாமுங்கூட குமாரஸ்வாமி, குமரன் என்று சொல்கிறோம். இப்போது புருஷ ப்ரஜைகளில் பாதிப் பேருக்குப் பேர் ‘குமார்’தான்! ‘குமார’ சப்தம் குறிப்பாக ஸுப்ரஹ்மண்யருக்கே உரியதாக இருக்கிறது. வால்மீகி ராமாயணத்தில் விச்வாமித்திரர் ராம லக்ஷ்மணர்களுக்கு ஸுப்ரஹ்மண்ய அவதாரக் கதையைச் சொல்லி முடிக்கும் போது இந்தக் ‘குமார ஸம்பவ’க் கதையைக் கேட்டால் இன்னின்ன பலன் கிடைக்கும் என்று சொன்னதாக வருகிறது. ஆதி கவி வாக்கில் வந்த ‘குமார ஸம்பவம்’ என்ற வார்த்தையையே காளிதாஸர் தம்முடைய காவ்யத்துக்குத் தலைப்பாகப் போட்டார்.

குமாரன் என்ற பேர் விசேஷம் இருக்கட்டும். அதை எதற்குச் சொல்ல வந்தேனென்றால், அதற்குப் பிள்ளை என்ற அர்த்தத்தோடு மன்மத ஸம்பந்தமாக இன்னோர் அர்த்தமும் சொல்வதுண்டு. மன்மதனுக்கு ‘மாரன்’ என்றும் ஒரு பேர் உண்டல்லவா? மாரனுக்கு வெட்கத்தை உண்டாக்குகிறவன், அதாவது மாரனைப் பழிக்கும் மஹா அழகன் தான் குமாரன்: ‘குத்ஸித மார: – குமார:’. குமாரன் என்றாலே மன்மத மன்மதன், மநஸிஜ கோடி கோடி லாவண்யன் என்று அர்த்தம் ஏற்பட்டுவிடுகிறது.

தமிழ் தேசத்துக்கு அவர் ரொம்பப் பிரியம். தமிழ்த் தெய்வம் என்றே சொல்கிறோம். தமிழில் வைதாரையும் வாழ வைப்பவர் என்கிறோம். இந்த பாஷையில் அவருக்கென்று அருமையாக ஒரு பெயர் சூட்டியிருக்கிறோம் – முருகன். முருகு என்றாலே அழகு என்றுதான் சொல்கிறார்கள். காமன் எரிந்து போன அப்புறம் அவனுடைய கரும்பு வில்லையும் புஷ்ப பாணத்தையும் அம்பாளே எடுத்துக் கொண்டு காமேச்வரி ஆனாள். அதனால்தான் ஸுப்ரஹ்மண்ய அவதாரம் ஏற்பட்டது. அவளுக்குப் பேரே ஸுந்தரி, த்ரிபுரஸுந்தரி. அவளுடைய பிள்ளை, தாயைப் போலப் பிள்ளை என்றபடி லாவண்ய மூர்த்தியாகத்தானே இருப்பார்? ‘மநஸிஜ கோடி கோடி லாவண்யாய.’

”தீன சரண்யாய”:

அழகு இருந்தால் போதுமா? நமக்கு வேண்டியது அருள். ஸ்வாமி அழகு வடிவமாக இருக்கிறாரென்றால் அந்த அழகே அருள் வடிவம்தான். காருண்யம்தான் லாவண்யம். இரண்டும் வேறே வேறேயில்லை. ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி தீன ஜனங்களுக்கெல்லாம் புகலிடமாக இருப்பவர் – ‘தீன சரண்யர்’. எளியவர்கள், கஷ்டப்படுகிறவர்கள், பயப்படுகிறவர்கள், தரித்ரர்கள் எல்லாரும் ‘தீனர்கள்’ என்ற வார்த்தைக்குள் வந்து விடுவார்கள். இவர்களுக்கெல்லாம் துக்க நிவ்ருத்தி தரும் புகலாக அவர் இருக்கிறார். ‘தீன சரண்யர்’.

பாடலின் சில சிறப்பம்சங்கள்

தீன சரண்யாய…..லாவண்யாய……ஸுப்ரஹ்மண்யாய – எல்லாம் ஒரே மாதிரி, எதுகையோ மோனையோ ஏதோ ஒன்றாக, பாடியிருக்கிறார். எதுகைதான். ஆனால் வார்த்தையின் ஆரம்பம் எதுகையாக இல்லாமல் முடிவில் இருக்கிறது. இதை ‘அந்த்ய ப்ராஸம்’ என்பார்கள். ‘யாய’, ‘யாய’ என்று வருவது ‘அவருக்கு’ என்று நாலாம் வேற்றுமையில் அர்த்தம் கொடுக்கும். ‘ஸுப்ரஹ்மண்யருக்கு, கோடி கோடி மன்மத லாவண்யருக்கு, தீன சரண்யருக்கு நமஸ்காரம்’. ‘உனக்கு நமஸ்காரம்’ என்பது தான் ‘நமஸ்தே’.

‘மநஸிஜ கோடி கோடி….’ என்று வேகமான கதியில் பாடித் திருப்புவது வழக்கமாயிருக்கிறது. ஆரம்பத்திலிருந்து மெதுவாக, கம்பீரமாகப் பாடிக்கொண்டு வந்து இங்கே வேகமாகத் திருப்புவது. முதலில் பாடுவது சௌக காலம். விளம்ப காலம் என்றும் சொல்வார்கள். ‘விளம்பம்’ நல்ல ஸம்ஸ்க்ருத வார்த்தை. Slow என்று அர்த்தம். ‘சௌகம்’ – ஸரியாகப் புரிபடவில்லை. ‘ஸௌக்யம்’தான் ‘சௌக’மாச்சோ என்னவோ? நிதானமாகப் பாடினால் மனஸுக்கு விச்ராந்தியாக, ரொம்ப ஸௌக்யம் உண்டாகிறது. அது ராகத்தின் இழுப்பு, வளைசல்களுக்கு இடம் கொடுத்து ராக பாவத்தையும் விசேஷமாகத் தெரிவிக்கிறது. ஸாஹித்யத்தின் அர்த்த பாவத்திலேயும் தோய்ந்து நிற்க அவகாசம் கொடுக்கிறது. தீக்ஷிதர்வாள் க்ருதிகளில் இது தனிச் சிறப்பு. கம்பீரமான ஸம்ஸ்க்ருத பாஷை அதற்கேற்ற கம்பீர நடையோடு மத்த கஜம் அசங்கி அசங்கி வருகிற மாதிரி சௌக க்ருதிகளாகப் பண்ணிக் கொடுத்திருக்கிறார்.

ஆனாலும் நாம் அவஸர ப்ரக்ருதிகளாக இருக்கிறோமோல்லியோ? மனஸாலே, உடம்பாலே சாஞ்சல்ய மயமாக ஓடிக் கொண்டேயிருப்பதுதானே நம் நேச்சராக இருக்கிறது? அதனால் ஒரே சௌகமாக வளர்ந்து கொண்டு போனால் அலுப்புத் தட்டிப் போகிறது. அதற்காகத்தான் மாற்றாகக் கொஞ்சம் அங்கங்கே வேகமான நடையில் திருப்பும்படியாகவும் ஒவ்வோர் உருப்படியிலும் வைத்திருக்கிறார். சௌக காலத்துக்கு ரிலீஃபாக மத்யம காலம். ஒரே தித்திப்பு லட்டு சாப்பிட்டால் திகட்டப் போகிறதென்று கிராம்பு போட்டு விருவிரு பண்ணுகிற மாதிரி பாட்டிலேயும் கொஞ்சம் விருவிரு.

இந்தப் பாட்டில் பல்லவி, சரணம் இரண்டிலேயும் முடிக்கிற இடத்தில் மத்யம கால ஆவர்த்தங்கள் வைத்திருக்கிறார். ஆனால் பெரும்பாலான பாட்டுக்களில் அநுபல்லவியிலேயும் சரணத்திலேயும்தான் மத்யம காலம் வைத்திருப்பார். ஸுப்ரஹ்மண்யர் நல்ல யுவா. “என்றும் இளையாய்” என்று சொல்லப்படுகிறவர். அதனால் ஆரம்பத்திலேயே அவர் குதிநடை போட்டுக்கொண்டு வருகிற மாதிரி மத்யம காலம் வைத்து விட்டார் போலிருக்கிறது!

எல்லோருக்கும் பொதுவான ஸ்வாமி

”பூஸுராதி ஸமஸ்தஜன பூஜிதாப்ஜ சரணாய”:

”பிராமணர் முதலான எல்லா மக்களாலும் பூஜிக்கப்படும் தாமரைப் பாதங்களை உடையவர்.” “சரணாய” – பாதங்களை உடையவருக்கு, “நம:” – நமஸ்காரம் என்று, பல்லவியில் வரும் ‘நமஸ்தே’யோடு சேரும்.

“பூஸுராதி” – பிராமணர் முதலிய. ‘பூஸுரர்’ என்றால் பிராமணர். ‘ஸுரர்’ – தேவர்கள். யாகம் செய்து தேவர்களை பூமிக்கு வரவழைப்பதால், அவர்களுடைய அநுக்ரஹத்தால் பூமிக்குப் பலவித க்ஷேமங்களை உண்டாக்குவதால் பிராமணரை ‘பூஸுரர்’ என்பது. அந்தக் கடமையைச் சரியாகச் செய்தால்தான் இந்தப் பட்டம். இல்லாவிட்டால் ‘ப்ரம்ம பந்து’ என்று கேலிப் பேர்தான். ‘ப்ராமணர்களுக்கு உறவுக்காரன்’ என்று அர்த்தம். என்ன கேலி புரிகிறதோல்லியோ? இவனை பிராமணன் என்று சொல்வதற்கான லாயக்கு இவனுக்கு இல்லை. ஆனால் இவன் எந்தக் குடும்பத்தில் பிறந்திருக்கிறான், இவனுக்கு உறவுக்காரர்கள் யார் என்று பார்த்தால் அவர்களெல்லாம் பிராமணராயிருக்கிறார்கள். அதனால் இவனை ‘ப்ரம்ம பந்து’ என்று வேண்டுமானால் சொல்லிவிட்டுப் போகலாமென்று அப்படிப் பேர் சொல்வது!

பிராமணரின் ஸ்வாமி ஸுப்ரஹ்மண்யர். ஆரம்பத்திலேயே பார்த்த ஸமாசாரம். ‘மஹீதேவ தேவ’ரே ‘பூஸுர பூஜிதர்’. அப்படியானால் பிராமணருக்கு மட்டுந்தான் ஸ்வாமியா என்றால் அப்படியில்லை. அத்தனை ஜாதி ஜனங்களுக்கும் அவர் ஸ்வாமி. அவருடைய இரண்டு பெண்டாட்டிகளில் ஒருத்தி ஸுரமகள், ஒருத்தி குறமகள் என்று சொல்வார்கள். ஜீவ வர்க்கம் முழுவதற்கும் அவர் ஸ்வாமி. அவர் த்ராவிட ஸ்வாமிதான், தமிழ்த் தெய்வம் என்று ஒருத்தர் சொல்கிறார். இன்னொருத்தர் அவர்தான் ப்ராமண ஸ்வாமி, பேரே ஸுப்ரஹ்மண்யர் என்கிறார். வாஸ்தவத்தில் அவர் எல்லார் ஸ்வாமியுந்தான். தீக்ஷிதர் இந்தக் கக்ஷிதான். இதுதான் நமக்கு மனஸுக்குப் பிடித்திருக்கிறது. சண்டை சாடி இல்லாமல் ஸர்வ ஜன ஐக்கியத்தை உண்டாக்குவதாக இருக்கிறது. ஸ்வாமியின் பேரில் நாமெல்லாம் ஒன்று சேரத்தான் வேண்டுமே தவிர, கக்ஷி ஆடிக் கொண்டு பிரிந்து போகக் கூடாது. ‘பூஸுராதி ஸமஸ்தஜன’ என்றபடி அவர் சரணத்தில் ஸமஸ்த ஜனங்களும் அன்பிலே ஒன்று சேரணும்.

பாத தாமரை

”பூஜிதாப்ஜ சரணாய” – பூஜித அப்ஜ சரணாய. ‘பூஜிக்கப்பட்ட தாமரைத் திருவடிகளை உடையவருக்கு’ நமஸ்காரம். ‘ப்ராமணர் முதலான எல்லா மக்களாலும் பூஜிக்கப்பட்ட திருவடித் தாமரைகளை உடையவர்.’ ‘அப்ஜ’ என்றால் தாமரை. ‘அப்’ என்றால் ஜலம். ஜலத்தில் ஜனிப்பது அப்ஜம். ஜலஜம் என்றுகூடத் தாமரைக்கு ஒரு பேர். அம்புஜம் என்றாலும் தாமரைதான். ‘அம்பு’ என்றாலும் ஜலந்தான். ஜலாசயமான ‘ஸரஸ்’ என்கிற குளத்தில் பிறப்பதால் ஸரஸிஜம், ஸரோஜம் என்று பேர். ஜலஜா, அம்புஜா, ஸரோஜா என்று பேர்கூட வைக்கிறோம். வனஜா என்பதும் தாமரையின் பேரில் உண்டானதுதான். ‘வனம் என்றால் காடு அல்லவா? காட்டிலேயா தாமரை முளைக்கும்?’ என்று தோன்றலாம். ‘வனம்’ என்பதற்கும் ஜலம் என்று ஒரு அர்த்தம் உண்டு. ஜலத்துக்குக் ‘கம்’ என்று இன்னொரு பேர். ‘கம்’மில் பிறப்பதாலேயே தாமரையைக் ‘கம்ஜம்’, ‘கஞ்ஜம்’ என்பது. ‘கஞ்ஜலோசனே!’ ‘கஞ்ஜதளாயதாக்ஷி!’ என்றேல்லாம் பாட்டுக்களில் வருகிறதல்லவா? ’நீர’மும் ஜலம்தான். நீரம்தான் நீர். தாமரையை ‘நீரஜம்’ என்று சொல்கிறோம். இப்படியே ‘வாரி’ – அதுவும் ஜலந்தான் – அதை வைத்து ‘வாரிஜம்’ என்பது. ‘அப்ஜம்’ என்றால் தாமரை என்று சொல்ல வந்தேன்.

ஸமஸ்த ஜனங்களும் பூஜை செய்து பூப்போடும் பாதம் தாமரைப் பூவாக இருக்கிறது! அத்தனை அழகு, குளிர்ச்சி, ஸௌகுமார்யம் (மென்மை)! தாமரையிலிருந்து தேன் வழிகிற மாதிரி திருவடித் தாமரையிலிருந்து காருண்யாம்ருதம் வழிகிறது.

முருகன் – சக்தி – ஸர்ப்பம்

”வாஸுகி தக்ஷகாதி ஸர்ப்ப ஸ்வரூப தரணாய”:

”வாஸுகி, தக்ஷகன் முதலான ஸர்ப்பங்களின் ரூபத்தை எடுத்துக் கொண்டிருப்பவர்.” ஸர்ப்பம் என்றால் ப்ராண சக்தியான குண்டலினீ என்று அர்த்தம். குண்டலம் மாதிரி பாம்பு வளைத்துச் சுருட்டிக் கொண்டு படுத்துக் கொள்கிறதல்லவா? அப்படித்தான் ஸாதாரணமாக நாம் இருக்கிற ஸ்திதியில் ப்ராண சக்தி சுருட்டிக் கொண்டு தூங்குகிற மாதிரி இருக்கிறது. ஸாதனை செய்தால் அது விழித்துக்கொண்டு மஹா சக்தியோடு ப்ரகாசித்து எழும்பி, அப்புறம் பரமாத்ம ஸ்வரூபமான பரம சாந்தியில் ஐக்கியமாகி விடுகிறது. குண்டலினீ சக்தி என்று அதை அம்பாளாகச் சொல்வது. அதனால்தான் பரமசிவனுக்கு ஒரே நாகாபரணம். நாக குண்டலமே போட்டுக் கொண்டிருக்கிறார். சிவகுமாரரான ஸுப்ரஹ்மண்யர் சக்தி ஸ்வரூபமாக இருப்பவர்.

ஸுப்ரஹ்மண்யர் என்றால் வேல்தான் முக்யமாக நினைவு வருவது. எல்லா ஸ்வாமிக்குமே ஆயுதங்கள் இருந்தாலும், ஸுப்ரஹ்மண்யரும் அநேக ஆயுதங்களைத் தரித்துக் கொண்டிருந்தாலும் ஸாக்ஷாத் அவரே வேலாயுதம் என்று நினைக்கிற அளவுக்கு எந்த ஸ்வாமியுடனும் எந்த ஆயுதத்தையும் ‘ஐடெண்டிக’லாக (ஸர்வஸமமாக) நினைப்பதில்லை. அந்த வேலுக்கு என்ன பேரென்றால் சக்தி, சக்த்யாயுதம் என்பதே! சக்திவேல் என்பார்கள். சக்தி ஸ்வரூபரான அவர் குண்டலினீயானபடியால் ஸர்ப்ப ஸ்வரூபமாக இருக்கிறார். “ஸொப்பனத்தில் பாம்பு வந்துதா? அப்ப ஸுப்ரஹ்மண்யருக்கு ப்ரீதி செய்யணும்” என்றுதான் சொல்கிறோம். ஷஷ்டி பூஜை என்பதே நாகராஜ பூஜையாகப் பண்ணுகிற வழக்கமிருக்கிறது. குறிப்பாக, புத்ர தோஷம் நீங்க ஷஷ்டி வ்ரதம், நாக பூஜை என்று செய்கிறோம். தேவர்களெல்லாம் தங்களுக்கு மஹா சக்திமானான ஸேநாதிபதி வேண்டுமென்று வேண்டிக் கொண்டதன் பேரில் சக்தி ஸ்வரூபமான புத்ரனைப் பரமேச்வரன் அவர்களுக்கு வரமாகத் தந்தார். அவரையே ஜனங்கள் தங்களுக்குப் புத்ரவரம் வேண்டி ஷஷ்டியில் வ்ரதமிருந்து பூஜை செய்கிறார்கள். அதில் ஸர்ப்பத்திற்கு, புற்றுக்குப் பால் நைவேத்தியம் முக்யமாகச் செய்கிறார்கள்.

ஆந்த்ர, கர்நாடக தேசங்களில் ஸுப்ரஹ்மண்யருக்கு நராக்ருதியில் விக்ரஹம் வைப்பதில்லை. நாக ஸ்வரூபமாகத் தான் அங்கே கோவில்களில் இருக்கும். ‘ஸுப்ரஹ்மண்யா’ என்றே கன்னட தேசத்தில் ஸ்தலம் இருக்கிறதே, அங்கே கூட அப்படித்தான். ‘ஸுப்பராயுடு’ என்று தெலுங்கர்கள் செல்லமாகச் சொல்வதே பாம்பையும் குறிப்பதாக இருக்கிறது.

ஆசார்யாள் ‘புஜங்க’த்திலே ஸுப்ரஹ்மண்யரை நாகத்தோடு ஸம்பந்தப்படுத்திச் சொல்லியிருக்கிறாரா என்று பார்க்க வேண்டுமென்று ஆரம்பித்தேன். டைட்டிலை நினைத்ததுமே சட்டென்று சிரிப்பு வந்து விட்டது. பேரே புஜங்கம்! புஜங்கம் என்றாலே பாம்புதான். அதற்குக் கால் கிடையாது. மரவட்டை, கம்பளிப் பூச்சிக்கெல்லாம் எண்ணி முடியாத கால்கள். ஸர்ப்பத்துக்குக் காலே இல்லை. உடம்பு முழுக்க புஜம் மாதிரி சாட்டையாட்டமாக நீண்டிருக்கிறது. புஜத்தை அப்படியே வளைத்து வளைத்து இழுத்துக் கொண்டு போகிறதால் அது ‘புஜங்கம்’. பாம்பின் கதி மாதிரியே அமைந்த ஒருவித சந்தத்துக்கு புஜங்க ப்ரயாதம் என்று பெயர். அந்த மீட்டரில் உள்ள ச்லோகத்தைச் சொல்லும் போதே பாம்பு வளைந்து வளைந்து போகிற மாதிரியிருக்கும். ஆசார்யாள் பல தெய்வங்களின் மேலே புஜங்கம் பாடியிருக்கிறார். ஆனாலும் ‘புஜங்கம்’ என்ற மாத்திரத்திலே நினைப்பது ‘ஸுப்ரஹ்மண்ய புஜங்க’த்தைத்தான். மற்ற ஸ்வாமிகளின் மேலே அஷ்டகம், பஞ்சரத்னம், இன்னம் பலவிதமான ஸ்துதிகளையும் பண்ணிவிட்டு ஒரு புஜங்கமும் பண்ணியிருக்கிறார். ஆனால் ஸுப்ரஹ்மண்யர் பேரில்தான் சொல்ல வேண்டியது அத்தனையையும் அடக்கி ஒரே ஒரு புஜங்கம் மட்டும் பண்ணி நிறுத்தி விட்டார். இதுவே ப்ரூஃப்தான், அவர் நாகஸுப்ரஹ்மண்யமாகவே ஸ்வாமியைக் காட்டுவதற்கு என்று புரிந்தது.

தெய்வங்களிடம் முரண்பாடுகளும் ஒன்றுசேர்தல்

ஸர்ப்ப ஸ்வரூபம் என்று சொல்லும்போது ஸர்ப்பங்களில் தலைவர்களாக உள்ள வாஸுகி, தக்ஷகன் ஆகியவர்களை தீக்ஷிதர் குறிப்பிட்டு ‘அந்த ரூபங்களை எடுத்துக் கொண்டவனே!” என்கிறார். ஸர்ப்ப ஜாதியில் முக்யமான ஏழு ஸர்ப்பங்களின் படம் போட்டு அதற்கே ஷஷ்டி பூஜை பண்ணுகிறதுண்டு. வாஸுகிதான் நாகலோகத்தில் நாகராஜாவாக இருப்பது. மந்த்ர மலையை இந்த வாஸுகியால் கட்டித்தான் அம்ருத மதனத்தின் போது க்ஷீராப்தியைக் கடைந்தது. விசித்ரமாயிருக்கிறது – அம்ருதத்தை உண்டாக்க விஷப் பாம்பு உபகரணமாகிறது! விரோதமாயிருக்கிறவையெல்லாமும் ஸத்கார்யத்தில் ஒன்று சேர்ந்துவிடுவதே இதற்குத் தாத்பர்யம்!

ஸுப்ரஹ்மண்யர் ஸர்ப்ப ஸ்வரூபர் என்பதைப் பார்த்தாலே (இந்த ஒன்று சேர்தல்) தெரியும். அவர் வாஹனம் என்ன? மயில். அது ஸர்ப்பத்தின் பரம வைரி. ஒரு ஸர்ப்பத்தை அது நசுக்கிக் கொண்டிருக்கிற மாதிரியே சித்திரித்திருக்கும். ‘நாகபந்த மயூரா’ என்று திருப்புகழில்கூட இருக்கிறது. ஸர்ப்பத்தை நசுக்கிக் கொண்டு அதன் மேலே உட்கார்ந்து கொண்டிருக்கிற மயிலின் மேலே உட்கார்ந்து கொண்டிருப்பவரே ஸர்ப்ப ஸ்வரூபர்!

‘ஸிம்ஹ ஸொப்பனம்’ என்பதாக ஸொப்பனத்தில் சிங்கத்தைப் பார்த்தால்கூட யானைக்கு பயத்தில் ப்ராணன் போய்விடும். ஆனால் சிங்கத்தின் மேலேயே ஒரு யானை உட்கார்ந்திருக்கிறது. விக்நேச்வரரின் அநேக மூர்த்தங்களில் ‘ஹேரம்பர்’ என்று ஒன்று கேள்விப்பட்டிருக்கலாம். அந்த ஹேரம்ப கணபதிக்கு ஸிம்மம்தான் வாஹனம்.

பாம்பு – மயில் மாதிரிதான் பாம்பும் கருடனும். மஹா விஷ்ணுவுக்கு ஒன்று படுக்கை, மற்றது வாஹனம்.

மயிலும் கருடனும் பாம்பைத் தின்று விடுமென்றால் பாம்பு சந்திரனைத் தின்று விடும்! அப்படித்தானே க்ரஹணத்திற்குக் கதை சொல்லுகிறோம்? பரமசிவன் சிரஸிலோ பாம்பும் இருக்கிறது, சந்திரனும் இருக்கிறது.

பார்வதி பரமேச்வராளைத் தம்பதியாகப் பார்க்கும் போதும் இப்படியே விசித்ரமாயிருக்கிறது. மாட்டைப் பார்த்தால் சிங்கம் விடுமா? ஒரே அடியில் அடித்துப் போட்டுத் தின்று விடும். ஆனால் பரமசிவன் ரிஷப வாஹனத்தில் உட்கார்ந்திருக்க, அம்பாளோ ஸிம்ஹ வாஹினியாக இருக்கிறாள்.

தாத்பர்யம், பரமாத்மாவின் ஸந்நிதியில் எதிரெதிராக இருப்பதெல்லாங்கூட த்வேஷ பாவம் போய் ஒற்றுமையாய்ச் சேர்ந்து விடுகின்றன என்பதுதான்…..

‘வாஸுகி தக்ஷகாதி’யில் இருந்தோம். வாஸுகிதான் அம்ருதம் எடுக்கக் கடைகயிறு என்று சொன்னேன்.

தேவர்கள் தொழும் தேவதேவன்

”வாஸவாதி ஸகல தேவ வந்திதாய”:

’பூஸுராதி’ என்று பூமியிலே ஆரம்பித்தவர் இப்போது தேவலோகத்திலுள்ள நிஜ ஸுரர்களைப் பற்றியே பாடுகிறார். ‘பூஸுராதி’ என்று கீழ் ஸ்தாயியில் கனமாகப் பொருத்தத்தோடு ஆரம்பித்தவர் இப்போது மேல் லோகவாஸிகளைப் பற்றி மேல் ஸ்தாயியில் லளிதமாக ஸாஹித்யத்தைக் கொண்டு போயிருக்கிறார்.

என்ன அர்த்தமென்றால், “வாஸவன் என்கிற இந்திரன் முதலான எல்லா தேவர்களாலும் வணங்கப் படுபவர்” ஸுப்ரஹ்மண்யர். அஷ்டவஸுக்கள் என்று தேவர்களில் ஒரு க்ளாஸ். அவர்கள் இந்திரனுக்குப் பரிவாரமாயிருப்பவர்கள். அதனால் அவன் வாஸவன். ஸாதாரணமாக, ‘ரகு’வின் வம்சத்தில் வந்தவன் ‘ராகவன்’, ‘ப்ருகு’ வம்சத்தில் வந்தவன் ‘பார்க்கவன்’ என்றுதான் இருக்கும். இங்கே வஸு வம்சத்தில் வராமல் அவர்களுக்கு அதிபதியாக இருக்கப்பட்ட இந்த்ரனுக்கு ‘வாஸவ’ப் பேர் இருக்கிறது.

இந்த்ரன் தேவராஜா. அவனே நமஸ்கரிக்கிறானென்றால், ‘யதா ராஜா ததா ப்ரஜா’ என்று எல்லா தேவர்களும் நமஸ்காரம் பண்ண வேண்டியதுதானே? அதுதான் ‘வாஸவாதி ஸகல தேவ வந்திதாய’.

சூரபத்மா தேவர்களை அடித்துத் துரத்திவிட்டு இந்த்ரனின் ஸிம்ஹாஸனத்தை அபஹரித்த போது, தேவர்களெல்லோரும் தங்களுக்கு மஹாசக்தனான ஒரு ஸேநாநாயகன் வேண்டுமென்று ப்ரார்த்தனை பண்ணித்தான் ஈச்வரன் ஸுப்ரஹ்மண்யரைப் படைத்தது. அதனால் அவர்கள் அவரை ரொம்பவும் பூஜிக்கத்தானே வேண்டும்?

பூஜித்தது மட்டுமில்லை. இந்த்ரன் தன்னுடைய குமாரியான தேவஸேனையை ஸுப்ரஹ்மண்யருக்கே கன்யாதானம் பண்ணி அவரை மாப்பிள்ளையாக்கிக் கொண்டுவிடுகிறான். தேவர்களுக்கு ஸேநாபதியாயிருப்பவர் ‘தேவஸேநா-பதி’யாகவும் ஆகிறார். அதைத்தான் பாட்டில் பிற்பாடு ‘தேவராஜ ஜாமாத்ரே’ என்று சொல்லியிருக்கிறது. ‘தேவராஜனின் ஜாமாதா அதாவது மாப்பிள்ளைக்கு, நமஸ்காரம்’ என்று சொல்லியிருக்கிறது………

இரு விதத்திலும் திருமாலின் மருமகன்

ஒரு ஸமாசாரம் ஞாபகம் வருகிறது. தேவஸேனையை இந்த்ரனின் குமாரி என்கிறோம். வள்ளியை நம்பிராஜன் குமாரி என்கிறோம். ‘ஸுரமகள், குறமகள்’ என்று சொன்னேன். ஆனால் வாஸ்தவத்தில் இரண்டு பேருமே மஹாவிஷ்ணுவின் குமாரிகள்தான். அவருடைய ஆனந்த பாஷ்பத்திலிருந்து உத்பவித்தவர்கள். அப்புறம் ஒவ்வொரு காரணத்துக்காக ஒருத்தி இந்த்ரனிடமும், மற்றவள் நம்பிராஜனிடமும் பெண்ணாக வளர்ந்தார்கள்.

மஹாவிஷ்ணு யார்? ஸாக்ஷாத் அம்பாளின் உடன் பிறப்பு. அதாவது ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமியின் மாமா. மாமா பெண்களைத்தான் இவர் முறை தப்பாமல் கல்யாணம் பண்ணிக் கொண்டு, ‘மருமகன்’ என்ற வார்த்தையை இரண்டு அர்த்தத்திலும் ஜஸ்டிஃபை பண்ணிக் கொண்டிருக்கிறார்! அதனால்தான் போலிருக்கிறது. அருணகிரிநாதர் ‘முருகோனே’ என்று சொல்கிற அளவுக்கு ‘மருகோனே மருகோனே’ என்றும் பாடியிருக்கிறார். பிள்ளையார் கூடத்தான் விஷ்ணுவுக்கு மருமானாயிருந்த போதிலும் ‘மால்மருகோன்’ என்று ஸுப்ரஹ்மண்யரையே சொல்கிறோம்.

சைவ வைஷ்ணவ ஒற்றுமை

த்வேஷ பாவம் போய் ஒன்று சேர்ந்து விடுவதைச் சொன்னேனே, இங்கேயும் அதற்கு எக்ஸாம்பிள். விஷ்ணுவின் பிள்ளையான மன்மதனை எரித்த ஈச்வரனுக்கு அதே நேத்ராக்னியிலிருந்து பிறந்தவர் ஸுப்ரஹ்மண்யர். இவருக்கே அந்த விஷ்ணு ஒட்டிக்கு இரட்டியாகத் தம் பெண்களைக் கல்யாணம் பண்ணித் தந்திருக்கிறார்!

இப்படிப் பார்த்துக் கொண்டு போனால், சைவம்-வைஷ்ணவம் என்பது கூடப் போய் “ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யாய” ஒரு வைஷ்ணவருக்கு மாஸ்டர்-பீஸாக இருப்பது விசித்ரமேயில்லை, ரொம்ப ந்யாயம்தான் என்றாகிவிடும். விஷ்ணுவின் மாப்பிள்ளைதானே அவர்? மாப்பிள்ளையிடமில்லாத ப்ரியமும் மரியாதையும் உண்டா?

இன்னம் ஒரு படி மேலே, அம்பாள் விஷ்ணு ஸஹோதரிதானே? மீனாக்ஷியை ஸுந்தரேச்வரருக்கு யார் தாரை வார்த்துத் தருவது? பெரிசாக, லோகமே கொண்டாடுகிற சில்பமாக அடித்து வைத்திருக்கிறதே!…

முதலில் “ஸமஸ்த ஜன”ங்களும் பூஜிப்பதாகச் சொன்ன தீக்ஷிதர் அப்புறம் “ஸகல தேவ”ர்களும் வந்தனை செய்வதைச் சொல்கிறார். மனிதர்களில் பல ஜாதி இருப்பது போல் தேவரிலும் உண்டு. வஸுக்கள், ருத்ரர்கள், ஆதித்யர்கள் – இன்னம் அடுத்த படிகளில் கந்தர்வர்கள், வித்யாதரர்கள், கின்னரர்கள் – என்பதெல்லாம் தேவ ஜாதிகள். எல்லா மனுஷ்ய ஜாதிகளாலும் பூஜிக்கப்படுவது போலவே இந்த எல்லா தேவ ஜாதிகளாலும் பூஜிக்கப் படுபவர் ஸுப்ரஹ்மண்யர் – “ஸகல தேவ வந்திதாய; வரேண்யாய.”

உச்சநிலையில் உள்ளவர்

”வரேண்யாய”:

’வரேண்யர்’ என்றால் ரொம்ப உயர்ந்தவர், சிறந்தவர் என்று அர்த்தம். காயத்ரீ மந்திரத்தில் அந்த வார்த்தை வரும். பரமாத்ம தேஜஸுக்கு மிஞ்சி எதுவுமில்லை; அதுதான் best என்று ஸுபர்லேடிவ் போட்டுக் காட்டும் போது வேதஸாரமான காயத்ரியில் வருகிற வார்த்தையை இங்கே தீக்ஷிதர்வாள் போட்டிருக்கிறார். ‘ஸுப்ரஹ்மண்யாய’, ‘லாவண்யாய’, ‘சரண்யாய’ என்று பல்லவியில் ஒரே மாதிரி அந்த்ய ப்ராஸம் போட்டதோடு சேரும்படியாக அநுபல்லவியிலும் ‘வரேண்யாய’ என்று உச்ச ஸ்தானத்தில், உச்ச ஸ்தாயியில், வேதத்தின் உச்சியான மந்த்ரத்தில் வரும் உச்சத்தைக் காட்டும் வார்த்தையை இழைத்திருக்கிறார்…..

ஸாஹித்ய அழகு

வாக்கிய ஆரம்பத்திலும் எதுகை ப்ராஸம் இருக்கிறது; ஸ்ரீஸு(ப்ர)-பூஸு(ராதி); வாஸ(வாதி) – தாஸ(ஜன). பொயட்ரி ரூபமும் அர்த்தம் மாதிரியே அழகாக அமையும்படிப் பண்ணியிருக்கிறார். இதுதான் மஹான்களின் ரசனா விசேஷம். ரஸ(sa)னை இல்லை; ரச(cha)னை. ரசனை என்றால் கவிதை அமைப்பு. அர்த்தம், வார்த்தை இரண்டும் அழகாக, வார்த்தைகளைக் கோக்கும் விதமும் ஒரு ஒழுங்கிலே அழகாக வரும்படி அமைவது. இலக்கிய ஸ்ருஷ்டிகளை “composition” என்கிறார்கள். Composed, composure என்றாலே ஹாயாக அமைதி நிலையில் இருப்பதுதான். தமிழிலும் அழகாகச் சொல்லமைதி, பொருளமைதி என்கிறோம். இப்படி ரசனை பண்ணுவதிலேயே ஒரு கவி அல்லது ஸாஹித்யகர்த்தாவுடைய ரஸனா விசேஷமும் தெரிந்துவிடும்.

அருள் புரிவதில் தலை சிறந்தவர்

”தாஸ-ஜனாபீஷ்ட-ப்ரத-தக்ஷதராக்ர-கண்யாய”:

’வரேண்யாய’ என்று ஸ்வாமியின் சிறப்புக்கு ஸுபர்லேடிவ் கொடுத்தவர், அவர் எப்படி அருளை வாரி வழங்குகிறாரென்பதற்கு இங்கே ஏகப்பட்ட ஸுபர்லேடிவ் கொடுத்துக்கொண்டே போகிறார்.

‘தாஸ ஜன அபீஷ்ட ப்ரத’ – அடியாரான மக்களின் மனோரதங்களை நிறைவேற்றித் தருகிற’. ‘தருகிறவருக்கு’ என்பதற்கு ‘ப்ரதாய’ என்று போட்டிருந்தாலே போதும்; ஆனால் ஸ்வாமியின் அநுக்ரஹ சீலத்தை அப்படி ஸாதாரணமாகச் சொல்லி, விட்டு விடுவதற்கு தீக்ஷிதருக்கு மனஸ் வரவில்லை. ‘ப்ரத’வுக்கு அப்புறம் ஒரு ‘தக்ஷ’ அதற்கப்புறம் ஒரு ‘தர’, அதற்கு அப்புறம் ஒரு ‘அக்ரகண்ய’ என்று ஸுபர்லேடிவ்களாகக் கோத்துக் கொண்டே போகிறார்: ‘அபீஷ்ட ப்ரத-தக்ஷதராக்ரகண்யாய’.

‘அபீஷ்டப்ரத தக்ஷ’ என்றால் மனோபீஷ்டங்களை அருள்வதில் மஹா கெட்டிக்காரர். முதலில் ‘வாஸுகி, தக்ஷகாதி’ என்ற இடத்தில் Taksha. இங்கே Daksha. தக்ஷ என்றால் ரொம்பவும் கெட்டிக்கார, ரொம்ப ஸாமர்த்யமான என்று அர்த்தம். அபீஷ்டத்தை அளிப்பதில் ஸுப்ரஹ்மண்யர் தக்ஷர். அதோடு மட்டுமில்லை. அதற்கும் மேலே! கேட்டதைக் கொடுப்பதில் மிகவும் சிறந்து விளங்கும் தக்ஷர்களான தெய்வங்களிலும் மற்ற எல்லாரைவிட இவரே சிறந்தவர் – தக்ஷதரர். “இது தரமானது” என்கிறோம். அப்படியானால், மற்றவற்றோடு ‘கம்பேர்’ பண்ணும்போது இதுவே சிறந்தது என்று அர்த்தம். அப்படித்தான் இவர் மற்ற அநுக்ரஹ மூர்த்திகளுக்கு நடுவே ‘தர’மானவராயிருக்கிறார். மற்ற தெய்வ உபாஸகர்கள் எங்கள் தெய்வமும் அப்படித்தான் என்று வந்து விட்டால் என்ன பண்ணுவது? ‘ஸரி, அவர்களோடும் நாம் சண்டைக்குப் போக வேண்டாம். ஐக்கியத்துக்கும் ஸமரஸத்துக்கும்தானே ஸ்வாமியும், ஸங்கீதமும், ஸாஹித்யமும் இருப்பது?” என்று தீக்ஷிதர்வாள் நினைத்து, ‘அபீஷ்ட-ப்ரத-தக்‌ஷ-தரர்களாகப் பல பேர் இருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அவர்களில் முதல்வராக, ‘நம்பர் ஒன்’னாக இவரே மதிக்கப்படுகிறார் என்று போட்டு விடுவோம்’ என்று முடிவு பண்ணி ‘தக்‌ஷ-தர’வுக்கு அப்புறம் ‘அக்ரகண்யாய’ என்று முத்தாய்ப்பு வைத்து விட்டார் போல இருக்கிறது. ‘தாஸ ஜனங்களின் இஷ்டத்தை வழங்குபவர்களில் சிறப்புற்றவர்களிலேயும் முதலாமவராக மதிக்கப்படுபவர்’ என்று பெரிசாக நீட்டிக்கொண்டு போயிருக்கிறார். ‘அக்ர’ – முதலில், முதலிடத்தில்; ‘கண்ய’ – மதிக்கப்படுகிறவர்.

பேரஸுரரை வதைத்த வீர பௌருஷம்

”தாரக ஸிம்ஹமுக சூரபத்மாஸுர ஸம்ஹர்த்ரே”:

”தாரகன், ஸிம்ஹமுகன், சூரபத்மன் என்ற அஸுரர்களை ஸம்ஹாரம் பண்ணினவருக்கு” – நமஸ்காரம் என்று சேர்த்துக் கொள்ள வேண்டும்.

“ஸுப்ரஹ்மண்ய, லாவண்ய, சரண்ய, அக்ரகண்ய” என்றெல்லாம் – இதுவரை பாட்டின் பல்லவியிலும் அநுபல்லவியிலும் வந்த வார்த்தைகள் ‘அ’காரத்தில் முடிந்ததால் ‘அப்படிப்பட்டவருக்கு’ என்று நாலாம் வேற்றுமையில் சொல்லும்போது ‘யாய” என்று ஆயிற்று. இப்போது சரணத்தில் வரும் பேர்களில் பெரும்பாலானவை அகாராந்தமாக முடியாமல் ‘ரு’விலே – தமிழில் குற்றியலுகரம் என்று சொல்லும் தேய்ந்த ‘ரு’விலே – முடிகின்றன. முதலில் ‘ஸ்ம்ஹர்த்ரு’, அப்புறம் ‘உபதேசகர்த்ரு’ அப்புறம் ‘ஸவித்ரு’ என்றிப்படி இருக்கின்றன. இவை நாலாம் வேற்றுமையில் ‘ஹர்த்தாய’, ‘கர்த்தாய’ என்றெல்லாம் ஆகாது. ‘ஹர்த்ரே’, ‘கர்த்ரே’ என்றே ஆகும். சரணம் பூராவும் இப்படி ‘த்ரே’, ‘த்ரே’ என்று வரிகள் முடிவதைக் கவனிக்கலாம்.

தாரகன், ஸிம்ஹமுகன், சூரபத்மன் மூன்று பேரும் ஸஹோதரர்கள். தாரகனுக்கு யானை முகம். ஸிம்ஹமுகன் பேரிலிருந்தே சிங்க மூஞ்சி என்று தெரிகிறது. சூரபத்மன் க்ரூரமான அஸுர முகம் படைத்தவன். தென் தேசத்தில் சூரபத்மனைத்தான் அஸுர ராஜனாகவும், ஸ்வாமியின் ப்ரதான சத்ருவாகவும் சொல்கிறோம். சூரஸம்ஹாரம் என்றே உத்ஸவம் பண்ணுகிறோம். ‘வீர, தீர, சூர’ என்று அந்த சூரசப்தமே மஹா வீர்யத்தைக் குறிப்பிடுகிறது. சூரனையும் ஜயித்த மஹா சூரராக ஸ்வாமியை ஸ்தோத்ரம் செய்கிறோம். ஆனால் வடக்கே தாரகாஸுரனைத்தான் அவனுடைய இடத்தில் சொல்கிறார்கள். ‘குமார ஸம்பவ’த்திலும் தாரக வதத்துக்காகவே குமாரஸ்வாமி ஸம்பவித்ததாகத்தான் காளிதாஸர் சொல்லியிருக்கிறார். ஆசார்யாள், ‘புஜங்க’த்திலே ‘த்வயா சூரநாமா ஹதஸ் தாரக: ஸிம்ஹவக்த்ரச்ச” என்று மூன்று பேரையும் சொல்லியிருக்கிறார். ’ஸிம்ஹவக்த்ரன்’ என்றாலும் ‘ஸிம்ஹமுகன்’ தான். தீக்ஷிதரும் தக்ஷிணத்திலுள்ள வழக்கப்படியே – ஸ்காந்த மஹா புராணத்திலும் இப்படித்தானிருக்கிறது – மூன்று பேரையும் சொல்லியிருக்கிறார். மஹாபல பராக்ரமம் படைத்த மூன்று க்ரூர ராக்ஷஸர்களை பால்யத்திலேயே ஹதாஹதம் பண்ணிய வீராதிவீரர் ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி.

கோடி கோடி மநஸிஜ லாவண்யத்தைச் சொல்லியாச்சு; தீன சரண்யராக, அபீஷ்ட வரதர்களில் அக்ரகண்யராக உள்ள காருண்யத்தைச் சொல்லியாச்சு; மஹா அஸுரர்களையும் ஸம்ஹாரம் பண்ணிய வீர பௌருஷத்தையும் இப்போது சொல்லியாச்சு. அழகு, அருள், ஆற்றல் மூன்றிலேயும் ச்ரேஷ்டமானவரென்று காட்டியாச்சு.

குரு என்ற தனிப் பெருமை

இதற்கெல்லாம் மேலே இன்னம் அவர் என்ன? தீக்ஷிதர் ஒவ்வொரு க்ருதியிலேயும் என்ன முத்ரை வைத்திருக்கிறார்? ‘குரு குஹ’.

குரு – அதுதான் ஸுப்ரஹ்மண்யருடைய எல்லாப் பெருமைகளுக்கும் மேலான மஹா பெருமை. குருவாக உபதேசித்து மோக்ஷத்தை அநுக்ரஹிக்கிற பேரருளைச் செய்கிறவர் அவர். “குருவாய் அரர்க்கும் உபதேசம் வைத்த” என்று அருணகிரிநாதர் சொல்கிறபடி, பரம ஞான மூர்த்தியான அப்பாவுக்கும் உபதேசம் செய்த தகப்பன் ஸ்வாமி, ஸ்வாமிநாத ஸ்வாமி அவர். “ஞான பண்டித ஸ்வாமி”. அழகு, அருள், வீர தீர சக்தி எல்லாம் சொன்னபின் தீக்ஷிதர் இதற்கு வருகிறார்:

“தாப-த்ரய ஹரணநிபுண தத்வோபதேச கர்த்ரே”:

தாபத்ரயம் என்பதாக ஜீவாத்மாவுக்கு மூன்று தினுஸுத் தாபம். மூன்று ஸமாசாரங்கள் அதை தஹித்து வேக வைக்கின்றன. ஆத்யாத்மிகம், ஆதி பௌதிகம், ஆதி தைவிகம் என்ற மூன்று. இவை மநுஷ்யரைத் தபிக்க வைக்கின்றன. ஆத்யாத்மிகம் என்பது தன் ஆத்மாவாலேயே தன்னை வருத்திக் கொள்வது. அதாவது நம்முடைய மனஸின் பலவிதமான சஞ்சலிப்பு, கொந்தளிப்பினாலேயே நம்மை வறுத்தெடுத்துக் கொள்வது. ஆதிபௌதிகம் என்பது பூதர்களால் அதாவது உயிர்களால், நம்மைத் தவிர பிற மநுஷ்யர்களாலும் மற்ற ஜீவராசிகளாலும் உண்டாகிறது. ஆதிதைவிகம் என்ற இடத்தில் தைவம் என்றால் விதி. நம்முடைய வினையே விதியாக வந்து வருத்துவது ஒரு தாபம். அல்லது மநுஷ்ய சக்திக்கு அப்பாற்பட்டதாக ‘இயற்கை உற்பாதம்’ என்கின்ற, ஆனால் உண்மையில் தேவ சக்திகளின் கோபத்தைக் காட்டுவதான புயல், பூகம்பம், எரிமலை வெடிப்பது முதலியவற்றால் ஏற்படுவது ஆதிதைவிகமான தாபம். ஆதிபௌதிகத்தாலும், ஆதிதைவிகத்தாலும் விபத்து, வியாதி இத்யாதி ஏற்படலாம். ஆனால் அதை நமக்குத் தாபமாக மாற்றி வருத்தம் தருவது, வறுத்து எடுப்பது மனஸ்தான். மனஸ் என்ற ஒன்று இல்லாவிட்டால் எந்தத் தாபமும் தெரியாதுதானே? ‘மனம் இறக்கக் கற்றுவிட்டால்’ தாபமேயில்லை. ஆத்மாராமர்களாக, ஆனந்தமயமாக ஆகி விடலாம். அப்படி ஆகக் கற்றுக் கொடுப்பதுதான் தத்வோபதேசம். தாபத்ரயங்களைப் போக்குவதில் மிகவும் வல்லமை வாய்ந்த தத்வ உபதேசத்தைச் செய்பவர் ஸுப்ரஹ்மண்யர்: “தாபத்ரய ஹரண நிபுண தத்வோபதேச கர்த்தா.”

ஸ்கந்த மூர்த்தியாகி அவர் பிதாவான ஈச்வரனுக்கு ப்ரணவ உபதேசம் பண்ணினது மட்டுமில்லை. ஸநத்குமாரர் என்று ஒரு ப்ரஹ்மநிஷ்டர். ஸ்ருஷ்டி ஆரம்பத்தில் ப்ரம்மாவிடமிருந்து முதலில் தோன்றிய நாலு பேர் யாரென்றால், தாங்களும் புனர் ஜன்ம ஸ்ருஷ்டியிலிருந்து தப்பிய ஞானிகளாக இருந்தவர்கள்; தங்களாலும் ப்ரஜா ஸ்ருஷ்டி ஏற்படாமல் ப்ரம்மச்சாரி, ஸந்நியாஸி இரண்டுமாக, எல்லா ஆச்ரமங்களுக்கும் மேலே போன அதிவர்ணாச்ரமிகளாக இருந்தவர்கள். ஸநகர், ஸநந்தனர், ஸநாதனர், ஸநத்குமாரர் என்று அவர்களுக்குப் பேர். அவர்களில் ஸநத்குமாரரைக் ‘குமாரர்’ என்றே சொல்வது. ஸநத் என்பது ப்ரம்மாவின் பேர். அவருடைய புத்ரர் ஸநத்குமாரர். அவர் நாரதருக்கே தத்வோபதேசம் செய்திருக்கிறார். அந்த உபதேசமும் அதைப் பற்றிய கதையும் சாந்தோக்யோபநிஷத்தில் வருகிறது. ஸநத்குமாரர் நாரதருக்கு இருட்டைத் தாண்டிய நிலையைக் காட்டினார் என்று உபநிஷத்து முடிக்கிற இடத்தில், அந்தக் குமாரரே தான் குமார சப்தத்தை ப்ரஸித்த நாமாவாகக் கொண்ட ஸ்கந்தமூர்த்தி என்று இரண்டு தரம் சொல்லியிருக்கிறது.

அஞ்ஞான இருட்டுக்கு அப்பால் இருக்கிற ஞான ஜ்யோதிஸ்தான் ஸுப்ரஹ்மண்யர். அக்னி ஸ்வரூபமென்றால் அது ஞானாக்னிதான். அவர் கையிலே தகதகவென்று இருக்கிற சக்த்யாயுதமும் ஞானவேல்தான். பாஹுபல பராக்ரமத்தைக் காட்டும் சக்தி; கோடி கோடி மன்மத லாவண்யம்; தீன ரக்ஷணத்தில் முதல்வராக இருக்கும் காருண்யம் எல்லாமும் கடைசியில் அந்த ஞானத்தில் பிறந்தவையே; அந்த ஞானத்தோடு பிரிக்க முடியாமல் ஸம்பந்தப்பட்டவையே. ஞானத்தை மற்றவருக்கும் வழங்கும் குருநாதனாக இருப்பதே ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமியின் உயிரான லக்ஷணம் – ‘தத்வோபதேச கர்த்ரே; வீரநுத குருகுஹாயாஜ்ஞான-த்வாந்த-ஸவித்ரே.’

வீரர்கள் தொழும் ஞானி!

”வீரநுத”:

ஞானி வேறே, வீரன் வேறே என்பது விஷயம் தெரியாத நிலையில்! நிஜமான ஞானி எதுவாகவும் இருப்பான் – அவன் எல்லாமாக இருப்பதால்! உள்ளுக்குள்ளே ஆத்மா ஒன்றைத் தவிர எதுவாகவுமில்லாமல், வெளிக் கார்யத்தில் அந்த ஆத்மாதான் ஸகலமும் ஆனதால் எதுவாக வேண்டுமானாலும் – கத்தியை எடுத்துச் சுற்றுகிற மஹா வீரனாகக்கூட – இருப்பான். கீதை என்று ஞானோபதேசம் செய்யும் போது, “காண்டீவத்தை எடுடா! அம்பைத் தொடுடா!” என்று பகவான் சொல்லியிருக்கிறாரில்லையா? ஸுப்ரஹ்மண்யர் ஞான வீரர். தேவ ஸேனைக்கெல்லாம் கமாண்டர்-இன் – சீஃப். அதனால் வீரர்களால் தொழப்படுபவர். அதுதான் ‘வீர நுத’. ‘நுத’ – தொழப்படுகிற. அவருடைய முக்யமான பரிவாரம் நவ வீரர்கள் என்ற ஒன்பது பேரைக் கொண்டது. வீரபாஹூ, வீரகேஸரி, வீர மஹேந்திரர் என்று ‘வீர’ என்றே பேர் ஆரம்பிக்கிற ஒன்பது மஹாவீரர்கள் அவருடைய அஸிஸ்டெண்டுகள். அதனாலும் ‘வீரநுத’.

இதய குகையில் இலகும் குரு, அஞ்ஞான இருள் நீக்கும் ஸுரியன்

“குருகுஹாய; அஜ்ஞான த்வாந்த ஸவித்ரே”:

வீரத்தைச் சொன்னவுடனே ஞானம்! குருகுஹனாக ஸ்வாமி இருப்பது! மலைகள் அவருக்கு முக்யவாஸம். குறிஞ்சிக் கடவுள் என்றே போற்றுகிறோம். மலைக் குஹைகளில் வஸிப்பதால் குஹன். தத்வார்த்தமாகச் சொன்னால் ஹ்ருதய குஹையிலிருக்கும் ஆத்ம ஸ்வரூபம். அதுவே குருவாக வந்து உபதேசிக்கிறபோது குருகுஹன். ஸ்வாநுபவத்தினால் தீக்ஷிதருடைய ஹ்ருதயத்திலிருந்து பீறிக் கொண்டு வந்து அவருடைய முத்ரையாவே ஆகி விட்ட நாமா, குருகுஹன் என்பது.

“குருகுஹாய; அஜ்ஞான – த்வாந்த – ஸவித்ரே.”

‘த்வாந்தம்’ இருட்டு. ஸவித்ரு, ஸவிதா என்றால் ஸுர்யன். இருட்டை இருந்த இடம் தெரியாமல் ஸுர்யன் விரட்டி அழித்து விடுகிற மாதிரி அஜ்ஞான இருட்டை த்வம்ஸம் பண்ணும் ஞான ஸுர்யன். ஸநத்குமாரர் இருட்டுக்கு அந்தண்டைக்கு வழிகாட்டினார் என்கிற ஸமாசாரம்.

காயத்ரி உருவில் முருகனைக் காட்டும் பாடல்

’ஸவித்ரு, ஸவிதா’ என்ற பேரைப் போட்டிருப்பதில் ரொம்பவும் வைதிக விசேஷம் இருக்கிறது. ஸுர்யனுக்கு எத்தனையோ பேர் இருக்கிறது. ‘ஆதித்ய(ன்)-ஸவிதா-ஸுர்ய(ன்)-கக(ன்)-பூஷா’ இப்படியெல்லாம் பல பேர்கள் (’ஆதித்ய ஹ்ருதய’த்தில்) சொல்லியிருக்கிறது. பாஸ்கரன், பானு, மார்த்தாண்டன், திவாகரன், தினகரன், தினமணி, ரவி என்றெல்லாமும் பல பேர் இருக்கிறது. அவற்றில் ஸவிதா என்பதுதான் காயத்ரீ மந்த்ரத்திலேயே வருகிற பேர். அந்த மந்திரத்தில் பரமாத்மாவின் ஞான ஜ்யோதிஸ்ஸை ஸுர்ய மண்டலத்திற்குள் இருக்கும் தேஜஸ்ஸாக பாவித்து, ப்ரார்த்தித்து, அது நம் அறிவுச் சுடரையும் கொழுந்து விட்டெரியும்படி தூண்டிவிட வேண்டும் என்று சொல்லும்போது ஸவிதாவாகவே பேர் கொடுத்துச் சொல்லியிருக்கிறது. அந்தப் பேரின் விசேஷம் அது அழிவைச் சொல்லாமல் படைப்பைச் சொல்வது. ஸவிதா என்றால் உற்பத்தி செய்கிறவன், உண்டாக்குகிறவன். ‘ப்ரஸவம்’ என்ற வார்த்தையில் வரும் ‘ஸவ’த்தின் அடியாகப் பிறந்த வார்த்தை ஸவிதா. ஸுர்யன் இருட்டையும், சேற்றையும் சகதியையும், பூச்சிகளையும் அழிப்பது மட்டுமில்லை. அவனாலேயே மழை, தாவர வளர்ச்சி, நம் ஆரோக்ய வளர்ச்சி, ஆத்யாத்மிகமாக நம்முடைய புத்தி வளர்ச்சி எல்லாம் உண்டாகின்றன. அப்படியே ஸுப்ரஹ்மண்யரான ஞான ஸுர்யன் அஞ்ஞான இருட்டை அழிப்பது மட்டுமில்லை; அஞ்ஞானம் போனபின் எல்லாம் சூன்யமாகி விடுவதில்லை; அஞ்ஞானம் அழிந்த இடத்தில் பூர்ணாநுபவமான ஞான ப்ரகாசத்தை அவர் உண்டாக்குகிறார். ஸவிதா பத ப்ரயோகம் ரொம்பப் பொருத்தமாக விழுந்திருக்கிறது. திருமுருகாற்றுப்படையும் ஸுர்யோதயத்தை உவமை சொல்லித்தான் ஆரம்பிக்கிறது.

இந்த க்ருதியின் ஸாரமே வேத ஸாரமான காயத்ரி ஸ்வரூபமாக ஸ்வாமியைக் காட்டுவதுதான் என்று தோன்றுகிறது. ப்ரஹ்மண்யப் பேரோடுதான் பாட்டு ஆரம்பிக்கிறது? அப்புறம், அநுபல்லவியில் உச்சமான இடத்தில் (காயத்ரி மந்திரத்தில் வருகிற) ‘வரேண்ய’ சப்தம் வந்தது. அதே மாதிரி சரணத்தில் உச்சமான இடத்தில் ‘ஸவித்ரு’ சப்தத்தை வைத்திருக்கிறார். ஸாஹித்யத்திலே அந்த இடத்தில் ராக ஸஞ்சாரம் ஜிவ்வென்று மேலே போய் ‘ஸவித்ரே’ என்று பளிச்சென்று வருவது, அஞ்ஞான இருட்டு கும்மென்று பரவி நெரிக்கிற போது ஞான ஸுர்யோதயமாக, ஸ்வாமி பளிச்சென்று வந்து ரக்ஷிக்கிறது போன்ற அபிப்ராயத்தைக் கொடுக்கிறது. அப்புறம்,



வள்ளி மணாளன்

”விஜயவல்லீ பர்த்ரே”:

அதுதான் வேடிக்கை. நிஜ ஞானியுடைய வேடிக்கை. அவன் வெளியிலே எப்படி வேணுமானாலும் வேஷம் போடுவான். மஹாவீரனாகக்கூட இருப்பான் என்றேனோல்லியோ? ச்ருங்கார நாயகனாகக் கல்யாணம் கார்த்திகை பண்ணிக் கொண்டுகூடக் கூத்தடிப்பான். திருச்செந்தூரில் வீர பராக்ரமரான சூர ஸம்ஹார மூர்த்தி, பழநியிலே ஸந்நியாஸி, ஸ்வாமி மலையில் பிரம்மச்சாரியாயிருக்கிற குருமூர்த்தி, அவரே திருப்பரங்குன்றத்தில் தேவஸேனையின் பதி, திருத்தணியில் வள்ளியையும் சேர்த்துக் கொண்ட இரட்டைப் பெண்டாட்டிக்காரர்! ‘விஜயவல்லி’ என்பது வள்ளிதான். ‘அவளுடைய பர்த்தாவுக்கு (நமஸ்காரம்)’ என்பதுதான் ‘விஜயவல்லி பர்த்ரே’. வெற்றி வேலன் என்கிறபடி அவரோடு ஜயம், விஜயம் (விசேஷமான ஜயம்தான் விஜயம்) எப்போதும் சேர்ந்திருக்கும். அவருக்கு இரண்டு பக்கங்களில் நிற்கிற பத்னிகளில் தேவஸேனைக்கு ஜயந்தி என்றே பெயர். மற்றவள் விஜயவல்லி. ஸுப்ரஹ்மண்யரைப் பற்றி ரொம்பவும் ஜனரஞ்ஜகமான விருத்தாந்தம் வள்ளி கல்யாணம்தான். அதிலேயே பரம வேதாந்தம் – இந்த்ரிய வேடர்களுக்கு நடுவில் சிக்கிக் கொண்டிருக்கிற ஜீவாத்மாவைப் பரமாத்மா விடுவித்துத் தன்னோடு அப்படியே சேர்த்துக் கொண்டுவிடுவதற்கு ரூபகமாக வள்ளி கல்யாணக் கதை இருக்கிறது.

ஒரு வேடப் பெண் பரம ப்ரேமையோடு பக்தி பண்ணினதற்காக ஸாக்ஷாத் லோக மாதாபிதாக்களின் குமாரர் தினுஸுதினுஸாக வேஷம் போட்டுக் கொண்டு கூத்தடித்துக் கல்யாணம் பண்ணிக் கொண்டது அவர் எப்பேர்ப்பட்ட தீன சரண்யர் என்பதற்குப் பெரிய சான்றாக இருக்கிறது.

சக்தி வேலன்

“சக்த்யாயுத தர்த்ரே”:

”பராசக்தியின் ஸ்வரூபமானதும், மஹா சக்தி பொருந்தியதுமான வேலாயுதத்தை தரித்துக் கொண்டிருப்பவர்.”

மாறி மாறி அவருடைய வித வித வேஷங்கள் – சூராதி அஸுரர்களின் ஸம்ஹர்த்தாவாக, உடனே தாபத்ரயம் போக்குகிற தத்வோபதேசகராக, அடுத்தே வீரர்கள் நமஸ்கரிக்கிற மஹா வீரராக, உடனேயே குருகுஹன் என்ற பெருமையோடு அஞ்ஞான தமஸைப் போக்கும் ஸவிதாவாக, அப்புறம் வள்ளி கல்யாண மூர்த்தியாக – இப்போது மறுபடி சக்திவேலன் என்ற வீர பராக்ரமராக!

தீரர்: மீண்டும் காயத்ரி

“தீராய”:

தீரன் என்றால் நாம் அஞ்சா நெஞ்சம், பலம் இவற்றைத்தான் நினைக்கிறோம். அதுவும் ஸரிதான். ஆனால் தீர சப்தம் தீக்ஷண்யமான புத்தியையும் குறிக்கும்.

மறுபடியும் காயத்ரி! காயத்ரியிலும் இந்த ‘தீ’ சப்தம் வருகிறது. நம் புத்தியைப் பரமாத்ம தேஜஸ் தூண்டணும் என்கிறபோது புத்தியை ‘தீ’ சப்தத்தாலேயே சொல்லியிருக்கிறது.

‘காயத்ரி’க்கு ‘ரூட் மீனிங்’ என்னவென்றால், “எது கானம் செய்யப்படுவதால் (கானம் செய்கிறவனை) ரக்ஷிக்கிறதோ, அது” என்பதே. வேத ஸ்வரங்களை உரியபடி ஏற்றியிறக்கிச் சொல்வதே ஒரு உசந்த கானம்தான். “ஸாமகானம்’ என்கிறோம். அந்த அர்த்தத்தில்தான் காயத்ரி தன்னை கானம் செய்பவரை ரக்ஷிப்பதாகச் சொன்னது. வேத ஸ்வரங்களுக்குப் பதில் ஸங்கீத ஸப்த ஸ்வரங்களைக் கொண்டு ஸகல ஜனங்களும் கானம் செய்யும் காயத்ரியாக தீக்ஷிதர்வாள் இந்த க்ருதியைப் பண்ணியிருக்கிறாரென்று சொல்லும்படி இதில் அந்த மஹா மந்த்ர விசேஷங்களை வைத்திருக்கிறார்.

ஸப்தஸ்வரத்தில் ஆரம்ப ஸ்வரம். ஆதார ஸ்வரம் என்ன? ஷட்ஜம்; ‘ஸ’ என்பது. அது மயூர சப்தம் – மயிலின் குரல் எழுப்பும் ஸ்வரம் – என்று சொல்கிறார்கள். மயூரம் என்றால் ஸுப்ரஹ்மண்யர்தான் முன்னே நிற்கிறார். “மரகத மயூரப் பெருமாள் காண்!” என்று அருணகிரிநாதர் சொல்கிறார். ஆதார ச்ருதியாக இருக்கப்பட்ட ஸ்வரத்திற்கே அதிதேவதை என்றால் அவர் ஸங்கீத மூர்த்திதானே? அவருக்கு ஒரு ஸங்கீத காயத்ரி இருக்கத்தானே வேண்டும்? தம்முடைய அநுக்ரஹத்தில், அம்சத்தில் அவரே ஒரு தீக்ஷிதரை உண்டாக்கி, அப்புறம் அவருக்குத் தாமே குருவாகக் கல்கண்டை வாயில் போட்டுக் கல்கண்டாகப் பாடவைத்து அப்படி ஒரு க்ருதி செய்து கொண்டிருக்கிறார்!

ப்ரம்மாவால் தொழப்பட்டவர், ஈசனுக்கு உபதேசித்தவர்

”நத விதாத்ரே”:

விதாதா என்றால் ப்ரம்மா. ‘வீர நுத’வில் வந்த ‘நுத’வும் இந்த ‘நுத’வும் ஒன்றேதான். ‘வணங்கப்பட்ட’ என்று அர்த்தம். ஸுப்ரஹ்மண்யரை ப்ரம்மா வணங்கின கதை தெரிந்ததுதான். ஸ்வாமி அவரை ப்ரணவார்த்தம் கேட்க அவர் உளறிக் கொட்டினார். குழந்தை என்ன பண்ணிற்று என்றால் அந்த ஸ்ருஷ்டிகர்த்தாவை ஜெயிலில் போட்டு விட்டு, தானே ஸ்ருஷ்டி பண்ண ஆரம்பித்துவிட்டது! சில க்ஷேத்ரங்களில் ஸுப்ரஹ்மண்ய மூர்த்தியின் கையில் ப்ரம்மாவுக்குரிய ஜபமாலையும் கமண்டலமும் இருக்கும். காஞ்சீபுரம் குமரக் கோட்டத்தில்கூட அப்படித்தான். ப்ரம்மாவின் தொழிலை ஸ்வாமியே நடத்திய அவஸரம் (கோலம்) அது.

அப்புறம் பரமேச்வரன் ப்ரம்மாவுக்காகப் பரிந்து பேசினார். அப்போது, ‘ப்ரம்மா ஸரியாக அர்த்தம் சொல்லவில்லை என்றால் ஸரியான அர்த்தம்தான் என்ன? உனக்குத் தெரியுமானால் சொல்லேன்!” என்றார்.

அதற்கு பாலஸுப்ரஹ்மண்யர், “இப்படிப் பையனை வாத்தியார் கேட்கிற மாதிரிக் கேட்டால் சொல்ல முடியாது. வாத்தியாரிடம் பையன் கேட்கிற மாதிரிக் கேளும், சொல்கிறேன்!” என்று கம்பீரமாகச் சொன்னார்.

மஹாவீரனுக்கும் பிள்ளையிடம் தோற்றுப் போவதென்றால் மட்டும் பெருமையாகவே இருக்குமாம். அப்படி, பரமசிவனும் ஸந்தோஷப்பட்டுக் கொண்டு புத்ரனுக்கே சிஷ்யராகி ப்ரணவோபதேசம் பெற்றுக் கொண்டார். அறிவைச் சம்பாதித்துக் கொள்வதற்கு எத்தனை தாழ்ந்தும் தழைந்தும் போகலாம் என்று லோகத்துக்கு இதிலேயே பாடம்.

ஸுப்ரஹ்மண்யரின் மஹிமை நன்றாகத் தெரிந்துவிட்டது. ப்ரம்மா ஜெயிலிலேயே அவர் இருந்த திக்கை நோக்கி நமஸ்காரம் பண்ணி ரொம்பவும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். ஸ்வாமி அவரை விடுதலை பண்ணிப் பழையபடி ஸ்ருஷ்டி க்ருத்யத்தைக் கொடுத்தார். இந்தக் கதையில்தான் அவர் குறிப்பாக ப்ரம்மாவால் வணங்கப்பட்டு “நத விதாத்ரு” ஆனது.

“தேவராஜ ஜாமாத்ரே”:

’தேவராஜ ஜாமாதா’ – இந்திரனின் மாப்பிள்ளை. முன்னேயே பார்த்தோம்.

எல்லா உலகுகளையும் ஆண்டு அநுபவிப்பவர்

”பூராதி புவந போக்த்ரே”:

’பூ’ என்றால் பூமி. ‘பூராதி’ – பூமி முதலிய; ‘புவந’ – உலகங்கள். கணக்கில்லாத லோகங்களைப் பதிநாலு லோகம் என்றும், அதில் கீழ் லோகங்கள் ஏழு போக பூமியிலிருந்து ஏழு லோகம் என்றும் classify பண்ணி, மேலும் சுருக்கமாக பூர்-புவஸ்-ஸுவர் லோகம் என்று மூன்றாகச் சொல்வது வழக்கம். பூலோகம் அடி.. புவர் லோகம் நடு. ஸுவர் லோகம் உச்சி. மூன்றையும் சேர்த்து ‘வ்யாஹ்ருதி’கள் என்பதாக ஓம்காரத்துடன் சேர்த்துச் சொல்வது வேத ஸம்ப்ரதாயம். நாம் வைதிகமாகப் பண்ணும் கர்மமோ, ஜபமோ, த்யானமோ எதுவானாலும் ஸமஸ்த லோகங்களுக்கும் அதனால் நல்லது ஏற்பட வேண்டும் என்ற உசந்த அபிப்ராயத்தில் அப்படிச் சொல்வது.

மறுபடியும் காயத்ரி வந்து விடுகிறது! காயத்ரி ஆரம்பத்திலும் வ்யாஹ்ருதிகளைச் சேர்த்திருக்கிறது. முன்னேயே ‘பூஸுராதி’ என்ற இடத்தில் ‘பூ’வை (தீக்ஷிதர்) கொண்டு வந்தார். அப்புறம் ‘வாஸவாதி ஸகல தேவ’ர்களைச் சொன்ன போது அவர்களுடைய வாஸ ஸ்தானமான ஸுவர் லோகத்தை understood ஆக, உள்ளுறை பொருளாகக் குறிப்பிட்டார். இப்போது கீர்த்தனம் முடிகிற ஸமயத்தில் ‘பூராதி புவநம்’ என்று அத்தனை லோகங்களையும் சொல்கிறார்.

பூராதி புவநங்களில் நடக்கும் ஸகல காரியமும் ஒரு பராசக்தியின் லீலா அநுபவத்திற்குத்தானே? அந்த மஹா சக்தியாக இருந்து கொண்டு ப்ரபஞ்சங்கள் எல்லாவற்றையும் ஆண்டு அநுபவித்துக் கொண்டிருக்கும் ‘போக்தா’ ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமியே என்கிறார். ‘பூராதி புவந போக்த்ரே’.

இம்மை மறுமை இரண்டும் அருள்பவர்

முடிவாக,

“போக மோக்ஷ ப்ரதாத்ரே”:

ஸகல புவன போகங்களையும் அநுபவிக்கும் போக்தா வாஸ்தவத்தில் அவர்தான். ஆனால் நாமும் இதில் செல்வம், ஸந்தானம், பதவி, கீர்த்தி என்றெல்லாம் பல போகங்களை அநுபவிப்பதாக நாடகம் நடத்திக் காட்டுகிறார். லோக நாடகத்தில் நாம் விரும்பும் போகங்களை – ஸௌக்யங்களை – அளிக்கிறார். ‘தாதா’ – அளிப்பவர், ‘ப்ரதாதா’ – சிறப்பாக அளிப்பவர். அதுவே நாலாம் வேற்றுமையில் ‘ப்ரதாத்ரே’.

நாடகம் நடக்கிற மட்டும் நன்றாக நடக்கணும்தான். அதற்கான போகங்களை அருள்வதும் ஸரிதான். ஆனால் எப்போதும் நாம் நாடக பாத்ரமாக வேஷத்திலேயே இருப்பதென்றால் நம்மைப் போல அசடு இல்லை என்று தான் அர்த்தம். வேஷம் போய் விட்டால் நாம் நிஜத்தில் எந்த நாமாக இருப்போமோ அந்த ஸத்ய நிலையை அடைய வேண்டாமா? வேஷம் போட்டுக் காட்டும் மனஸ் அழிந்து போய் ஆத்மா மட்டுமாக இருப்பதுதான் அந்த நிலை. ஸம்ஸாரப் பிடுங்கலிலிருந்து விடுபட்ட மோக்ஷம் என்னும் ஸதானந்த நிலை. அந்த நிலையையும் அவரே ‘குருகுஹ’னாக, ‘தத்வோபதேச கர்த்தா’வாக, ‘அஜ்ஞான த்வாந்த ஸவிதா’வாக அள்ளிக் கொடுக்கிறார் – அதாவது, மோக்ஷப்ரதாதாவாகவும் இருக்கிறார்.

தனலக்ஷ்மியிடமும், ஸந்தான லக்ஷ்மியிடமும் மோக்ஷத்தை வேண்டினால் கிடைக்காது. போகம்தான் கிடைக்கும். தக்ஷிணாமூர்த்தியிடம் போய் போகத்தைக் கேட்டால் கிடைக்காது. அவர் மோக்ஷந்தான் கொடுப்பார். ஸுப்ரஹ்மண்யர் இரண்டும் தருவார். ‘போக மோக்ஷப்ரதாதா’. இம்மை, மறுமை என்ற இரண்டும் தருபவர் அவர். இதற்கு மேலே சொல்ல எதுவுமில்லை. க்ருதியும் அப்படியே பூர்த்தியாகிறது.

முடிவுரை; இசைக் கலைஞர்களுக்கு அறிவுரை

அற்புத விளக்கமளித்த ஸ்வாமிகள் அரியக்குடியவர்களிடம் கூறினார்: “நல்ல குரு சிஷ்ய பரம்பரையில் வந்திருக்கிற ஒன்னோட சங்கீதத்தை நீ நல்லபடியா காப்பாத்திண்டு வரதுல ரொம்ப ஸந்தோஷம். இதே மாதிரி நீயும் நல்ல சிஷ்யாளைத் தயாரிச்சு இந்தப் பாரம்பர்யம் தொடர்ந்து போகும்படியாப் பண்ணணும். வேதம் கத்துண்ட ப்ராம்மணன் இன்னம் ஒருத்தனுக்காவது அதைச் சொல்லிக் கொடுத்தே தீரணும்னு, ‘அத்யாபனம்’னே அவனுக்குக் கம்பல்ஸரியா ஒரு கடமை கொடுத்திருக்கு. அது எல்லாக் கலைக்கும், சாஸ்த்ரத்துக்கும் பொருந்தும். தான் கற்ற வித்தை தன்னோட போகாம இன்னம் பல பேர்கிட்டப் போகும்படியாப் பண்ணணும்.

“ஸங்கீத வித்வான்கள் முக்யமா ஒண்ணு பண்ணணும். தாங்க(ள்) பாடற ஸம்ஸ்க்ருதப் பாட்டு, தெலுங்குப் பாட்டுகளுக்கு அர்த்தம் தெரிஞ்சுண்டு, அர்த்த பாவத்தோடப் பாடணும். தமிழே போறும்னு சொன்னா ஸரியில்லே. ஸங்கீத நுட்பம், அர்த்த விசேஷம் ரெண்டிலேயும் உசத்தியா மஹா பெரியவா பல பேர் இந்தத் தமிழ் தேசத்துல தெலுங்கிலேயும் ஸம்ஸ்க்ருதத்திலேயும் நூற்றுக்கணக்காப் பாட்டுக்களைக் கொட்டிட்டுப் போயிருக்கா. அதெல்லாம் வேண்டாம்னு தள்றது நமக்குத் தான் நஷ்டம். தமிழிலேயும் நிறையப் பாடட்டும். மத்த பாஷையிலேயும் பாடட்டும். ‘அர்த்தம் தெரியலையே’ன்னா தெரிஞ்சுக்கணும். தெரிஞ்சுக்கறது கஷ்டமேயில்லை. நமக்கா இஷ்டம் இருந்தா ஆகாத போகாத ஸமாசாரங்களுக்கெல்லாம் எத்தனை ஒழைச்சுத் தெரிஞ்சுக்கறோம்? சுத்தமான ஸங்கீதம், ஒசந்த அர்த்த விசேஷம் – இதுகளுக்கே வித்வான்கள் ‘டெடிகேட்’ பண்ணிண்டா பாஷை குறுக்கே நிக்காது. இதுக்கெல்லாம், ஸங்கீத ஒலகத்துலே இப்ப முதலா இருக்கிற நீ ஒன்னாலானதைப் பண்ணு. அநுக்ரஹ பலம் ஒனக்கு சக்தி கொடுக்கட்டும்.”

அரியக்குடி நாத்தழுதழுத்து, “என் ஆயுஸில் இன்றைவிட நான் பெரிய பாக்கியம் அடைந்ததில்லை” என்று கூறி விடைபெற்றார்.

அந்த விநாடியே ஸ்வாமிகள் மீண்டும் மௌனம் பூண்டு விட்டார்.

முழுப்பாடல்

பல்லவி

ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே நமஸ்தே

மநஸிஜ கோடி கோடி லாவண்யாய தீன சரண்யாய



அநுபல்லவி

பூஸுராதி ஸமஸ்த ஜன பூஜிதாப்ஜ சரணாய

வாஸுகி தக்ஷகாதி ஸர்ப்ப ஸ்வரூப தரணாய

வாஸவாதி ஸகல தேவ வந்திதாய வரேண்யாய

தாஸ ஜனாபீஷ்ட ப்ரத தக்ஷதராக்ர கண்யாய



சரணம்

தாரக ஸிம்ஹமுக சூரபத்மாஸுர ஸம்ஹர்த்ரே

தாபத்ரய ஹரண நிபுண தத்வோபதேச கர்த்ரே

வீரநுத குருகுஹாயாஜ்ஞான த்வாந்த ஸவித்ரே

விஜயவல்லீ பர்த்ரே சக்த்யாயுத தர்த்ரே

தீராய நத விதாத்ரே தேவராஜ ஜாமாத்ரே

பூராதி புவந போக்த்ரே போக மோக்‌ஷ ப்ரதாத்ரே

ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே!

இந்தப் பாடல் அரியக்குடியின் குரலில்: