7. இசை பற்றிய சில குறிப்புகள்

(இன்னும் ஒரு வாரம் கழித்துத்தான் இசைக்கு வருவேன். இந்தக் கட்டுரை சற்றே நீளமானது. எழுதி முடிக்க பன்னிரண்டு மணி நேரம் ஆயிற்று. படித்துப் பாருங்கள். உங்கள் கருத்தை அறிந்து கொள்ளவும் ஆவல்.)

நேற்று எழுதப்பட்ட இசை கட்டுரையில் எடுத்த எடுப்பில் ஒரு தவறு இருந்தது போலும்.  பாலசுப்ரமணியன் தான் அதை இப்போது சுட்டிக் காட்டினார்.  அரியக்குடி மஹா பெரியவரைச் சந்தித்தது 1981 என்று உள்ளதே, அரியக்குடி 1967இலேயே காலமாகி விட்டாரே என்று கேட்டு, அந்த 1981 என்பது 1961 என்று இருந்திருக்க வேண்டும் என்று எழுதியிருந்தார்.  கூடவே ”ஓநாய்கள் காத்திருக்கின்றன் விழிப்புடன் இருக்கவும். வயது பொருட்டில்லை சிலருக்கு. அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். மகா பாரதம். நரகாசுரன் பேரன் பகதத்தன் கிழவன். அவன் அர்ஜூனனை எளிதாகக் கொன்றிருப்பான் கிருஷ்ணர் இல்லாவிடில்.  வைஷ்ணவாஸ்திரம்  கொன்றிருக்கும், கண்ணன் அதை மாலையாக இடையில் வாங்காவிடில்.

வாரியார் கூறுவார், கிழ காந்தியின் கவர்ச்சி இள வயது காந்தியின் உருவத்திற்கில்லை என்று.   மகா பெரியவரும்” என்று எழுதியிருந்தார்.  என்னால் ஒருபோதும் விழிப்புணர்வுடன் இருக்க முடியாது.  அது எனக்கு சாத்தியமே இல்லை.  விழிப்புணர்வு வந்தாலே உன்மத்தம் அகன்று விடும்.  உன்மத்தம் அகன்றால் சக்கை தான் வரும்.  எனவே பிழைகள் இருந்தால் நீங்களே திருத்தி வாசித்துக் கொள்ளுங்கள்.  அல்லது, இப்படி சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வேன். 

ஆனால் இந்தப் பிழை பற்றி வேறு ஒருவரும் எழுதவில்லை.  யாருக்கும் சாஸ்த்ரீய சங்கீதத்தில் ஈடுபாடு இல்லை போலும்.  இதென்ன சொல்லியா தெரிய வேண்டும் என்பீர்கள்.  இந்த இசை கட்டுரைகளை ஒருவர் கூட படிக்காவிட்டாலும் மூவாயிரம் பக்கம் எழுதுவேன்.  இது வாசகர்களுக்காக அல்ல.  கர்னாடக இசையை இன்னும் ஜீவனோடு காப்பாற்றும் சில மகா கலைஞர்களுக்காகவே, அவர்களின் ஞாபகத்துக்காகவே இதைச் செய்கிறேன்.  சங்கீதத்துக்காக உயிரைக் கொடுத்திருக்கிறார்கள்.  பட்டினி கிடந்திருக்கிறார்கள்.  அவர்களைப் பற்றியெல்லாம் கற்பனைப் பாத்திரங்களாக உருவகித்து தி.ஜானகிராமன் எழுதியிருக்கிறார்.  ஆனால் அவர்கள் எல்லோருமே தி.ஜா. பார்த்துத்தான் எழுதியிருப்பார்.  பெயர்கள்தான் கற்பனை.  ந. சிதம்பர சுப்ரமணியனின் இதய நாதத்தைப் பாருங்கள்.  யாரோ ஒரு கலைஞன் அப்படி வாழ்ந்திருக்கிறான்.  அதைப் பார்த்தே எழுதியிருக்கிறார் சிதம்பர சுப்ரமணியன்.  அப்படித்தான் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.  தேங்கா மூடிக் கச்சேரி செய்யும் ஆள்தானே நீர் என்றும், பெண்டாட்டியைப் பட்டினி போட்டு விட்டு என்னய்யா உமக்கு சங்கீதம், நான் சாப்பிட்டு மூணு நாள் ஆச்சு தெரியுமோ உமக்கு என்று கேட்கும் மனைவியோடுதான் அந்தக் கலைஞன் உயிர் வாழ்ந்திருக்கிறான்.  அப்படி ஒருத்தர் அல்ல இரண்டு பேர் அல்ல.  ஆயிரம் பேர்.  அவர்களின் ஆன்மா என்னை கவனித்துக் கொண்டிருக்கிறது.  என்னை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறது.  இப்படி நான் நம்புகிறேன்.  என்னுடைய பித்ரு கடனாகவே நினைத்து இதைச் செய்து கொண்டிருக்கிறேன்.  இதையும் மீறி இரண்டு பேர் இதை வரிக்கு வரி படித்து எதிர்வினை செய்து கொண்டிருக்கிறார்கள்.  ஒருவர், பாலசுப்ரமணியன்.  இன்னொருவர், என் சங்கீத குருவும் நண்பருமான சோமசுந்தரம்.  எனக்கு சங்கீதமும் தெரியாது, ஒரு மண்ணும் தெரியாது.  சங்கீதத்தில் கடல் போல் நிற்கும் மஹா பெரியவர், மஹா மேதையான அரியக்குடிக்கே பாடம் சொல்லிக் கொடுத்தவர் அப்படிப்பட்ட மகானே “ஏதோ காமாசோமான்னு பாடறேன்” என்று சொல்லும் போது வேறும் ஒரு காலணா ரசிகனான நான் சங்கீதம் என்று சொல்லவாவது அருகதை இருக்கிறதா?

இல்லை.  என்றாலும் ஏன் இதை எழுதத் துணிந்தேன்.  சங்கீதக் கலைஞர்கள் எல்லாம் வாய்ப்பாடு ஒப்பித்துக் கொண்டிருக்கிறார்கள் ஐயா.  இதை நான் ஒருத்தனாவது சொல்லி உதை வாங்க வேண்டாமா?  உனக்கு என்ன தெரியும் என்று அவர்கள் என்னைக் கேட்பார்கள்.  எனக்கு எதுவும் தெரியாது.  ஆனால் வாய்ப்பாடு ஒப்பிப்பதை என்னால் கண்டு பிடிக்க முடியும்.  ஒய்ன் தயாரிக்கத் தெரியாவிட்டால் என்ன?  எது சிறந்த ஒய்ன் என்று சொல்ல முடியும்தானே?  இப்போதைய கலைஞர்கள் சாஹித்யத்தை அறிந்து கொள்ளாமலேயே பாடுகிறார்கள்.  இசைக்கிறார்கள்.  அதனால்தான் ஆத்மா எழுந்து போய் விடுகிறது.  அதைத்தான் – இத்தனை மூர்க்கமாக இல்லை என்றாலும், அவர் ஞானி அல்லவா, மூர்க்கம் இருக்காது – நாசூக்காகக் கோடி காட்டி ”நீ நன்றாகப் பாடுகிறாய், நீ பாடு” என்று அரியக்குடியிடம் சொல்கிறார்.  பாடி முடித்ததும் வரி வரியாக வேறு பாடச் சொல்லி ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் சொல்கிறார். 

ஆனால் என் வாசகர்கள் அத்தனை பேரையும் குறை சொல்ல மாட்டேன்.  ஒன்றிரண்டு பேர் மஹா பெரியவரின் மொழி புரியவில்லை,  விளக்குங்கள் என்று எழுதியிருக்கிறார்கள்.  அப்படியானால் முயற்சி செய்திருக்கிறார்கள்.  மகிழ்ச்சி.  எனக்கு பிராமணக் கொச்சை பிடிக்கும்.  எப்படி மெட்றாஸ் பாஷை பிடிக்குமோ, நாஞ்சில் நாட்டு மொழி பிடிக்குமோ அப்படிப் பிடிக்கும்.  பாலக்காடு, திருநெல்வேலி, தஞ்சாவூர் என்று பலவிதமான பேச்சு மொழிகள் உள்ளன.  நாகூர் முஸ்லீம்களுக்கென்று ஒரு தனி மொழி.  தமிழ்தான்.  ஒரு வார்த்தை உர்தூ இருக்காது.  ஆனால் கொஞ்சம் அரபி கலந்து கவித்துவம் மிளிரும் மொழி.  ஹ ஒலி அதிகம் இருக்கும்.  வந்தாஹா போனாஹா என்று.  ஆனால் பிராமண மொழி இப்போது அழிந்து விட்டது.  ஆனால் கிரிக்கெட் வர்ணனையில் அதை நான் கண்டித்தது முழுக்கவும் வேறு ஒரு காரணத்தினால்.  ஒரு நீதிபதி எப்படி மத இன அடையாளம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதைப் போன்றது அது.  எனக்கு சஞ்சய் சுப்ரமணியத்தின் இசையை விட அவர் பேசும் பிராமண மொழி பிடிக்கும்.  இசையும் பிடிக்கும்.  ஆனால் இடையிடையே அவர் திருக்குறள், பாரதியார் என்று தமிழ்ப் பற்றாளராக மாறி விடும் போது உடம்பில் எனக்குக் கம்பளி ஊறும்.  திருக்குறளின் பெருமை வேறு.  ஆனால் அது சங்கீதத்துக்கு ஆனதல்ல.  தமிழில் பாடலா இல்லை?  பாபநாசம் சிவன் மாதிரி ஐம்பது பேருக்கு மேல் இருப்பார்களே?  கிருஷ்ணா பற்றி எழுதக் கூடாது என்று பார்க்கிறேன்.  பிற்காலத்தில் இந்த இசை நூல் ஆயிரம் பக்கங்களோடு திரண்டால் அதில் கிருஷ்ணா போன்றவர்கள் பற்றிய எதிர்மறைக் குறிப்புகள் இருக்கக் கூடாது என்று விரும்புகிறேன்.  ஆனாலும் தவிர்க்க முடியவில்லை.  அவர் தன்னை agnostic என்கிறார்.  சில சமயம் non-believer என்கிறார்.  கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர் சுப்ரமணிய நமஸ்தேயில் தன்னை எப்படி தீட்சிதராக மாற்றிக் கொள்ள முடியும்?  தியாகராஜர் தான் இந்த உடலை விட்டு விடப் போவதை ஒரு வாரத்துக்கு முன்பே அறிந்து அந்த ஒரு வார காலமும் தன் சிஷ்யர்களோடு ராம நாம சங்கீதத்தையே கேட்டுக் கொண்டிருந்தார்.  எப்போது கிளம்புவே என்று சொல்லி விட்டார்.  அவர் வாழ்க்கை ஒரு அதிசயம்.  ”திருவண்ணாமலையில் மூன்று சிவலிங்கம் உண்டு.  ஒன்று, அண்ணாமலை.  இரண்டு, ரமணர்.  மூன்று, சேஷாத்ரி” என்பார் மஹா பெரியவர்.  சேஷாத்ரி சுவாமிகளின் வாழ்வையும் அந்த அதிசயத்தையும் முழுக்க நம்பாத ஒருவரால் எப்படி கர்னாடக சங்கீதத்தை உள்வாங்கிக் கொடுக்க முடியும்?  ஒரு நாஸ்திகனால் கர்னாடக சங்கீதத்தை ரசிக்க முடியும்.  அந்த மட்டும் சாத்தியம்.  ஆனால் இறை நம்பிக்கை இல்லாமல் எப்படி இறை சக்தியோடு ஒன்ற முடியும்?  இந்தக் கர்னாடக சங்கீதமே பக்தியின் அடிப்படையில் அல்லவா இருக்கிறது?  மேற்கத்திய சங்கீதத்தில் இந்த அம்சம் இல்லை.  மொஸார்ட்டின் இசை எழுதப்பட்டிருக்கிறது.  அதை ஒரு கம்போஸர் இசைத்து விட முடியும்.  ஆனால் இங்கே இந்திய இசை முழுவதுமே நிகழ்த்துதல் என்பதை அடிப்படையாகக் கொண்டது.  ஏன், ஒரு கம்போஸரும் மொஸார்ட்டின் இசையை நிகழ்த்தித்தானே காட்டுகிறார் என்று ஒருவர் கேட்கலாம்.

சற்று கூர்மையாக கவனியுங்கள்.  மேற்கு, கிழக்கு என்ற இரண்டு உலகங்கள் உள்ளன.   மேற்கின் அறிவு அறிதலை முன்வைக்கிறது.  கிழக்கின் அறிவோ அறிதலை மறுதலித்து ஞானத்தை முன்வைக்கிறது.  இதைப் புரிந்து கொண்ட ஒருசில மேற்கத்திய அறிஞர்களில் ஒருவர் ஒக்தாவியோ பாஸ்.  கிழக்கில் Knowledge is not a knowing, but a tuning of the soul என்கிறார் பாஸ்.   மேற்கத்தியப் பொருள்முதல்வாதம், பகுத்தறிவு வாதம் – கிழக்கத்திய ஆன்மீகம் என்ற இரண்டு எதிர்வுகளை நாலே வார்த்தைகளில் விளக்கி விட்டார் பாஸ்.  மக்காலேவின் கல்வியால் அழுகி விட்ட நம் அறிவை சரி செய்யக் கூடிய ஒரே புத்தகம் என்று In Light of India என்ற ஒக்தாவியோ பாஸின் நூலைக் குறிப்பிடுவேன்.  இதைப் படித்து விட்டால் ஒருவருக்கு இந்தியா பற்றிய தெளிவு கிடைத்து விடும்.  இந்தியாவில் பத்தாண்டுகள் தூதராக இருந்த பாஸ், இந்த தேசத்தின் அரசியல், கலாச்சாரம், மதம், சிற்பக்கலை, ஓவியம், இசை, முக்கியமாக தத்துவம் என்று அலசி ஆராய்ந்திருக்கிறார்.  ஒரு சராசரி மனிதனால் கூடப் புரிந்து கொள்ளக் கூடிய பொக்கிஷம் என்று இதைச் சொல்வேன்.  வி.எஸ். நைப்பாலின் India: A Wounded Civilization முக்கியமான நூல்தான்.  ஆனால் அது நாணயத்தின் ஒரு பக்கம்.  பாஸின் நூல் இன்னொரு பக்கம்.  இதுதான் இந்தியாவின் ஆன்மாவைப் பார்த்திருக்கிறது.   அந்த நூலில் பாஸ் குறிப்பிடும் tuning of the soul என்பது பற்றி சிந்தித்துப் பாருங்கள்.  ஆன்மா என்ற கருத்தாக்கத்திலேயே நம்பிக்கை இல்லாவிட்டால் இசையா வரும்?  வாய்ப்பாடுதானே வரும்?

நேற்றைய கட்டுரையின் மேற்கோள் எண்பது பக்கம் வரும் போல.  அதன் இறுதிப் பத்தியை மட்டும் மீண்டும் தருகிறேன்.

அற்புத விளக்கமளித்த ஸ்வாமிகள் அரியக்குடியவர்களிடம் கூறினார்: “நல்ல குரு சிஷ்ய பரம்பரையில் வந்திருக்கிற ஒன்னோட சங்கீதத்தை நீ நல்லபடியா காப்பாத்திண்டு வரதுல ரொம்ப ஸந்தோஷம். இதே மாதிரி நீயும் நல்ல சிஷ்யாளைத் தயாரிச்சு இந்தப் பாரம்பர்யம் தொடர்ந்து போகும்படியாப் பண்ணணும். வேதம் கத்துண்ட ப்ராம்மணன் இன்னம் ஒருத்தனுக்காவது அதைச் சொல்லிக் கொடுத்தே தீரணும்னு, ‘அத்யாபனம்’னே அவனுக்குக் கம்பல்ஸரியா ஒரு கடமை கொடுத்திருக்கு. அது எல்லாக் கலைக்கும், சாஸ்த்ரத்துக்கும் பொருந்தும். தான் கற்ற வித்தை தன்னோட போகாம இன்னம் பல பேர்கிட்டப் போகும்படியாப் பண்ணணும்.

“ஸங்கீத வித்வான்கள் முக்யமா ஒண்ணு பண்ணணும். தாங்க(ள்) பாடற ஸம்ஸ்க்ருதப் பாட்டு, தெலுங்குப் பாட்டுகளுக்கு அர்த்தம் தெரிஞ்சுண்டு, அர்த்த பாவத்தோடப் பாடணும். தமிழே போறும்னு சொன்னா ஸரியில்லே. ஸங்கீத நுட்பம், அர்த்த விசேஷம் ரெண்டிலேயும் உசத்தியா மஹா பெரியவா பல பேர் இந்தத் தமிழ் தேசத்துல தெலுங்கிலேயும் ஸம்ஸ்க்ருதத்திலேயும் நூற்றுக்கணக்காப் பாட்டுக்களைக் கொட்டிட்டுப் போயிருக்கா. அதெல்லாம் வேண்டாம்னு தள்றது நமக்குத் தான் நஷ்டம். தமிழிலேயும் நிறையப் பாடட்டும். மத்த பாஷையிலேயும் பாடட்டும். ‘அர்த்தம் தெரியலையே’ன்னா தெரிஞ்சுக்கணும். தெரிஞ்சுக்கறது கஷ்டமேயில்லை. நமக்கா இஷ்டம் இருந்தா ஆகாத போகாத ஸமாசாரங்களுக்கெல்லாம் எத்தனை ஒழைச்சுத் தெரிஞ்சுக்கறோம்? சுத்தமான ஸங்கீதம், ஒசந்த அர்த்த விசேஷம் – இதுகளுக்கே வித்வான்கள் ‘டெடிகேட்’ பண்ணிண்டா பாஷை குறுக்கே நிக்காது. இதுக்கெல்லாம், ஸங்கீத ஒலகத்துலே இப்ப முதலா இருக்கிற நீ ஒன்னாலானதைப் பண்ணு. அநுக்ரஹ பலம் ஒனக்கு சக்தி கொடுக்கட்டும்.”

அரியக்குடி நாத்தழுதழுத்து, “என் ஆயுஸில் இன்றைவிட நான் பெரிய பாக்கியம் அடைந்ததில்லை” என்று கூறி விடைபெற்றார்.

அந்த விநாடியே ஸ்வாமிகள் மீண்டும் மௌனம் பூண்டு விட்டார்.”

முத்துஸ்வாமி தீட்சிதர் இயற்றிய பாடல்:

பல்லவி

ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே நமஸ்தே

மநஸிஜ கோடி கோடி லாவண்யாய தீன சரண்யாய



அநுபல்லவி

பூஸுராதி ஸமஸ்த ஜன பூஜிதாப்ஜ சரணாய

வாஸுகி தக்ஷகாதி ஸர்ப்ப ஸ்வரூப தரணாய

வாஸவாதி ஸகல தேவ வந்திதாய வரேண்யாய

தாஸ ஜனாபீஷ்ட ப்ரத தக்ஷதராக்ர கண்யாய



சரணம்

தாரக ஸிம்ஹமுக சூரபத்மாஸுர ஸம்ஹர்த்ரே

தாபத்ரய ஹரண நிபுண தத்வோபதேச கர்த்ரே

வீரநுத குருகுஹாயாஜ்ஞான த்வாந்த ஸவித்ரே

விஜயவல்லீ பர்த்ரே சக்த்யாயுத தர்த்ரே

தீராய நத விதாத்ரே தேவராஜ ஜாமாத்ரே

பூராதி புவந போக்த்ரே போக மோக்‌ஷ ப்ரதாத்ரே

ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே!

மேலே உள்ள கிருதியை ஒரு முறை படித்துக் கொள்ளுங்கள்.  இப்போது மஹா பெரியவரின் வியாக்கியானம்.  அதை மொழிபெயர்த்துக் கொடுங்கள் என்கிறீர்கள்.  கடவுளின் வார்த்தைகளை நான் மொழிபெயர்க்க வேண்டுமா?  என்ன கொடுமை! 

முத்துஸ்வாமி என்ற பெயரே வைத்தீஸ்வரன் கோவில் முத்துக்குமார ஸ்வாமியின் பெயரை வைத்துத்தான் அவருக்கு நாமகரணமாகி இருக்கிறது.  அப்பா ராமசாமி தீட்சிதர்.  பெரிய பண்டிதர்.  சங்கீதத்தில் நிரம்பத் தெரிந்தவர்.  சாகித்யங்கள் பண்ணியிருப்பவர்.  பெரிய வித்யா உபாசகர்.  அவருக்கு நாற்பது வயது வரை புத்திர பாக்கியம் இல்லை.  பத்தினியோடு வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் போய் முத்துக்குமாரஸ்வாமி சந்நிதியில் ஒரு மண்டலம் விரதம் இருக்கிறார். அப்போது அந்த அம்மாளுக்கு மங்கலமான ஒரு ஸ்வப்னம் ஏற்படுகிறது.  குழந்தையும் பிறக்கிறது.  பங்குனி மாசம்.  கிருத்திகை நட்சத்திரம்.  அவர்தான் முத்துஸ்வாமி தீட்சிதர். 

அப்புறம் அவர் வளர்ந்து சங்கீத அப்பியாசம், வித்யா அப்பியாசம், காசியில் சந்நியாச குருவுடன் வாசம் எல்லாம் பண்ணுகிறார்.  குரு காசியில் சித்தியாகிறார்.  சித்தியாகும் சமயத்தில் சிஷ்யனிடம் “தட்சிணத்துக்குப் போய் விடு.  முதலில் திருத்தணி போ.  நீ எதற்காக ஜென்மா எடுத்திருக்கிறாயோ அது சபலமாகும்படியாக (பலிதமடையுமாறு) சுப்ரமணிய ஸ்வாமி அனுக்ரஹம் பண்ணுவார்” என்று சொல்கிறார் குரு.

அப்படியே தீட்சிதர் திருத்தணிக்குப் போனார். அடிவாரத்தில் திருக்குளத்தில் ஸ்நானம் பண்ணிவிட்டு மலை ஏறிப் போய்க் கொண்டிருக்கும்போது முன்பின் தெரியாத ஒரு கிழ ப்ராஹ்மணர் அவரை, “முத்துஸ்வாமி!” என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டு, “வாயைத் திற” என்றார். அவர் அப்படியே பண்ணியதும் வாயிலே ஒரு கல்கண்டைப் போட்டுவிட்டு போன இடம் தெரியாமல் போய்விட்டார். வந்தது யாரென்று தீட்சிதருக்குப் புரிந்து விட்டது. இவர் வந்த கார்யமும் தத்க்ஷணமே ஆரம்பித்துவிட்டது – ஸாஹித்ய வ்யுத்புத்தி ஏற்பட்டுவிட்டது! தகப்பனாரான பரமேச்வரனுக்கும் குருவாக இருந்த குஹன் மீது அப்போதே எட்டு வேற்றுமைகளில் ஒவ்வொன்றிலும் ஒரு கிருதியாக எட்டு கிருதிகளைப் பாடிவிட்டார்.

(கவனித்தீர்களா?  காளிதாசனுக்கு காளி நேரில் வந்து அவன் நாவைத் தீண்டினாள்.  தாசன் மகாகவி ஆனான்.  இங்கே குகன் வந்து தீட்சிதருக்குக் கல்கண்டு தருகிறான். இதையெல்லாம் மேற்கத்தியப் பொருள்முதல்வாதத்தினால், பகுத்தறிவினால் புரிந்து கொள்ள முடியுமா?  புருடா என்றுதான் சொல்வார்கள்.  நம்முடைய இந்தக் காலத்து மக்காலேவின் இந்திய வாரிசுகளும் அப்படித்தான் சொல்வார்கள்.  அவர்களிடம் நான் இந்தியா என்ற தேசமே புருடாதான், போ என்று சொல்லி விட்டுத்தான் மேலே போவேன்.  இன்னும் பெரியவர் சொல்வதைப் படியுங்கள்…)

கிருதிகளில் தம் முத்திரையாக அவர் ‘குருகுஹ’ என்ற ஸுப்ரஹ்மண்ய நாமாவையே வைத்திருப்பதையும் குறிப்பாகக் கவனிக்க வேண்டும். குகையில் இருப்பவன் குஹன். ஹ்ருதய அந்தரங்கம் என்ற குகையில் ஆத்ம ஸ்வரூபமாக உள்ள குருதான் குருகுஹன்.

தீட்சிதர் சரீர யாத்திரையை முடித்தது ஒரு தீபாவளியில். அதற்கு அடுத்த ஆறாம் நாள்தான் மஹா ஸ்கந்த ஷஷ்டி வருவதும். ஷஷ்டியன்று பூர்த்தியாகிற விதத்தில் ஆறு நாள் வ்ரத உபவாஸங்களிருப்பது வழக்கம். அதாவது தீட்சிதர்வாளின் பிறப்பு மட்டுமில்லாமல் முக்தியடைந்ததிலும் ஒரு சுப்ரமண்ய சம்பந்தம் தெரிகிறது…

தீட்சிதர் க்ஷேத்ரம் க்ஷேத்ரமாகப் போய் அங்கேயுள்ள மூர்த்தியை – அது என்ன மூர்த்தியானாலும் அதை – வித்யாசமில்லாமல் பாடினார் என்றேன். அந்தந்த கிருதியிலேயே அது எந்த க்ஷேத்ரத்தைப் பற்றியது என்பதற்கு அகச் சான்று என்கிறார்களே, அப்படிப்பட்ட internal evidence இருக்கும். குறிப்பிட்ட க்ஷேத்ரத்தில் அந்த ஸ்வாமிக்கு உள்ள பெயர், அதற்கான மந்த்ர ரஹஸ்யம், அந்த ஸ்தல புராணக் குறிப்பு என்று ஏதாவது இருக்கும். இந்த ‘ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யாய’வில் குறிப்பாக அது இன்ன க்ஷேத்ரத்தில் பாடியது என்று காட்டுவதாக ஒன்றுமில்லை.

அத்தனை ஸுப்ரஹ்மண்ய க்ஷேத்ரங்களிலுள்ள மூர்த்திகளையும் சேர்த்துத் தம்முடைய பாட்டினாலேயே மூலமூர்த்தியாக அவர் பண்ணிவைத்து விட்ட மாதிரி இந்த க்ருதி பிரகாசிக்கிறது!

அனந்தகோடி நமஸ்காரத்தோடு ஆரம்பித்திருக்கிறார். அப்புறம் –

முருகனின் அழகும் அருளும்

”மநஸிஜ கோடி கோடி லாவண்யாய”:

இரண்டு தடவை ‘நமஸ்தே’ போட்ட மாதிரி இரண்டு தடவை ‘கோடி’ போட்டிருக்கார். கோடியைக் கோடியால் பெருக்கினால் எவ்வளவு பெரிசு? அதுதான் ‘கோடி கோடி’.

‘மநஸிஜ கோடி கோடி’ – கோடி கோடி மன்மதர்கள். மநஸிஜன் என்பது மன்மதன் பெயர். மனஸிலிருந்து ஜனித்தவன் மநஸிஜன். காமம் மனஸில் பிறப்பதுதானே? புராண ரீதியிலும் கதை இருக்கிறது. மஹா விஷ்ணுவின் புத்ரனே மன்மதன். ஆனாலும் ரொம்ப விசித்ரமாக, காமனான அவன் மஹாலக்ஷ்மியிடம் பெருமாளின் காமத்தினால் அவளுடைய கர்ப்பத்திலிருந்து பிறந்தவனில்லை. விஷ்ணுவின் மனஸிலிருந்தே – அவர் மனஸால் எண்ணின மாத்திரத்திலேயே அவன் உண்டாகிவிட்டான். இன்னொரு பிள்ளை ப்ரம்மாவும் நேரே தகப்பனாரான விஷ்ணுவின் நாபியிலிருந்தே உண்டானவர். இப்படி எல்லாமே ஸ்வாமி வேடிக்கை விசித்ரமாகப் பண்ணுகிறார்!

அழகுக்குப் பெயரெடுத்தவன் மன்மதன். ‘மன்மதன்னு எண்ணம்!’ என்று தான் பரிஹாஸம் பண்ணுகிறோம். அப்படிப்பட்ட மன்மதர்கள் கோடி கோடி பேரின் அழகு சேர்ந்தால் எவ்வளவு அழகாயிருக்குமோ அத்தனை அழகானவர் ஸுப்ரஹ்மண்யர். ‘மநஸிஜ கோடி கோடி லாவண்யர்’.

க்ருஷ்ண பரமாத்மாவைப் பற்றி (பாகவதத்தில்) “ஸாக்ஷாத் மன்மத மன்மத:” என்று சொல்லியிருக்கிறது. மன்மதனுக்கும் மன்மதனாக இருக்கப்பட்ட அப்பேர்ப்பட்ட ஸௌந்தர்யவான் என்று அர்த்தம். அவர் மன்மதனையே படைத்தவர். அவருடைய மனஸுக்குள்ளேயிருந்துதான் அவன் ஸ்ருஷ்டியானது. மன்மதனுக்கும் மூலமானவர் மன்மத மன்மதனாக இருப்பதில் ஆச்சர்யமில்லை. க்ருஷ்ணனாக அவர் வந்தபோதும் மன்மதனே தான் அவருடைய பிள்ளையான ப்ரத்யும்னனாக வந்து தனக்கு அவரே மூலபுருஷர் என்று காட்டியிருக்கிறான்.

ஸுப்ரஹ்மண்யர் கோடி கோடி மன்மத லாவண்யராக இருப்பதுதான் ஆச்சர்யம். இவர் யார்? பரமேச்வரனின் புத்ரர். அந்தப் பரமேச்வரனோ மன்மதனை அப்படியே பஸ்மம் பண்ணினவர். எந்த நேத்ராக்னியினாலே அவர் மன்மதனைப் பொசுக்கினாரோ அதே நேத்ராக்னியிலிருந்து உண்டானவர் ஸுப்ரஹ்மண்யர். காமத்திலே பிறக்காமல் ஞானத்திலே பிறந்தவர். ஞானமே லோகத்தை ரக்ஷிக்க வேண்டும் என்று கருணாமூர்த்தியாக ஆன ஸ்வரூபம் என்று தத்வார்த்தம். தத்வார்த்தம் இருக்கட்டும். நான் வேடிக்கையாகச் சொல்ல வந்தேன் – மன்மதனை தஹனம் பண்ணினவரின் பிள்ளை கோடி கோடி மன்மதனாக இருக்கிறார்!

குமாரன் என்பது அவருக்கு ஒரு விசேஷப் பேர் அல்லவா? தெற்கே எப்படிப் பிள்ளை என்றாலே பார்வதி பரமேச்வரர்களின் மூத்த பிள்ளைதான் என்று வைத்துப் ‘பிள்ளையார்’ என்கிறோமோ, அப்படி வடக்கே இளைய பிள்ளையைத்தான் கொண்டாடி ‘குமார்’, ‘குமார்’, என்றே சொல்கிறார்கள். நாமுங்கூட குமாரஸ்வாமி, குமரன் என்று சொல்கிறோம். இப்போது புருஷ ப்ரஜைகளில் பாதிப் பேருக்குப் பேர் ‘குமார்’தான்! ‘குமார’ சப்தம் குறிப்பாக சுப்ரமண்யருக்கே உரியதாக இருக்கிறது. வால்மீகி ராமாயணத்தில் விச்வாமித்திரர் ராம லக்ஷ்மணர்களுக்கு சுப்ரமண்ய அவதாரக் கதையைச் சொல்லி முடிக்கும் போது இந்தக் ‘குமார ஸம்பவ’க் கதையைக் கேட்டால் இன்னின்ன பலன் கிடைக்கும் என்று சொன்னதாக வருகிறது. ஆதி கவி வாக்கில் வந்த ‘குமார ஸம்பவம்’ என்ற வார்த்தையையே காளிதாஸர் தம்முடைய காவ்யத்துக்குத் தலைப்பாகப் போட்டார்.

குமாரன் என்ற பேர் விசேஷம் இருக்கட்டும். அதை எதற்குச் சொல்ல வந்தேனென்றால், அதற்குப் பிள்ளை என்ற அர்த்தத்தோடு மன்மத சம்பந்தமாக இன்னோர் அர்த்தமும் சொல்வதுண்டு. மன்மதனுக்கு ‘மாரன்’ என்றும் ஒரு பேர் உண்டல்லவா? மாரனுக்கு வெட்கத்தை உண்டாக்குகிறவன், அதாவது மாரனைப் பழிக்கும் மஹா அழகன் தான் குமாரன்: ‘குத்ஸித மார: – குமார:’. குமாரன் என்றாலே மன்மத மன்மதன், மநஸிஜ கோடி கோடி லாவண்யன் என்று அர்த்தம் ஏற்பட்டுவிடுகிறது.

தமிழ் தேசத்துக்கு அவர் ரொம்பப் பிரியம். தமிழ்த் தெய்வம் என்றே சொல்கிறோம். தமிழில் வைதாரையும் வாழ வைப்பவர் என்கிறோம். இந்த பாஷையில் அவருக்கென்று அருமையாக ஒரு பெயர் சூட்டியிருக்கிறோம் – முருகன். முருகு என்றாலே அழகு என்றுதான் சொல்கிறார்கள். காமன் எரிந்து போன அப்புறம் அவனுடைய கரும்பு வில்லையும் புஷ்ப பாணத்தையும் அம்பாளே எடுத்துக் கொண்டு காமேச்வரி ஆனாள். அதனால்தான் சுப்ரமண்ய அவதாரம் ஏற்பட்டது. அவளுக்குப் பேரே ஸுந்தரி, த்ரிபுரஸுந்தரி. அவளுடைய பிள்ளை, தாயைப் போலப் பிள்ளை என்றபடி லாவண்ய மூர்த்தியாகத்தானே இருப்பார்? ‘மநஸிஜ கோடி கோடி லாவண்யாய.’

பார்த்தீர்களா?  மநஸிஜ கோடி கோடி லாவண்யாய என்ற நாலு வார்த்தைக்கு எவ்வளவு பெரிய, எவ்வளவு அழகான வியாக்கியானம் என்று!

அடுத்த வார்த்தை தீன சரண்யாய…

தீன சரண்யாய…..லாவண்யாய……ஸுப்ரஹ்மண்யாய – எல்லாம் ஒரே மாதிரி, எதுகையோ மோனையோ ஏதோ ஒன்றாக, பாடியிருக்கிறார். எதுகைதான். ஆனால் வார்த்தையின் ஆரம்பம் எதுகையாக இல்லாமல் முடிவில் இருக்கிறது. இதை ‘அந்த்ய ப்ராஸம்’ என்பார்கள். ‘யாய’, ‘யாய’ என்று வருவது ‘அவருக்கு’ என்று நாலாம் வேற்றுமையில் அர்த்தம் கொடுக்கும். ‘ஸுப்ரஹ்மண்யருக்கு, கோடி கோடி மன்மத லாவண்யருக்கு, தீன சரண்யருக்கு நமஸ்காரம்’. ‘உனக்கு நமஸ்காரம்’ என்பது தான் ‘நமஸ்தே’.

‘மநஸிஜ கோடி கோடி….’ என்று வேகமான கதியில் பாடித் திருப்புவது வழக்கமாயிருக்கிறது. ஆரம்பத்திலிருந்து மெதுவாக, கம்பீரமாகப் பாடிக்கொண்டு வந்து இங்கே வேகமாகத் திருப்புவது. முதலில் பாடுவது சௌக காலம். விளம்ப காலம் என்றும் சொல்வார்கள். ‘விளம்பம்’ நல்ல ஸம்ஸ்க்ருத வார்த்தை. Slow என்று அர்த்தம். ‘சௌகம்’ – ஸரியாகப் புரிபடவில்லை. ‘ஸௌக்யம்’தான் ‘சௌக’மாச்சோ என்னவோ? நிதானமாகப் பாடினால் மனஸுக்கு விச்ராந்தியாக, ரொம்ப ஸௌக்யம் உண்டாகிறது. அது ராகத்தின் இழுப்பு, வளைசல்களுக்கு இடம் கொடுத்து ராக பாவத்தையும் விசேஷமாகத் தெரிவிக்கிறது. ஸாஹித்யத்தின் அர்த்த பாவத்திலேயும் தோய்ந்து நிற்க அவகாசம் கொடுக்கிறது. தீக்ஷிதர்வாள் க்ருதிகளில் இது தனிச் சிறப்பு. கம்பீரமான ஸம்ஸ்க்ருத பாஷை அதற்கேற்ற கம்பீர நடையோடு மத்த கஜம் அசங்கி அசங்கி வருகிற மாதிரி சௌக கிருதிகளாகப் பண்ணிக் கொடுத்திருக்கிறார்.

ஆனாலும் நாம் அவஸர ப்ரக்ருதிகளாக இருக்கிறோமோல்லியோ? மனஸாலே, உடம்பாலே சாஞ்சல்ய மயமாக ஓடிக் கொண்டேயிருப்பதுதானே நம் நேச்சராக இருக்கிறது? அதனால் ஒரே சௌகமாக வளர்ந்து கொண்டு போனால் அலுப்புத் தட்டிப் போகிறது. அதற்காகத்தான் மாற்றாகக் கொஞ்சம் அங்கங்கே வேகமான நடையில் திருப்பும்படியாகவும் ஒவ்வோர் உருப்படியிலும் வைத்திருக்கிறார். சௌக காலத்துக்கு ரிலீஃபாக மத்யம காலம். ஒரே தித்திப்பு லட்டு சாப்பிட்டால் திகட்டப் போகிறதென்று கிராம்பு போட்டு விறுவிறு பண்ணுகிற மாதிரி பாட்டிலேயும் கொஞ்சம் விறுவிறு.   (ஆமாம், இந்த விவகாரமெல்லாம் மஹா பெரியவருக்கு எப்படித் தெரியும்?)

இந்தப் பாட்டில் பல்லவி, சரணம் இரண்டிலேயும் முடிக்கிற இடத்தில் மத்யம கால ஆவர்த்தங்கள் வைத்திருக்கிறார். ஆனால் பெரும்பாலான பாட்டுக்களில் அநுபல்லவியிலேயும் சரணத்திலேயும்தான் மத்யம காலம் வைத்திருப்பார். சுப்ரமண்யர் நல்ல யுவா. “என்றும் இளையாய்” என்று சொல்லப்படுகிறவர். அதனால் ஆரம்பத்திலேயே அவர் குதிநடை போட்டுக்கொண்டு வருகிற மாதிரி மத்யம காலம் வைத்து விட்டார் போலிருக்கிறது!

இப்படித்தான் மஹா பெரியவர் இந்த முழுப் பாடலுக்கும் விளக்கம் சொல்லிக் கொண்டே போகிறார்.

ஆற அமர அமர உட்கார்ந்து இந்த கிருதியை முதலில் அரியக்குடியின் குரலில் கேட்டு விட்டு, பிறகு மஹா பெரியவரின் வியாக்கியானத்தையும் பொறுமையாகப் படியுங்கள்.  அவர் மொழி மிகவும் லகுவானது.  அவருடைய ஒரே நோக்கம் கம்யூனிகேஷன் தான்  அதனால்தான் இடையிடையே ஆங்கில வார்த்தைகளை கலந்து விட்டு நமக்குப் புரியச் செய்கிறார்.  அதே சமயம் சம்ஸ்கிருதத்திலேயும் பண்டிதர் என்பதால் நாம் சுப்ரமண்யர் என்று எழுதுவதை அவர் ஸுப்ரஹ்மணியர் என்று சொல்வார்.  அந்த ஒரு விஷயத்துக்கு நாம் நம்மைப் பழக்கிக் கொண்டால் மிக எளிதாக இருக்கும் அவர் வியாக்கியானம்.  பின்வரும் இணைப்பில் அரியக்குடியின் ஸ்ரீசுப்ரமண்யாய நமஸ்தே.  கூடப் பாடுபவர்களில் ஒருவர் அவரது சிஷ்யரான கே.வி. நாராயணஸ்வாமி.  இந்த கே.வி.என்.னின் சிஷ்யர்களில் ஒருவர்தான் என் நண்பரும் குருவுமான சோமசுந்தரம். 

ஒரு கச்சேரியில் ஆலாபனை பகுதிதான் எனக்கு ரொம்ப இஷ்டம். அவ்வளவு பொறுமை இல்லாமல் நேரடியாக கிருதிக்குச் செல்ல வேண்டுமானால் எட்டரையாவது நிமிடத்திலிருந்து கேளுங்கள்.     

இது இன்னொரு பதிவு. 

அரியக்குடியின் சீடர் கே.வி. நாராயணஸ்வாமி.  அதே கிருதி.  கிருதி பதினைந்தாவது நிமிடத்தில் தொடங்குகிறது.  அதுவரை ஆலாபனை. 

இந்தப் பெண்மணி பற்றி பிறகு விரிவாக எழுத வேண்டும்.  இவர் ஒரு அதிசயம்.  உங்களுக்கும் பிடிக்கும், கேளுங்கள்.  டி.கே. பட்டம்மாள். 

பின்வருவது டி.எம். கிருஷ்ணா. எனக்கு கிருஷ்ணாவைக் கேட்கும் போதெல்லாம் கமல்ஹாசன் எழுதும் கவிதைகள் ஞாபகம் வருகின்றன.  என்ன விஷயம் என்று ஏதாவது ஸைக்கியாட்ரிஸ்டைத்தான் அணுகிக் கேட்க வேண்டும்.   

என் குருநாதன் சோமன் இந்த இசை கட்டுரைகளைப் படித்து விட்டு உடனுக்குடன் விரிவாக வாய்ஸ் மெஸேஜ் அனுப்பி விடுகிறார். 

அந்த மெஸேஜை அப்படியே இங்கே தருகிறேன். 

“சாரு, நல்ல க்ளாஸுக்கு நடுவிலே இருக்கேன்.  (அவர் நடத்தும் இசை வகுப்பு) ஒரு வார்த்தை சொல்லலாம்னு நினைச்சேன்.  எட்டு மணிக்கு மேலதான் நீர் ஃப்ரீயா இருப்பீர்ங்கிறதாலே இதை எழுதிப் போடறேன்.  (எழுதி = பேசி) ரொம்ப நல்லா இருக்கு.  ஒரு ஜென்மா பூரா செய்ய வேண்டிய புண்ணியத்தை நீர் ரெண்டு மூணு இஷ்யூவில பண்ணிட்றீர்னு நினைக்கிறேன்.  ஒருவேளை சிலருக்குத் தோணலாம், நாம இதெல்லாம் ஏற்கனவே படிச்சதுதானேனுட்டு.  ஆனா எனக்கு… உம்ம எழுத்து… என்னுடைய வாழ்க்கையோட தொடர்பு… நாம ரெண்டு பேருக்கும் ஒரு பந்தம் இல்லாட்டி நாம சந்தித்து இருக்க மாட்டாமோனு தோணுது.  ’மர்ரே அண்ட் கோ’வில புத்தகம் வாங்கப் போன போது (இந்தச் சம்பவம் புரியவில்லை.  கேட்க வேண்டும்) திரும்பத் திரும்ப நினைக்கிறேன், எப்படி இது சாத்தியம் அப்படின்னுட்டு.  எங்கப்பா தேவாரம் ஓதுவார்.  எங்கப்பா நிராகரித்த பாடல்களெல்லாம்…  ஏன் இந்த இவங்கள்ளாம் தேவாரத்தைக் கொடயறானுங்கன்னு (தெரியல)… அப்போ துதிப்பாடல்னு ஒண்ணு பாடுவாங்க… தேவாரப் பண்கள் மட்டும் பாடும் ஓதுவார்கள்.  வாழ்நெறி முறைகளாக தேவாரத்தை வச்சுக்கிட்டு இருக்கிறதாலே இதையே துய்த்து உணர்றவங்க மட்டும்தான் பாடுவாங்க.  அதைப் பத்தின ஆராய்ச்சிகள் அவங்க பண்ணலை.  உதாரணமா, அந்தப் பாட்டே வித்தியாசமா இருக்கும்.  இவர் என்ன பாடினார்னா தேவாரத்துல வானனை (பாடிக் காண்பிக்கிறார்…) மதி சூடிய மைந்தனை… (அடுத்து இன்னொரு தேவாரப் பாடலைப் பாடிக் காட்டுகிறார்)

நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே

றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்

சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்

குன்றுடையானைக் கூற என்னுள்ளங் குளிரும்மே.

(இது ஞானசம்பந்தர் தேவாரம்)

இது பற்றியெல்லாம் நான் உமக்கு ஏற்கனவே சொல்லியிருக்கேன்னு நினைக்கிறேன்.  ஸ்வாமிக்கு பூவை எடுத்து  எப்படி அர்ச்சனை பண்றோமோ அப்படித்தான்.  இதே பாடல்களைத்தான் மாலையாக் கட்டி வரவங்க பெரியவங்களுக்கெல்லாம் போடற மாதிரி மார்க்கெட்டிங் பண்றாங்க.  அந்த நாயனாரர் (நாயனக்காரர்) பார்த்தீங்கள்ள… அவர் ஒக்காந்து வாசிக்கம்போது பார்த்தீங்கள்ள… எப்டி? பக்கத்துல ஒரு சின்ன ஈயச் சொம்பு, அவர் தொப்பை, அவருடைய எச்சல், சீவாளி இதெல்லாம் ஒக்காந்துட்டு இருக்கும்.  இதெல்லாம் பார்க்கும்போது… எப்படி நம்ம மண்ணிலே நம்ம மனிதத்திலே சாமர்த்தியமான மனிதர்களும் சாதாரணர்களும்னு ஒரு இதே எழுதலாம்.  சாமர்த்தியவான்களும் சாதாரணர்களும்.  சங்கீதம் அங்கேதான் இருக்கு.  அதைப் போய் (அந்த நாயனாரர்கிட்டேர்ந்து) பிடுங்கிக்கிட்டுப் போறதா?  நான் இருபது வருஷம் பிச்சை எடுத்ததுக்கப்புறம்தான் ஒரு பருக்கை கிடைச்சிருக்கும்.  ஒரே ஒரு பருக்கை.  அந்தப் பருக்கை எங்கேர்ந்து வந்ததுன்னு யோஜனை பண்றதுக்குள்ளே போறும் போறும்னு ஆயிடும்.  இதே கேள்வியோட எங்க சார் கிட்ட சண்டை போட்டிருக்கேன்.  சார் யாரு?  அரியக்குடியாரோட நேர் சிஷ்யன் பாடல்ல கேட்டா ஒரே ஒரு ஆள் கே.வி.என்.தான்.  (கே.வி. நாராயணஸ்வாமி)  கேவிஎன் கிட்ட நான் சிறையாரும் மடக்கிளியே பாடிக் காமிக்கிற போது அவர் கேட்டாரு, சிறையாரும் மடக்கிளியே எப்டிப் பாடுவேள்னிட்டு. 

சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடு பால்

முறையாலே உணத்தருவேன் மொய்பவளத் தொடுதரளந்

துறையாருங் கடல்றோணி புரத்தீசன் துளங்கும் இளம்

பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே.

(இந்தப் பாடலையும் சோமன் தன் அற்புதக் குரலில் பாடிக் காண்பிக்கிறார்.  இந்தக் கச்சேரி – கம் – டிமான்ஸ்ட்ரேஷன் காரணம் என்னவென்றால், ”ஏன் ஸ்வாமி, இப்போது பாடி உலக நாயகர்களாக இருக்கின்றவர்களையெல்லாம் விட நீங்கள் பெரும் திறமைக்காரராகவும், அபூர்வமான குரல் வளம் கொண்டவராகவும், அர்ப்பண மனோபாவம் உடையவராகவும் இருக்கிறீர்கள்; ஆனாலும் உங்களை எனக்கு மட்டும்தானே தெரிகிறது.  ஏன்?” என்று கேட்டு விட்டேன்.  இந்தக் கேள்வியை நான் அவரிடம் பத்து ஆண்டுகளாகக் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.  ஒருவேளை தி.ஜானகிராமன் மாதிரி என் சங்கீதம் கடவுளுக்கும் என் நண்பர்களுக்கும் மட்டும்தான் என்று இருக்கிறீர்களா?  இந்த என் கேள்விக்குத்தான் அந்த ஸ்வாமி – புஷ்பம் – மார்க்கெட்டிங் உதாரணம்.  புரிந்து விட்டதா? ஆனால் இந்தக் கருத்துடன் எனக்குக் கொஞ்சமும் உடன்பாடு இல்லை.  இப்படியெல்லாம் அரியக்குடி போன்ற மேதைகள் நினைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?  மேற்கொண்டு படியுங்கள்.)

(சிறையாரும் மடக்கிளியே பாடி முடித்து விட்டுத் தொடர்கிறார்) எங்களுடைய சாதக முறைகளே வேறே.  இதைப் பிடிப்பதற்கு நான் இருபத்தைஞ்சு வருஷம் உழைச்ச பிறகு நாற்பத்தஞ்சுலதான் வந்து சேர்றேன்.  எங்கப்பா கிட்டேர்ந்து கத்துக்கிட்டதெல்லாம் சின்ன வயசுல.  கீழ கிடைக்கிற முத்தையோ ரத்தினத்தையோ வைரக்கல்லையோ எடுத்து ஒருத்தன் பாக்கு ஒடைக்க யூஸ் பண்ணிட்டுருப்பான். அந்த நாயனாரர் மாதிரி.  இன்னோருத்தன் அதை எடுத்துக்கிட்டு வந்து கழுதையைத் தீட்டு தீட்டுனு தீட்டி கோலாப்பூர் ராணிகிட்டேயும் லண்டன்லேயும் கொண்டு போய் சேர்த்து விட்ருவான்.  ரெண்டும் உண்மைதான்.  ஆனா இந்த ரெண்டிலேயும் உள்ள வேறுபாட்டைப் புரிஞ்சுக்கிட்டோம்னா நாம கல்லைக் கண்டு மயங்க மாட்டோம்.  எதுக்கும் எதும் விரோதம் அல்ல.  ஆனா எப்படி இது நிகழ்ந்ததுன்னு யோசிச்சுப் பார்த்தா நீங்க சொல்லணும்.  நீங்க சொல்றதுன்னும் ஒண்ணு இருக்குல்ல.  பெரியவா சொல்றது வேறே.  நீங்க அதிலேர்ந்து எதைச் சொல்ல வர்றீர்னு இருக்கு.  இந்த மாதிரி கான்செப்டோட கொண்டு போனீர்னா ரொம்ப அற்புதமா இருக்கும்.  இது என் அட்வைஸ் அல்ல.  இதைப் படிச்சவன்லாம் அங்கேர்ந்து எடுத்துப் போட்றார், இங்கேர்ந்து எடுத்துப் போட்றார் ஒரே காப்பி பேஸ்டுங்கிறான்.  அட முட்டாளே, காப்பி பேஸ்ட் பண்றதுக்கும் படிக்கணுமில்லே.  நீ எல்லாத்தையும் மறைச்சு ஒளிச்சு வச்சுக்குவே.  யாருக்கும் தெரியக்கூடாதுன்னு.  அல்லது, நீ உன்னோடதுன்னு சொல்லி பிரஸ்தாபம் பண்ணுவே.  சுப்ரமண்யாய நமஸ்தே தமிழ்க் கடவுள் முருகக் கடவுளைப் பாட்றாருய்யா.  இவரோ அய்யங்காரு.  ஆனா தீட்சிதர்கிட்டேர்ந்து அவர் வேற பாட்டை எடுக்கலியே?  சுப்ரமண்யாய நமஸ்தேவுக்கு அதாரிட்டி யார்னா அய்யங்கார்தான்.  இத்தனைக்கும் தெருக்கூத்துல பாடுற மாதிரிதான் ஏறி ஏறி பாடிருக்காரு.  கேவிஎன்னும் வழிச்சு வழிச்சு அப்டியே பொன் குரல்ல வீணை தனம்மா பாணில கொண்டு வந்து நிறுத்துறாரு.  ரெண்டையும் கேளுங்க.  ரெண்டு வெர்ஷனையும் கேளுங்க.  கால மாற்றத்துல இந்த சுப்ரமண்யாய நமஸ்தே எப்படி மாறி வந்துருக்குன்னு பார்க்கணும்.  இப்போ எங்க ஜெனரேஷன்ல எப்படி பாடுறோம்.  நான் பாடிக் கேப்பீங்களோ தெரில.  அப்றம் பாடிக் காட்டறேன்.  ஹஹா… நாங்கள்ளாம் தமிழ்தானே.  தமிழ்க் கடவுள தீட்சிதர் சம்ஸ்கிருதத்துல பாட்றார்.  அந்த வார்த்தையையெல்லாம் நீங்க யூஸ் பண்ணணும்.  நீங்க எப்படி உணர்றீங்க… உங்க வழில இது எப்படி வர்றது.  இதுதான் நீங்க நாளைக்கு நிக்கப் போறதுக்கான மந்திரம்…

இன்னும் டான்ஸ் பத்தி எழுதுங்கோ.  யாரு உங்களுக்கு இதையெல்லாம் குடுக்கிறாங்கன்னு தெரியல.  உங்களுக்கே இதெல்லாம் தோணுச்சுன்னா பெரிய ஆள் நீர்.  சாதாரண மனுஷன் இல்ல நீர்.  நான் அன்னிக்கே சொன்னேனே நீர் அமானுடன்னு.  சரி, நேரம் கிடைக்கும்போது பேசறேன்.  நான் கிளாஸுக்கு இடையில இருக்கேன்.  (குரல் ரகசியமாக மாறுகிறது.)  கிளாஸ் முடிச்சுட்டு இன்னொரு சிட்டிங் உங்களோட பேசறேன்.  எதைச் சொல்றது எதை விட்றதுன்னு மறந்து போயுடுது.  நேர்ல பேசினா நம்ம ரெண்டு பேருக்கும் தகராறு ஆயிடும்.  (அது எப்போது என்று தெரியவில்லையே?) அதனால பொறுமையாப் பேசிப் போடறேன்.  கேட்டுட்டு சும்மா ஒரு சொல் காட்டினா போறும்.  நீர் அப்புறம் படிக்கலாம்னு போய்ட்டீர்னா கூட மனசு படபடப்பா ஆயிடும்.   

(இன்னும் இருக்கிறது.  இதையெல்லாம் ஒரு நாவலில் எழுதலாம் என்று இருந்தேன்.  இதேபோல் பத்து ஆண்டுகள் என்னிடம் மணிக் கணக்கில் பேசியிருக்கிறார் சோமன்.)    

 இப்போது சோமன் சொன்னபடி சுப்ரமண்யாய நமஸ்தேவை மற்றவர்களெல்லாம் எப்படிப் பாடியிருக்கிறார்கள் என்று பார்த்தேன்.  இளையவர்களில் ஒரே ஒருத்தர்தான் என்னைக் கவர்ந்தார்.  அமெரிக்காவைச் சேர்ந்தவர்.  இசைக்காக இங்கேயே வந்து விட்டார் என்று அறிகிறேன்.  ஓரிரு சினிமாவிலும் பாடியிருக்கிறார் போல.  சினிமா இவரை விழுங்கி விடக் கூடாது.  சினிமாவில் நுழைந்தால் தப்ப முடியாது.  அது ஒரு புதை மணல்.  நம் சங்கீத முன்னோடிகளில் நான் எதையெல்லாம் பார்க்கிறேனோ ஆராதிக்கிறேனோ அதில் ஓரளவாவது இந்த இளைஞரிடம் இருக்கிறது.  இவர் எதிர்காலத்தில் மிகப் பிரமாதமாக வருவார்.  ராமகிருஷ்ணன் மூர்த்தி என்று பெயர்.  இந்தப் பெயரை இன்றுதான் அறிகிறேன்.  கேட்ட மாத்திரத்தில் பிடித்துப் போயிற்று.  இவர் பாடிய தேவாரம்.

வானனை மதி சூடிய மைந்தனை,
தேனனைதிரு அண்ணாமலையனை,
ஏனனைஇகழ்ந்தார் புரம்மூன்று எய்த
ஆனனை,—அடியேன் மறந்து உய்வனோ?

பின்வருவது கே.வி. நாராயணஸ்வாமி

சோமன் தன் பேச்சில் ஒரு நாயனாரர் பற்றிக் குறிப்பிடுகிறார் அல்லவா?  அவர் பெயர் பாகனேரி கே. பில்லப்பன்.  கீழே லிங்க்.  ஒரு அதியற்புதமான நாதஸ்வரம்.  இவரெல்லாம் உலகப் புகழ் பெற வேண்டிய ஒரு கலைஞர்.  ஏன் இவரைப் பற்றி ஒரு தகவல் கூட இணையத்தில் இல்லை என்று தெரியவில்லை.