8. இசை பற்றிய சில குறிப்புகள்

இன்னும் ஒரு வாரம் கழித்தே இசைக்கு வருவேன் என்றேன்.  ஆனால் இதை இன்று எழுதாமல் போனால் மனதிலிருந்து போய் விடும் என்பதால் சுருக்கமாக எழுதி விடுகிறேன்.  பக்தி என்ற வார்த்தையை முந்தைய அத்தியாயத்தில் பயன்படுத்தவில்லை என்றாலும் நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.  திருக்குறள் போன்ற ஒரு உலகப் பொதுமறையை உலக இலக்கியத்தில் காண்பது அரிது.  ஈடு இணையில்லாத ஒரு அறநூல் அது.  அறநூல் மட்டும் இல்லை.  காமத்துப் பாலும் இருக்கிறது.  வள்ளுவரின் காலத்தில் எந்த நூலுமே கடவுள் வாழ்த்தோடுதான் ஆரம்பிக்கும்.  ஆனால் வள்ளுவர் மட்டுமே மத அடையாளமில்லாமல் தன் நூலை ஆரம்பிக்கிறார்.  குறள் அளவுக்கு அந்தக் காலத்திய உலக இலக்கியத்தில் பொதுமைத்தன்மையும் மதச் சார்பற்ற தன்மையும் உள்ள நூல் இல்லை.  அக்காலத்திய எல்லா அற நூல்களையும் வாசித்து விட்டே இந்தக் கருத்துக்கு வருகிறேன்.  இதெல்லாம் குறளின் சிறப்பு.  தமிழனின் பெருமை.  ஆனால் அதற்காக குறளை கர்னாடக சங்கீதத்துக்குப் பயன்படுத்த முடியுமா?  துளியும் சாத்தியம் இல்லை.  ஏனென்றால், இந்தியாவில் சங்கீதத்துக்கும் மதச்சார்பின்மைக்கும் சம்பந்தம் இல்லை.  இரண்டும் இரண்டு துருவம்.  சந்திக்கவே முடியாது.  இங்கே சங்கீதம் என்றாலே பக்திதான்.  ஒவ்வொரு இசைவாணரின் கதையும் ஏதோ புராணக் கதை போல் உள்ளது.  தீட்சிதரைப் பார்த்தால் முருகன் வந்து கல்கண்டு கொடுக்கிறான்.  இவர் பாட்டுக்குப் பாட ஆரம்பிக்கிறார்.  புரந்தர தாஸரை எடுத்துக் கொள்ளுங்கள்.  அவருக்குப் பணம்தான் கடவுள்.  பரம்பரை வைர வியாபாரி.  வைர வியாபாரம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  வட்டித் தொழில் வேறு.  பதினாறு வயதில் கல்யாணம்.  ஒரிஜினல் பெயர் சீனிவாசன்.  இருபது வயதில் பெற்றோர் மரணமடைந்து விட்டதால் வியாபாரம் பூராவும் சீனிவாசன் கையில் வந்து விடுகிறது.  இப்போது சொல்கிறோமே அம்பானி என்று.  அப்படி ஒரு பணக்காரர்.  நவகோடி நாராயணா என்று அழைப்பார்கள்.  ஒன்பது கோடிக்கு அதிபதி.  அது மட்டும் அல்ல.  மகா கஞ்சன் வேறு.  காசே கடவுள் என்று இருப்பவர் வேறு எப்படி இருப்பார்? ஒருநாள் அவருடைய கடை வாசலில் ஒரு வயதான ஏழை பிராமணர் தன் பிள்ளையின் உபநயனத்துக்குக் காசு வேண்டும் என்று கேட்கிறார்.  சீனிவாசனிடமா இதெல்லாம் நடக்கும்?  போயா அந்தாண்டை என்று திட்டி விரட்டி விடுகிறார் அந்த முதியவரை. 

முதியவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.  அப்படியே வந்து கொண்டிருக்கிறார். ஒரு தெருவில் ஒரு பிரம்மாண்டமான மாளிகை போன்ற வீடு தென்படுகிறது.  இவர்களால் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் அந்த வீட்டு அம்மாளிடம் தன் தேவையைச் சொல்கிறார்.  அந்த அம்மாள் முதியவரைப் பார்க்கிறார்.  வறுமை விளையாடி வைத்திருந்தது தோற்றத்திலேயே தெரிந்தது.   ’நம்மிடம் இத்தனை செல்வம் இருந்து என்ன பயன்?  ஒரு ஏழையின் உபநயனத்துக்கு உதவ முடியாமல் போகிறதே’ என விசனப்பட்டு தன் மூக்கிலிருந்த ஒரு வைர மூக்குத்தியைக் கழற்றிக் கொடுக்கிறார்.  உடனே அந்த ஏழை பிராமணருக்குத் தான் பார்த்த நகைக்கடை ஞாபகம் வருகிறது.  நேரே அங்கே போய் அந்த மூக்குத்தியை விலை பேசுகிறார். 

சீனிவாசனுக்கு ஒரே ஆச்சரியம்.  கோபம்.  காரணம், அந்த மூக்குத்தி அவர் மனைவி சரஸ்வதியினுடையது.  பணத்தைக் கொடுத்து முதியவரை அனுப்பி விட்டு கடுங்கோபத்துடன் வீட்டுக்கு வந்து மனைவியை அழைத்து மூக்குத்தியைக் கொடு என்கிறார்.  சீனிவாசனுக்கு அப்போது முப்பது வயது.  பதினாறு வயதில் திருமணம் முடிந்ததிலிருந்து இன்று வரை சரஸ்வதி அவரிடம் பொய் கூறியதில்லை.  இப்போது பார்த்து விடுவோம் என்ன நடக்கிறது என்று.  சரஸ்வதி உள்ளே வந்தாள்.  கணவனுக்குத் தெரியாமல் இதுவரை ஒரு காரியம் செய்ததில்லை.  இப்போது இப்படிப்பட்ட நிலை.  விஷத்தை எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றினாள்.  பார்த்தால் அதில் ஒரு அதிசயம்.  அவளுடைய மோதிரம் அதில் இருக்கிறது.  அவளால் நம்ப முடியாமல் ஓடி வந்து நடந்ததையெல்லாம் கணவனிடம் கூறி மோதிரத்தைக் கொடுக்கிறாள்.  அந்த முதிய பிராமணனை ஊரெல்லாம் தேடுகிறார்கள்.  எந்த மனிதனாலும் அவ்வளவு சடுதியில் ஊர் எல்லையைத் தாண்டியிருக்க முடியாது.  அந்த க்ஷணமே தன்னுடைய எல்லா சொத்தையும் தர்மத்துக்குக் கொடுத்து விட்டு, தன் மனைவியையும் மூன்று புதல்வர்களையும் அழைத்துக் கொண்டு கடவுளின் நாமத்தைச் சொல்லிப் பாடியபடி தெருவில் பிச்சை எடுத்து வாழ ஆரம்பித்தார் சீனிவாசன்.  அவர் மனைவியும் பிள்ளைகளும் கூட அதற்கு உடன்பட்டார்கள்.  விஜயநகர சாம்ராஜ்யம் பூராவும் அவர்களின் கால் படாத இடம் இல்லை.  இவரைப் பற்றி இந்தத் தொடரில் நான் பிறகு விரிவாக எழுதுவேன்.  இவர் கதையெல்லாம் புருடா அல்ல.  தன் கீர்த்தனைகளிலேயே அவர் அதையெல்லாம் விளக்கியிருக்கிறார்.  அவர் பாடிய முதல் கீர்த்தனையே அவருடைய முந்தைய வாழ்வின் அவலத்தைப் பற்றியதுதான்.   பிறகு நாற்பது வயதில் சந்நியாசம் பெற்றபோதுதான் இவர் புரந்தர தாஸா என்று அழைக்கப்படலானார்.  இவர் எதற்கு இப்போது என்றால், புரந்தர தாஸரின் அதிசய வாழ்க்கையை நம்பாத ஒருவர் புரந்தரரின் கீர்த்தனைகளை எப்படி ஆத்மார்த்தமாக உணர்ந்து பாட முடியும்?  இந்தியாவில் சங்கீதம் என்றாலே பக்திதானே?

புரந்தர தாஸர்தான் கர்னாடக இசையின் பிதாமகராகக் கருதப்படுபவர்.  பிறப்பு 1484.  இறப்பு 1565.  தியாகராஜருக்கெல்லாம் ரொம்ப முந்தையவர். தியாகராஜரின் காலம் 1767 – 1847. புரந்தர தாஸர் 4,75,000 கீர்த்தனைகளைப் பாடினார்.  அவரது நோக்கம் ஐந்து லட்சம் கீர்த்தனைகளாக இருந்தது.  அது அவரது காலத்துக்குள் முடியாது போல் தெரிந்ததால் அவரது புதல்வர் அந்தக் கடமையை நான் செய்கிறேன் என்றார்.  ஆனால் அது எனக்கும் இந்த ஜென்மாவில் முடியாது, அடுத்த ஜென்மாவில் பாடி விடுகிறேன் என்றார்.  அவர் சொன்னபடியே விஜயதாஸாவாகப் பிறந்து மீதி 25,000 கீர்த்தனைகளையும் பாடி முடித்தார்.  இந்தப் புரந்தர தாஸர்தான் அக்பரின் சபை வித்வானாக இருந்த தான்சென்னின் குருநாதர் ஸ்வாமி ஹரிதாஸின் குரு.   

இந்த வரலாறு எல்லாம் கட்டுக்கதைகள் என்று சொன்னால் இந்திய சங்கீதமே கட்டுக்கதை என்றுதான் முடிவு கட்ட வேண்டும். அப்படியானால் ஷேக்ஸ்பியர் சொன்னது போல உலகமே நாடக மேடைதான்.  சங்கரர் சொன்னது போல, எல்லாமே மாயாதான்.    இதெல்லாம் எனக்கு இன்று காலை நடையின் போது செம்பை வைத்தியநாத பாகவதரைக் கேட்டுக் கொண்டிருந்த போது ஞாபகம் வந்தது.  ஊத்துக்காடு வேங்கட கவியின் தாயே யசோதா என்ற பாடலை லயித்து லயித்துப் பாடிக் கொண்டிருந்தார் செம்பை.  எனக்கு அந்தக் கால சங்கீதக் கலைஞர்கள் அத்தனை பேர் மீதும் அளப்பரிய மரியாதையும் பக்தியும் இருந்தாலும் செம்பைதான் எனக்கு மிகவும் அந்தரங்கமானவர்.  காரணம், அவரது அணுகுமுறையில் காணப்படும் ஒரு துள்ளலும் இளமையும்தான்.  எனக்கு யேசுராஜாவைப் பிடிக்காது.  அவர் சினிமாவுக்குப் போகாமல் கர்னாடக சங்கீதத்திலேயே இருந்திருந்தால் ரசித்திருப்பேன்.  கர்னாடக இசைக் கலைஞர்கள் இப்போதைய சினிமாவில் பாடுவது என்பது வள்ளலார் ஆன்மீக மையம் வைத்திருப்பவர் அடுத்த தெருவில் ஒரு கசாப்புக் கடையும் வைத்திருப்பதைப் போன்றது.  இப்போதைய சினிமா என்ற வார்த்தையை மறக்காதீர்கள்.  யேசுதாஸ் செம்பையின் மாணவர்.  செம்பையோடு சேர்ந்து பாடும் இந்தக் கச்சேரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  குருவும் சிஷ்யனுமாகச் சேர்ந்து அதகளம் பண்ணியிருந்தார்கள்.      

ஊத்துக்காடு வேங்கடகவியின் தாயே யசோதா:

அந்தப் பாடல்:

ராகம்: தோடி

தாளம்: ஆதி

தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி (தாயே)

தையலே கேளடி உந்தன் பையனைப் போலவே இந்த
வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை (தாயே)

1. காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க முத்து
மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான்
காலசைவும் கையசைவும் தாளமோடு இசைந்து வர
நீலவண்ணக் கண்ணன் இவன் நர்த்தனம் ஆடினான்
பாலனென்று தாவி அணைத்தேன் அணைத்த என்னை
மாலையிட்டவன் போல் வாயில் முட்டமிட்டாண்டி
பாலனல்லடி உன் மகன் ஜாலம் மிக செய்யும் கிருஷ்ணன்
நாலு பேர்கள் கேட்கச் சொல்ல நாணமிக ஆகுதடி (தாயே)

2. அன்றொருநாள் இந்த வழி வந்த விருந்திருவரும்

அயர்ந்து படுத்துறங்கும் போதினிலே கண்ணன்

நின்றது போகக் கையில் இருந்த வெண்ணெயை அந்த

விருந்தினர் வாயில் நிறைத்து மறைந்தனனே!

நிந்தைமிகு பழியிங்கே பாவமங்கே என்றபடி

சிந்தைமிக நொந்திடவும் செய்யத் தகுமோ

நந்தகோபற்கிந்தவிதம் அந்தமிகு பிள்ளைபெற

நல்லதவம் செய்தாரடி நாங்கள் என்ன செய்வோமடி (தாயே)

3. எங்கள்மனை வாழவந்த நங்கையைத் தன்னம்தனியாய்

துங்க யமுனாநதிப் போகையிலே கண்ணன்

சங்கையுமில்லாதபடி பங்கயக் கண்ணால் மயக்கி

எங்கெங்கோ அழைத்துச் சென்று நிசி வந்தான்

உங்கள்மகன் நான் என்றான் சொல்லி நின்றபின்

தங்குதடையின்றி வெண்ணைத் தாரும் என்றான்

இங்கிவனைக் கண்டு இளநங்கையரைப் பெற்றவர்கள்

ஏங்கி எண்ணித் தவிக்கின்றார்! – நாங்கள் என்ன செய்வோமடி!  (தாயே)

4. தொட்டிலிலே பிள்ளை கிள்ளி விட்டதும் அவை அலற

விட்ட காரியம் அகல வெண்ணை தின்றான்!

கட்டின கன்றை அவிழ்த்து எட்டியும் ஒளித்து விட்டு

மட்டிலாத் தும்பை கழுத்தில் மாட்டிக் கொண்டான்!

விட்டுவிட்டு அம்மே என்றான் கன்றினைப் போலே

அட்டியில்லாத மாடும் அம்மா என்றதே!

கிட்டின குவளையோடும் எட்டினால் உன் செல்வமகன்

பட்டியில் கறவையிடம் பாலை யூட்டுறானடி  (தாயே)

5. சுற்றிச் சுற்றி என்னை வந்து அத்தைவீட்டு வழி கேட்டான்

சித்தத்துக்கெட்டும் வரையில் சொல்லி நின்றேன்

அத்துடன் விட்டானோ பாரும் ஆத்தங்கரை வழிகேட்டான்

அத்தனையும் சொல்லி விட்டு நின்றேன்

வித்தகமாய் ஒன்று கேட்டான் நாணமாகுதே!!

முத்தத்துக்கு வழிகேட்டு சத்தமிட்டாண்டி

அத்தனை இடம் கொடுத்து மெத்தவும் வளர்த்து விட்டாய்

இத்தனை அவனைச் சொல்ல குத்தமில்லையேயடி! (தாயே)

6. வெண்ணை வெண்ணை தாருமென்றான்! வெண்ணை தந்தால் தின்றுவிட்டு

பெண்ணைத்தாரும் என்று கண்ணடிக்கிறான்!

வண்ணமாய் நிருத்தமாடி – மண்ணினைப் பதத்தால் எற்றிக்

கண்ணிலே இறைத்துவிட்டுக் களவாடினான்!

பண்ணிசையும் குழலூதினான்!- கேட்டு நின்ற

பண்பிலே அருகில் வந்து வம்புகள் செய்தான்!

பெண்ணினத்துக்கென்று வந்த புண்ணியங்கள் கோடி கோடி

எண்ணீ உனக்காகுமடி கண்ணியமாய்ப் போகுதடீ!  (தாயே)

7. முந்தாநாள் அந்தி நேரத்தில் சொந்தமுடன் கிட்டே வந்து
விந்தைகள் அனேகம் செய்து விளையாடினான் ஒரு
பந்தளவாகிலும் வெண்ணை தந்தால்தான் விடுவேன் என்று
முந்துகிலைத் தொட்டிழுத்துப் போராடினான்

அந்த வாசுதேவன் இவன் தான் அடி யசோதா!
மைந்தன்என்று தொட்டுஇழுத்து மடிமேல் வைத்து
சுந்தர முகத்தைக் கண்டு சிந்தை மயங்கும் நேரம்
அந்தர வைகுந்தமோடு எல்லாம் காட்டினான் அடி! (தாயே)

ஊத்துக்காடு வேங்கட கவியின் காலம் 1700 – 1765.   இளமைக் காலத்தில் தன் தந்தையிடமே இசை பயின்றார் வேங்கட சுப்பையர்.  பின்னர் ”இதற்கு மேல் என்னிடம் வித்தை இல்லை” என்று தந்தை சொல்லவே, குருவைத் தேடி அலைந்து, குரு கிடைக்காமல் ஊத்துக்காடு காளிங்க நர்த்தன கிருஷ்ணனையே குருவாகக் கொண்டார் வேங்கட கவி.  ”என் கோவிலின் ஈசான மூலையில் உள்ள துளசி மாடத்தின் அருகே உனக்கு நான் இசை கற்பிப்பேன்” என அசரீரியாக கிருஷ்ணன் குரல் கேட்டது.  சொன்னது போலவே நடந்தது.  இந்தச் சம்பவங்களையெல்லாம் புரந்தர தாஸரைப் போலவே வேங்கட கவியும் தன் பாடல்களிலேயே விவரித்திருக்கிறார்.  ”கூடப் படித்தவன் குசேலன், ஆடல் கொடுத்து வைத்தவன் காளீயன், பகவத் கீதை கேட்டான் விஜயன், சங்கீர்த்தனம் கேட்டவன் அடியேன்” என்ற பாடல் ஒரு உதாரணம். 

உலக பந்தங்களையும் உடல் இச்சைகளையும் அறவே துறந்து விட்ட வேங்கட கவி வயிற்றுக்காக மட்டும் சிறிதளவு பிச்சை எடுத்துக் கொண்டார்.  தன் வாழ்நாள் பூராவும் பல அதிசயங்களை நிகழ்த்திய வேங்கட கவியின் தொடையில் கிருஷ்ணன் இருந்ததால் அவர் ஒருபோதும் தொடையைத் தட்டிப் பாடியதில்லை.   ஒருமுறை – அதாவது கிருஷ்ணனை நிரந்தரமாகத் தன்னுடன் தக்க வைத்துக் கொள்வதற்கு முன்பு – கிருஷ்ணனை தரிசிக்க வேண்டி நோன்பு இருந்தார் வேங்கட கவி.  பட்டினி கிடந்து தேகம் நலிவுற்று சாகக் கிடக்கும் தருணம்.  கிருஷ்ணன் வரவில்லை.  அந்த நிலைமையிலும் மெய்மறந்து தொடையில் தாளமிட்டபடி பாடிக் கொண்டிருக்கிறார் கவி.  அப்போது தாளம் போட முடியாமல் மடியில் இடறுகிறது ஒரு குழந்தை.  நானே கிருஷ்ணனைப் பாராமல் செத்துக் கொண்டிருக்கிறேன், நீ யாரப்பா குழந்தே என்று கேட்கிறார் வேங்கட கவி.  குழந்தையிடமிருந்து பதில் இல்லை.  மீண்டும் கேட்கிறார்.  பதில் இல்லை.  கொஞ்சம் சினங் கொண்டு குழந்தையை விசையுடன் எடுத்துக் கீழே வைக்கிறார்.  அப்போது குழந்தை வாய் திறந்து ”வேங்கட சுப்பையரே, நீ யாரைக் காண்பதற்காக இத்தனைக் காலம் பாடிக் கொண்டிருந்தாயோ அவன் தான் நான்” என்று சொல்கிறது.  அப்போது வேங்கட கவி “என் உடலெல்லாம் தளர்ந்து போன இந்த நிலையில் வந்து என்ன பயன்?  உன்னை வணங்குவதற்குக் கூட என் உடம்பில் சக்தி இல்லையே?” என்கிறார்.  அப்படி உன்னை விட மாட்டேன் என்று சொன்ன கிருஷ்ணன் அவரைப் பழையபடியே ஆக்கினான் என்கிறது கதை.  பிறகு வேங்கட கவியிடம் உனக்கு என்ன வேண்டும் கேள் என்கிறான் கிருஷ்ணன்.  இவர் வேறு என்ன கேட்கப் போகிறார்? 

“நான் பாடி நீ ஆட வேண்டும்.” 

கிருஷ்ணன் அதற்கு ஒரு நிபந்தனை விதித்து ஆட ஆரம்பிக்கிறான்.  ”நீ பாட முடியாமல் போகிற போது நான் சிலையாகி விடுவேன்.”  வேங்கட கவி பாடத் துவங்குகிறார். தாம்தீம் தரநதாம் என்று தொடங்கும் பாடல் அது.  ஒரு கட்டத்தில் கிருஷ்ணனின் ஆட்டத்துக்கு கவியால் ஈடு கொடுக்க முடியாமல் போக, கிருஷ்ணன் சிலையாகிறான்.  வேங்கட கவியும் கிருஷ்ணன் இருக்கும் இந்தக் கோவிலே என் வைகுண்டம் என்று சொல்லி அங்கேயே தங்கி விட்டார்.  இந்தச் சிலை இந்தக் கோவில் எல்லாம் ஊத்துக்காட்டில் இன்னும் உள்ளது.   இன்றும் அந்தக் கோவிலில் பாடலும் சலங்கை ஒலியும் கேட்பதாக சிலர் சொல்கிறார்கள்.  வேங்கட கவியின் மரணம் பற்றி எதுவும் செய்திகள் இல்லை.  ஆனால் சுயசரிதைத் தன்மை வாய்ந்த அவரது பாடல்கள் ஐந்து நூற்றாண்டுகள் கடந்தும் இன்னும் வாழ்கின்றன.  எல்லாம் நேற்று எழுதின பாடல்களைப் போல் இருக்கின்றன.  தாயே யசோதா பாடலில் செம்பையே வேங்கட கவியாக மாறுகிறதை நீங்கள் கேட்டு உணர வேண்டும்.  செம்பையின் குரலைக் கேட்டால் என் உள்ளம் உடல் எல்லாம் துள்ளுகிறது.  வேறு எந்தக் கலைஞரிடமும் எனக்கு இத்தனை துள்ளல் வர மாட்டேன் என்கிறது.  பாலக்காடு மணி ஐயர் செம்பை பற்றிப் பேசும்போது ”அரியக்குடி பேச்சு இருக்கும் வரை பாடினார்; செம்பை மூச்சு இருக்கும் வரை பாடினார்” என்பார்.  உண்மைதான்.  ஒரு கச்சேரியில் யேசுதாஸும் செம்பையோடு மேடையில் இருந்த போது செம்பை ரசிகர்களிடம் “யாரும் யேசுதாஸிடம் சினிமா பாட்டுப் பாடச் சொல்லிக் கேக்காதேங்கோ” என்று கேட்டுக் கொள்வதைப் பார்த்த போது என் நெஞ்சமெல்லாம் பற்றி எரிந்தது.  நான் யேசுதாஸாக இருந்தால் செம்பையோடு சேர்ந்து மேடை ஏற மாட்டேன்.  அல்லது குறைந்த பட்சம், பொதுஜனங்களின் மத்தியிலாவது செம்பையோடு மேடையேற மாட்டேன்.  எப்பேர்ப்பட்ட பெரும் கலைஞன் விசிலடிச்சான் குஞ்சுகளிடம் கெஞ்ச வேண்டியிருக்கிறது.  அத்தனை அடக்கமானவர் என்று எண்ணிக் கொண்டேன்.   

புரந்தர தாஸர் கதை, ஊத்துக்காடு வேங்கட கவி கதை எல்லாமே கற்பனை என்று மேற்கத்திய அறிவு சொல்லும்.  அப்படிச் சொல்பவர்கள் இந்திய சங்கீதத்தின் துவக்க காலக் கலைஞர்கள் அத்தனை பேருடைய வாழ்வையும் அவர்களது பாடல்களையும் படித்து விட்டு முடிவுக்கு வரக் கோருகிறேன்.  அவர்களது பாடல்கள் அனைத்தும் சுயசரிதத்தன்மை வாய்ந்தது.  மேற்கத்திய பகுத்தறிவு வாதம், பொருள்முதல்வாதத்தினால் இந்திய மரபைப் புரிந்து கொள்ள இயலாது.   

பாரதி பயிலகம் என்ற தளத்தில் வேங்கட கவி பற்றிய சில தகவல்கள் உள்ளன.  அது: வேங்கட கவியின் தமையனார் காட்டு கிருஷ்ணையருக்கு மூன்று புதல்விகள்.  இவர்களும் இவர்களின் வாரிசுகளும் வேங்கட கவியின் பாடல்களைப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர் கிருஷ்ண சாஸ்திரி.  காட்டு கிருஷ்ணையரின் மகள் வழிப் பேத்தியின் கணவர் ஒரு இசைக் கலைஞர்.  இவரது சீடர்களில் ஒருவர் குட்டி கவி.  பெரிய கவி என்றால் வேங்கட கவி என்பதால் குட்டி கவி. மற்றொருவர் கணபதி முனி.  வேங்கட கவியின் பாடல்களை அதிகம் பாடினார்.  இதைத் தொடர்ந்து அப்பாடல்களைப் பிரபலப்படுத்தியவர் ஹரிகதா வித்வான் ராஜு சாஸ்திரிகள்.

https://bharathipayilagam.blogspot.com/2011/05/blog-post_22.html

வேங்கட கவி பற்றித் தேடிக் கொண்டிருந்த போது ஒரு செய்தி கிடைத்தது.  அவரது வழித் தோன்றல்கள்தான் நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் மற்றும் நீடாமங்கமலம் அலமேலு மற்றும் அவர் சகோதரர் சுப்பராமனின். 

இப்படி நீண்ட நேரமாக வேங்கட கவி பற்றித் தேடிக் கொண்டிருந்தேன்.  செம்பை தவிர வேறு யார் பாடினதும் அதிகமாக ஈர்க்கவில்லை.  வேங்கட கவியின் பாடல்களை பழைய பாடகர்கள் யாரும் அதிகமாகப் பாடியதாக எனக்குக் கிடைக்கவில்லை.  இந்த நிலையில்தான் நீடாமங்கலம் அலமேலு பாடிய வேங்கட கவியின் இந்த ஒலிப்பதிவு கிடைத்தது.  ஆளாவதெந்நாளோ.  அருமையான குரல்.  மிகச் சிறப்பாகப் பாடியிருக்கிறார். 

பாடல்

ராகம்: பரசு

தாளம்: ஆதி

பல்லவி:

ஆளாவதென்னாளோ சிவமே அடியார்கடியார்க் கடியனாய் (உன்)

அநு பல்லவி:

கேளாதளிக்கும் வரமே அண்ட மேலானதற்கும் பரமே இளம் தாளான கமல முட்புறமே பதம்

ததிக்க தாமென விதித்த தாளமும் துதிக்க தாமென மதித்து கதிபெற (ஆளாவ)

சரணம்

புன்மை பிறவி போக வேணும் எடுத்தால் புண்ணிய பிறவியாக வேணும்

இன்னவரில் ஒருவரைப் போலே இணையொன்றும் இல்லா பதத்திணையாகவேணும்

1. சீர்காழிமணம் சிவபாதமகன் திருநாவரசன் மணிவாசக சுந்தரன் எனும் (இன்ன)

2. சிறுத்தொண்ட திருநீலகண்ட விறன்மிண்ட நமிநந்தி தண்டி அடிகள் எனும் (இன்ன)

3. ஐயடிகள் காடவர்கோன் ஆனாய கணம்புல்லர் நின்ற சீர்நெடுமாற

கணநாத முனையாடுவாரொடு திருநாளைப் போவார் எனும் (இன்ன)

4. மெய்ப்பொருளார் பெருமிழலைக் குரும்பர் ஏனாதிநாத கலிக்கம்பர்

அமர்நீதி நரசிங்க முனையரயர் சடைய சண்டீச கலிய காரியாரெனும் (இன்ன)

5. மானக்கஞ்சார நேச பூசலாரொடு வாயிலார் சோ

மாசிமாற மங்கையர்க்கரசி குங்கிலியக்கலயார் இளையாங்குடி மாற அறிவாட்டாய கூற்றுவர் கோட்புலி சாக்கியர் சத்தியர் ‐ சிறப்புலியர் செறுத்துணையர் புகழ்த்துணையர் குலச்சிறையர் கழற்றறிவர்

இயற்பகையர் எனும் (இன்ன)

6. திருமூல முருக மூர்த்தி அப்பூதி ருத்திரபசுபதியார் இசைஞானியர் நீலநக்கர் இடங்கழியர் அதிபத்தர் எறிபத்தர் ஏயர்கோனொடு நீலகண்ட யாழ்ப்பாண புகழ்சோழ கோட்செங்கட்சோழ கழற்சிங்கர் காரைக்கால் நகர்மேவு கனியாரொடு கண்ணப்பர் குறிப்புத்தொண்டர் எனும் (இன்ன)

இணையொன்றும் இல்லா பதத்திணையாக வேணும்

ஊத்துக்காடு வேங்கட கவியின் பாடல்களில் கவிதை கொஞ்சி விளையாடுகிறது.  மிக அற்புதமான இலக்கியப் பிரதி அப்பாடல்கள்.  அடுத்து, அதன் தாள லயம்.  நடனத்துக்காகவே இயற்றப்பட்டது போல் தெரிகின்றன.  கிருஷ்ணனின் நடனத்துக்கே பாடியிருக்கிறார் என்று உணர முடிகிறது. 

கவித்துவத்துக்கு உதாரணமாக, அலைபாயுதே கண்ணா என்ற பாடல்.  ஏ.ஆர். ரஹ்மானால் பிரபலமான பாடல்.  நீங்களெல்லாம் அது வைரமுத்து எழுதினதாக நினைத்துக் கொண்டிருக்கலாம்.   இணையத்திலும் வைரமுத்து என்றே காண்கிறது.  300 ஆண்டுகளுக்கு முன்னே எழுதப்பட்ட பாடல் வைரமுத்து பெயரில்.  தமிழர்களின் வரலாற்று உணர்வு.  கீழே பாடல்:

அலைபாயுதே… கண்ணா, என் மனம் அலைபாயுதே
ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே… கண்ணா, என் மனம் அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே… கண்ணா…

நிலைபெயராது சிலைபோலவே நின்று…
நிலைபெயராது சிலைபோலவே நின்று,
நேரமாவதறியாமலே மிக விநோதமாக முரளீதரா என் மனம்
அலைபாயுதே… கண்ணா…

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே…
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே…
திக்கை நோக்கி என் புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே
கனித்த/ (கதித்த) மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
கனித்த/(கதித்த) மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து மகிழ்த்தவா
கலை கடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா
கதறி மனமுருக நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ
கதறி மனமுருக நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ, இது முறையோ, இது தர்மம் தானோ?
இது தகுமோ, இது முறையோ, இது தர்மம் தானோ?!
குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே மனது வேதனை மிகவொடு
அலைபாயுதே… கண்ணா, என் மனம் அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே… கண்ணா…!

இந்தப் பாடலைப் பார்த்தால் நேற்று எழுதியது போல் இருக்கிறது.  வேங்கட கவியின் பெரும்பாலான பாடல்கள் இப்படித்தான் சமகாலத்தவையாக இருக்கின்றன. 

இந்தப் பாடலை இப்போதைய சங்கீதக் கலைஞர்கள் பாடியது எதுவும் எனக்கு ரசிக்கவில்லை.  சினிமாவில் ரஹ்மானின் இசையில் பாடியதுதான் கேட்கும்படி இருக்கிறது. 

ஊத்துக்காடு கும்பகோணத்திலிருந்து 11 கி.மீ. தூரத்தில் வெட்டாற்றின் வடகரையில் உள்ளது.  கும்பகோணத்திலிருந்து பட்டீச்சரம், ஆவூர் வழியாகச் சென்றால் ஊத்துக்காடு.  மூலவர் வேதநாராயணப் பெருமாள்.  உற்சவர் காளிங்க நர்த்தனப் பெருமாள்.

***

என் சக எழுத்தாளர்கள் மற்றும் மாணவர்கள் தவிர மற்றவர்கள் இந்தத் தளத்தை வாசிக்கும் நண்பர்கள் இதற்குக் கட்டணமாக அல்லது நன்கொடையாக நீங்களே ஒரு தொகையை நிர்ணயித்து அனுப்பி வைக்க முயற்சி செய்யுங்கள்.  மாதாந்திரக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களும் இதே முறையைப் பின்பற்றி எனக்குப் பணம் அனுப்பி வைக்கலாம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai