பூச்சி 175: ஆஞ்சநேயர்

S.Y. Krishnaswamy எழுதிய Thyagaraja: Saint and Singer என்ற புத்தகம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.  யாருக்கும் ஏதாவது வாய்ப்பு கிடைத்தால் எழுதுங்கள்.  கிண்டிலில் கிடைத்தாலும் பரவாயில்லை.  அல்லது, ஏதாவது நூலகத்தில் இருக்கிறதா? 

இசை தொடரை இன்றும் எழுத நிறைய உத்வேகம் கிடைத்தது.  இசை தொடருக்குக் கிடைத்தது போன்ற உற்சாகமான பாராட்டு இதுவரை என் வாழ்நாளில் பார்த்திராதது.  இன்றும் ஒரு பன்னிரண்டு மணி நேரக் கட்டுரைக்கு வேலை இருந்தது.  அசோகாவில் உட்கார்ந்து விட்டேன்.  மார்ச்  கெடு என்று பப்ளிஷரிடமும் சீனியிடமும் சொல்லி விட்டேன்.  கொடுத்த வாக்கைக் காப்பற்ற வேண்டும். 

பதினெட்டாம் தேதி என் பிறந்த நாள் ஸூம் சந்திப்பில் பார்க்கலாம்.  சென்ற ஆண்டு இரண்டு மூன்று நண்பர்கள் கேக் அனுப்பியிருந்தார்கள்.  மெக்ரனெட்.  எனக்கு கேக் ரொம்ப இஷ்டம்.  ஆனால் அதுவும் வைன் மாதிரி ஆகி விட்டது.  ஆண்டுக்கு ஒரு முறை என்று.  பிடித்த விஷயத்தைக் கொஞ்சம் ருசியாக சாப்பிடலாமே என்று விஷயத்தைச் சொல்கிறேன்.  மெட்ரனெட்டை விடப் பல மடங்கு பிரமாதமான கேக் இங்கே மைலாப்பூரில் ஒரு இடத்தில் கிடைக்கிறது.  பிராண்ட் இல்லை.  ஒரு வீட்டுத் தயாரிப்பு என்பதால் பிரபலமும் இல்லை.  மைலாப்பூர் பிராமணர்களுக்கு மட்டுமே தெரியும்.  அவர் ஒரு வட இந்தியர்.  முட்டை கலந்தும் செய்வார்.  பிராமணர்களுக்கு முட்டை இல்லாமலும் செய்வார்.  அவந்திகாவும் சாப்பிட வேண்டும் என்பதால் முட்டை கலந்ததை நான் சாப்பிட்டது இல்லை.  முட்டை கலக்காததே சொர்க்கமாக இருக்கும்.  பத்மஸ்ரீ என்று பெயர்.  ஹோம் டெலிவரி இல்லை.  ஆனால் இப்போது ஸ்விக்கி கடவுள் இருப்பதால் அவர்களிடம் தெரிவித்தால் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து விடுவார்கள்.  ஆனால் முதல் நாளே ஆர்டர் கொடுத்து விட வேண்டும்.  ஆர்டருக்கு ஏற்ற அளவுதான் செய்வார்கள்.  மைலாப்பூர் சி.ஐ.டி. காலனியில் உள்ளது.  இதையெல்லாம் உங்கள் தகவலுக்காகவும் சொல்கிறேன்.  விலாசம் கீழே.  அதன் முதலாளி வள்வள்ளென்று விழுவார்.  அதைக் கண்டு கொள்ளக் கூடாது.  ஆனால் மிகவும் நல்லவர். 

Padmashri Foods, 4/7, second cross street, C.I.T colony, mylapore, Chennai, Tamil Nadu 600004.  Phone: 077081 72666  and 044- 2499 7567

இவ்வளவு சிரமம் எதற்கு என்று நினைத்தால் பூனை உணவே வாங்கி அனுப்பி விடலாம்.  உத்தமம்.  காகங்களும் சாப்பிடுவதால் பூனை உணவின் தேவை இருந்து கொண்டே இருக்கிறது.  ஒருநாள் நானும் நண்பரும் நானும் காலை நடை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தோம்.  அப்போது மந்தவெளி பார்க் அருகே ஒருத்தர் காகங்களுக்கு பொட்டலம் பொட்டலமாக பொங்கல் கொடுத்துக் கொண்டிருந்தார்.  நின்று பார்த்து சிலாகித்தேன்.  நண்பர் ஒரு விஷயம் சொன்னார்.  ”இதன் இன்னொரு பக்கமும் சொல்கிறார்கள், காகங்களுக்கு இயல்பான வேட்டையாடித் தின்பதை இப்படிப்பட்ட செயல்களால் இல்லாமல் ஆக்கி dependant ஆக்கி விடுகிறோம்.  நான் சொல்வது சரியா தப்பா என்று தெரியவில்லை.”  இப்படி சிலர் சொல்லலாம்.  ஆனால் இதில் ஒரு சதம் கூட நியாயம் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.  இங்கே காகங்களுக்கு உணவு இல்லை என்பதே எதார்த்தம்.  குப்பை கூளம் இல்லை.  குறைந்த பட்சம் மைலாப்பூரில்.  செத்த எலி இல்லை.  சாக்கடை இல்லை.  உணவே கிடைப்பதில்லை.  கொரோனா காலத்துக்கு முன்பும் அப்படியே.  ராமகிருஷ்ண பரமஹம்சரும் ஞானிதான்.  இப்போதைய பில்லியனர் சாமியார்களும் ஞானி மாதிரிதான் பேசுகிறார்கள்.  ஆன்மீகமே அப்படி வீழ்ந்து கிடக்கும்போது காகங்களின் வாழ்விலும் மாறுதல் இருக்காதா?  நாம் போட்டால்தான் காகங்களுக்கு உணவு. 

மீனவ மக்களிடம் ஜீவகாருண்யம் மிச்சமிருக்கிறது.  மீன் கழிவுகள் மட்டும் இல்லாமல் மீன்களையும் போடுகிறார்கள்.  கடல் மாதா எங்களுக்கு மட்டும் உரித்தானது இல்லை; உங்களுக்கும்தான் என்ற அறிதல் அவர்களுக்கு இயல்பாகவே இருக்கிறது.  ஆனால் நாம் ஜீவகாருண்யத்தை இழந்து விட்டது மட்டும் அல்லாமல் மெக்காலேவினால் மூளைச் சலவை செய்யப்பட்டு விட்டதால் காகங்களுக்கு உணவிடுதல் ஒருவித பித்ரு கடன் என்பதையும் நாம் ஒப்புக்கொள்வதில்லை.  பித்ருவாவது மயிராவது.  என்ன நிரூபணம்?  சனி என்பது ஒரு கிரகம்.  ஈஸ்வரன் அல்ல.  மெக்காலே சொல்கிறார்.  அவர் சொன்னால் சரி.  காகங்கள் பட்டினி கிடக்கின்றன.

விடாமல் மழை பொழிந்து கொண்டிருந்தது.  பால்கனியில் காகங்கள் மழையில் நனைந்தபடி நான் வந்து கொடுக்கும் உணவுக்காக உட்கார்ந்திருந்தன.  அந்தக் காட்சியைப் பார்த்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்?  சொல்லுங்கள், கேட்டுக் கொள்கிறேன்.  அத்தனை காகங்களும் எனக்கு செத்துப் போன ஸோரோவாகவே தோன்றின.  என் பணிப்பெண் பார்த்தால் அந்தக் காகங்களை விரட்டி அடிப்பார்.  அம்மா, விரட்டாதீர்கள், இந்தப் பூனை உணவை எடுத்துப் போடுங்கள் என்று சொன்னால் என்னை ஏதோ பைத்தியம் என்று நினைக்கிறார்.  கிராமத்துப் பெண்மணியான என் அம்மா அப்படி நினைக்கவில்லை என்பதுதான் இந்த ஐம்பது ஆண்டு வளர்ச்சி. 

காயத்ரி ஒரு விஷயம் சொன்னாள்.  சென்ற மாதம் ஒருநாள் அவர்கள் வீட்டு பால்கனிக்கு ஒரு பெரிய குரங்கு வந்திருக்கிறது.  பார்த்தாலே பயப்படும் தோற்றம்.  அடடா, பசியோடு வந்துருக்கும் அம்மா, ஏதாவது பழம் கிழம் போட்டியா என்றேன்.  ஏனென்றால், நாங்கள் அப்பு தெருவில் தனி வீட்டில் இருந்த போது வாரம் ஒருமுறை குரங்குகள் வரும்.  மாமரத்தில் மாம்பழத்தைத் தின்று விட்டுப் போகும்.  பழ சீஸன் இல்லாவிட்டால் ஆப்பிள் கொடுப்போம்.  சாப்பிடும்.  ஆனால் காயத்ரி வீட்டில் ஒரு பூனை இருக்கிறது.  குரங்கு பாட்டுக்கு தினம் வந்தால் பூனை பயப்படும்.  மேலும், குரங்கு தன் குட்டிகளை அழைத்து வந்து விடலாம்.  மேலும், வீட்டுக்குள் வர முயற்சிக்கலாம்.  எல்லாவற்றையும் விட, வீட்டிலும் பழம் இல்லை.  இப்போதெல்லாம் காயத்ரியிடம் பேசினால் என் முதல் கேள்வி, குரங்கு வந்ததா என்பதுதான்.  ஒரு மாதமாகியும் குரங்கு வரவில்லை.  வந்தது ஆஞ்சநேயர் என்று சொன்னால், வயதானதால் உங்களுக்குக் கொஞ்சம் ஏதோ ஆகி விட்டது என்று சொல்வீர்கள். அப்படி நினைப்பதுதான் இந்திய மரபு என்று சொன்னால் முடிந்தது கதை.  நான் இந்துத்துவா ஆகி விடுவேன்.  விடுங்கள்.  இனிமேல் குரங்கு வந்தால் காயத்ரி பழம் கொடுப்பாள் என்பது நிச்சயம். ஆனால் வரும் என்று தோன்றவில்லை.  அந்தக் குரங்கு என் கனவுகளிலும் வருகிறது.  பசியினால்தான் வீடு தேடி வந்தது.  நம் ஊர்களில் மரங்கள் இல்லை.  இதில் பழ மரங்களுக்கு எங்கே போவது?  நாய் பூனைகளின் காவலர்கள் சிலர் இருக்கிறார்கள்.  குரங்குகள் பாவம்.  குரங்குகள் சைவம் வேறு. 

பிராணிகளின் பசி என்னை மிகவும் துயருறச் செய்கிறது.

charu.nivedita.india@gmail.com