176. பண உறவு

என் நைனா ஒண்ணாங்கிளாஸ் வாத்தியாராக இருந்து உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றார்கள்.  ஆறு குழந்தைகள்தான் வாழ்வின் ஒரே பொழுதுபோக்கு.  ஒரே இன்பம்.  பைசா பைசாவாகச் சேர்த்து, உலக மகா கஞ்சனாக வாழ்ந்து சென்னை கௌரிவாக்கம் அருகே ஒரு ரெண்டு கிரௌண்டு நிலம் வாங்கி குடிசை போட்டுக் கொண்டு இன்பமாக வாழ்ந்தார்கள்.  என் கடைசித் தம்பிக்கு சுழி சரியாக இல்லாததால் உருப்படவில்லை. அதனால் அந்த நிலத்தையும் வீட்டையும் அவன் பெயரிலேயே எழுதி வைத்து விட்டு இறந்து போனார்கள்.  கூடவே அம்மாவும் விடைபெற்றார்கள்.  என் தம்பி வாழ்க்கையில் உருப்படாதது மட்டும் அல்லாமல் ஆயுள் ரேகையிலும் பாதகம்.  நாற்பதிலேயே புற்றுநோய் வந்து விடைபெற்று விட்டான். அவன் மனைவி வேறு மதத்தினள்.  குழந்தையும் இல்லை.  அந்த நிலத்தையும் வீட்டையும் அந்தப் பெண் அவர் என்ன செய்தார் என்ன நடந்தது என்று தெரியவில்லை.  இப்போது அந்த இடம் ஒரு மதப் பிரச்சார ஸ்தாபனமாக இருந்து வருகிறது.  மிகப் பெரிய வடிவேலு காமெடி மாதிரி இருக்கிறது எனக்கு.  ஒருத்தர் வாழ்நாள் பூராவும் வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி பணம் சேர்த்து ஒரு நிலத்தை வாங்கி வீட்டைக் கட்டினால் அது எங்கே போய் நிற்கிறது பாருங்கள்.  இருந்தும் இந்த மனிதர்களுக்குக் கொஞ்சமும் புத்தி வரவில்லை. 

தொடர்ந்து என் உறவுகள் எல்லோரும் – பரம்பரைப் பணக்காரர்கள் இல்லை என்பதால் – திரும்பத் திரும்ப வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி வீட்டைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வீடு, இரண்டு வீடு, மூன்று வீடு என்று.  என்னைப் பார்த்தால் என்னண்ணே, வீடு கீடு கட்டலியா என்று கேள்வி.  சுடுகாடு போகுமட்டும் இதையே கேட்டுக் கொண்டிருப்பார்கள் போலிருக்கிறது.  நானும் அப்படிக் கேட்பவர்களை என் வாழ்விலிருந்து delete செய்து கொண்டே இருக்கிறேன்.  திரும்பத் திரும்ப முளைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.  இப்போது சில ஆண்டுகளாக இந்த “வீடு கட்டும்” கும்பலைக் கண் கொண்டும் காண்பதில்லை.  எந்த விசேஷத்துக்கும் போவதில்லை. 

அவந்திகா குடும்பம் கெஜக்கோல் பார்ட்டி.  அய்யங்கார் இல்லையா.  ஒரு வீடு.  இரண்டு வீடு.  மூன்று வீடு.  நான்கு வீடு.  ஆளாளுக்கு அமெரிக்கா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா.  படிக்காமலேயே எல்லாம் நூற்றுக்கு நூறு பார்ட்டி.  உங்களுக்கெல்லாம் மெடிக்கல் கிடையாது, கவர்ன்மெண்ட் ஜாப் கிடையாது என்று எல்லா கதவுகளையும் மூடினாலும் போங்கடா வெண்ணெய்களா என்று சொல்லி விட்டு ஸாஃப்ட்வேரைப் படித்து கோல்ட் மெடல் வாங்கி அமெரிக்காவுக்கும் இன்னபிற வெள்ளை தேசங்களுக்கும் விமானம் ஏறி விட்டனர்.  வீடு வீடாகச் சேர்ந்து கொண்டே இருக்கிறது.  ஆனால் எங்களுடைய பல பட்டறைக் குடும்பத்துக்கும் இந்த அய்யங்கார் குடும்பத்துக்கும் என்ன வித்தியாசம் என்றால், அய்யங்கார்கள் வாயையே திறப்பதில்லை.  பார்ப்பதற்கு நம்மை விட ஏழை போன்ற தோற்றம்.  ஒண்ணுமே தெரியாதது போன்ற முகம்.  பேங்க் பேலன்ஸ் ஆயிரம் ரூபாய் என்பது போன்ற வாழ்க்கை.  பார்த்தால் தெருவுக்குத் தெரு வீடு.  அவந்திகாவிடமும் வந்து ஏண்டி நீ வீடு வாங்கலை என்று கேட்பதில்லை.  வாயே திறப்பதில்லை.  இதுதான் வித்தியாசம்.  ஒன்று தவக்களைக் கூட்டம்.  இன்னொன்று, வேண்டாம், in-lawsஐப் பகைத்துக் கொள்ளக் கூடாது. 

என் நண்பர் ஒருத்தரின் சொந்தக்காரப் பையன் அமெரிக்காவில் வாசம்.  அவர் சம்பளம் 8000 டாலர்.  மாதம்.  அவர் மனைவி சம்பளம் 6000 டாலர். ஒரு குழந்தை.  இங்கே சென்னையில் வீடு வீடாக வாங்கித் தள்ளிக் கொண்டே இருக்கிறார்கள். 

இதெல்லாம் எனக்கு சமீபத்தில் ஒரு வாசக நண்பர் என்னை அணுகியபோது ஞாபகம் வந்தது.  ஏற்கனவே அவருடைய அணுகுமுறை எனக்கு ஒத்துவராததாக இருந்ததால் அவரிடம் நான் கொண்டிருந்த தகவல் தொடர்பை நிறுத்தி விட்டேன்.  நான் யாரையும் விமர்சிப்பதே இல்லை.  எனக்கு ஒத்து வராததால் ஒதுங்கி விடுவேன்.  அது என் உரிமை.  என் சுதந்திரம்.  இல்லையா?  என்னை உங்கள் வீட்டுக்கு அழைக்கிறீர்கள்.  வீட்டுக்கு வருவதை நான் விரும்புவதில்லை.  இருந்தாலும் வற்புறுத்தி அழைக்கிறீர்கள்.  வருகிறேன்.  எனக்குத் தேநீர் தருகிறீர்கள்.  அப்படியானால் நான் யார் என்று உங்களுக்குத் தெரியவில்லை.  ஏனென்றால், நான் ஒரு காஃபி பிரியன் என்று ஆயிரம் முறை எழுதி விட்டேன்.  இன்னொன்று, நான் தேநீரே அருந்துவதில்லை, எனக்குப் பிடிக்காது என்றும் ஆயிரம் முறை எழுதி விட்டேன்.  இருந்தாலும் எனக்குத் தேநீர் கொடுத்தீர்கள் என்றால் என்னை உங்களுக்குத் தெரியவில்லை என்றுதானே பொருள்?  இதற்குத்தான் நாகரீகமான வீடுகளில் உங்களுக்குத் தேநீர் வேண்டுமா, காஃப்பி வேண்டுமா, ஜூஸ் வேண்டுமா என்று கேட்டு விடுவார்கள்.  அந்த வாய்ப்பும் இல்லாமல் தேநீர் கொடுத்து விட்டால் நான் உடனே ‘அன்பாகக் கொடுத்து விட்டார்கள், குடித்து வைப்போம்’ என்று குடித்து விட மாட்டேன்.  நான் தேநீர் குடிப்பதைல்லை என்று சொல்லித் திருப்பிக் கொடுத்து விடுவேன்.  இதில் சமரசமே இல்லை.  மீறிக் குடித்தால் வாந்தி எடுத்து விடுவேன்.  விதிவிலக்கு.  சென்னை மவுண்ட் ரோட்டில் சாந்தி தியேட்டருக்கு அருகில் உள்ள புஹாரி ஓட்டல் டீ தான்.  அந்த டீயைப் போல் நாகூரில் மட்டும்தான் கிடைக்கும்.  நாகூரில் இந்துக்கள் வீட்டில் அல்ல.  முஸ்லீம்கள் வீட்டில்.  இந்துக்களுக்கு டீயே போடத் தெரிவதில்லை.  கேரளா போனால் கட்டஞ்சாயா குடிப்பேன்.  அது ரொம்பப் பிடிக்கும்.  ரொம்ப ஸ்ட்ராங்காக இல்லாமல், சற்றே மதுரம் கூடுதலான கட்டஞ்சாயா. 

இப்படி என் இஷ்டத்துக்கு மீறி டீ கொடுத்து உபசரிக்கும் வீடுகளுக்கு நான் எப்படிப் போவதில்லையோ அதேபோல்தான் எனக்கு ஒவ்வாத பழக்க வழக்கம் உள்ளவர்களோடு பழகுவதில்லை.  அந்தப்படியே அந்த நண்பரிடமிருந்தும் ஒதுங்கினேன்.  ஒவ்வாத என்றால் எனக்கு ஒத்து வராத என்று மட்டுமே பொருள்.  டீ எனக்குப் பிடிக்காது என்பதால் டீ கெட்ட விஷயமா?  எனக்குப் பிடிக்காது, அவ்வளவுதான். 

அந்த நண்பர் சமீபத்தில் எனக்கு புதுமைப்பித்தன் பேச்சு வேண்டும் என்று கேட்டிருந்தார்.  மெல்பர்னில் வசிக்கிறார்.  நல்ல செழிப்பான வேலையில்தான் இருக்கிறார்.  இதுவரை நம் இணையதளத்துக்கு சந்தாவோ நன்கொடையோ அனுப்பியது இல்லை.  அது பற்றி எனக்குக் கவலையும் இல்லை.  அனுப்ப வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே?  ஆனால் புதுமைப்பித்தன் பேச்சு காலையில் ஆறு மணிக்கு வந்து கேட்டால் கட்டணம் இல்லை.  அது கூட அந்த ஹைதராபாத் அமீர்பேட்டை அய்யங்கார் மெஸ் சிஸ்டம்தான்.  சாப்பிடலாம்.  கை கழுவி விட்டுக் கிளம்பும் போது கல்லா பக்கம் போய் காசு கொடுக்க வேண்டும்.  என்னென்ன சாப்பிட்டீர்கள் என்று கல்லாவில் உட்கார்ந்திருக்கும் முதலாளியிடம் சொல்லி காசு கொடுக்க வேண்டும்.  பில்லெல்லாம் போடுவதில்லை.  நீங்களாகச் சொல்வதுதான்.  கை கழுவி விட்டு அப்படியே போகவும் செய்யலாம்.  யாரும் உங்களைத் துரத்தி வர மாட்டார்கள்.  நின்று கொண்டே சாப்பிடக் கூடிய மெஸ். யாரும் அங்கே காசு கொடுக்காமல் சாப்பிட்டுப் போவதாகத் தெரியவில்லை. 

காசு கொடுக்காமல் சாப்பிட்டு ஏமாற்றுவது அதர்மம் என்பது இந்திய மனோபாவம். ஆனால் காசு கொடுக்காமல் ஞானம் பெறுவது தர்மம் என்று தமிழர்கள் நினைக்கிறார்கள். அந்த ஒரே காரணத்தினால்தான் கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளாகப் புலவர்களும் அறிஞர்களும் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

அந்த மெல்பர்ன் நண்பர் சமீபத்தில் வாட்ஸப்பில் புதுமைப்பித்தன் பற்றிய என் பேச்சை அனுப்புமாறு கேட்டிருந்தார்.  அனுப்பினேன்.  சென்ற ஆண்டு அமெரிக்க வீசா அலுவலகத்தில் எனக்குக் கிடைத்த enlightenment மட்டும் கிடைத்திருக்காவிட்டால் உரையை அனுப்பி விட்டுப் பேசாமல் இருந்திருப்பேன்.  ஆனால் அமெரிக்கா வீசா அலுவலகத்தில் கிடைத்த enlightenmentக்குப் பிறகு நான் ஆளே வேறு மாதிரி ஆகி விட்டபடியால், பேச்சுக்கு ஏதாவது கட்டணம் அனுப்பி வையுங்கள் என்று மெஸேஜ் அனுப்பியிருந்தேன்.  இன்று வரை பதிலே இல்லை.  அநேகமாக பதில் வராது.  எனக்குப் பணம் முக்கியம் இல்லை.  ஆனால் கொடுக்கல் வாங்கலில் ஒரு குறைந்த பட்ச நியாயம் இருக்கிறது.  கேரளத்தின் மிக முக்கியமான இயக்குனர் ஒருவர் – கலைப்படங்கள் எடுப்பவர் – என்னை அவர் படத்துக்கு வசனம் எழுதச் சொன்னார்.  தமிழில் எழுதிக் கொடுத்தால் அவர் மலையாளத்துக்கு மாற்றிக் கொள்வார்.  மேலும், அதைத் தமிழிலும் எடுக்க இருந்தார்.  இருமொழித் தயாரிப்பு.  மகாபலிபுரத்தில் தங்கி எழுதிக் கொண்டிருந்தேன்.  பாதி படத்துக்கு எழுதி முடித்து விட்டேன்.  அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் சிறந்த இயக்குனருக்கான ஜனாதிபதி விருதி வாங்கியிருந்தார்.  அதற்கு என் நண்பரும் மலையாள எழுத்தாளருமான எக்ஸ்தான் வசனம்.  இயக்குனர் பணம் பற்றியே பேசவில்லை.  நானே கேட்டேன்.  ஐயோ பணமே கிடையாதே என்றார்.  பணத்தை விட முக்கியமான ஒரு விஷயம் செய்கிறேன்; அமெரிக்கத் தூதரகம் என் வீடு மாதிரி.  நான் சொன்னால் உங்களுக்கு மறுபேச்சு இல்லாமல் வீசா தருவார்கள் என்றார் இயக்குனர்.  அவர் சொன்ன மாதிரியே தூதரகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியும் என்னிடம் பேசி வீசா தருவதாக உறுதி கூறினார்.  அவர் ஒரு மலையாளி மாது.  மேலும், அந்தப் படத்தின் மூலமாக கேரள சினிமா உலகில் எனக்குப் பல தொடர்புகள் கிடைக்கும்.  ஏற்கனவே மோகன்லால் என்னோடு பேசியிருந்தார்.  சும்மா மரியாதை நிமித்தமான பேச்சு.  (மோகன் லால் இலக்கியம் வாசிக்க மாட்டார்)  எக்ஸிடம் போனில் பேசினேன்.  அவருக்குப் பணம் கொடுக்கவில்லை என்றார்.  மேலும், அந்த இயக்குனரிடமிருந்து ஒரு பைசா வாங்க முடியாது என்ற மேலதிகத் தகவலும் தந்தார்.  படத்திலிருந்து விலகி விட்டேன்.  அந்தப் படம் வரவில்லை. நான் என்ன இருபத்தைந்து வயதுப் பையனா, அறிமுகத்துக்காக ஓசியில் எழுதித் தர? 

உங்களுடைய போக்கு பிடிக்கவில்லை என்று ஒதுங்கி விட்டேன்.  அதற்குப் பிறகும் புதுமைப்பித்தன் பேச்சை அனுப்புங்கள் என்று கேட்டு வாங்கிக் கொண்டு, அதற்கு ஏதாவது கட்டணம் அனுப்புங்கள் ஐயா என்றால் ஓடி விடுவது என்றால் என்ன அர்த்தம்?  பணத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?  நான் ஏற்கனவே பலமுறை எழுதி விட்டேன்.  எனக்குப் பணம் ஒரு பொருட்டு அல்ல.  என் வாழ்வில், என் சிந்தனையில் பணம் என்பதற்கு இடமே இல்லை.  மாணவர்களும் எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் வீட்டை நிர்வகிக்கும் பெண்களும் பணம் அனுப்ப வேண்டாம் என்று சொல்லி விட்டேன். மற்றபடி நெட்ஃப்ளிக்ஸுக்குக் கட்டுகிறாற்போல் சிறிதளவு அனுப்பச் சொல்கிறேன்.  அதுவும் எதற்கு, வீடு கட்டுவதற்கா?  பயணத்துக்காகத்தான்.  அத்தனை பணமும் பூனைகளுக்கும் காகங்களுக்கும் பயணத்துக்கும்தான்.  பயணம் அத்தனையும் புத்தகங்கள். 

எனக்கு மிக நெருங்கிய ஐம்பது நண்பர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.  அவர்களைத் தவிர இம்மாதிரி யாராவது நெருங்கினால்தான் இப்படிப்பட்ட விஷயங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.  எனக்கு இதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை.  ஆச்சரியமாக இருக்கிறது.  ஓட்டலில் சாப்பிட்டு விட்டுப் பணம் கொடுக்காமல் வெளியே போவதற்கு எப்படி மனம் வருகிறது என்ற ஆச்சரியம்தான் எனக்கு.  ஆனால் பதிலையும் நானே சொல்லி விட்டேன்.  ஞானம் இலவசமாகப் பெற வேண்டியது மட்டுமே என்று தமிழனின் மரபணுவில் பதிந்திருக்கிறது.  அதை போக்குவதற்காகத்தான் ஒரே ஆளாகப் போராடி வருகிறேன். 

பொதுவாக இந்தியர்களின் மனோபாவம் பண விஷயத்தில் நேர்மையில்லாமல் நடந்து கொள்வதாகவே உள்ளது.  என் நண்பரான ஆயுர்வேத மருத்துவரிடம் சிகிச்சைக்கான ஆலோசனைகளைப் பெற்று விட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றிய எட்டு அமெரிக்க இந்தியர்களைப் பற்றி முன்பு எழுதியிருந்தேன்.  ஆலோசனை பெற்றவர்கள் பத்து பேர்.  இரண்டு அமெரிக்கர்.  இருவரும் பணம் செலுத்தி விட, எட்டு இந்தியர்கள் பணம் செலுத்தவில்லை. ஒருவர் வட இந்தியர்.  ஏழு தமிழர்கள்.  எல்லோரும் அமெரிக்காவில் வசிப்பவர்கள்.  பண விஷயத்தில் மோசடி செய்வதையா இவர்கள் அமெரிக்கா போய் கற்றுக் கொண்டார்கள்?  அமெரிக்கர்கள் பணத்தில் குறியானவர்கள் என்றாலும் இப்படி ஏமாற்றுப் பேர்வழிகள் இல்லையே?  இந்த அமெரிக்கத் தமிழர்களை விட தமிழ்நாட்டுத் தமிழர்கள் பரவாயில்லை என்பதுதான் என் அனுபவம்.  15000 ரூ. சம்பளம் வாங்கி எனக்கு 500 ரூ. அனுப்பி விடுகிறார்கள்.  இத்தனை எழுதியும் எனக்கு வாட்ஸப்பில் மெஸேஜ் அனுப்பி உரையை அனுப்புங்கள் என்று சொல்லி, நான் கட்டணம் அனுப்பி வையுங்கள் என்று சொன்னதும் ஒரு சொல் கூட பதில் எழுதாமல் காணாமல் போவதெல்லாம் எதில் சேர்த்தி என்றே தெரியவில்லை.  எனக்கு எந்த நஷ்டமும் இல்லை.  தன் வங்கிக் கணக்கில் பாவத்தை சேர்க்கிறார், அதுதான் வருத்தமாக இருக்கிறது. இந்தியாவிலிருந்து ஒருத்தர் கூட இப்படிச் செய்யவில்லை.  ஆஸ்திரேலியா, அமெரிக்கா என்ற நாடுகளின் அனுபவம் எனக்குத் தொடர்ந்து இதே மாதிரிதான் இருக்கிறது.  அங்கே வசிக்கும் பெரும்பான்மையான தமிழர்களின் மனோபாவம் பற்றிப் புரிந்து கொள்ள விரும்புகிறேன்.

அமெரிக்காவில் வசிக்கும் என்னுடைய மிக நெருங்கிய ஐம்பது நண்பர்கள் இதைப் படித்து விட்டுக் கடந்து செல்லுங்கள்.  இது நமக்கானது அல்ல.  பதினெட்டாம் தேதி மாலை ஏழு மணிக்கு ஸூமில் சந்திப்போம். 

***

என் சக எழுத்தாளர்கள் மற்றும் மாணவர்கள் தவிர மற்றவர்கள் இந்தத் தளத்தை வாசிக்கும் நண்பர்கள் இதற்குக் கட்டணமாக அல்லது நன்கொடையாக நீங்களே ஒரு தொகையை நிர்ணயித்து அனுப்பி வைக்க முயற்சி செய்யுங்கள்.  மாதாந்திரக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களும் இதே முறையைப் பின்பற்றி எனக்குப் பணம் அனுப்பி வைக்கலாம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai