177. ஓஷோ

அன்புள்ள சாரு,

நான் சமீபத்தில் உங்களது சில புத்தகங்களை ஜீரோ டிகிரி பப்ளிகேஷன் மூலம் வாங்கினேன். அவற்றில் ஃபேன்ஸி பனியன் மற்றும் பழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் 1 இரண்டையும் படித்து முடித்து விட்டேன். இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்து இருந்தன. ஃபேன்ஸி பனியன் நாவல் மிகவும் புதுமையாக இருந்தது. நான் இதுவரை பல நாவல்கள் படித்திருந்தாலும் இது வித்தியாசமானதாக தோன்றியது. இது சுயசரிதை போலவும் இருக்கிறது அதே சமயம் புனைவு போலவும் இருக்கிறது. எது எவ்வளவு விகிதம் என்பதை வாசகன் தான் அவனது கற்பனை மூலம் கண்டறிய வேண்டும்.

பழுப்பு நிறப் பக்கங்கள் என்னை மிகவும் கவர்ந்தது. அதில் வரும் எழுத்தாளர்களைப் பற்றி நான் ஏற்கனவே அறிந்திருந்தாலும் நீங்கள் கொடுத்திருக்கும் தகவல்களும் உங்களது பார்வையும் இணைந்து ஒரு உணர்வு பூர்வமான நிலைக்கு நம்மை கொண்டு செல்கிறது.

பல இடங்களில் என்னை அறியாமலேயே கண்களிலிருந்து கண்ணீர் வந்துவிட்டது. நம்முடைய மாபெரும் இலக்கிய மேதைகள் இந்த சமூகத்தினால் எப்படி நடத்தப்பட்டுள்ளனர் என்பதை பார்க்கும் போது உள்ளம் கொதிப்படை கிறது. தற்போது சி சு செல்லப்பா தஞ்சை பிரகாஷ் ஆகியோரின் சில நூல்களை வாங்கி உள்ளேன் இன்னும் படிக்கவில்லை படித்தபின் மீண்டும் எழுதுகிறேன். 

எனக்கு உங்களிடம் ஒரு சிறு விண்ணப்பம். நான் ஓஷோவை என் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவன். ஓஷோபற்றிய உங்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறேன். அவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுத முடியுமா?

நன்றி

சங்கர் குட்டி

ஹைதராபாத்

அன்புள்ள சங்கர் குட்டி,

ஓஷோவை நான் அதிகம் கேட்டதில்லை.  படித்ததும் இல்லை.  ஆனால் என் நண்பர்கள் பலரும் அவரது தீவிர வாசகர்கள்.  கேட்ட சிறிதளவு உரைகளில் அவருக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.  இப்படிச் சொல்வது கூட தவறாக இருக்கலாம்.  இன்னும் அதிகம் கேட்டால் எப்படி இருக்குமோ?  நான் தமிழ் எழுத்தாளனாக இருப்பதால் அதிகம் தெரிய வராமல் இருக்கிறேன்.  ஆங்கிலம் என்ற பொதுமொழியில் பேச வேண்டும்; அது ஆன்மீகமாகவும் இருக்க வேண்டும்.  இன்று ஒரு காணொலி பார்த்தேன்.  ஓம் நாமஷிவாயா என்ற வார்த்தையை ஒரு மேற்கத்திய வாத்திய கோஷ்டியின் பின்னணியில் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.  அமெரிக்கர்.  அந்தக் காணொலியை பத்து லட்சம் பேருக்கும் மேல் பார்த்திருக்கிறார்கள். கையில் ருத்ராட்சமெல்லாம் கட்டியிருக்கிறார்.  இந்தியாவிலிருந்து இந்து மதம் மேற்கத்திய நாடுகளுக்குப் பரவி விடும் போல் இருக்கிறது.  எதற்குச் சொன்னேன் என்றால், நானும் ருத்ராட்சத்தை மாட்டிக் கொண்டு எழுதுவதை நிறுத்தி விட்டு பேச ஆரம்பித்தேனானால் – of course, ஆங்கிலத்தில்தான் – மேற்கத்திய நாடுகள் பூராவிலும் சுற்றிக் கொண்டே இருக்கலாம்.  ஒரு நடமாடும் நூலகம் அளவுக்குப் படித்து வைத்திருக்கிறேன்.  ஆனால் அதெல்லாம் தி.ஜானகிராமனிடம் இருந்த கர்னாடக சங்கீதம் மாதிரிதான்.  எல்லோருடனும் பகிர்ந்து கொள்வதற்கு அல்ல.  சொந்த விஷயம்.  ஆன்மீகத்தை வைத்துக் கொண்டு காசு பார்த்தால் அடுத்த ஜென்மத்தில் நாயாய் நரியாய்ப் பிறக்க வேண்டியிருக்கும்.  அப்படித்தான் நான் அறிந்த ஞானிகள் அனைவரும் சொல்கிறார்கள்.  ஆனால் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கமே இல்லாமல் நம் செய்தியைச் சொல்லிக் கொண்டே போகிறபொழுது காசு வந்து கொட்டினால் என்ன செய்வது?  ஓஷோவுக்குக் கொட்டின மாதிரி. 

Vocation என்று இருக்கிறது.  எனக்கு விதிக்கப்பட்டது எழுத்து.  ஏழு வயதில் மாலி கச்சேரி பண்ணி விட்டார்.  கச்சேரி நடந்து கொண்டிருக்கும்போதே பாதியில் எழுந்து போய் பையனுக்கு மரியாதை செய்வதற்காகப் போன்னாடை வாங்கி வந்தார்கள் அப்போதைய இசைப் பிரபலங்களான பரூர் சுந்தரம் ஐயரும் முசிறி சுப்ரமணிய ஐயரும்.  மாலிக்குக் குழல் மாதிரி எனக்கு எழுத்து.  இதை இடையில் மாற்ற முடியாது. 

ஓஷோவின் பெயரைக் கேட்டாலே இதுதான் எனக்கு ஞாபகம் வருகிறது.  அராத்து ஒரு ஆச்சரியமான விஷயத்தை முன்பு ஒருமுறை காண்பித்தார். ஓஷோவுக்குப் பிடித்த நூறு புத்தகங்கள்.  நானும் அவரிடம் எனக்குப் பிடித்த நூறு புத்தகங்கள் பட்டியலை ஒரிரு முறை அவரிடம் சொல்லியிருக்கிறேன்.  இரண்டு பட்டியலில் இருந்த 80 புத்தகங்களுக்கு மேல் ஒன்றுதான். 

ஓஷோ பற்றி எதுவும் தெரியாத நிலையில் என்ன எழுத?  மேலும், இனி கட்டுரைகள் எழுதக் கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.  எழுதிய நூறு புத்தகங்களில் 94 புத்தகங்கள் கட்டுரை என்றால் அது நியாயம் இல்லையே?  இனி மேலான காலம் முழுவதும் நாவல்களுக்குத்தான்.  ஐந்து நாவல்கள் வரிசை கட்டிக் கொண்டு நிற்கின்றன.  இத்தனை நெருக்கடிக்கு இடையிலும் குமுதத்தில் நான்கு வருடங்களாகத் தொடர்ந்து வாரா வாரம் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன்.  சமீபத்திய கட்டுரைகள் மிகவும் நன்றாக இருப்பதாகப் பலரும் சொல்கிறார்கள்.  ஆர்ட்ரெவ்யூ ஏஷியா கட்டுரைகளுக்காகவும் நிறைய படிக்க வேண்டியிருக்கிறது.  இதற்கு இடையில்தான் இசை பற்றிய கட்டுரைகள்.  எனவே இனி நாவல்கள்தான்.

ஓஷோவை விட எனக்கு நெருக்கமானவர் விமலானந்தா.  இவரது நிஜப் பெயரை வெளியிட வேண்டாம் என்று சொல்லி விட்டார் போல.  இவரின் அமெரிக்க சீடர் ராபர்ட் ஸ்வபோதா மூன்று தொகுதிகளில் விமலானந்தா பற்றி எழுதியிருக்கிறார்.  என்னுடைய 67 வயதில் ஆன்மீக ரீதியான புரிந்து கொள்ளலில் அடிப்படையான மாற்றங்களை நிகழ்த்திய நூல்கள் இந்தத் தொகுதிகள்.  இதைப் படித்தால் இரண்டே வாய்ப்புகள்தான் உள்ளன.  இது முழுக்கவும் குப்பை என்று நிராகரித்து விட்டு வேறு வேலையைப் பார்க்கலாம்.  அல்லது, உங்களுடைய பழைய self-ஐ நிராகரித்து புதிய ஆளாக மாறுவீர்கள்.  இப்படி மாறிய ஒருவரை நான் அறிவேன்.  புத்தகத்தின் பெயர்: Aghora, at the left hand of God. 

சாரு