181. அடியேனின் எழுத்து

Hi Charu,

நான் உங்கள் புத்தகங்களில் ‘தேகம்’, ‘மூடுபனிச் சாலை’ படித்து இருக்கிறேன். உங்கள் எழுத்து படிக்கப் பிடிக்கும். ஆனால் எழுத்து வகைமை புரியாமல் இருந்தது. சமீபத்தில் அபிலாஷ் பேசிய ‘சாருவை பிரதியாக வாசித்தல்’ உரை பெரிய திறப்பாக இருந்தது. அது உங்கள் படைப்புகளுக்குள் அணுக்கமாக என்னை அழைத்துச் செல்ல பெரும் உதவிபுரியும் என்று நம்புகிறேன்.

உங்கள் வலைப்பக்கத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். சமீபத்திய ‘இசை பற்றிய குறிப்புகள்’ சீரிஸ் அல்டிமேட் சாரு. எனக்கு இசைக் கேட்பவர்கள் பார்த்து பொறாமையாக இருக்கும். இசைக் கேட்க ஆசை ஆர்வம் இருந்தால் மட்டும் போதாது. ரசனைத் தாண்டி இசையை புரிந்து கொள்ள, வழிகாட்ட ஆள் இல்லையே என்ற தவிப்பு இருந்து இருந்தது. உங்களுடைய இசை சீரிஸ், நான் தேடிக்கொண்டு இருந்ததற்குக் கிடைத்த பொக்கிஷம் போல் இருந்தது. Koushiki Chakrabortyயின் இந்துஸ்தானி இசையை அறிமுகம் செய்து வைத்ததற்காகவே பெரிய பெரிய நன்றி சாரு.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சாரு.

ஒரு சின்னக் கோரிக்கை.

உங்கள் தளத்தில் இசை பற்றிய பதிவுகளையேனும் தனியே தொகுத்துக் காட்சிப்படுத்த வழிசெய்யுங்கள்.

யோகேஷ்

அன்புள்ள யோகேஷ்,

நன்றி.  அபிலாஷின் உரை போலவே என் எழுத்து பற்றிய நீண்டதொரு கட்டுரைத் தொடரும் எழுதியிருக்கிறார்.  இணையத்தில் கிடைக்கும்.  தேடிப் படியுங்கள்.  முடிந்தால் நான் இணைப்பை அனுப்புகிறேன்.  அதுவும் என் எழுத்தை deconstruct செய்து புரிந்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். 

என்னைப் பற்றி அராத்து எழுதிய கட்டுரைகள் என்னை demythify மற்றும் demystify செய்து புரிந்து கொள்ள உதவுபவை.  அரூ பத்திரிகையில் வந்த என்னுடைய ஒரு பேட்டியும் அப்படியே.  என் எழுத்துக்குள் நுழைய இதெல்லாம் பெரிய திறப்புகளாக அமையும். 

வாழ்த்துக்கு நன்றி. 

சாரு

***

நேற்றைய பதிவில் ஒரு முக்கியமான விஷயத்தை எழுத விடுபட்டு விட்டது.  மனதிலிருந்து கணினிக்கு வரும்போதே நழுவி விட்டது.  பிச்சைக்கார மாறுவேடத்தில் வாழும் பிரபு என்று என்னைப் பற்றி எழுதியிருந்தேன் அல்லவா?  அதில் ஒடிஸியைப் போல என்று எழுதியிருக்க வேண்டும்.  கி.மு. எட்டாம் நூற்றாண்டில் ஹோமர் எழுதிய ஒடிஸி மகா காவியத்தில் ஒடிஸி தன் எதிர்களைப் பற்றி உளவறிவதற்காக பிச்சைக்காரனாக நடிப்பான்.  ஹோமரின் ஒடிஸியைப் படித்துப் பாருங்கள்.  படு சுவாரசியமாக இருக்கும்.  நாம் என்ன அவர் எழுதிய பழைய கிரேக்க மொழியிலா படிக்கப் போகிறோம்?  மிக நவீனமான ஆங்கிலம்தானே?  இப்போதைய வெப்சீரீஸ் மாதிரி சுவாரசியம் பொங்கப் பொங்க இருக்கும்.

***

எனக்குப் பிறந்த நாள் வாழ்த்து அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் நன்றி.