182. சில கடிதங்கள்

வணக்கம் சாரு,

தாங்கள் மதுரை வந்து இருந்த பொழுது அலைபேசியில் தத்து பித்து என்று பேசிய அதே கோபிநாத் தான் நான்.

மன்னிக்கவும்.

இதற்கு முன் நான் இவரை நேரில் சந்தித்தால் என்ன பேசுவோம். என்று கனவு கண்டவர்களில் நீங்களும் ஒருவர்…….அதுவே தத்து பித்துவுக்குக் காரணம். 

கடந்த ஜுலை மாதம் என்னுடைய அவ்வா காலம் ஆனார் . என் மடியில் தான். இறப்பில் எதுவும் புதிதில்லை,

அநேகமாக தங்களின் அவ்வா சிறுகதையில் வரும் அவ்வா போல் தான் என் அவ்வாவும். அதனை மற்றும் ஒரு முறை படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் ஆனால் கொஞ்சம் செயற்கையாக இருக்கும் என ஒத்தி வைத்து உள்ளேன்.

தலைவரே தயவு செய்து அது போன்ற ஒரு சிறுகதையை எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன். கோபித்துக் கொள்ள வேண்டாம் இதுவும் என் எதிர் பார்ப்பு.

மற்ற படி “எக்ஸைல்” எப்பொழுது வெளியிடப் போகிறீர்கள். மதுரையில் இன்னும் ஓரிரு தினங்களில் புத்தகத் திருவிழா. 

முதல்ல புத்தகத்தை வெளியிடுங்க தலைவரே, 

பின் குறிப்பு:

             என் அவ்வா விருமாண்டி படத்தில் நெப்போலியனின் அம்மாவாக நடித்திருப்பார்கள். இது சம்பந்தம் இல்லாத விசயம் தான். ஒரு வகையில் தங்கள் நினைவில் தங்க நான் கொடுக்கும் லஞ்சம், என் அவ்வா…

கோபிநாத்

ஆகஸ்ட் 27, 2014

இந்தக் கடிதம் வந்து ஆறு ஆண்டுகள் ஆகின்றன.  இன்று அதே கோபிநாத் அனுப்பிய பிறந்த நாள் வாழ்த்தைப் படித்த போது எனக்கு விருமாண்டி அவ்வா நினைவு வந்தார்.  அதனால் இந்தக் கடிதம்.

அவ்வா போன்ற கண்ணீர்க் கதைகள் எழுதும் மனநிலை எனக்குத் தற்போது இல்லை கோபி.  ஆளே மாறிப் போய் விட்டேன்.  எப்படி கோணங்கியால் இப்போது மதினிமார்கள் கதை எழுத முடியாதோ அதேபோல்…

கீழே வரும் கடிதமும் கோபிநாத் எழுதியதுதான்.  இது இந்த ஆண்டு மே மாதம் எழுதியது.  இந்த ஆறு வருட காலத்தில் அவர் ஏராளமான கடிதம் எழுதியிருக்கிறார்.  எதற்குமே பதில் எழுதியதில்லை.  ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் அவர் எழுதியபடியே இருக்கிறார்.  நான் ஒவ்வொரு கடிதத்தையும் ஆழ்ந்து படிக்கிறேன்.  இந்த செல்லப்பா கடிதத்தை மட்டும் பதிவேற்றம் செய்ததாக ஞாபகம்.  நான் பதில் எழுதாததை என் வாசகர்கள் பொருட்படுத்தாமல் கடந்து போவது நான் மிகவும் நெகிழ்ச்சி அடையும் விஷயம்.  கோபித்துக் கொள்ளாமல் மீண்டும் ஒரு பிரச்சினை பற்றி மீண்டும் ஒரு கடிதம் அவரிடமிருந்தே வரும்.  அதையும் படிப்பேன்.  பதில் எழுத மாட்டேன்.  ஒரே காரணம்தான், எனக்கு எழுதக் கிடைக்கும் மிகக் குறைந்த நேரத்தை எழுத்துக்கே செலவு செய்ய வேண்டும் என்பதுதான்.  இப்போது எனக்கு எழுதுவதற்கு ஒரு நாளில் பதினெட்டு மணி நேரம் கிடைக்கிறது. நாலே மணி நேரம் கிடைத்த போது எப்படிப் புலம்பினேனோ அப்படித்தான் இந்தப் பதினெட்டு மணி நேரத்துக்கும் புலம்புகிறேன். போதவில்லை.  போதவில்லை.  போதவில்லை.  என் எழுத்துதான் வாசகர்களுக்கு நான் எழுதும் பதில் என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.  அதற்கு என் மனம் நெகிழ்ந்த நன்றி.  இனி கோபிநாத்தின் கடிதம்:

சார் வணக்கம், 

என்னுடைய கேள்வி,    சி . சு. செல்லப்பா  முதற்கொண்டு அசோகமித்திரனின் அம்மாவும் என்னுடைய ஊரை(வத்தலகுண்டு ) பூர்விகமாகக் கொண்டவர்கள். இது போன்று சுப்ரமணிய சிவாவும் இப்பகுதியைச் சார்ந்தவர்கள்தான். 

ஆனால் இதை எல்லாம் நினைத்துப் பெருமைப்படும் அளவு ஊர் நிலவரம் இல்லை, இவர்களை எடுத்துச் சொல்லி எவரிடமும் வாயார பெருமை கூட அடித்துக் கொள்ள முடியாது, இவர்கள் அனைவருக்கும் எந்த ஒரு குறைந்த பட்ச அறிமுகம் கூட மக்களிடமும் இல்லை. 

இந்த ஊரில் இருந்து எவ்வாறு இவர்கள் ஊற்றெடுத்தனர் என்பது இன்று வரை ஆச்சரியமாக உள்ளது. ஊரின் நடுவில் கஞ்சா விற்பதற்கும், தயாரிப்பதற்கும் தனி இடமே உள்ளது.  கட்சி வேஷ்டிகள் மாத்திரமே ஊரில் வாழ்ந்த மனிதர்களின் எவர் பெரிய மனிதர் என்பதற்கான அளவுகோல்கள். 

கேள்வி :

இது போன்ற சமூகத்தில் வாழ்ந்த எழுத்தாளர், செல்லப்பா மூட்டையைத் தூக்கி கொண்டு நடந்தார் என்றால் இது obsession ஆ, அல்லது இவர்கள் மஸாகிஸ்ட்டுகளா, இல்லை என்னிடம் ஞானம் உள்ளது, அதை எவன் மதித்தாலும் சரி, மதிக்காவிட்டாலும் சரி,… கஷ்ட ஜீவனத்தை விரும்பி ஏற்று..?  இதில் வருத்தம் என்ன வேண்டி கிடக்கிறது? 

(அசோகமித்திரனின் தாயாரைப் பற்றியும் ஒரு கட்டுரை எழுதுங்கள், அந்தப் பாட்டி அந்தக் காலத்தில் எவ்வாறு வத்தலகுண்டுவில் இருந்து, ஹைதரபாத்…. சென்னை என வாசம் செய்தார் என்று )

அதிகப்பிரசங்கித்தனமாக எழுதியிருந்தால் மன்னிக்க வேண்டும்

உங்கள் மாணவன். 

கோபிநாத்

மே 22, 2020.