எழுத்தறிவித்தவன்

அன்புள்ள சாரு , 

வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டதற்கு முக்கிய காரணமே நீங்கள் தான். 15 அல்லது 16 வயது இருக்குமென்று நினைக்கிறேன் முதன் முதலில் தேகத்தை கையில் ஏந்திய போது , என்ன இது அடல்ட் கண்டன்ட் நாவல் போலிருக்கிறதே என்று தான் வாசிக்க ஆரம்பித்தேன். அந்த வயதில் அது எதைப்பற்றிப் பேசுகின்றதென்று சுத்தமாகப் புரியவில்லை ஆனாலும் அது எழுதப்பட்டிருந்த விதம் என்னை அப்போது வாசிக்கத் தூண்டியது.

அப்போதிருந்தே தேகம் என்பது மனதில் பதிந்த ஒரு பெயராகி விட்டது , கடைசியாக 5 வருடங்களுக்கு முன் தேகத்தை முழுமையாக வாசித்து உள்வாங்கிக் கொண்டேன்.(இப்போது எனக்கு 23 வயதாகின்றது ,இலங்கையில் வசிக்கிறேன், நான் ஒரு பல்கழைக்கழக மாணவன் இங்கு, கல்வி என்பது டிகிரி பேப்பரைத் தாண்டிய ஒரு விடயம் என்பதை நம்புபவன் நான் , இந்த கல்வி ஒருத்தனை வேலைக்கு மாத்திரமே தயார் படுத்தி கொண்டிருக்கிறது , விரும்பியோ விரும்பாமலோ ஒவ்வொருவரும் அதை செய்தாகவே வேண்டும்).

தேகத்தில் ஆரம்பித்த பயணம் அப்படியே தப்புத்தாளங்கள் பக்கம் திரும்பியது.தப்புத்தாளங்கள் எனக்குத் திறந்து காட்டிய உலகம் முற்றிலும் வித்தியாசமானது நான் பார்க்கும் ,அன்றாடம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகத்திலிருந்து  தப்புத்தாளங்கள் இன்னும் ஓர் வேறுபட்ட உலகத்தை கண் முன்னே காட்டியது.

அதற்குப் பிறகு அப்படியே என்னை வாசிப்பு , இலக்கிய உலகுக்குள் கைப்பிடித்துக் கூட்டி வந்தது உங்கள் எழுத்துதான்.

இப்போது  உங்கள் புத்தகங்கள் சில எனது பல்கலைக் கழக நூலகத்திலேயே கிடைக்கின்றன , இன்னும் சிலவற்றை யாரிடமிருந்தாவது இரவல் பெற்று வாசிக்கின்றேன், ப்ளொக்கில் எழுதுவதையும் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு சின்ன விடயத்தைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். எனது நண்பண் ஒருவன் ஏதாவது ஒரு புத்தகத்தை பரிந்துரை செய் நூலகத்தில் இருந்து இரவல் பெற்று வாசிக்க என்று என்னிடம் கேட்டிருந்தான், நான் அவனை நூலகத்துக் கையோடு அழைத்துச் சென்று ராஸ லீலாவை இரவல் பெற்று அவனிடம் வாசி என்று கொடுத்து அனுப்பினேன்., இரண்டு நாளைக்கு முதல் அவனிடம் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது , “இதையா நீ வாசிக்கின்றாய்” என்று அவன் மனைவி அவனைக் கடிந்து கொள்கிறாளாம்…

இதை நினைந்து நொந்து கொள்ளத்தான் முடிகிறது சாரு அவர்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று பதில் ஏதும் வழங்காமல் அதை கடந்து விட்டேன்.

Thanks A Lot Charu 

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சாரு.

இப்படிக்கு 

F.M.AASHIK

Faculty of Management & Commerce

South Eastern University of Sri Lanka