என் எழுத்து பற்றிய மிகச் சிறந்த ஆய்வு

இதுவரை என் எழுத்து பற்றி பலரும் எழுதியிருக்கிறார்கள். முதலில் எழுதியவர்கள் ஜமாலன், நாகார்ச்சுனன். பிறகு இந்திரா பார்த்தசாரதி. அ. மார்க்ஸ். அதற்குப் பிறகு சிலர். இவர்கள் அத்தனை பேரையும் நான் எப்போதும் நன்றியுடன் நினைத்துப் பார்ப்பதுண்டு. சென்ற ஆண்டு புத்தக விழாவின்போது எஸ். சண்முகத்துடன் ஜமாலனைப் பார்த்த போது அது ஜமாலன் என்று தெரியாமல் விட்டு விட்டேன். பிறகுதான் சண்முகம் சொன்ன போது அடடா, பேசாமல் போனோமே என்று மிகவும் வருத்தப்பட்டேன். போன் பண்ணிச் சொல்லியிருக்கலாம். அதையும் செய்யவில்லை.

அதற்குப் பிறகு – அதாவது இதெல்லாம் நடந்து சில தசாப்தங்களுக்குப் பிறகு எனக்கு அடுத்த தலைமுறை எழுத்தாளனான அபிலாஷ் என் எழுத்து பற்றிய ஒரு நீண்ட கட்டுரையை எழுதினார். அதுதான் என் எழுத்து பற்றி இதுவரை வந்ததிலேயே ஆகச் சிறந்தது. இந்த ஆகச் சிறந்தது என்ற வார்த்தைக்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஏதோ உணர்ச்சிவசப்பட்டு இந்த வார்த்தையைச் சொல்லவில்லை. என் எழுத்து குறித்த புதிய புதிய கண்டுபிடிப்புகளைச் செய்தது அந்தக் கட்டுரை. முடிந்தால் அதை நம்முடைய தளத்தில் ஸ்ரீராமிடம் சொல்லி வெளியிட ஏற்பாடு செய்கிறேன். அபிலாஷ் அதற்கு அனுமதி தர வேண்டும். அதற்கு அடுத்து, மிகச் சமீபத்தில் என் எழுத்து பற்றிய ஒரு நீண்ட உரையையும் அதேபோல் ஒரு கட்டுரையும் எழுதியிருந்தார். அதையும் இங்கே தொகுத்து வெளியிட வேண்டும்.

இப்போது நேற்று என் பிறந்த நாள் அன்று அவர் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரை அவர் இதுவரை என் எழுத்து பற்றி எழுதியதையே தாண்டி ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. இக்கட்டுரைகளின் முக்கியத்துவம் இப்போது பலருக்கும் புரியாமல் போகலாம். என்னுடைய எழுத்தே இ-ப்-போ-து-தா-ன் – அதாவது நான் எழுதி முப்பது ஆண்டுகளுக்குப் பிறகுதான் வாசகர்களைச் சென்று அடைந்திருக்கிறது. ஏன் இந்தத் தாமதம் என்றால், ஒரே காரணம் பேராசிரியர்கள்தான். சக எழுத்தாளர்கள் அல்ல. என் எழுத்து பற்றி அறிமுகம் செய்வது எஸ்.ரா.வின் வேலையோ ஜெயமோகனின் வேலையோ அல்ல. மற்ற என் சக எழுத்தாளர்களின் வேலை. அதைக் கூட அந்தக் காலகட்டத்தின் கட்டாயம் கருதி இந்திரா பார்த்தசாரதி செய்ய வேண்டி வந்தது, ஸீரோ டிகிரி ஒரு ஆபாசக் குப்பை என்ற குற்றச்சாட்டு எழுந்த போது. அசோகமித்திரன், சுஜாதா போன்ற உலக இலக்கியம் தெரிந்தவர்களே அதை முகச் சுளிப்புடன் ஒதுக்கிய போது இந்திரா பார்த்தசாரதி அதை சம்ஸ்கிருத இலக்கிய மரபின் தொடர்ச்சி என்ற கருத்தை முன்வைத்தார்.

எதற்குச் சொல்கிறேன் என்றால், என் எழுத்து எளிய வாசகரைச் சென்றடைய முப்பது ஆண்டுகள் ஆகியது. நேற்று ஒரு பெண்ணிடமிருந்து ஒரு கடிதம். என் எல்லா புனைவுகளையும் படித்திருக்கிறார். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டபோது, அவர் ஒரு அரசு ஊழியர் என்றும் 26 வயது ஆனவர் என்றும் தெரிந்தது. இதற்குத்தான் முப்பது ஆண்டுகள் ஆனது. எளிய வாசகர் என்ற பதத்தை அவர் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இலக்கியத்தை ஒருவருக்கு அவரது ஆசிரியர்கள் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். ஊடகங்கள் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். அது நடக்கவில்லை. அவர் பிறப்பதற்கு முன்பு எழுதிய கதைகளை அவர் இணையத்தின் வழியே இப்போதுதான் கண்டடைகிறார். அதனால்தான் எளிய வாசகர் என்று சொன்னேன். தானே தன்னந்தனியாக யாருடைய அறிமுகமும் உதவியும் இன்றி வந்து சேர்பவர்.

எனவே அபிலாஷின் இந்தக் கட்டுரை இது போன்ற புதிய வாசகர்களுக்கு மிகப் பெரிய திறப்பாக விளங்கும். இந்தக் கட்டுரையின் முக்கியத்துவம் இன்னும் பத்து இருபது ஆண்டுகளில் அதிகரித்துக் கொண்டு போகும். அபிலாஷுக்கு என் நன்றியறிதலை எப்படிச் செலுத்துவது என்று யோசித்தேன். இன்னும் அதிகம் அதிகம் எழுதுவதே அந்த இளைஞனுக்கு நான் செய்யும் கைம்மாறாக அமையும். அபிலாஷின் நேற்றைய கட்டுரை கீழே:

சாரு எனும் “பொறுப்பின்மை”

சாருவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

சாருவை பதினைந்து வயதில் வாசிக்கத் துவங்கிய போதில் இருந்து சென்னையில் அவரை சந்தித்து வரை அவரை பலவாறாக வாசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் எப்போதும் சுலபத்தில் பகுத்துணர முடியாத, கைக்கு அகப்படாத ஒரு வழுவழு மீனாக அவர் இருந்தார். என் வாசிப்பினூடாக இருபதாண்டுகளாக சு.ரா, எஸ்.ரா., கோணங்கி, ஜெ.மோ என ஒவ்வொரு புனைவெழுத்தாளராக அறிந்து புரிந்து வகைப்படுத்திய போது, அவர்களை ஒரு specimenஆக காய வைத்து என் ஆல்பத்தில் ஒட்டி நகர்ந்து வந்தேன். அவர்களை அப்படி ஒட்டுவது ஒரு காலகட்டத்தை, ஒரு எழுத்து வகைமையை வகைப்படுத்தி அடுத்ததற்கு நகர்வதாகவும் இருந்தது – நவீனத்துவ காலம், பின்னை நவீனத்துவ காலம் என, சு.ரா காலம், எஸ்.ரா-கோணங்கி காலம், ஜெ.மோ போன்ற ஆளுமை ஆசான்களின் காலம் … என. இதன் நடுவே சாரு அட்ராசிட்டி பண்ணி எதற்குள்ளும் அடங்காத ஒரு ‘அடங்காப்பிடாரியாக’ இருந்தார் என நினைக்கிறேன். அவரை எப்படி வாசித்தாலும் முன்னுக்குப் பின் முரணாக மாறிக் கொண்டே வந்தார். அவரை ஜாலியாக வேடிக்கையாக வியப்பாக கோபமாக அணுக்கமானவராக பலவிதமாக மாறி மாறி வாசித்து வந்தது இதனாலே. என்னைப் போன்றே பல வாசகர்களும் சாருவை ஒரே சமயம் சுலபத்தில் ஏற்று அரவணைக்கவும் மறுத்து தெருவில் தள்ளி விடத் தக்கவராக பாத்திரமாக இருந்தார்.

தெரிதாவின் “மரணத்தின் பரிசு” (Gift of Death) எனும் சுவாரஸ்யமான புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் அவர் “பொறுப்பு” எனும் சொல்லை முழுக்க வேறான ஒரு பொருளில் பயன்படுத்துகிறார். தர்க்கபூர்வமாய் வடித்து புரிந்துகொள்ளத் தக்க அனுபவம்-அப்படி பண்ணிவிட முடியாத ஒரு கட்டற்ற அனுபவம், அனுபூதியான பொருள், பித்தான உணர்வுநிலை, மொழியைக் கடந்த ஒன்று உள்ளது. இப்படி இரண்டாக அது இருமையாக இருக்கிறது என பிரித்து புரிந்து கொள்வதே மனித பிரக்ஞையின், இறையின், மதங்களின், அறத்தின் பிறப்பு என தெரிதா விளக்குறார். அதற்கு முன்பு நாம் இந்த இருமைகள் அற்று, நாமற்று இருந்திருக்க வேண்டும். மதம், இறை எனும் நிலைகள் இந்த பிரக்ஞையை, மற்றமைக்கான பொறுப்பை ஏற்பதில் இருந்து உருக்கொள்கின்றன என தெரிதா ரொம்ப வித்தியாசமாக முன்வைக்கிறார். இந்த கோணத்தில் இருந்து பார்க்கையில், சாரு எனும் சேட்டைக்காரர், அடாவடிக்காரர், (ஜெ.மோவின் மொழியில்) முதன்மையான கலகக்காரராக நமக்குத் தோன்றுவதே இலக்கியத்தை நாம் ஒரு முழுமுதல் உண்மையாக கட்டமைக்க முயல்வதாலே. சாருவின் சிக்கல் அவர் இந்த வகைமைகளை தொடர்ந்து உடைத்தபடியே இருக்கிறார், அப்படி உடைத்து எல்லா இருப்புகளை கேள்விக்குள்ளாக்குகிறார் என்பது. இதனாலே அவரை நாம் மிகுதியான அபவாதங்களுக்கு ஆளாக்கி வந்திருக்கிறோம் – நம் இலக்கிய வெளியில் அவரை மட்டுமே “எழுத்தாளன் அல்ல, அரட்டை எழுதுகிறவர், ஆபாசங்களை எழுதுகிறவர், கோமாளி, பொறுக்கி” என நிராகரித்து வந்திருக்கிறோம். இந்த அபவாதங்களை வேறெந்த எழுத்தாளன் எதிர்கொண்டிருந்தாலும் அவன் இலக்கிய அரங்கில் இருந்து வெளியேறி இருப்பான். சாரு மட்டுமே கோமாளித்தனத்தை நான் அணியவில்லை, அதுவாகி, அதைக் கடந்து மகிழ்கிறேன் என்கிறார். ஏனென்றால் இலக்கியம் எனும் கட்டமைப்பு ஒரு வன்முறை என சாரு அறிவார். “பொறுப்பை” (தெரிதாவின் பொருளில்) துறப்பது பொறுப்பின்மை அல்ல, அது வாழ்க்கையை அதன் எடையின்மையுடன் அப்படியே வாழ்வது என அவர் அறிவார். ஆனால் அப்படி இருப்பது வேதனையானது; அதனாலே அவர் தமிழ் எழுத்தாளனின் இருப்பு குறித்து கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக புலம்பிக் கொண்டிருக்கிறார் – தனது லௌகீக இருப்பு குறித்தல்ல, மொழிக்குள்ளான தன் இருப்பு குறித்த சாருவின் அவலாதி இது. எப்படி?

இதைப் புரிந்து கொள்ள எனக்கு நிச்சயமாய் இருபதாண்டுகளுக்கு மேலானது – ஏனென்றால் இதற்கு மொழியை, இலக்கியத்தை அமைப்பியலை விடுத்து, பின்னமைப்பியல் கோணத்திலிருந்து வேண்டி இருந்தது. வெறுமனே தொழில்நுட்ப ரீதியில், கலைச்சொல்லாக்கமாக அல்ல, உணர்வுரீதியாக.

ஒரு பிரதி, அதற்குள் ஒரு அர்த்தம், அந்த அர்த்தத்தை சொல், குறியீடு, உருவகம் போன்ற விசயங்கள் பொதிந்து வைத்து வெளிவர மறுக்கின்றன, அவற்றை பொறுமையாக, ஊன்றிப் படித்து ‘நைஸ்’ பண்ணி வெளிப்பட வைப்பதே (ஒரு பெட்டியை அதற்குரிய சாவியைக் கொண்டு திறப்பதைப் போல) வாசிப்பு எனும் புரிதலில் இருந்து பிரதியில் இருந்து அர்த்தத்தை அல்ல, முரணான பல அர்த்தங்களைக் கண்டுணர்ந்து, அவை பரஸ்பரம் அழித்து ஒன்றுமில்லாத இடத்தை நம்மை எடுத்து செல்வதை அனுமதிப்பதே, முரண்களின் கூட்டிசைவை, அர்த்தங்களின் மரணம் சம்பவிக்கும் பெரும் வன்முறையாக வாசிப்பனுபவத்தை காண்பதே அந்த புதுப் ‘புரிதலாக’ இருந்தது.

இந்தப் பாய்ச்சலுக்கு முதலில் எனக்கு பயன்பட்டது லக்கானின் அறிமுகம். அடுத்தது லக்கானில் இருந்து பின்னமைப்பியல் வாசிப்பு. அங்கிருந்து சிக்ஸூ போன்ற பின்னமைப்பியல் பெண்ணியவாதிகள், ரொலாண்ட் பார்த்தின் Lover’s Discourse, அங்கிருந்து தெரிதாவின் எழுத்து முறை. இது இலக்கிய வாசிப்பை இருப்பு குறித்த தத்துவத் தேடலுடன் (நாகார்ஜுனரின் சூனியவாதம்) இணைக்க எனக்கு இது உதவியது. இதை எதற்கு சொல்கிறேன் என்றால் இலக்கியத்தை வெறுமனே வடிவ ஒழுங்கு, கருத்து செறிவு, புதுமை, உணர்வுத்தாக்கம் எனப் பார்ப்பது 200 வருடங்கள் பழைய பார்வை. அதையும் கடந்து வாசிப்பில் ஒவ்வொன்றையும் நம் இருப்பு நோக்கிய ஒரு தியானமாக பார்க்க முடியும், பின்னமைப்பியலை வாசித்து உணர்வுரீதியாக புரிந்து கொள்ளும் போது. தமிழ் விமர்சனத்தில், வாசிப்புலகில் உள்ள பெரும் குறையே நம்மால் இன்னமும் படைப்பு என்பது ஒரு டிபன் பாக்ஸ், அதன் உள்ளே இருக்கும் உணவுதான் அதன் அனுபவம், அர்த்தம், கருப்பொருள், அரசியல், அறம் போன்ற மானுடவாத / அமைப்பியல் பார்வையை நம்மால் இன்று கடந்து செல்ல முடியவில்லை என்பது – டிபன் பாக்ஸை, அதன் அழகை, நுணுக்கத்தை, வலுவை கவனிப்பவர்கள் அழகியல்வாதிகளாகவும், உள்ளே இருக்கும் டிபனைப் பார்ப்பவர்கள் பொருள்முதல்வாத விமர்சகர்களாகவும், மானுடவாத வாசிப்பாளர்களாகவும் இருக்கிறார்கள். இதைக் கடந்து எழுத்தை, வாசிப்பை நமது நேரடி உணர்வுகளுடன், அனுபவங்களுடன், இருப்புடன், உடலுடன் பொருத்திப்பார்க்கிற பார்வை இன்னும் இங்கு உருவாகி நிலைப்பெறவில்லை. நான் எதேச்சையாகத் தான் மானுடவாத, அமைப்பியல் வாசிப்பு சந்தை இரைச்சலில் இருந்து தப்பித்து இங்கு வந்து சேர்ந்தேன்.

அதன் பின்னர் நான் ஒரு விசயத்தை கவனித்தேன் – தமிழில் கொண்டாடப்பட்ட பின்நவீன படைப்பாளர்கள் கூட ஒரு “டெக்னாலஜியாக” பின்நவீனத்தை கைகொள்பவர்களே. உலக அரங்கிலும் இதற்கு உதாரணங்களாக மார்க்வெஸ், போர்ஹெ, லோசா, ராபர்ட்டோ பொலானோ, முராகாமி போன்ற பல பேரை சொல்லலாம். இவர்கள் ஒரு பின்நவீன அனுபவத்தை மொழிக்குள் கட்டமைக்க முயல்கிறார்கள். ஆனால் மொழியையே பின்னமைப்பியல் பாய்ச்சலாக மாற்றுகிறவர்கள் அரிது தான் – பிந்தைய ரொலாண்ட் பார்த், கோர்த்தஸார், யுவான் ரூல்போ போன்றவர்கள். முன்னவர்களை விட பின்னவர்களே மேலான எழுத்தாளர்கள். ஏனென்றால் மொழி சார்ந்த “பொறுப்பு” பின்னவர்களிடம் இல்லை. “பொறுப்பின்மையின்” அழகியலை நாம் பார்த், கோர்த்தஸார், ரூல்போ போன்றோரிடம் காண்கிறோம். “பொறுப்பின்மையை” எழுத்தின் மார்க்கமாக்கியவர்களில் எனக்குத் தெரிந்த ஒரே உதாரணம் தமிழ் பின்நவீன எழுத்தாளர் சாரு மட்டுமே (ஆனால் தமிழ் கவிதையில் இதை சாதித்தவர்கள் பலர் இருக்கிறார்கள்).

சாருவின் சில சிறப்புகள் இவை:

1) அவர் பிற படைப்பாளிகளைப் போல தொழில்முறை வாசகரோ, தொழில்முறை படைப்பாளியோ அல்ல, அவரது வாழ்முறையும் சிந்தனையும் எழுத்தும் பேச்சும் ஒன்றாக இருக்கும். அதாவது சில எழுத்தாளர்களைப் போன்று அன்றாட வாழ்க்கையில் ஒரு சிந்தனை பேச்சு, எழுத்துக்குள் இன்னொரு சொரூபம் என அவர் இருப்பதில்லை. அவர் நேர்மையாளர் என்பதல்ல நான் சொல்ல வருவது, அவரிடம் நேர்மையின்மை உண்டு, ஆனால் போலித்தனத்தையும், பொய்யையும் மறைக்க அவருக்கு வராது, நேரிலும் சரி எழுத்திலும் சரி.

2) சாரு பின்நவீன இலக்கியம் படித்து தன் எழுத்து “பாணியை” உருவாக்கவில்லை – இதுதான் அவரது இயல்பான வாழ்நிலை, அவரது இருப்பு. ஆரம்பத்தில் அவர் நவீனத்துவ பாணியில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார், ஆனால் ஒரு கட்டத்தில் பரீட்சார்த்த, பின்நவீனக் கதைகளை, சிந்தனைகளை எதிர்கொண்டு ஈர்க்கப்படும் அவர் தன்னையே கண்டறிகிறார். யாரோ கண்ணைத் திறந்து விட்டது போலாகிறது அவருக்கு. பிற எழுத்தாளர்களைப் போல பின்நவீன இலக்கியத்தின் ஸ்டைல், புதிய மோஸ்தர், பரீட்சார்த்தமான அழகியல் தருகிற சுதந்திரம் போன்றவை பிடித்திருப்பதால் அவர் பின்நவீன எழுத்தாளர் ஆகவில்லை. அதனாலே டெக்னிக்கலாக அவரது எழுத்து இருப்பதில்லை.

3) தர்க்கத்தை ஒரு புனைவாகக் காணும் போக்கு பின்நவீனத்தில் உண்டு. இதை பெரும்பாலான பின்நவீன படைப்பாளிகளால் மிகுபுனைவைக் கொண்டு நிகழ்த்திட முடிகிறது. ஆனால் சாரு இயல்பிலேயே பகுத்தறிவினால் சிந்திப்பவர் அல்ல. அவரது சிந்தனையோட்டமே முன்னுக்குப் பின் முரணாக, உணர்ச்சியின் தீவிரத்தை, உணர்வெழுச்சியின் அதர்க்கத்தின் அடிப்படையில் இயங்குவது. அவரால் கோவையாக ஒரு கதை சொல்ல முடியும், ஆனால் சீராக ஒரு கருத்தியலை, தத்துவத்தை விளக்க முடியாது. ஆகையால் அவரது தர்க்க சிந்தனையும் ஒருவித புனைவோட்டமாகவே உள்ளது. சிந்தனைக்கு தர்க்கம், உணர்வுகளுக்கும் கற்பனைக்கும் புனைவு என பகுத்து வைத்துள்ளவர்கள் இன்றும் கதைகூறலுக்கு ஒன்று எதார்த்த கதைவடிவையோ, டெக்னிக்கலான பின்நவீன கதை பாணியையோ பயன்படுத்துகிறார்கள். எழுதும் போது மட்டுமே அவர்கள் கதைசொல்லி, பேனாவை கீழே வைத்தால் புனைவின் தர்க்கத்துக்கு எதிராக சிந்திக்கிற சாமான்ய புத்திசாலிகள். இதனாலே அவர்களுக்கு சாமான்யன்-எழுத்தாளன் எனும் இருமை தேவையாகிறது. இதனாலே அவர்கள் கதை, கவிதை என்பவற்றை எழுத்தாளனின் ஆளுமை வெளிப்பாடாகவும், அபுனைவு, விவாதம் ஆகியனவற்றை சாமான்ய பகுத்தறிவுவாதியின் ஆளுமை வெளிப்பாடாகவும் வைத்திருக்கிறார்கள்; இரு முகங்களைக் கொண்டிருக்கிறார்கள் – ஒரு முகம் சீராக பகுத்துணர்ந்து பேச, மற்றொன்று அதற்கு நேரெதிராக உணர்வோட்டமாக பேச. இந்த இருவித எழுத்துக்களுக்கு என தனியான வரையறைகளை, விதிமுறைகளை வைத்திருக்கிறார்கள். ஆனால் சாருவுக்கு இந்த இருமுகங்கள் இல்லை என்பதாலே அவர் கட்டுரைகள், பதிவுகள், அரட்டை, கடிதங்கள், அவரது புனைவுகள் எல்லாம் ஒன்றாக இருக்கின்றன.

அதெப்படி என நீங்கள் கேட்கலாம் – ஒரு கட்டுரையில் ஒலிக்கும் குரல் புனைவாக, முரண்களால் பொதியப்பட்டதாக ஆகும் போது அது புனைவுக்கு நிகராகிறது, ஒரு புனைவில் ஒலிக்கும் குரல் திட்டமிட்டு அதர்க்கமாக இல்லாமல் தர்க்கபூர்வமாக இருக்கும் போது அது அபுனைவுக்கு நிகராகிறது. “சாரு புனைவெழுத்தாளர் அல்ல, அவர் தன் அரட்டைகள், கட்டுரைகளை தொகுத்து நாவல் எனப் பெயரிட்டு ஏமாற்றுகிறார்” என பகுத்தறிவாளர்கள், நவீனத்துவ விமர்சகர்கள் குற்றம் சாட்டுவது இந்த எளிய புரிதல் இல்லாமையால் மட்டுமல்ல, அவர்களுடைய வாழ்விலே எழுத்தாளன்-சாமான்யன் எனும் இருமை இருப்பதனால் தான் (நான் இங்கு ‘அவர்கள்’ எனக் குறிப்பிடுவது என்னையும் உட்பட்டு பல எழுத்தாளர்களைத் தான். பகுப்புக்குத்தானே ஒழிய இதை எதிர்மறையாக நான் காணவில்லை; பகுத்தறிவு சிந்தனையினால் எந்த பாதகமும் இல்லை.)

இதனாலே சாரு நமது இலக்கிய ஆல்பங்களில் ஒட்டப்பட முடியாத ஒரு புகைப்படமாக, நமது பகுப்புகளுக்கு உட்படாத ஒரு அந்நியராக, outlierஆக இருக்கிறார். விமர்சகரும், பின்னமைப்பியல் பெண்ணிய தத்துவஞானியுமான ஹெலன் சிக்ஸு புனைவு மொழியைப் பற்றி பேசும் போது கோர்வையாக சீராக, காலக்கோர்வையுடன் அனுபவங்களைத் தொகுக்காத, புத்திசாலித்தனமாக கவனமாக இருக்க முயலாத, பகுத்தறிவின் எல்லைகளை உடைத்த, ஆற்றொழுக்கு போன்ற மொழியை பெண் மொழி என்கிறார். பெண் மொழி என்பது பெண்களின் மொழி அல்ல; இயல்பிலேயே உடைந்த, சிதைவுற்ற மொழியே பெண்மொழி. அது ஆண்களிடமும் இருக்கலாம் என்கிறார் சிக்ஸு. இந்த அர்த்தத்தில், மீசை முறுக்கி கொடுவாளுடன் நிற்கும் ஆண்களின் தமிழ் இலக்கிய உலகில் உதிரியாகத் தோன்றும் மீசை வைத்த அழகிய பெண் சாரு. அதனாலே அவர் நம் மொழிக்கு, பண்பாட்டுக்கு ஒரு கொடுப்பினையாக இருக்கிறார்.

சாருவுக்கு மீண்டும் என் வாழ்த்துக்களும் அன்பும்!

அபிலாஷ் சந்திரன்