வித்தியாசமான நாள்

இந்த ஆண்டுப் பிறந்த நாள் மிக வித்தியாசமாகக் கடந்தது. வைன் இல்லாதபடி. நண்பர்களை virtual-ஆகப் பார்த்தபடி. வீட்டில் இருந்தபடியே. ஒருபோதும் இப்படி வீட்டிலேயே இருந்ததில்லை. எல்லாம் கொரோனா. என் சகா கிம் கி டுக்கும் போய் விட்ட பிறகு இன்னும் உஷாராக வேண்டி வந்து விட்டது. மார்ஷல் ஆர்ட்ஸ் வீரன். ப்ரூஸ்லீ மாதிரி இருப்பான். ஸ்ப்ரிங் ஸம்மர் படத்தின் அசகாயசூரன் கிம் கி டுக் தான் என்பது பலரும் அறியாதது. பலரும் அவனை இயக்குனர் என்றே அறிவர். அவன் ஒரு ஸென் குருவும் கூட. அவனும் பலியானதால் இன்னும் உஷார்.

நேற்றைய பிறந்த நாள் இன்னொரு வகையிலும் வித்தியாசம். இவ்வளவு கொண்டாட்டமாக இத்தனை ஆர்ப்பாட்டமாக இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இதுவரை நண்பர்கள் வாழ்த்து சொன்னதில்லை. முதலில் எல்லோருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லிக் கொண்டிருந்தேன். அப்புறம் பார்த்தால் ஆயிரக்கணக்கில் அன்பு பெருகி வந்ததால் எல்லோருக்கும் சேர்த்து சொல்லி விடலாம் என்று ஆகி விட்டது. தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லவில்லை என்பதற்காக மன்னியுங்கள். என்னை நினைத்ததற்காக என் நன்றி. நேற்று மட்டும் அல்ல; பல நண்பர்கள், பல வாசகர்கள் தங்கள் வாழ்க்கையையே என் எழுத்து மாற்றி விட்டதாக எழுதியிருந்தார்கள். அதுதான் என்னை மிகவும் நெகிழ வைத்தது. இத்தனை பேர் அதைச் சொன்னது இது முதல்முறை.உங்கள் அனைவருக்கும் என் நன்றி. நன்றி என்று வார்த்தையால் சொல்வது எனக்குப் பிடிக்காது. செயலிலும் காட்டுவேன். அடுத்த பிறந்த நாளுக்குள் என் நாவல்களை அடுத்தடுத்துத் தருவேன். இறைசக்தி அதற்கான வலுவை எனக்குத் தரும் என்று உங்கள் வாழ்த்துக்கள் மூலம் அறிந்து கொள்கிறேன்.