இசை: எந்து தாகிநாடோ

ராக ஆலாபனை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த க்ருதி ஒரு உதாரணமாகத் திகழ்கிறது. தோடி ராகம். இதில் முசிறி சுப்ரமணிய ஐயர் நமக்கு ஒரு அற்புத அனுபவத்தைத் தருகிறார். குரலினிமைக்கு எப்போதும் பாலமுரளியையும் எம்.எஸ்.ஸையும் சொல்வார்கள். நான் முசிறியைச் சொல்வேன். சங்கீதம் என்றாலே எல்லோரும் fanaticsதான். நான் எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ரொம்ப ரகளை நடக்கக் கூடிய இடம். எல்லோருக்குமே உடும்புப் பிடிதான். பாலமுரளிக்கெல்லாம் பெரிய தற்கொலைப் படையே உண்டு. இந்த சுனாமிகளில் முசிறி போன்ற மகத்தான கலைஞர்களின் பெயர் இன்றைய தினம் ஞாபகம் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. நாகேஸ்வர ராவ் பூங்கா செல்லும் போது எப்போதாவது ஆலிவர் ரோட் பக்கம் போனால் முசிறி இழைத்து இழைத்துக் கட்டின வீட்டை ஒரு நாஸ்டால்ஜியாவோடு பார்ப்பேன். முசிறியின் குரலில் ஒரு பெண்ணும் ஒளிந்திருக்கிறாள் என்று தோணும். முசிறியின் குரலுக்கு அவர் காலத்தில் பெரும் ரசிகர் கூட்டம் இருந்திருப்பதை அந்தக் காலக் கட்டுரைகளில் காண முடிகிறது. இன்னொரு ஆச்சரியம். எனக்கு சங்கீதத்தில் அரிச்சுவடி கூடத் தெரியாது. வெறும் Bhava அனுபவம்தான். இதை வைத்துக் கொண்டே நான் சொல்லும் கருத்துக்களை 100 ஆண்டுகளுக்கு முன் ஒரு மேதையும் சொல்லியிருக்கிறார் என்பதை மிகுந்த லஜ்ஜையுடன் இங்கே பதிவு செய்கிறேன். சங்கீத உலகில் அவரைக் கண்டு எல்லோரும் அப்போது நடுங்கியிருக்கிறார்கள். அவர் கட்டுரை வராத ஆங்கில இதழ், தமிழ் இதழ்களே இருக்காதாம். ஸ்ரீராமின் கட்டுரையில் பார்த்தேன். அவர் பெயர் சி.ஆர். ஸ்ரீனிவாச ஐயங்கார். ஆள் பயில்வான் மாதிரி இருக்கிறார். ஒத்தரும் சாஹித்யத்தைப் புரிந்து கொண்டு பாடுவதில்லை என்று அடிக்கிறார். அந்தக் கட்டுரையை எழுதியபோது எம்.எஸ். ஆறு வயதுச் சிறுமி. அப்படியானால் சி.ஆர். யாரைச் சொல்கிறார் என்று புரிகிறதா? நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. ஆனால் ஸ்ரீனிவாச ஐயங்கார் சொல்வது உண்மைதான் என்பதை மகா பெரியவர் சொன்ன ஏராளமான உபதேசங்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. பக்கம் பக்கமாகப் போகிறது மகா பெரியவரின் சங்கீத வியாக்யானங்கள். அரியக்குடிக்கு அவர் கொடுத்த ஐம்பது பக்க வியாக்னம் ஒன்று போதும். ஏற்கனவே எழுதியிருந்தேன். நீங்கள் யாரும் படிக்கவில்லை.

சரி, எந்து தாகிநாடோ ராக ஆலாபனைக்கு ஒரு சிறந்த உதாரணம். ஏனென்றால், தியாகபிரம்மம் ராகம், பாவம் இரண்டையும் பிரதானப்படுத்துபவர். முக்கியத்துவம் கொடுப்பவர். சியாமா சாஸ்திரி தாளத்துக்கு. இப்போது சாகித்யம் சுத்தமாக இல்லை. யாருக்கும் அர்த்தம் தெரியாது. எனவே பாவம் பூஜ்யம். வெறும் ராகமும் தாளமும்தான் இப்போதைய சங்கீதம்.

சென்ற கட்டுரையில் தியாகபிரம்மத்தின் சில கீர்த்தனங்களின் baroque style பற்றிக் குறிப்பிட்டேன். தொரகுநா இடுவண்டி. மயன் மாளிகை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதன் பிரம்மாண்டம் பற்றி. அதுதான் பரோக் பாணி.

இப்போதைய க்ருதி எந்து தாகிநாடோ தோடி ராகம். முசிறி சுப்ரமணிய ஐயர். இவருமே கூட ஒரே ஒரு சரணத்தோடு முடித்து விடுகிறார். க்ருதியில் மொத்தம் மூன்று சரணம் இருக்கிறது. ராக ஆலாபனையெல்லாம் விவரிப்புக்கே அடங்காதது. அப்படிச் செய்திருக்கிறார் முசிறி. ஆனாலும் எல்லோருமே டவுன் பஸ் பிடிக்கும் அவசரத்தில் ஏன் ஒரே சரணத்தோடு முடிக்கிறார்கள் என்று உண்மையிலேயே தெரியவில்லை. முழுசாகக் கேட்க ஒரு நூற்றாண்டு நான் கால எந்திரத்தில் பின்னே செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் அவர்களுக்கு என்ன பிரச்சினையோ? நான் கொடுத்திருப்பது ஆல் இண்டியா ரேடியோ. நூடுல்ஸ்தான் சாத்தியம். இருந்தாலும் ஆலாபனைக்காகக் கேளுங்கள். ஒரு விஷயம். இம்மாதிரி டவுன் பஸ் பிடிக்கும் அவசரத்தில் கர்னாடக சங்கீதம் ஓடிக் கொண்டிருப்பதால்தான் எல்லோரும் ஹிந்துஸ்தானியின் பக்கம் ஓடுகிறார்களோ என்று தோன்றுகிறது. அங்கே நேரம் இல்லை என்றால் ஒரு முழுக் கச்சேரியையும் ஆலாபனையிலேயே முடித்து விடுவார்கள். கவலையே இல்லை.

பா. ராகவன் போன் பண்ணி தொரகுநா இடுவண்டி பற்றி சில தொழில்நுட்ப விஷயங்களைச் சொன்னார். பாராட்டித்தான் போன் பண்ணினார். பதிலுக்கு நான் திட்டினேன். ஏன் இப்படி நீங்களெல்லாம் சங்கீதம் பற்றி எழுதாமல் இருக்கிறீர்கள், அதனால்தானே நான் எழுதும்படியான விபரீதம் உண்டாகியிருக்கிறது என்று. எனக்கு முழுசாத் தெரியாதே என்றார். வீணையில் ரேடியோவில் B கிரேட் வித்வானே இப்படிச் சொல்வதா? ஆமாம், ராகவன் பத்து ஆண்டுகள் வீணை பயின்றவர். என்னவோ கலி. நான் சங்கீதம் பற்றி எழுதுகிறேன். முசிறியின் இந்த ஆலாபனையைக் கேளுங்கள்: