உலகின் மகத்தான தம்புராக் கச்சேரி : சிறுகதை

(இச்சிறுகதையில் வரும் எல்லா பெயர்களுமே கற்பனை. சம்பவங்களும் கற்பனையே. யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல. அப்படி similarity இருந்தால் அது தற்செயலானதே!!!)

ஊர் பட்ட வேலை கிடக்கிறது.  நாவல் முடியும் வரை என்னுடைய அன்றாட ராணுவ ஒழுங்கு கெட்டு விடும் போலிருக்கிறது. மிகச் சரியாக பத்து மணிக்குத் தூங்கப் போனால் நான் எழுந்து கொள்ளும் போது கடிகாரம் சரியாக ஓடாவிட்டால் நாலு என்று மாற்றி வைத்துக் கொள்ளலாம்.  எனக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது, அது எப்படி இந்த உடல் கடிகாரம் இத்தனை சரியாக நாலு மணிக்கு அலாரம் அடிக்கிறது என்று.  Touchwood, touchwood, touchwood.  (மூன்று முறைதானே சொல்ல வேண்டும்?  சொல்லி விட்டேன்.)  இன்னொரு ஆச்சரியம், பத்தரைப் படுத்தாலும் நாலு மணி.  பதினொன்றுக்குப் படுத்தாலும் நாலு மணி.  ஆனால் அதைத் தாண்டிப் படுத்தால் எவ்வளவு தாண்டுகிறதோ அவ்வளவை காலையில் கூட்டிக் கொள்ளும்.  என்னடா கால்குலேட்டர் இது!  பதினொன்றரைக்குப் படுத்தால் நாலரை.  பனிரண்டுக்குப் படுத்தால் அஞ்சு.  எப்படியோ அஞ்சு மணி நேர உறக்கம் குறைந்த பட்சம்.  நேற்று பனிரண்டரைக்குப் படுத்து காலையில் ஏதோ ஒரு குளறுபடியான நேரத்தில் எழுந்தேன்.  என்ன இருந்தாலும் காலை நாலு மணியிலிருந்து ஆறு வரை எழுதுவது ரொம்பவும் ஆனந்தமானது.  சில ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் அப்படித்தான் மூன்றரைக்கு எழுந்து உடனடியாக ஜெயமோகனுக்கு ஒரு மின்னஞ்சலைத் தட்டினேன்.  ஆசாமி இதை எப்போது பார்த்து எப்போது பதில் வருமோ என்ற சம்சயம் இருந்தது.  பார்த்தால் பத்து இருபது நிமிடத்தில் ஒரு நீண்ட பதில்.  என்னங்க இது, நீங்களும் என்னைப் போல்தானா, விடிகாலைப் பறவையா என்றேன்.  இல்லை, இப்போதுதான் தூங்கப் போகிறேன் என்று அதிர்ச்சி கொடுத்தார்.  அப்போது காலை மணி நாலு. 

இப்போது எழுதப் போவதும் ஜெ. பற்றியதுதான்.  சரியாகச் சொன்னால் அருண்மொழி நங்கை பற்றியது.  இன்னொரு முக்கிய விஷயம்.  ஜெயமோகன், பா. ராகவன் போன்ற ஒருசில நண்பர்களிடம்தான் நான் உரிமை எடுத்துக் கொள்ள முடிகிறது.  மற்றபடி சென்னைவாசிகளுக்கு நகைச்சுவை உணர்ச்சி கிஞ்சித்தும் இல்லை.  இந்த சென்னைவாசிகள் பேசாமல் ஒருமுறை தஞ்சாவூர் போய் காவிரி ஆற்றில் ஒரு முழுக்குப் போட்டு விட்டு அந்தக் காவிரி மண்ணை ஒரு கை சென்னைக்கு எடுத்துக் கொண்டு வந்து தாங்கள் குளிக்கும்போது ஒரு சிட்டிகை கலந்து கலந்து குளித்தால் காலப்போக்கில் நகைச்சுவை உணர்வு கை கூட வாய்ப்புண்டு.  சரி, விஷயத்துக்கு வருகிறேன்.  இது எப்போது நடந்தது என்று ஞாபகம் இல்லை.  ஆனால் இடம் பக்காவாக ஞாபகம் இருக்கிறது.  சென்னை ம்யூசியம் வளாகம்.  மியூசியத்தின் எதிரே உள்ள ஒரு மரத்தடியில் நிழலில் மரத்தில் சாய்ந்தபடி ஜெயமோகன் நண்பர்களிடையே பேசிக் கொண்டிருக்கிறார்.  நாலைந்து பேர் இருப்போம்.  நான் அவர் எதிரே அமர்ந்திருக்கிறேன். எல்லோரும் தரையில்.  ஜெயமோகனுக்கு மட்டும் ஒரு நாற்காலி கொடுத்திருந்தால் ஜெ. ஜேகே ஆகியிருப்பார்.  ஜெ. எப்போதும் சுவாரசியமாகப் பேசக் கூடியவர்.  எவ்வளவு நேரம் பேசினாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.  நானும் லயித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.  சட்டென்று பக்கத்தில் பார்த்தால்… அதை எப்படி நான் வார்த்தையால் விவரிப்பேன்.  அந்தப் பெண்ணின் கண்களில் அப்படி ஒரு பக்திப் பரவசம்.  இப்படி ஒரு மேதை இந்த பூமியில் சாத்தியமா என்று அந்தப் பெண் அந்தக் கணம் நினைக்கிறார் என்பது அவர் கண்களில் தெரிந்தது.  என்னால் அதைப் படிக்க முடிந்தது.  அந்தப் பெண்மணியின் பெயர் அருண்மொழி நங்கை.  ஜெயமோகனின் மனைவி.  அடடா, இப்படி ஒரு பக்தை மனைவியாகக் கிடைக்க ஜெ. கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். 

பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருந்தாலும் அந்தக் காட்சி மனதில் பதிந்து விட்டது.  அதே காட்சியை நேற்று யூட்யூபில் ஒரு சங்கீதக் கச்சேரியைக் கேட்டுக் கொண்டிருந்தபோது மீண்டும் கண்டேன்.  பாடகரைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லப் போவதில்லை.  ஒரே ஒரு வார்த்தை சொன்னாலும் கண்டு பிடித்து விடுவீர்கள்.  இந்த விஷயத்தில் தஞ்சாவூர்க்காரர்கள் கொஞ்சம் பலவீனம்தான்.  நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர்த் தெருக்களில் நீங்கள் நடந்து சென்றாலே யமுனா வாழ்ந்த வீட்டைக் கண்டு பிடித்து விடலாம்.  ஜானகிராமன் அத்தனை வெளிப்படையாக எழுதியிருப்பார்.  பெயரை மட்டும்தான் மாற்றியிருப்பார். எனவே பாடகர் பற்றி ஒரு வார்த்தை நான் சொல்லப் போவதில்லை.  இதுவே நான் எழுதும் மொழி ஃப்ரெஞ்சாக இருந்தால் அந்த யூட்யூப் லிங்கையே இங்கே கொடுத்திருப்பேன்.  ஐரோப்பா, அமெரிக்கா எல்லாம் இந்த விஷயத்தில் வேறு கிரகம்.  அமெரிக்க அரசியல் சட்டத்திலேயே ஒரு விஷயம் இருக்கிறது.  உன்னுடைய உணர்வுகளைக் காயப்படுத்துகிறது அல்லது உரசுகிறது என்பதற்காக என் கருத்துக்களை நான் சொல்லாமல் இருக்க முடியாது.  அது என் பிறப்புரிமை என்று சொல்கிறது அமெரிக்க சட்டம்.  அதனால்தான் யேசு பற்றியும் மேரி பற்றியும் பயங்கரமாக எழுதுவார்கள்.  அது அவர்கள் சட்டத்தில் செல்லும்.  அதை விடுங்கள்.  கார்ட்டர் அதிபராக இருந்த போது கார்ட்டரின் குறி சின்னது என்று கேத்தி ஆக்கர் கதையில் எழுதினார்.  வழக்குத் தொடுத்தால் அது என் உரிமை என்பார்.  அது அங்கே சாத்தியம்.  இப்போது கூட கொரோனா காலத்தில் ட்ரம்ப்பின் நிர்வாண சிலையை ஒரு பெரிய பார்க்கில் நிறுவி, அதில் அவருடைய கொட்டைகளை எடுத்து விட்டு, Trump has no balls என்று பெரிதாக ஒரு அட்டையை மாட்டி விட்டார்கள்.  அப்போது ட்ரம்ப் அதிபர்தான்.  எதுவுமே செய்ய முடியாது. 

இந்தியா, அதிலும் குறிப்பாக தமிழ்நாடு பயங்கரம்.  கருத்துச் சுதந்திரம் என்ற விஷயத்தில் ஆஃப்கனிஸ்தான் தான்.  அல்லது ஸ்டாலினின் ரஷ்யா.  அதனால் பாடகர் பற்றி ஒரு வார்த்தை கிடையாது. அவருடைய ஹேர்ஸ்டைலைச் சொன்னாலே கண்டு பிடித்து விடுவீர்கள்.  உடனே பாடகர் என் மீது கேஸ் போட்டு நான் பத்து ஆண்டுக் காலம் கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைந்து கொண்டிருக்க வேண்டும். சரி, விஷயத்துக்கு வருகிறேன்.  தலைப்பைப் பார்த்து உங்களுக்குக் குழப்பமாக இருந்திருக்கும்.  என்ன இவன் காலையிலேயே தண்ணியைப் போட்டு விட்டானா என்று.  அந்த விஷயத்துக்கு வருகிறேன். பாடகரின் அருகில் சற்று பின்னால் ஒரு இளம்பெண்.  ஜானகிராமன் கதைகளில் வரும் பெண்.  தம்புரா மீட்டிக் கொண்டிருக்கிறார்.  பாடகர் ரொம்ப லயித்துப் பாடிக் கொண்டிருக்கிறார்.  (அதுவே ரொம்ப அபூர்வம்.  அன்றைய தினம் அந்த அபூர்வம் நடந்து விட்டது!) தம்புரா பெண் அந்தக் கீர்த்தனையைப் பாடி முடிக்கும்வரை – மொத்தம் பதின்மூன்று நிமிடம் – பாடகரை நோக்கி அப்படி ஒரு பார்வை.  கண்கள் பேசின.  அதோடு போயிருந்தால் இந்தக் கதையை எழுதியிருக்க மாட்டேன்.  சிரிப்பு வேறு.  கே.ஆர். விஜயா எல்லாம் என்ன சும்மா, இந்த சிரிப்பைப் பார்க்க வேண்டும்.  இந்த உலகத்திலேயே அழகான சிரிப்பு அதுதான்.  அவருக்கு இயல்பாகவே அந்த சிரிப்பு உண்டா இல்லையா என்பது தெரியாது.  அந்தப் பாடகரை நோக்கிய சிரிப்பு அது.  பதின்மூன்று நிமிடத்தில் ஒரு நொடி கூட சிரிப்பு குறையவில்லை.  சிரிக்கும் சங்கத்தில் சிரிப்பார்களே அந்த சிரிப்பு அல்ல.  உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.  இது அமெரிக்கையான சிரிப்பு.  பொங்கி வரும் சிரிப்பு.  சபை என்பதால் அதிகம் பொங்காத சிரிப்பு.  பொங்கியதை மறைக்காமல் சிரிக்கும் சிரிப்பு.  ஏன் சிரிக்கிறார் என்று நமக்குத் தெரியவில்லை.  பதின்மூன்று நிமிடம் ஒரு பெண் ஒரு நொடி கூட விடாமல் சிரிக்க முடியுமா?  அதிலும் ஒரு பக்திப் பரவசமான ஒரு கீர்த்தனைக்கு தம்புரா மீட்டியபடி?  சரி போகட்டும்.  இத்தோடு நின்றிருந்தால் நான் இந்தக் கதையை எழுதியிருக்க மாட்டேன்.  கூடவே அந்தக் கீர்த்தனையைப் பாட வேறு செய்தார் அந்த இளம் பெண்.  மைக்கில் அவர் பாடுவது கேட்கவில்லை.  ஆனால் ஒரு அட்சரம் கூட விடாமல் பாடினார்.  கடவுள் என்ன அப்பேர்ப்பட்ட கலைஞனா, சிருஷ்டியில் ஏதாவது ஒரு சின்ன திருஷ்டியாவது வைத்திருப்பான் என்று நுணுக்கி நுணுக்கிப் பார்க்கிறேன்.  ஒன்றரைக் கண்ணா?  ம்ஹும்.  தாமரைக் கண்ணார்.  ள் போடக் கூடாது.  கேஸ் போட்டு விடுவார்கள்.  பல்லில் ஏதாவது ஒன்றிரண்டு சொத்தை?  சீ. பெர்வர்ட்டட் மானிடர்காள், அந்தாண்டை போங்கள். மூச்சே விடப் படாது.  பளிங்கு போன்ற பல்வரிசை.  பற்களுக்கு மின்னக் கூடிய தன்மை உண்டா என்ன?  பெண்ணின் பற்கள் மின்னின.  வேறு ஏதாவது குறை?  ம்ஹும்.  மூக்கும் முழியுமாக என்று ரெண்டே வார்த்தையில் கிராமத்தில் சொல்வார்கள், நான் தான் ஏதோ இழுத்துக் கொண்டிருக்கிறேன்.  கடவுளே ஒரு உச்சக்கட்ட லயிப்பில் படைத்திருப்பான் போல.

கதையில் ஒரு முக்கியமான விஷயத்தைக் கோட்டை விட்டு விட்டேன்.  இப்போது திரும்பவும் படித்து இதை எங்கே சேர்ப்பது என்பதை விட இங்கேயே சேர்த்து விடுகிறேன்.  நேரம் இல்லை.  அந்தப் பெண் அந்தப் பாடகரைப் பார்க்கும் பார்வையில் எனக்கு மோகமுள் நாவலே திரும்பவும் நடப்பது போல் தெரிந்தது.  ஆனால் உல்ட்டா மோகமுள்.  மோகமுள்ளில் பாபுதான் யமுனா மீது உருகுவான்.  தமிழ்ப் பண்பும் அதுதான் இல்லையா?  யமுனாவும் உருகுவாள்.  ஆனால் அது உள்ளுக்குள் கிடக்கும்.  ஆனால் இந்தக் கச்சேரியில் யமுனா பாபுவைக் கண்டு உருகுகிறாள். என்ன, என்னை பெர்வெர்ட் என்கிறீர்களா?  சரி, அந்தப் பெண் பாடகரின் மகளாகக் கூட இருக்கலாம். அப்படியானால் அந்தப் பார்வையை வெறும் பக்திப் பரவசமாகவே நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.  ஆனால் பக்தியும் காதலும் அதில் தெரிந்தது.  கடவுளையே நம் கவிஞர்கள் தாயாகவும் சகோதரியாகவும் காதலியாகவும் நண்பனாகவும் கருதிப் பாடவில்லையா?   

உலகத்திலேயே தம்புராவினால் ஒரு மகத்தான இசைக் கச்சேரி உண்டென்றால் அது இதுதான்.  ஆனால் அந்தப் பெண்ணை சிருஷ்டித்த கடவுளை விட, அன்றைய தினம் உருகி உருகிப் பாடியவரை விட, தம்புரா வாசித்த தேவதையை விட ஒரே ஒரு ஆள்தான் அன்றைய கலைஞன்.  யார் தெரியுமா?  அந்தக் கச்சேரியை அன்றைய தினம் விடியோ எடுத்தவன்.  கலைஞன் வளைத்து வளைத்து அந்தப் பெண்ணின் சிரிப்பைத் தன் கேமராவில் எடுத்துத் தள்ளியிருக்கிறான்.

எல்லாம் சரி, ஒரு தொண்ணூறு வயதுக் கிழவர் ஒரு டீன் ஏஜ் காதலர்களைப் பார்த்தால் குறும்புச் சிரிப்போடு கடந்து போவார் இல்லையா, அதே குறும்புச் சிரிப்புதான் இந்தக் கதையும்.  அதற்கு மேல் இதில் எதுவும் இல்லை. 

பின்குறிப்பு:

இதை நான் இரண்டு நண்பர்களுக்கு அனுப்பினேன்.  இந்தக் கதையின் சுருக்கத்தையும் வாட்ஸப்பில் அனுப்பியிருந்தேன்.  ஒருவரிடமிருந்து பதில் இல்லை.  காரணம் புரிந்து கொண்டேன்.  அவருக்கு இந்த ஆண்டிலேயே ஜெயமோகனின் எண்ணிக்கையைத் தாண்ட வேண்டுமாம்.  அதனால் தினமும் 200 பக்கம் எழுதிக் கொண்டிருக்கிறாராம்.  ததாஸ்து.

இன்னொருவர், the greatest critic the earth has ever witnessed.  அத்தகைய பெருமை கொண்ட அந்தப் பெண் என் நண்பராக இருப்பது என் பாக்கியம்.  அவர் அந்தப் பதின்மூன்று நிமிட விடியோவைப் பார்த்து விட்டு எனக்கு அனுப்பின வாட்ஸப் ஒரு உலக மகா இலக்கியம்.

இல்லை சாரு, அந்தப் பெண்ணின் கண்களில் காதல் இல்லை.  அந்த சிரிப்பு விடியோ தன்னை ஃபோகஸ் பண்ணுவது தெரிஞ்ச சிரிப்பு.  மேலும், பாடகரோடு சேர்ந்து இப்படிக் கூடப் பாடக் கூடாது.  பார்வையாளர்கள் பாடலாம்.  ஆனால் மேடையில் இருப்பவர்கள் பாடக் கூடாது.  அந்தப் பெண் செய்வது மிகவும் செயற்கையாகத் தெரிந்தது.  காதல் என்றால் கண்களில் தெரிந்து விடும். 

***

இந்த சந்தா/நன்கொடை விவகாரம் எல்லாம் வந்து ரொம்ப காலம் ஆகிறது. ஞாபகப்படுத்துகிறேன். விவரம்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai