40 ஆண்டுகளாகக் கிடைக்காத அடியேனின் புத்தகம்…

1982 என்று நினைக்கிறேன்.  லத்தீன் அமெரிக்க சினிமா – ஓர் அறிமுகம் என்ற என் புத்தகம் வந்தது.  18 ரூபாய் விலை.  அப்போதெல்லாம் 8 ரூ.தான் விலை வைப்பார்கள்.  10 ரூபாய் என்றாலே அதிக பட்சம்.  நான் என்னுடைய புத்தகத்தையெல்லாம் நானே அச்சிட்டு வெளியிட்டதால் மிகுந்த சிரமப்பட வேண்டியிருந்ததாலும் லத்தீன் அமெரிக்க சினிமாவை தில்லியில் பல சிரமங்களுக்கு இடையில் பார்த்ததாலும் அவ்வளவு விலை வைத்தேன். இருந்துமே ஆறு மாதத்தில் புத்தகம் தீர்ந்து விட்டது.

அ. மார்க்ஸ் அப்போது எனக்குப் பழக்கம் இல்லை.  இவர் என்ன லத்தீன் அமெரிக்காவுக்கே போய் படம் பார்த்தாரா, இத்தனை விலை வைத்திருக்கிறாரே என்று நக்கலாகக் கேட்டதாகக் கேள்விப்பட்டேன்.  பிரதியை சுந்தர ராமசாமிக்கு அனுப்பி வைத்தேன்.  அவரது வழக்கப்படி அட்டை நன்றாக இருந்தது என்று பதில் எழுதினார்.  நியாயம்தான்.  ஜே.ஜே. சில குறிப்புகளுக்கு நான் எழுதிய விமர்சனத்தைப் படித்த பிறகும் அவர் என்னோடு கடிதத் தொடர்பில் இருந்ததே பெரிய ஆச்சரியம்தான். 

ஆனால் அ. மார்க்ஸ் சொன்னபடி லத்தீன் அமெரிக்காவுக்கே போய் பார்த்த மாதிரியான படங்கள்தான்.  இப்போதும் அந்தத் தொகுதியில் உள்ள படங்களை நீங்கள் பார்க்க முடியாது.  இணையத்திலோ மற்ற இந்தியக் காப்பகங்களிலோ கிடைக்காது.  பல ஆண்டுகள் கழித்து அதே படங்களை நான் என்னுடைய அமெரிக்க வாசகர்களின் மூலம் டிவிடியாக வாங்கினேன்.  அவர்கள் அவற்றை வாங்கினதே பெரிய கதை மாதிரி சொல்வார்கள்.  அந்தப் புத்தகத்தில் உள்ள Battle of Chile மாதிரியான ஒன்றிரண்டு படங்கள்தான் இப்போது இணையத்திலும் மற்ற இடங்களிலும் கிடைக்கின்றன.  மற்றபடி நீங்கள் லத்தீன் அமெரிக்காவுக்குப் போனால் கூட அந்தப் படங்களைப் பார்ப்பது கடினம்தான். 

இதுவரை அந்தப் புத்தகத்தை சுமார் 25 பதிப்புகளாவது கொண்டு வந்திருக்கலாம்.  கிட்டத்தட்ட ஸீரோ டிகிரி நாவல் மாதிரி ஒரு லட்சம் பிரதிகள் விற்றிருக்கக் கூடிய புத்தகம்தான்.  ஆனால் என்னுடைய ஒரு பேராசையின் காரணமாகக் கடந்த 40 ஆண்டுகளாக அந்தப் புத்தகம் விற்பனையில் இல்லை.  காரணம் என்னவென்றால், அந்தப் படங்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதலாம் என்று ஆசைப்பட்டேன்.   அந்தப் படங்கள் பற்றிய ஆய்வு நூல்கள் என்னிடம் இருந்தன.  அதனால் விரிவாகவே எழுத முடியும்.  எழுத வேண்டும் என்று நினைத்தேன்.  40 ஆண்டுகளாக.  சென்ற ஆண்டு கூட காயத்ரி சொன்னாள்,  அந்தப் புத்தகத்தை இன்னும் தாமதம் பண்ண வேண்டாம் என்று.  கொஞ்சம் பொறு, எழுதிக் கொடுத்து விடுகிறேன் என்றேன்.  அதற்குள் தருண் தேஜ்பாலின் முகமூடிகளின் பள்ளத்தாக்கு வந்தது.  2020 முழுதும் அதில் போய் விட்டது.

பள்ளத்தாக்கு வந்ததும் பாருங்கள்.  2020 முழுதும் போய் விட்டது என்ற என் வாசகத்தின் அர்த்தம் உங்களுக்குப் புரியும்.  வைரத்தைச் செதுக்குவது போல் செதுக்கியிருக்கிறேன்.  என் எழுத்து வாழ்வின் உச்சக்கட்ட உழைப்பைக் கொடுத்த புத்தகம் முகமூடிகளின் பள்ளத்தாக்குதான்.  எல்லாம் முடிந்து புத்தகம் அச்சுக்குப் போகும் கட்டம்.  கடைசிக் கட்டத் திருத்தங்கள் செய்து காயத்ரி எனக்கு அனுப்பினாள்.  அதிலும் கடைசி கடைசியாக திருத்தங்கள் செய்தேன்.  ஒரு அத்தியாயத்துக்கு நான்கு மணி நேரம் ஆனது.  அப்படிச் செய்த திருத்தங்களை நேற்று ஸூம் மூலம் காயத்ரிக்குச் சொல்லி அவள் மூலப் பிரதியில் அவற்றை நேர் செய்ய வேண்டும்.  ஏன் திருத்தம் என்று விவாதிக்க வேண்டும்.  அதற்கு ஒரு இரண்டு மணி நேரம்.  இதெல்லாம் ஒரு அத்தியாயத்துக்கு.  இன்னும் நான்கு அத்தியாயம் உள்ளது.

இந்த நிலையில் வந்தது புத்தக விழா.  சாரு, அந்த லத்தீன் அமெரிக்க சினிமா, எக்ஸைல் என்று ஆரம்பித்தாள் காயத்ரி.  நான் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் நாவலைப் பற்றிச் சொன்னேன்.  என்னை நள்ளிரவில் எழுப்பிக் கேட்டாலும் அந்தப் பாத்திரத்தைப் போல்தான் பேசுவேன்.  அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.  அசோகாவை நிறுத்தி வைத்து விட்டு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.  இது ஒரு bio-fiction.  புத்தக விழா வரும் போகும்… இந்த நாவலை நான் முடிக்காமல் வேறு எதையுமே செய்ய முடியாது.  Period.  இந்த ராம்ஜியின் பேச்சில் என்ன வசியம் இருக்குமோ தெரியவில்லை, முந்தாநாள் ஒரே ஒரு வாக்கியம்தான் சொன்னார்.  மூன்றே மூன்று வார்த்தைகள்.  அதே வாக்கியத்தை காயத்ரி இருநூறு முறையாவது சொல்லியிருப்பாள்.  நான் கேட்கவில்லை.  ராம்ஜி ஒரு முறைதான் சொன்னார்.  அடுத்த க்ஷணம் என் ரயில் தடம் மாறி ஓட ஆரம்பித்து விட்டது.  அவர் சொன்னார், வாசகர்கள் கேட்பாங்க சார்.  அவ்வளவுதான்.  காயத்ரி சொன்ன வாசகம்தான்.  ராம்ஜியின் குரலில் அந்த வசியம் இருந்தது.

ஒரே நாளில் இரண்டு புத்தகங்களைப் பிழை திருத்தம் செய்து அனுப்பி விட்டேன்.  ஆனால் இதற்கு ஸ்ரீராம் இல்லாவிட்டால் நடந்திருக்காது.  என் கவிதைகளை அனுப்புங்கள் ஸ்ரீராம் என்றேன்.  மற்றவர்களிடம் சொல்லியிருந்தால் ஒரு மாதம் ஆகும்.  ஆனாலும் அரையும் குறையுமாக இருக்கும்.  சோதித்துப் பார்த்தால் பாதி கவிதைகள் இருக்காது.  இவரோ பத்து நிமிடத்தில் அனுப்பினார்.  எப்படியென்றால், நான் இணையத்தில் எழுத எழுத அதை எடுத்துப் பெட்டியில் போட்டுத் தொகுத்து வைத்திருக்கிறார்.  எந்த எழுத்தாளருக்காவது இப்படி ஒரு நண்பர் இருக்கிறாரா? 

இன்று காலையிலிருந்து லத்தீன் அமெரிக்க சினிமாவில் உட்கார்ந்து விட்டேன்.  இரவுக்குள் அனுப்பி விடுவேன்.  300 பக்கம் வருகிறது.  காரணம், இந்த ஜென்மத்தில் அதை நான் விரிவாக எழுதப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.  நாவல்கள் வரிசை கட்டி நிற்கின்றன.  இப்போதைய நாவலை முடிக்க வேண்டும்.  அடுத்து அசோகா பாதியில் நிற்கிறது.  மீதி இரண்டு நாவல்கள் குறிப்புகளோடு நிற்கின்றன.  கணினியில் தட்ட வேண்டியதுதான் பாக்கி.  எப்போது நான் லத்தீன் அமெரிக்க சினிமாவை விரிவாக்கி எழுதுவது?  சாத்தியமே இல்லை. 

முடிந்தால் புத்தக விழாவில் அந்த 300 பக்க நூலை நீங்கள் பார்க்கலாம்.  லத்தீன் அமெரிக்க சினிமா.  எப்போதுமே எனக்கு ஒரு கருத்து உண்டு.  இன்று அல்ல.  எப்போதும்.  புத்தக விழா வந்தால் என் புத்தகங்கள் அதை முன்வைத்து வர வேண்டும் என்ற அவசியமோ அவசரமோ இல்லை.  இதை நான் என்னுடைய பதிப்பக நண்பர்களிடம் சொல்லி விடுவது வழக்கம்.  Priority பட்டியலில் என் பெயர் கடைசியாக இருந்தால் போதும்.  எது எப்படிப் போனாலும் வந்தாலும் எனக்கு ஒரு 1000 வாசகர்கள் உண்டு.  வா.மு. கோமு போன்ற இளம் எழுத்தாளர்களுக்கே அந்த எண்ணிக்கையை விட அதிக வாசகர்கள் உண்டு.  எஸ்.ரா. ஜெயமோகன் எல்லாம் பதிப்பகங்களின் சொத்து.  அவர்களுக்கெல்லாம் பல்லாயிரக் கணக்கான வாசகர்கள் உண்டு என்று எனக்குத் தெரியும். 

எனவே 40 ஆண்டுகளுக்குப் பிறகு லத்தீன் அமெரிக்க சினிமா வெளிவருவதே ஒரு கொண்டாட்டம்தான்.  அச்சகங்கள் ஒத்துழைத்தால் புத்தக விழா முடிவதற்குள் அந்தப் புத்தகம் உங்களைச் சேரும்.  மிக முக்கியமான புத்தகம்.  அதில் உள்ள தகவல்களை நீங்கள் கூகிளில் கூடப் பார்க்க முடியாது.  எனக்கு மட்டும் எப்படிக் கிடைத்தது என்றால், ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், எண்பதுகளில் ஹபானாவிலிருந்து granma என்று ஒரு டேப்ளாய்ட் வாராந்தரி வந்து கொண்டிருந்தது.  காஸ்ட்ரோவுக்கு ஒருமுறை கடிதம் எழுதினேன்.  நீண்ட கடிதம்.  கடிதத்துக்கு பதில் இல்லை.  ஆனால் அந்தப் பத்திரிகை நிற்கும் வரை எனக்கு க்ரான்மா வந்து கொண்டிருந்தது.  வாரா வாரம் அனுப்பாமல் சேர்த்து சேர்த்து அனுப்புவார்கள்.  அந்தப் பத்திரிகையின் நடைமுறை என்னவென்றால், லத்தீன் அமெரிக்காவின் எழுத்துகளில் எதெல்லாம் இன்னும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாமல் இருக்கிறதோ அவற்றையெல்லாம் மொழிபெயர்த்துக் கொடுக்கும்.  அதனால்தான் க்ரான்மாவில் உள்ள விஷயங்களைப் பொதுவாக ஆங்கிலத்தில் பார்க்க முடியாது.  அதனால்தான் அவை இன்றைய கூகிளிலும் கிடைக்காது.  அந்த வகையில் இந்த லத்தீன் அமெரிக்க சினிமா ஒரு விலை மதிக்க முடியாத பொக்கிஷம். 

அதை உங்களுக்கு என் புத்தகத் திருவிழாவின் பரிசாக அளிக்கிறேன்.  பதிலுக்கு நீங்கள் ஒரு உபகாரம் செய்ய வேண்டும்.  புத்தக விழாவில் நான் நேரில் வந்து கலந்து கொள்ள இயலாது.  ஒரு நாள் கூட.  நாவலை முடிக்காமல் நான் வெளியே வருவதாக இல்லை.  புத்தகத்தில் கையெழுத்து வேண்டுமானால் ஒன்று செய்யலாம்.  புத்தகம் அச்சகத்திலிருந்து வந்த கையோடு நான் அதில் கையெழுத்துப் போட்டு விடுகிறேன்.  அது உங்களுக்குக் கிடைக்கும்.  என்ன பிரச்சினை என்றால், உங்கள் பெயரை அதில் நான் குறிப்பிட இயலாது.  என் கையெழுத்து மட்டும் இருக்கும்.   

***

சந்தா/நன்கொடையை ஞாபகப்படுத்துகிறேன்.

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai