படித்ததில் பிடித்தது…

நாளை காங்கிரஸ் ஆட்சிக்கு வருமா, மோடியே வருவாரா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. அரசியலில் எனக்கு ஆர்வம் போய் விட்டது. மக்களின் தகுதிக்கு ஏற்பவே தலைவர்கள் வருவார்கள் என்ற விரக்தி உணர்வே காரணம். ஆனாலும் ராகுலின் இந்தத் தன்மை எனக்குப் பிடித்திருக்கிறது. நாளை பிரதம மந்திரி நாற்காலில் இவர் அமர நேர்ந்தால் இவரை இப்படி இருக்க விட மாட்டார்கள். ஆனாலும் மனோபாவத்தை எத்தனை பதவி வந்தாலும் மாற்ற முடியாது. இவரைப் போன்ற ஒருவரே தலைவராக வர வேண்டும். தகுதி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அதை ஐஏஎஸ் அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள். இந்த நாட்டை ஆள்வது அரசியல்வாதிகள் அல்ல; அதிகாரிகள்தான். ராகுலைப் போன்ற தலைவர்களிடம் நல்ல அதிகாரிகள் அதிகரிப்பார்கள். நல்ல அதிகாரிகளின் செல்வாக்கு இருக்கும். இந்தியர்களுக்கு இப்போதைக்கு அது போதும். இந்த மத மாற்ற கோஷ்டிகள் கொஞ்ச காலம் துள்ளிக் கொண்டிருக்கும். அதை மட்டும் இந்த காங்கிரஸ் கட்சி அடக்கி வைக்க வேண்டும். இந்துத்துவ எழுச்சிக்குக் காரணமே இங்கே உள்ள மதமாற்ற கோஷ்டிகள்தான் என்பதை ராகுலும் காங்கிரஸ் தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

From மனோ. மோகன் கடந்தவாரம் ராகுல் காந்தி பாண்டிச்சேரி வருவதாக இருந்தது. நான் பணியாற்றும் கல்லூரியில் அவர் உரையாற்றுவதாக ஏற்பாடு. வழக்கம்போல் ஆளுநருக்கும் முதல்வருக்கும் சண்டை.திட்டமிடப் பட்டதற்கு முந்தையநாள் ராகுல் காந்தியின் நிகழ்வுகள் ரத்துசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டன. உள்மாநிலப் பூசல் உச்சத்திற்குப் போயிருந்ததால் முதல்வர் ராஜினாமா செய்யப்போவதாக அறிக்கை விட்டார். ஆளுநர் குடியரசுத் தலைவரால் திரும்ப அழைக்கப்பட்டார். கொஞ்ச நேரத்தில் ராகுல் காந்தியின் நிகழ்வுத் திட்டம் வழக்கம்போல் நிறைவேறும் என அறிவிக்கப்பட்டது.அப்புறம் என் கல்லூரி வளாகத்திற்குள் நிகழ்ந்ததெல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். என் கல்லூரி மாணவி ஒருவர் உணர்ச்சிப் பரவசத்தில் ராகுலின்மீது அன்பை வெளிப்படுத்தியது, ராகுல் என்னை யாரும் சார் என்று அழைக்காதீர்கள் – ராகுல் என்று அழைப்பதிலேயே எனக்கு மகிழ்ச்சி என்று சொன்னது, என் அப்பா இப்போது இல்லையென்று யார் சொன்னது – அவர் என் நெஞ்சுக்குள் வாழ்கிறார் என்று சொன்னது என எல்லாம் பொதுவில் மேடையில் நடந்தது. ஊடக கவனமும் பெற்றது.நான் வேடிக்கையான விஷயம் ஒன்றைக் கவனித்தேன். எனக்கு ராகுல் காந்தி வருவதுவரைக்கும் அரங்கிற்குள் காத்திருக்கும் பொறுமையில்லை. பேராசிரியர்கள் அறையில் உட்கார்ந்திருந்தேன். வெளியே கோஷம் அதிகமாகக் கேட்டு அடங்கியது. ராகுல் வந்துவிட்டார்போல என்று அறையிலிருந்து வெளியே வந்தேன். அவர் வந்ததற்கான எந்த அறிகுறியுமில்லை. தூய்மைப் பணியாளர் ஒருவரிடம் விசாரித்தேன். ராகுலைப் பார்க்கத் தான் அவரும் வெகுநேரம் காத்திருப்பதாகவும் ராகுல் இன்னும் வரவில்லை என்றும் சொன்னார்.ஒரு வேடிக்கையான விஷயம் என்று சொன்னேனில்லையா! சிறிது நேரத்தில் ராகுல் கல்லூரி முதல்வரின் அறையிலிருந்து வெளியே வந்தார். சாதாரணமாக ஒரு நீல டி-ஷர்ட்டும் இயல்பாக ஒரு பேண்ட்டும் அணிந்திருந்தார். நான் அந்தத் தூய்மைப் பணியாளரிடம் `எப்போதோ வந்துவிட்டார்போல! நீங்கள் பார்க்கவில்லையா?´ என்றேன். `இந்தத் தம்பிதானா அது! கொஞ்ச நேரத்துக்குமுன் வாசல் காவலாளிகளோடு பேசிக்கொண்டிருந்தாரே! இங்கேதான் சிமண்ட் இருக்கையில் அமர்ந்திருந்தார். ஆனால் இவர்தான் ராகுல் என்று எனக்குத் தெரியாது´ என்றார். காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு காலத்திலும் ஆளுமைப் பண்பும் மக்கள் நலன் சார்ந்த புரிதலுமுடைய யாரோ ஒன்றிரண்டு நபர்களால் காப்பாற்றப்படுவதாக இருக்கிறது. எல்லாக் கட்சியும் அப்படித்தான். காங்கிரசின் பாரம்பரியம் அதன் கூடுதல் பலம். நிற்க.ராகுல் காந்தி இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றிவிடுவார் என்ற கனவெல்லாம் எனக்கில்லை. ஆனால் நற்குண இயல்பும் பொதுஜனங்களோடு பழகும் வழக்கமும் உடைய ஒருவரிடம் ஆட்சியை ஒப்படைப்பது பாதுகாப்பானது. குறைந்தபட்சம் பொதுச்சொத்து ஏலம் போகாமலாவது இருக்கும்.எதற்கு நான் இவ்வளவு எழுதுகிறேன்! அப்புறம் பாண்டிச்சேரிக்கு நாளை மோடி வருகிறாரில்லையா! வரும்போது அவருடைய எதிர்க்கட்சி ஆட்சியிலிருக்கக்கூடாது என்னும் திட்டம் நிறைவேறியபிறகு வெற்றிகரமான வருகை. ஒரேயொரு மோடியை கோபேக் மோடி சொல்வதில் எனக்கு நம்பிக்கையில்லை. என்னுடைய ஆருடம் ஒன்றுதான். பாண்டிச்சேரியில் நாராயணசாமியைச் சுமக்கிறவரை காங்கிரஸ் உருப்படாது. மத்தியில் ராகுல் காந்தியைத் தோள்மீது வைத்து சுமக்காத வரையில் காங்கிரஸ் உருப்படாது. பா.ஜ.க.வுக்கு கண்டிஷன் அப்ளையெல்லாம் கிடையாது.
உருப்படாது மட்டும்தான்.