நான் இலங்கை சென்றிருந்தபோது கேகே சமன் குமரவுடனும் நதீகாவுடனும்தான் தங்கியிருந்தேன். அந்த அனுபவங்களையே என் உல்லாசம் உல்லாசம் நாவலிலும் பதிவு செய்திருந்தேன். அதில் நதீகாவின் பகுதி பலஹீனமாக இருப்பதாக சீனி சொன்னதால் அதை இன்னும் வலுவாக்கி எழுதிக்கொண்டிருக்கிறேன்.
நான் தில்லியில் பன்னிரண்டு ஆண்டுகள் இருந்ததால் சர்வதேச நாடகப் போக்குகள் பற்றி அறிவேன். நாடகத் துறை இன்னும் நான் நினைக்கும் அளவு வளரவில்லை. என்னுடைய நாடகத்தில் பத்துப் பன்னிரண்டு பேர் நிர்வாணமாக வர வேண்டும் என்றால், உடலுறவுக் காட்சிகள் இருக்கும் என்றால், அதற்கெல்லாம் அனுமதி இல்லை. அமெரிக்காவில் கூட அது மாற்று நாடக அரங்குகளில்தான் சாத்தியம். அது பற்றி எனக்கு அதிகம் தெரியவில்லை. டி.டி.ஆர். என சுருக்கமாக அழைக்கப்படும் நாடகத்துக்கான இதழ் தெ ட்ராமா ரெவ்யூவிலும் அதிக விவரங்கள் இல்லை.
ஆனால் சினிமா அப்படி இல்லை. ரியூ முராகாமியின் படங்கள் நீலப் படங்களையே தாண்டக் கூடியவை. கேதரீன் ப்ரேயாவின் (Catherine Breillat) படங்களை நீங்கள் பார்த்திருக்கலாம். ரொமான்ஸ் என்ற படம் ஒரு உதாரணம். ஆனால் நாடகங்களில் அது சாத்தியப்படவில்லை. அரசு நிறுவனங்கள் அதை அனுமதிப்பதில்லை. இந்த நிலையில் நதீகாவின் ஹாஹாஹா உல்லாச விஷாத சர்வதேச நாடக அரங்கில் சாத்தியப்படாத பெண்ணுடலின் அரசியலைப் பேசியது. உல்லாசம் என்பது உல்லாசம். விஷாத என்பது மனக் கிலேசம், மன உளைச்சல். விஷாதத்தை உடல் துய்ப்பின் மூலம் தாண்டுவது குறித்த நாடகம் இது. நாடகத்தில் வசனம் இல்லை என்பதால் மொழியைக் கடந்து எல்லோரும் கண்டு ரசிக்க ஏதுவானது.
நிர்வாணமான பெண் உடல்கள் தமது துய்ப்புக்கான சாத்தியங்களைத் தேடிய இந்த நாடகத்தை இலங்கை அரசு தடை செய்யவில்லை; சில பத்திரிகையாளர்களும் சில மூத்த எழுத்தாளர்களும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள். நாடகத்தை ஒளிப்பதிவு செய்ய நான் கொஞ்சம் பண உதவி செய்தேன். ஒளிப்பதிவு முழுமையடைந்து எடிட்டிங் வேலையும் முடிந்திருந்தால் இந்த நாடகத்தின் குறுந்தகட்டை பலரும் விலை கொடுத்து வாங்கலாம். ஆறு மாதங்கள் ஒத்திகை நடந்திருக்கிறது. சில லட்சங்கள் செலவாகியிருக்கிறது. ஒரு பைசா வருமானம் இல்லை. நதீகாவின் நாடக ஆர்வமே காரணம் என்று சொன்னால் அது நதீகாவின் ஒட்டு மொத்த கலை ஆளுமையைக் குறைத்து மதிப்பிடுவதாகும்.
நதீகா பண்டாரவின் சினிமாவும் இப்படித்தான் பெண்ணின் உடல் அரசியலைப் பேசியது. ஆனால் அவளுடைய சினிமாவை விட நாடகம் கலாபூர்வமாக பல மடங்கு உயர்ந்த நிலையை அடைந்திருந்தது. நதீகாவின் நாவல்களும் இப்படியே. ஆக, நதீகா ஒரு முழுமையான கலை ஆளுமை. ஆனால் எங்கோ வனத்தில் பெருகி ஓடும் அருவியாக யாருமறியாமல் கிடக்கிறாள். அவளுடைய கலையின் ஜுவாலையை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை சிங்கள எழுத்தாளர்கள் அவளைப் பற்றி எதுவும் பேசுவதில்லை. கேகே சமன் குமர மட்டுமே விதிவிலக்கு. காரணம், நதீகா கேகேயிடமிருந்து உருவானவள். கேகேயின் பெண் வடிவம்.
cruel theatre & ”HA- HA – HA- Ullasa – Vishada” by Nadeeka Bandara. (youtube.com)
https://www.youtube.com/watch?v=1zteIWh43bE
cruel theatre & ”HA- HA – HA- Ullasa – Vishada” by Nadeeka Bandara.