அன்பு மிக்க சாரு,
உங்களுடைய நேற்றைய சிறுகதை தம்ரூட் மற்றும் இன்றைய சிறுகதை நமக்கு வாய்த்தது படித்தேன். இது முற்றிலும் தன் அனுபவக் கதைகள்.. நேரடி சாட்சியமாக, காட்சியாக எழுதுவது.. இது முற்றிலும் கிட்டத்தட்ட உண்மையும், சில புனைவுகளும் சேர்ந்து வந்திருக்கிறது… இது படிப்பதற்கு எந்தத் தடையும் இல்லாமல் செல்லும் தன்மையுடைய சிறுகதைகள்… கிட்டத்தட்ட பிற்காலத்தில் எடுத்துப் பார்த்தால் ஒரு ஆவணமாக தெரியும்.. நகைச்சுவை உணர்வும் வருவது மிக அழகாக இருக்கிறது… நாளைய சிறுகதைக்காக காத்திருக்கிறோம்…
முத்து மாணிக்கம்.
எனக்கும் ஒரு அடிக்ஷன் மாதிரிதான் இருக்கிறது முத்து மாணிக்கம். நாளையும் ஒரு சிறுகதை எழுதத் தோன்றுகிறது. சுய அனுபவக் கதையாக அல்ல. 1857 காலகட்டத்தை வைத்து தினம் ஒரு கதை என நூறு நாட்களுக்கு நூறு கதைகள் எழுதுவதற்கான ஆவணக் குறிப்புகள் என்னிடம் உள்ளன. அப்படியே வெளியே கொட்ட வேண்டியதுதான். ஆனால் நாவல் இழுக்கிறது. கயிறு இழுக்கும் போட்டியில் இரண்டு பக்கமுமே ஒரே ஆள் இரண்டு ஆளாகப் பிரிந்து நின்று கொண்டு இழுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. அசோகா பிராமண மதத்துக்கு எதிரான நாவல். 2500 ஆண்டுகளுக்கு முன்பான பிராமண மதம். இன்றைய பிராமணர்களை அர்த்தப்படுத்திக் கொள்ளலாகாது. இன்னொரு நாவல், மிகவும் intense ஆனது. முழுக்க முழுக்க இந்து மத நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அவ்வகையில் அசோகாவுக்கு எதிரானது. இந்த நாவலைத்தான் அடுத்த மாதம் முடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன். இதனிடையே நேற்றும் இன்றும் ஒரு குறுக்கீடு, அவ்வளவுதான். இந்த இரண்டு பணிகளையும் முடித்து விட்டு முழுமையாக அமர்ந்து விடலாம். இப்போது எழுதி வரும் நாவல் மிகவும் சவாலாக இருக்கிறது. ஒரு படிவத்தை எழுதிக் கொடுத்த போது எதுவுமே புரியவில்லை என்று காயத்ரியும், அட்டகாசம், லந்து பண்ணுங்கள் சாரு என்று சீனியும் சொன்னதால் சற்றே திகைத்தேன். காயத்ரிக்கே புரியாமல் போனால் அப்படியே தொடர்வதில் எனக்கு இஷ்டமாகவில்லை. கோணங்கி மாதிரி பத்துப் பேருக்கு எழுதுவதில் எனக்கு உடன்பாடே இல்லை. நல்ல பெயர் எடுக்கலாம். . சாரு என்றால் மொழி ரொம்ப சுலபமாக இருக்கும், தட்டையாக இருக்கும் என்ற குற்றச்சாட்டிலிருந்து தப்பி மிகக் கடினமாகவும் இவரால் எழுத முடியும் என்ற பெருமிதத்துடன் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். அந்த ஜம்பம் எனக்குத் தேவையில்லை. கோணங்கிக்கு அந்த மொழி தேவைப்படுகிறது. வெண்முரசுவுக்கு அந்த மொழி தேவைப்படுகிறது. ஆனால் என் நாவலுக்கு இரண்டு மூன்று வழிகள் இருந்தன. கடின மொழி மட்டுமே ஒரே வழியாக இல்லை. என் நாயகன் பேசிய, சிந்தித்த மொழி தெலுங்கு என்பதால் அதையே வேறொரு மொழியில்தான் கொண்டு வர வேண்டும் என்பதால் அது எப்படிப்பட்ட நடையாக இருந்தால் என்ன? அதற்காக 2021-இன் மொழியில் எழுதி விட முடியாது. இந்தக் காரணங்களால்தான் அது சவாலாக இருக்கிறது. அசோகா நாவலில் எனக்கு இந்தப் பிரச்சினை இல்லை. அது முற்றாக வேறொரு காலம், வேறொரு மொழி. அதனால் அதை நான் பொதுவான இலக்கிய மொழியில் எழுதி வருகிறேன். ஆனால் இந்த நாவலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நான் நிலைகொள்ள வேண்டியிருக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் புழக்கத்தில் இல்லாத வார்த்தைகளை நான் பயன்படுத்தி விடக் கூடாது. சுடுகாட்டுக்கு அவர்கள் ஸ்மாஷன் என்று குறிப்பிடுவார்கள். இது கூட சுத்த வழக்கு. பேச்சில் எப்படிக் குறிப்பிடுவார்கள் என்று நாவலில் வேறு மாதிரி வரும். சாற்றமுது என்பது எழுத்தில். நடைமுறைப் பேச்சில் சாத்தமுதுதான். சாற்றமுது இல்லை. அதுபோல.
இந்தக் காரணத்தினால் நான் தற்போதைக்கு சிறுகதைகளை ஒத்தி வைத்து விட்டு நாவலில் நுழைகிறேன்.
சிறுகதைகள் பற்றி வேறு பல எதிர்வினைகள் வந்தன. ஒருவர் என் கதைகளில் ஒன்றுமில்லை என எழுதியிருந்தார். என் கதைகள் மேலோட்டமாகப் பார்த்தால் எதுவுமே இல்லாதது போல்தான் இருக்கும். நானே அவற்றுக்குக் கோனார் நோட்ஸ் போட முடியாது. அது படைப்பாளியின் வேலை அல்ல. புரிந்தால் புரியட்டும். புரியாவிட்டால் போகட்டும். அது அவரவர் பாடு. அங்கீகாரம் எனக்கு எப்போதுமே தேவையில்லாதது. ஒரு ஞானியைப் பார்த்து சிலர் பிச்சைக்காரன் என்று சொல்வதால் ஞானிக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஏனென்றால், இலக்கியம் என்பது எல்லோருக்குமே புரிய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. மேலும், இதனாலெல்லாம் நான் பாதிப்படைவதும் இல்லை. ஆனானப்பட்ட தஸ்தயேவ்ஸ்கியையே வ்ளதிமீர் நொபக்கோவ் அவர் ஒரு சராசரி எழுத்தாளர் என்று எழுதுகிறார். எனக்குமே தஸ்தயேவ்ஸ்கியின் இடியட் நாவலைப் படித்தபோது அது ஒரு இந்திய தொலைக்காட்சி சீரியலைப் பார்ப்பது போல் இருந்தது. பாதிக்கு மேல் படிக்க இயலவில்லை. ஆனால் அதை மட்டுமே வைத்து தஸ்தயேவ்ஸ்கியை எடை போட்டு விடக் கூடாது.
வேறு பல நண்பர்கள் கடிதம் எழுதியிருந்தார்கள். பின்வரும் கடிதம் தம்ரூட் திருவல்லிக்கேணியில் கிடைப்பது பற்றி. அந்தக் கடை பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரே ஒரு முறை சாப்பிட்டும் இருக்கிறேன். சுத்தமாக மறந்து போனேன். உண்மைதான். அதன் தரம் உலகத் தரம். நாகூர் பஷீர் கடை தம்ரூட்டையே விஞ்சியது என்றே நினைக்கிறேன்.
சாரு,
இந்த தம்ரூட் என்கிற இனிப்புப் பண்டத்தைப் பற்றி நாகூர் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தவிர மற்றவர்கள் அறிய வாய்ப்பில்லை என்று எழுதியிருந்தீர்கள் அல்லவா, ஆனால் ”ஹஸரத் சையத் ஷா காதிரி மூசா” வின் அருளால் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த எங்களுக்கு அந்தக் குறையில்லை. எப்படி நாகூரில் இஸ்லாமியர்கள் இல்லங்களில் கிடைப்பது போன்ற தேநீர் எஜமான் துயிலும் தர்ஹாவின் நேரெதிர் “புஹாரி”யில்.கிடைக்கிறதோ, அதேபோல ஜாம்பஜார், ஃபக்கிர் (சாஹிப்) தெருவில் இயங்கும் “பாஷா அல்வாவாலா” கடையில் தம்ரூட் அல்வா கிடைக்கும். நாங்கள் அதை தம்க்ரூட் அல்வா, தம்க்ரூட் அல்வா என்றே அழைப்போம். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அதே இடத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். வேறு கிளைகள் இல்லை. இங்கே மீர் சாஹிப் பேட்டையிலும், ஐஸ் ஹவுசிலும் சில கடைகளில் தம்க்ரூட் கிடைக்கிறது. ஆனால் “பாஷாவின்” சுவைக்கு ஈடு இணையில்லை. ஒரே அமர்வில் அரை கிலோ அல்வாவை முடித்த பல நாட்கள் உண்டு.
நேற்றே இதைப் பற்றி எழுதியிருப்பேன். இந்தக் கொரோனாவால் என்னென்னவோ நடந்து கொண்டிருப்பதால் பாஷா கடை அங்கேதான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நேரில் கண்டு உறுதி செய்து கொண்டு எழுத வேண்டும் என்று எண்ணினேன்.
நீங்கள் தம்ரூட் பற்றி முன்பே எழுதியிருந்திருப்பீர்கள். நான் தான் கவனித்திருக்க மாட்டேன். இல்லையெனில் முன்பே பாஷா அல்வாவைத் தருவித்திருப்பேன். போகட்டும் ,சொல்லுங்கள் சாரு, தம்ரூட் கிடைத்துவிட்டதா? இல்லையெனில் ஒரு குறுஞ்செய்தி அனுப்புங்கள். பாஷா அல்வாவிலிருந்து தம்ரூட் வாங்கி வருகிறேன். நாகூர் தம்ரூட்டின் சுவைக்கு இணையாக இருக்கிறதா என்பதை சாப்பிட்டு விட்டுச் சொல்லுங்கள்.
அன்புடன்
முரளி
திருவல்லிக்கேணி
இன்னொரு நண்பரும் தன் பெயர் போடாமல் பாஷா ஹல்வா கடை பற்றி எழுதியிருக்கிறார். தம்ரூட்டின் ஒரிஜினல் பெயர் தம்-கா-ரூட் என்று சொல்கிறார் அவர். பாஷா ஹல்வா கடை உலகப் பிரசித்தம் பெற்றதாம். அங்கிருந்து வளைகுடா நாடுகளுக்கு தம்-கா-ரூட் ஏற்றுமதி ஆகிறதாம்.
அந்தப் பகுதியில் உள்ள மற்ற இனிப்புக் கடைகளில் Navaithe Badiyan என்ற வற்றல்/வடாமும் அப்பளமும் கிடைக்கிறதாம். அந்த அப்பளம் நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் அப்பளம் போன்றது அல்ல, கொஞ்சம் தடிமனாக இருக்கும், சுவையும் வேறு மாதிரி நன்றாக இருக்கும் என்கிறார் வாசக நண்பர்.
இன்னொரு கடிதம் கதைகள் பற்றி:
You never seize to amaze me Charu. நாகூர் தம்ரூட்டும், ஆட்டையாம்பட்டி முறுக்கும் கதையும் விலக்கு அல்ல. சாருவை ஏன் கொண்டாடுகிறார்கள் என்றால் இந்தத் தன்மைக்காகத்தான். உங்கள் எழுத்து உங்களைப் போலவே கொண்டாட்டமாக இருக்கிறது. சொல்ல வருகின்ற விஷயத்தை அப்படியே கண் முன்னால் கொண்டுவந்து ஒரு virtual reality experience உங்கள் எழுத்துலே மட்டும் தான் என்னால் உணர முடிகிறது . அந்த தம்ரூட்டு அல்வா நானே சுவைத்த மாதிரி, நாகூர் ஸ்வீட் கடைக்கு நானே போன மாதிரி, சங்கீதா காபி எல்லாமே ஏதோ நானே கூட இருந்த ஒரு உணர்வு ஏற்படுகிறது. தம்ரூட் அல்வாவில் தொடங்கி மிலரப்பா வரைக்கும் ஒரு வாசகருக்கு லாவகமாக எளிமையாக அறிமுகப்படுத்துகின்ற விதம் அற்புதம். பேசாமல் நீங்கள் தேசியப் பாட நூல் குழுவுக்குத் தலைவராகப் போய் இருக்கலாம். பிள்ளைகள் எல்லாம் ஆசை ஆசையாகப் படிப்பார்கள். ஏனென்றால், ஒரு வதையைக் கூட கொண்டாட்டமாக மாற்றி விடுகிறது உங்களின் துள்ளல் எழுத்து.
நமக்கு வாய்த்தது கதை பற்றி:
பாருங்கள், அடுத்த கதையை உடனேயே படித்து விட்டேன். அப்பப்பா, எவ்வளவு சுவாரசியமாக எழுதுகிறீர்கள். உங்களுக்குப் பிறகு உங்கள் இடத்தை நிரப்ப யார் இருக்கிறார்கள் என்று உண்மையிலேயே தெரியவில்லை. வாசிப்பு என்ற விஷயம் உங்களிடமிருந்துதான் தொடங்குகிறது எனக்கு. ஆனால் துரதிர்ஷ்டவசமாக உங்களைப் படித்த பிறகு என்னால் யாரையுமே படிக்க முடியவில்லை. ஒரே காரணம்தான், வேறு யார் எழுத்தும் உங்கள் எழுத்து அளவுக்கு என்னை பாதிப்பதில்லை. இது உங்கள் வாசகர்கள் எல்லோருக்குமே பொருந்தும் என்று நினைக்கிறேன். உங்களைப் படித்து விட்டால் வேறு யாரையும் படிக்க முடிவதில்லை. உங்கள் அராத்துவும் அதைத்தானே அடிக்கடி சொல்கிறார்?
இரண்டு கடிதமும் புவனேஸ்வரி.
இன்னொரு நண்பர் என் கதைகளிலிருந்து அவரால் எதுவும் அறிந்து கொள்ள முடியவில்லை என்கிறார். ஆனால் ஜெயமோகனின் கதைகளிலிருந்து அவர் பல்வேறு விஷயங்களை, குறிப்பாக வரலாறு பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது என்கிறார். அதற்கு அவர் தொடர்ந்து ஜெயமோகனையேதான் படித்து வர வேண்டும். அதனால்தான் ஜெயமோகன் ஆசான் என அழைக்கப்படுகிறார். நான் பிறழ்வு எழுத்தாளன் என அழைக்கப்படுகிறேன். எது ஒன்றிலிருந்து நமக்கு எதுவும் கிடைக்கவில்லையோ அதிலிருந்து நாம் உடனடியாக நகர்ந்து விட வேண்டும். அதுதான் நமக்கு நல்லது.