நமக்கு வாய்த்தது (சிறுகதை)

நேற்று தம்ரூட் சிறுகதையை எழுதிக் கொண்டிருந்தபோது யாரோ ஒரு நண்பர் ஜெயமோகன் எழுதிய படையல் சிறுகதையை அனுப்பியிருந்தார்.  என் கதையை நிறுத்தி விட்டு படையலைப் படிக்க ஆரம்பித்தேன்.  இன்று காலை பார்த்தால் புதிதாக வேறு ஒரு சிறுகதை.  பிறகுதான் தெரிந்தது, அவர் தினமும் ஒரு சிறுகதை எழுதுகிறார் என்பது.  ஆச்சரியம் அது அல்ல.  படையல் சிறுகதைக்கு இன்று வெளியாகியிருந்த ஒரு டஜன் கடிதங்கள்.  எல்லா கடிதங்களுமே கதையை விடப் பெரியது. ஒரே ஒரு கடிதம்தான் சின்னது.  அது ஒரு கேள்வி.  உங்கள் கதையில் வந்துள்ள நாட்டுப் பாடல்கள் எதில் உள்ளன?  அதற்கு ஜெயமோகனின் சுவாரசியமான பதில்:  என் கதைகளில் வரும் எல்லாப் பாடல்களையும் நானேதான் எழுதுகிறேன்.  வெண்முரசுவில் வந்துள்ள சங்கப் பாடல்கள் கூட நான் எழுதியவைதான். 

சரி, தம்ரூட் கதைக்கு என்ன எதிர்வினை என்று என் மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தேன்.  வழக்கமான வசை கடிதம் ஒன்றிரண்டு.  என் சிறுகதையைப் படித்துப் பாருங்கள் என்று சொல்லி சிறுகதையோடு ஒரு கடிதம்.  அவ்வளவுதான்.  மனம் மிக நொந்த நான் காயத்ரிக்கு போன் போட்டேன். 

கதை படித்தாயா? 

எந்தக் கதைப்பா?

ஓ, அதுவே தெரியாதா?  நான் நேற்று எழுதின சிறுகதை…

எங்கேப்பா படிக்கிறது?  குமுதினி முழுப் படைப்புகள், ராம்ஜியின் அடுத்த நாவல், சி.சு. செல்லப்பாவின் இதுவரை வெளிவராத நான்கு வால்யூம் நாவல் சுதந்திர தீபம், தி.ஜ. ரங்கநாதனின் நான்கு சிறுகதைத் தொகுப்பு, அராத்துவின் விர்ஜின் ஐலேண்ட்…

என்னது, விர்ஜின் ஐலேண்டா?

ஆமாம், நாவல்…

நேற்றுதானே மந்தஹாசினின்னு ஒரு நாவல் வந்துது?

ஆமாம்ப்பா, ஜெமோ தெனம் ஒரு சிறுகதை எழுதுறா மாதிரி இவர் தெனம் ஒரு நாவல் எழுதப் போறாராம்.  இன்னிக்கு கோட்டாதான் விர்ஜின் ஐலேண்ட். 

ஏம்மா, இவர் திருந்தவே மாட்டாரா?  ஏன் இங்லீஷ்ல டைட்டில்?  கன்னித்தீவுன்னு அழகா தமிழ்ல வைக்கலாமே?

நான் சொன்னேனே?  ஆனா நீங்கதான் அவருக்கு முன்னோடிங்கிறார்.  எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும், ஸீரோ டிகிரி, எக்ஸைல்னு எல்லாம் தலைப்பு வச்சிருக்கீங்கள்ள, அதைத்தான் அவரும் ஃபாலோ பண்றாராம். 

சரி, அப்புறம் நீ சொல்லு.  ஏதோ ஒரு பட்டியல் மாதிரி சொல்லிட்டு இருந்தியே?

ம்… அராத்துவோட விர்ஜின் ஐலேண்ட்…

ஒரு நிமிஷம், அது என்ன விர்ஜின்… வர்ஜின்னுல்ல சொல்லணும்? நீயே இதிலெல்லாம் டெர்ரரிஸ்ட்.  உன் கிட்டயா சீனி இப்டி வெளாட்றாரு?

நானும் சொன்னேம்ப்பா.  பேரை மாத்தச் சொல்லி.  இங்லீஷ்லதான் டைட்டில் இருக்கணும்னு அடம் பிடிக்கிறாரு.  நீங்க வேற எப்பப் பாத்தாலும் அராத்துதான் என் வாரிசுன்னு சொல்லிட்டீங்களா, அதுலேர்ந்தே அவர் கொஞ்சம் ஒரு மாதிரிதான் திரியிறாரு.  சரி, இங்லீஷ்ல இருக்கணும்னா அது வ(ர்)ஜின் ஐலண்ட்னுதான் இருக்கணும்.  ர் ஸ்தூலமா வரவே கூடாதுன்னு சொன்னேன்.  நீங்களும் சாருவும் சொல்றா மாதிரி வெளியே போய் சொன்னா எல்லாரும் அடிக்க வர்றாங்கன்னு சொல்றார்.  அப்படித்தான் அவர் அன்னிக்கு ஒருநா ஜானர் ஜானர்னு சொல்லிட்டிருந்தாரு.  எனக்கு ஒண்ணுமே புரியல.  என்னங்க என்னங்கன்னு திரும்பத் திரும்பக் கேட்கிறேன்.  திரும்பத் திரும்ப ஜானர்ங்கிறார்.  சரி, எப்டி ஸ்பெல் பண்ணுவிங்கன்னு கேட்டா ஜி இ என் ஆர் இ ங்கிறாரு.   அது ஜானரும் இல்ல பானரும் இல்ல, ஷான்ர்-னு சொல்றேன்.  அவர் அப்படி சொல்லவே மாட்டேங்கிறாரு.  ஷா-ன்–ர் இதைச் சொல்றதில என்னப்பா கஷ்டம்?  ர் மட்டும் கொஞ்சம் ழ மாதிரி நாக்கு நுனி, மேல் அன்னத்துல பட்டும் படாத மாதிரி சொல்லணும்.  அவ்வளவுதானே.  இதில் என்ன கஷ்டம்?  அப்படிச் சொன்னா அடிக்க வர்றாங்களாம்.  அதனால படைப்பாளிங்க சுதந்திரத்தில நாங்க குறுக்கிடறதில்லைன்னு முடிவு பண்ணிட்டோம்.

ஆமா, என் கிட்டயேவா?  அது என்ன நாங்க?

ஸாரிப்பா, பேசிப் பேசி அப்டியே பழக்கமாயிடுத்து.  அதனால எப்டியோ தொலையட்டும்னு விர்ஜின் ஐலேண்ட்னே போட்டுட்டேன்.  இன்னோரு வேடிக்கை தெரியுமா?  அவர் சொல்றாரு.  உங்களுக்காக வேணும்னா பிராக்கட்ல வர்ஜின்னு போட்றாராம்.  எப்டி இருக்கு கதை?  சீரியஸாவே சொல்றாருப்பா.

சரி, போகட்டும்.  என் கதையைப் படிச்சியான்னுதானே கேட்டேன்.  அதுக்கு இவ்வளவு பெரிய லிஸ்டா.  இது என்ன லிஸ்ட்? லிஸ்ட் முடிஞ்சிருச்சா இல்லியா?  

அதாம்ப்பா, நீங்க எங்கே பேச விடறீங்க… உங்களுக்கு வயசாயிடுச்சு.   அதுனாலதான் பேசும் போதே குறுக்கே குறுக்கே பேசறீங்க… சரி கேளுங்க.   நான் சொன்ன லிஸ்டெல்லாம் இப்போ என் முன்னால நின்னுண்டிருக்கு.  விர்ஜின் ஐலேண்ட் டம்மி காப்பி வந்தாச்சு.  ஓகே சொல்லிட்டா சாய்ங்காலம் காப்பீஸ் ரெடி ஆயிடும்… இது எல்லாத்தையும் இப்போ நான் டைப் செட்டுக்கு அனுப்பணும்.  கவர் பிக்சருக்கு ஆர்ட்டிஸ்டுங்களைப் பிடிக்கணும்… அதோட ஹென்றி லெஃபாவ்ருவின் நாவலின் தமிழாக்கம்…

லெஃபாவ்ர் தத்துவவாதியாச்சே?  அவர் நாவலா எழுதியிருக்கார்?

ஒரே ஒரு நாவல்தான் எழுதியிருக்கார்.  அதுவும் இங்லீஷ்ல ட்ரான்ஸ்லேட் ஆகல.  ஃப்ரெஞ்ச்லேர்ந்து நேரடியா தமிழ்ல பண்ணிண்டிருக்கேன்.  அது வேற நேரத்தைத் திங்கறது… அப்புறம் ஒரு இண்ட்ரஸ்டிங் நியூஸ்.  ஆனா அது ஒரு பெரிய வேலை.  அ. மார்க்ஸ் எழுதின நாலு வால்யூம்ஸ் ஃப்ரெஷ்ஷா வந்துருக்கு.  இதை எழுதி கிழுதி வச்சிராதீங்கப்பா…

நான் ஏன் எழுதப் போறேன்?  நீ சொன்ன ஒரு விஷயத்தையாவது நான் எழுதியிருக்கேனா இது வரை?  ஆமா, அது என்ன அ. மார்க்ஸ் வால்யூம்ஸ்?  இந்துத்துவ ஃபாஸிஸமும் பன்னாட்டு மூலதனமுமா?

சே.  கேட்டா மிரண்ட்ருவிங்க.  நாலு வால்யூமும் போவ்ம்ஸ்.  ஒவ்வொரு தொகுதியும் ஆயிரம் பக்கம்.  அதில் ஒரு தொகுதி லவ் போவ்ம்ஸ். 

(காயத்ரி Poems என்பதைச் சொல்வது விநோதமாக இருக்கும்.   மேட்டுக்குடியினர் போவ்ம்ஸ் என்றுதான் சொல்கிறார்கள்.  நாம் அவர்கள் எதிரே போயம்ஸ் என்று சொல்லும்போது நமக்கே நம்மைப் பற்றி ரொம்பக் கேவலமாகவும் அவமானமாகவும் தோன்றும்.  ஆனால் அதே சமயம் நாம் போவ்ம்ஸ் என்று சொல்ல முயற்சிக்கையில் உதடுகளை ஒரு மாதிரி குவிக்கும் போது உதடுகளின் அந்த இடங்களெல்லாம் சுளுக்கிக் கொள்வது போல் வலிக்கின்றன.  நாலைந்து தடவை அப்படிச் சொன்னோம் என்றால், நிச்சயம் உதடுகளின் செயல்பாட்டில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது…) 

ஆனால் நான் இப்போது போவ்ம்ஸ் உச்சரிப்பை விட அவள் சொன்ன இன்னொரு விஷயத்தால் அதிர்ச்சி அடைந்தேன்.  என்னது அ. மார்க்ஸ் கவிதையா?  அதுவும் நாலு வால்யூமா? அதுவும் ஒவ்வொன்றும் ஆயிரம் பக்கமா? அதில் ஒன்று காதல் கவிதையா?  என்ன இது அந்யாயமா இருக்கு? 

எல்லாம் கொரோனா லாக்டவுன்ல எழுதினதாம்.  ஆமாம், ஏன், நீங்கள் மட்டும்தான் மாயமோகினி எழுதலாம், அவர் எழுதக் கூடாதா?  அவருடைய லவ் போவ்ம்ஸ் தொகுதித் தலைப்பு என்ன தெரியுமா?

ம்?

முத்தமிட்டுப் பிரிவோம் கண்ணே…

ஆ, கலி முத்திரிச்சுன்னு சொல்றது நிஜந்தானா? 

ஹலோ, நீங்க எழுதினா பின்நவீனத்துவம்.  அவர் எழுதினா கலி முத்திருமா?

சரி அதெல்லாம் இருக்கட்டும், என் கதையை எப்போது படிப்பாய்?

அதுதாம்ப்பா சொல்லிண்டிருக்கேன்.  இத்தனையும் படிச்சாகணும்.  இன்னும் ஒரு வாரத்துல ப்ரிண்டுக்குப் போணும்.  அதுக்கு இடையில வெண்முரசும் வந்தாச்சு இன்னிக்கு ஈமெயில்ல.  அது எவ்ளோ பெரிசுன்னு உங்களுக்கே தெரியும்.  அது மட்டும் இல்ல.  அதை மறுபடியும் அவர் விரித்து எழுதியிருக்கார்.  இப்போது அது அறுபத்தாறு வால்யூம்.  இதுக்கெல்லாம் பணத்துக்கு எங்கே போறதுன்னு வேற கவலையா இருக்கு…

உங்களுக்கெல்லாம் பணம் ஒரு பிரச்சினையாம்மா?

ஏம்ப்பா, கூட இருந்து பாக்கிற நீங்களே இப்படிச் சொன்னா அப்புறம் ஊரைப் பத்திச் சொல்றதுக்கென்ன?  நாங்களே ஒரு ஏழ பாழைங்க…

அதுவும் சரிதான்.  யாவரும் மாதிரி பெரிய கைன்னா தாங்கும்.  உங்களால முடியுமா?

ஏம்ப்பா, ஏம்ப்பா, ஏம்ப்பா… ஜேகே நம்ம ஆளுப்பா.  நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவரு.  அவரை விட்ருங்கப்பா.  நல்ல மனுஷன்.

ஏம்மா, நான் இப்போ என்ன சொன்னேன்?  எனக்கு என்னமோ ஜேகே எதிரி மாதிரி பேசுறே?  நீ ஏழைன்னு சொன்னதால யாவரும் பெரிய எடம்னு சொன்னேன். அவ்ளோதான். 

எழுதி கிழுதி வச்சிராதீங்கப்பா.  ப்ளீஸ்.  ஜேகே ரொம்ப நல்லவருப்பா. 

என்னம்மா இது, நான் என்னமோ ஜேகே கெட்டவருன்னு சொன்னா மாதிரி பேசுறே.  சரி. விடு.  நீ என் கதையைப் படிக்கப் போறியா இல்லியா?  நான் உன் குரு… அதுவாவது உனக்கு ஞாபகம் இருக்கா?

ரொம்பப் பண்ணாதீங்கப்பா…  உங்களுக்கு வயசாயிருச்சு. அதனாலதான் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லிண்டே இருக்கீங்க…  இதோ செல்வேந்திரனின் வாசிப்பது எப்படி புத்தகத்தை ரீப்ரிண்ட்டுக்கு ஆர்டர் போட்டதும் அடுத்த வேலை உங்க கதையைப் படிக்கிறதுதான்.   

காலைலதானே சொன்னே, அந்த புஸ்தகத்தை ரீப்ரிண்ட் போடணும்னு?  இன்னும் குடுக்கலியா?  அது காத்தலப்பா. காத்தால போட்டது காத்தாலயே அவ்ட் ஆஃப் ப்ரிண்ட் ஆய்டுத்து.  இது  ஈவ்னிங் ஆர்டர்.  தெனம் ரெண்டு தடவை ரீப்ரிண்ட் போயிண்டிருக்கு… 

அடுத்து, புவனேஸ்வரிக்கு போன் போட்டேன்.  என்னம்மா, என் சிறுகதையைப் படிச்சியா?

என்னது, சிறுகதையா?  தம்ரூட்டுன்னு இருந்துதே?  அது சமையல் குறிப்பு இல்லியா?  சிறுகதையா?  நீங்கள் ஒரு  gastronomeங்கிறதுனால அதைப் பற்றி எழுதியிருக்கிறதா நினைச்சிட்டேன்.

சரி.  எப்போ நேரம் கிடைக்குதோ அப்போ படி.  சரியா?

சாரு, நான்தான் சொல்லியிருக்கேன்ல.  உங்களைப் படிக்க எனக்கு எந்த distractions-உம் இல்லாத ஒரு ரம்மியமான சூழ்நிலை வேண்டும்.  அதற்காகக் காத்திருக்கிறேன்.  அடுத்த வாரத்துக்குள் படித்து விடுகிறேன். 

என்ன இருந்தாலும் எனக்கு ஜெயமோகன் வாசகர்கள் மேல பொறாமையாகத்தான் இருக்கும்மா… எவ்ளோ கடிதங்கள்… அப்பா…

உங்களைப் பார்த்துத்தான் அவர்கள் பொறாமைப் படணும் சாரு…

ஏன்? ஏன்?

பின்னே என்ன?  அறுபத்தெட்டிலும் இருபதெட்டு மாதிரியான மனசும் உடம்பும் யாருக்கு வரும்?

மனசு சரி, உடம்பு அப்படி இல்லை என்று நினைத்துக் கொண்டு அடுத்த வாரம் தொடர்பு கொள்கிறேன் என்று போனை வைத்து விட்டு சீனிக்கு போன் போட்டேன்.  அவர் எடுக்கவில்லை.  அவருடைய நாவல் மந்தஹாசினி வெளிவந்திருப்பதால் அதில் பிஸியாக இருப்பார்.  இன்று வேறு விர்ஜின் ஐலேண்ட் வரப் போகிறது…

அடுத்து ஸ்ரீராம்.  ”சே கதையா அது?  கடவுளால் மட்டுமே இப்படி ஒரு கதையை எழுத முடியும் சாரு.  சான்ஸே இல்லை…” என்றார்.  நானுமே என்னைப் பற்றி அதே கருத்தைத்தான் கொண்டிருக்கிறேன் என்பதால் மேற்கொண்டு அவரோடு விவாதிக்க முடியவில்லை. 

***