தம்ரூட்டை முன்வைத்து ஒரு நீதிக்கதை (சிறுகதை)

நீதிக்கதை என்றால் ஒரு பக்கம் ரெண்டு பக்கம் இருக்கும்.  ஆனால் தருண் தேஜ்பால் எழுதிய நீதிக்கதை அறுநூறு பக்கம்.  பெரிய சாதனைதான்.  அதுவும் ஒரு நீதிக்கதையை த்ரில்லர் மாதிரி சொல்ல வேண்டுமானால் அதற்கு பயங்கரமான திறமை வேண்டும்.  பல வாசகர்கள் இலக்கியம் என்றால் நாட்டுக்கும் வீட்டுக்கும் நாலு நல்லதைச் சொல்ல வேண்டாமா என்றே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற எழுத்தாளர் ஜெயமோகன். ஆனால் நமக்கே நல்லது எது கெட்டது எது என்று தெரியாதபோது நம்மால் எப்படி நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது சொல்ல முடியும் என்பது என் கட்சி.  மேலும் நான் எழுதினால் அது அநீதிக் கதையாகத்தான் இருக்குமே ஒழிய எப்படி நீதிக்கதையாக இருக்க முடியும், இல்லையா?  இப்படியெல்லாம் சில சமயம் நான் வருத்தப்பட்டதுண்டு.  ஆனால் இன்றைய தினம் என்னுடைய அந்த நீண்ட நாள் குறை தீர்ந்தது.  தம்ரூட்டை வைத்து உங்களுக்கெல்லாம் சொல்ல எனக்கு ஒரு நீதி கிடைத்து விட்டது.

நீதி என்பது கூட சின்ன வார்த்தை.  தர்சனம் என்பதே சரி.  சுந்தர ராமசாமிக்கு ரொம்பப் பிடித்த வார்த்தை.  என் கதைகளில் தர்சனம் இல்லாதது பற்றி எனக்குப் பெரிய மனக்குறை உண்டு.  ஆனால் அதற்கு நானொரு கொடூரமான கொலை பாதகத்தைச் செய்ய வேண்டியிருக்கும்.  என்னதான் கதை என்றாலும் அதை நான் செய்ய விரும்பவில்லை.  முகமூடிகளின் பள்ளத்தாக்கு படித்திருக்கிறீர்களா, அந்தப் பள்ளத்தாக்கில் யாரும் சிரித்தால் சிறை.  சிரிப்பதென்பது ஒருவித அசட்டு உணர்ச்சியின் வெளிப்பாடு.  அந்த அசட்டு உணர்ச்சியிலிருந்துதான் எல்லாவிதமான அழுக்குகளும் தோன்றுகின்றன.  என் மனைவி, என் குடும்பம், என் பிள்ளை, என் வாரிசு, என் சொத்து… இந்த அழுக்குகள்தான் நம்முடைய நடப்பு சமூகம் இந்த அளவுக்கு அழுகிக் கிடப்பதற்குக் காரணம்.   எல்லாவற்றுக்கும் அடிப்படை சிரிப்பு.  அதற்குப் போடு ஒரு தடை.  அதேபோல் இசைக்கும் தடை.  இசை கேட்டால் முகமூடிகளின் பள்ளத்தாக்கில் கிட்டத்தட்ட மரண தண்டனையே உண்டு.  அதேபோல் என் கதை மாந்தர் அனைவரையும் காயடித்து விட்டு விட்டால் தர்சனத்தைக் காணலாம்.  உங்களுக்கும் காண்பிக்கலாம்.  ஆனால் இந்தப் பிரச்சினையையெல்லாம் மீறி இன்று இந்தக் கதையில் உங்களுக்கு நானொரு தர்சனத்தைக் காண்பிக்க இருக்கிறேன்.   

சுரேஷ் என்ற மாணவர் என்னைச் சந்திக்க விரும்பினார்.  இன்ஃபினிட்டி பார்க்குக்கு சனிக்கிழமை காலை ஏழு மணிக்கு வரச் சொன்னேன்.  சொன்னதோடு அதை மறந்தும் போனேன்.  இன்று காலை வழக்கம்போல் பார்க்குக்குப் போனபோது சுரேஷ் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.  ஆனால் நானோ அவரோடு பேசக் கூடிய நிலையில் இல்லை.  ஒரு முக்கியமான தொலைபேசி உரையாடலில் இருந்தேன்.  அந்தத் தொலைபேசி நண்பரையும் அப்போது விட்டால் அப்புறம் பிடிக்க முடியாது.  நீங்கள் வருவதே தெரியாதே என்றேன் சுரேஷிடம்.  நேற்று இரவு செய்தி அனுப்பினேன் என்று சொல்லி செய்தியைக் காண்பித்தார்.  ஆமாம், அனுப்பியிருக்கிறார்.  எனக்கு வந்து சேரவில்லை.  சரி, நீங்கள் ராகவனோடு பேசிக் கொண்டே நடைப் பயிற்சி செய்யுங்கள், நான் பேசி முடித்து விட்டு வருகிறேன் என்றேன்.  இடையில் கண்ணன் வந்தார்.  வருவதாக நேற்றே சொல்லியிருந்தார்.  பல நாட்கள் அவரும் நானும் சந்திக்க முடியாமல் போய்க் கொண்டிருந்தது.  அவரும் ராகவனும் பேசியபடி நடந்து கொண்டிருந்தார்கள்.  சுரேஷ் வேறொரு பக்கம் நடந்து கொண்டிருந்தார்.  அதனால் நானும் போன் உரையாடலைத் தொடர்ந்தேன்.  எப்படியும் எல்லோரும் ஒன்றாகத்தானே சாப்பிடப் போகிறோம்?  ஏழே முக்காலுக்குப் போனால் எல்லோருமாக உணவகம் செல்ல வசதியாக இருக்கும்.  ஆனால் ஐந்து பத்து நிமிடத்திலேயே கண்ணனும் ராகவனும் பார்க்குக்கு வெளியே வந்தார்கள்.  நான் பார்க்குக்கு வெளியே நடந்து கொண்டிருந்தேன்.  கண்ணன் சற்று பரபரப்பாகக் காணப்பட்டார்.  உடனேயே எனக்குப் புரிந்து விட்டது. அவர் எங்கோ கிளம்புகிறார்.  போனை நிறுத்தி விட்டு அவர்கள் அருகில் போனேன்.  இன்று பாண்டிச்சேரி போகிறேன், அதை சொல்லத்தான் வந்தேன் என்றார் கண்ணன்.  இதற்காக ஏன் அநாவசியமாக திருவல்லிக்கேணியிலிருந்து வர வேண்டும், போனில் சொல்லியிருய்க்கலாமே என்றேன்.  சில பல வாரங்களாக இப்படியே சந்திக்க முடியாமல் போய் விடுவதால் நேரில் வந்து சொல்லி விடலாம் என்று வந்திருக்கிறார்.  அவரை அனுப்பி விட்டு

ஒரு ஐந்து நிமிடம் சுரேஷின் கேள்விகளுக்கு பதில் சொன்னேன்.  வித்தியாசமான கேள்விகள்தான்.  மனதை சுத்திகரிப்பது எப்படி?  அதீதமான கோபம், அதீதமான காமம் போன்ற அதீதங்களைக் களைவது எப்படி?  இன்ன பிற.  ஜெயமோகன் அல்லது ஜக்கி வாசுதேவ் இக்கேள்விகளுக்கு நல்ல பதில் சொல்லியிருப்பார்கள்.  எனக்கு என்ன தெரியும்?  ஏதோ மனதில் பட்டதை உளறி வைத்தேன்.  சுரேஷும் கேட்டுக் கொண்டார்.  இன்னொரு கேள்வியும் கேட்டார்.  சுதந்திரமாக வாழ என்ன செய்ய வேண்டும்?  அந்தக் கேள்விக்கு மட்டும் எனக்கு உடனடியாக பதில் தெரிந்திருந்தது.  சுலபமான கேள்வி.  வாசகர்கள் இப்படியே சுலபமான கேள்வி கேட்டால் வாழ்க்கையும் எவ்வளவு சுலபமாக இருக்கும்.  சுரேஷின் கேள்விக்கு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்றேன். சுதந்திரத்தை பணத்தின் மூலம் வாங்கி விட முடியும்.  ஆனால் பணம் சம்பாதிக்க நினைத்து அதிலேயே மூழ்கி விடக் கூடாது.  கத்தி மேல் நடப்பது மாதிரியான விவகாரம்.  பணம் கிடைத்தால் சுதந்திரம் கிடைக்கும்.  ஆனால் அதே சமயம் பணம் உங்களை வசீகரித்து அதன் உள்ளே இழுத்துக் கொள்ளக் கூடிய தன்மையும் கொண்டது.  ஒரு கட்டத்தில் விளையாட்டை நிறுத்தி விடக் கூடிய மனோபலம் இல்லாமல் அதில் இறங்க முடியாது.  ஆனால் இறங்காமல் சுதந்திரமும் சாத்தியம் இல்லை.     

பேசி முடித்து விட்டு சுரேஷ், ராகவன், நான் மூவரும் சங்கீதா போனோம்.  ஆஹா, எடுத்த எடுப்பில் கதையின் முடிவுக்கு வருகிறேனே. ஆரம்பத்திலிருந்து சொல்ல வேண்டும்.  இன்று வீட்டில் காலை உணவுக்கான இட்லி மாவு இல்லை.  அதனால் நான் சப்பாத்தி போட்டுக் கொடுத்து விடுகிறேன் என்றாள் அவந்திகா.  அப்படியானால் பதினொன்றரைக்குத்தான் காலை உணவு.  இதற்கு மேலும் என் உடம்பு பட்டினி தாங்காது என்பதால் சங்கீதாவிலேயே லேசாக ரெண்டு இட்லியைப் போட்டுக் கொள்ளலாம் என்று நேற்றே முடிவு பண்ணி விட்டேன்.  கண்ணனும் வருகிறார் என்பதால் சாப்பாட்டுக் கவலை விட்டது.  கண்ணனிடம் அது ஒரு பழக்கம்.  அவர் செலவில் சாப்பாடு வாங்கிக் கொடுத்து விடுவார்.  வேறு யாரையும் அந்தச் செலவை ஏற்க விட மாட்டார்.  அது எத்தனை பேராக இருந்தாலும் சரி.  யாரும் சாப்பாட்டுப் பணம் கொடுக்கக் கூடாது.  என் கையில் சுத்தமாகக் காசு இல்லை.  ஏடிஎம் போய் ஒரு வருடம் ஆகிறது.  எதற்கும் இருக்கட்டும் என்று கையோடு கார்டையும் எடுத்து வந்தேன்.  நேற்றும் காஃபி குடிக்க ராகவன்தான் காசு கொடுத்தார்.  ராகவனை நான் ஒருபோதும் காசு கொடுக்க அனுமதிப்பதில்லை.  அவர் எனக்கு ஞானதானம் செய்பவர்.  அப்படிப்பட்டவர்களுக்குப் பணச் செலவும் வைக்கக் கூடாது.  சங்கீதா பக்கத்திலேயே ஏடிஎம் இருந்தது.  மோடிக்கு முன்பெல்லாம் அம்பது ரூபாய் கூட ஏடிஎம்மில் எடுக்கலாம். இப்போது மோடி செய்த பொருளாதாரப் புரட்சிக்குப் பிறகு ஐநூறு கூட எடுக்க முடியுமா அல்லது குறைந்த பட்சமே ரெண்டாயிரம்தானா என்று சந்தேகமாக இருந்தது.  ரெண்டாயிரம்தான் வரும் என்றால் டிஃபன் செலவு போக மீதத்தை வீட்டில் ஏதாவது புத்தகத்துக்குள் ஒளித்துத்தான் வைக்க வேண்டும்.  நான் போய் ஏடிஎம்மில் பணம் எடுத்தேன் என்றால் கொரோனா தொற்றி விடும் என்பது அவந்திகாவின் நம்பிக்கை.  அதனால் கையில் உறை, முகத்தில் மாஸ்க், கூடவே ஸானிடைஸர் திரவம் என்று சகல பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அவள்தான் கடந்த ஒரு வருடமாக ஏடிஎம் போய் வந்து கொண்டிருந்தாள்.  பணத்தை எடுத்து வந்து சோப்புப் போட்டுக் கழுவி கொடியில் க்ளிப் போட்டு வெய்யிலில் காய வைத்து எடுப்பாள்.  இப்படியெல்லாம் உன்னை நான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன், நீ என்னடா என்றால் இப்படி லூட்டி அடித்துக் கொண்டிருக்கிறாய் என்று அவளுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்து விடும். 

நல்லவேளையாக ஏடிஎம்மில் ஐநூறு ரூபாய் நோட்டே வந்தது.  ஆனால் என்ன துரதிர்ஷ்டம்!  என் கார்ட் மெஷினிலேயே மாட்டிக் கொண்டு விட்டது.  என்ன ஒரு பயங்கரம் பாருங்கள்.  வங்கியின் மீட்புக் குழுவினர் வந்து கார்டை எடுத்துக் கொடுக்கும் வரை நான் ஏடிஎம்மை விட்டு வெளியிலேயே போக முடியாது.  நாம் பாட்டுக்குப் போய் விட்டால் வேறு யாராவது வந்து போடும்போது கார்ட் அவர்கள் கைக்குப் போனாலும் போய் விடும்.  அஞ்சு நிமிடம் தாமதம் ஆனாலும் அவந்திகாவிடமிருந்து போன் வரும்.  விஷயத்தைச் சொல்ல வேண்டும்.  என்னடா இது பிரச்சினை என்று எனக்கு வேர்த்து விறுவிறுத்து விட்டது.  ராகவனும் சுரேஷும் சங்கீதா வாசலில் நின்று கொண்டிருந்தார்கள்.  தெய்வத்தின் கருணை என்றுதான் சொல்ல வேண்டும், கொஞ்ச நேரத்தில் கார்டு கைக்கு வந்தது. 

என்னைப் பார்த்ததும் ராகவன் என்ன இப்படி வேர்த்து விறுவிறுத்துப் போய்… என்று கேட்டார்.  பயந்து விட்டேன் என்று சொல்லி காரணத்தையும் சொன்னேன்.  சாப்பிட்டோம்.  எங்களுடைய இன்னொரு நண்பர் வந்து பில்லுக்குப் பணமே கொடுக்காமல் பரப்பிரம்மம் மாதிரி உட்கார்ந்திருப்பார்.  அப்படி இனிமேல் நடந்தால் அதை சமாளிக்க நான் ஒரு திட்டம் வகுத்திருக்கிறேன்.  என்னுடைய பில்லை மட்டும் என்னிடம் கொடுத்து விடுங்கள் என்று ஓட்டல் சிப்பந்தியிடம் சொல்லி விடுவது. 

மூவரும் ஒவ்வொரு பிளேட் இட்லி சாப்பிட்டோம்.  ஏடிஎம்மில் நடந்த குழப்பத்தால் ஒரு பிழை செய்து விட்டேன்.  இட்லி, காஃபி எல்லாம் சொல்லும் போது படு கவனமாக இருக்க வேண்டும்.  சூடான இட்லி வேண்டும், இல்லாவிட்டால் திருப்பிக் கொடுத்து விடுவேன் என்று மிரட்ட வேண்டும்.  இல்லாவிட்டால் சூடான இட்லி இருந்தாலும் அதற்கு முன் வந்த ஈட்டிலிருந்து எடுத்துக் கொடுத்து விடுவார்கள்.  இன்று நான் எதுவும் சொல்லாததால் ரொம்பவே ஆறிப் போன இட்லி வந்தது.  ஒரு வருட இடைவெளி.  கொஞ்சம் ஏமாந்து விட்டேன்.  இனி உஷாராக இருக்க வேண்டியதுதான். 

சுரேஷ் பில்லுக்கு நான் பணம் கொடுக்கவா என்று கேட்டார்.  அப்படிக் கேட்டது எனக்குப் பிடித்திருந்தது.  என்னுடைய அந்த பரப்பிரம்ம நண்பர் மாதிரி எதுவுமே தெரியாதது போல் அமர்ந்திருக்காமல் வாய் திறந்து கேட்டாரே.  அதெல்லாம் வேண்டாம் தம்பி என்று சொல்லி விட்டு பணத்தைக் கொடுத்தேன்.  180 ரூ. ஆகியிருந்தது.  மாணவர்களை செலவு செய்ய வைக்கக் கூடாது.  இதுவே அவர் ஒரு சம்பளக்காரர் என்றால் நிச்சயம் அவர்தான் கொடுக்க வேண்டும். 

சுரேஷுக்கு என்ன வயது இருக்கும்?  இருபத்து மூன்று இருக்கலாம்.  வித்தியாசமான பையன்.  ஒரு எழுத்தாளனை வந்து சந்தித்து, சந்தித்தது மட்டும் அல்லாமல் மனதை சுத்திகரிப்பது எப்படி என்ற கேள்வியையும் கேட்கிறானே.  இளைஞர்களோடு எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அனைத்தும் பரிதாபத்துக்குரியதாகவே இருந்தன.  இளைஞர்களுக்குப் பணம் ஒன்று மட்டுமே தெரிகிறது.  பணம்தான் அவர்களுடைய ஒட்டு மொத்த வாழ்க்கையையே நடத்திச் செல்கிறது.  எனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தைச் சொல்கிறேன்.  தமிழில் ஒரு வார்த்தை தெரியாத ஒரு வடக்கத்திப் பெண்.  இந்தி தாய்மொழி.  என் தமிழ்ப் புத்தகம் ஒன்றுக்கு அட்டை போடலாம் என்று அழைத்தேன்.  அவளுடைய ஓவியங்கள் எனக்குப் பிடித்திருந்தன.  புத்தகம் பற்றிக் கேட்டுக் கொண்டாள்.  ஒரு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தாள்.  நன்றாக இருந்தது.  அடுத்த க்ஷணமே, எவ்வளவு கொடுப்பீர்கள் என்றாள்.  ஓவியத்துக்கான கட்டணம்.  ஓ, எடுத்த எடுப்பில் பணமா?  இப்போதே கொடுத்து விடுங்கள் என்றாள்.  கல்லூரி மாணவி.  ஓவியத்தை முடியுங்கள், கொடுக்கிறேன் என்றேன்.  எவ்வளவு என்றாள்.  ரெண்டாயிரம் என்றேன்.  இல்லை, பத்தாயிரம் என்றாள்.  முடியாது என்றேன்.  அப்படியானால் என்னாலும் முடியாது என்றாள்.  சரி என்றேன்.  அப்படியானால் நான் வரைந்ததற்குக் காசு கொடுங்கள் என்றாள்.  எவ்வளவு என்றேன்.  ஐயாயிரம் என்றாள்.  பதிலே பேசாமல் சும்மா இருந்து விட்டேன்.  நூற்றுக்கணக்கான முறை போன் செய்தாள்.  நூற்றுக்கணக்கான மெஸேஜ்கள் அனுப்பினாள்.  எதற்குமே பதில் சொல்லவில்லை.  எப்போதடா போலீஸ் வீட்டுக் கதவைத் தட்டும் என்றே பயந்து கொண்டிருந்தேன்.  என் கையைப் பிடித்து இழுத்தான், காலைப் பிடித்து இழுத்தான் என்று ரேப் புகார் கொடுத்தால் எடுத்த எடுப்பில் ரெண்டு வருஷம் ஜெயிலில் இருந்து பிறகு பதினைந்து வருடம் கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் நாயாய் பேயாய் அலைய வேண்டும்.  ஜெயிலில் மூன்று வயதுக் குழந்தையை ரேப் பண்ணின கொடூரன்களோடெல்லாம் அறைவாசியாக இருக்க வேண்டும்.  அந்தக் கொடுமையையெல்லாம் விடப் பெருங்கொடுமை என்னவென்றால், சக எழுத்தாளன்கள் நான் ரேப் பண்ணினதைப் பார்த்ததாக எழுதுவான்கள்.  ஆதாரத்துக்கு என் கதைகளிலிருந்து மேற்கோள்களை வெட்டிக் கொடுப்பான்கள்.  இதுவரை சம்பாதித்த மானம் மரியாதை எல்லாம் தரை மட்டம்.  இது ஒருத்தனைக் கண்ட துண்டமாக வெட்டிக் கொல்வதை விட பயங்கரம்.  எத்தனையோ போராளிகளை சிறையில் அடைத்து ஜனன உறுப்புகளில்  மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்வார்கள்.  அதெல்லாம் சரீரத்துக்கு உண்டாகும் வாதை.  ஆனால் ஒரு அப்பாவியின் மீது ரேப் குற்றம் விழுவதற்கு ஈடான ஒரு சித்ரவதை உலகத்திலேயே வேறேதும் கிடையாது.  அதனால் வாயையும் சுத்தையும் மூடிக் கொண்டு கம்மென்று இருந்தேன். 

பிறகு ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு மாணவனை அணுகினேன்.  இவர்களெல்லாம் என் பார்வையில் எப்படி வருகிறார்கள் என்றால், என்னுடைய வேற்றுமொழி வாசகர்கள் மூலம் அறிமுகம் ஆகிறவர்கள்.  அந்த மாணவனோடு ஏற்பட்ட அனுபவம் தனிக் கதை.  அவனுக்கு இங்கே தமிழில் நிறைய நண்பர்கள் உண்டு.  அதனால் அவன் காதுக்குப் போய் விடும்.  இப்போது வேண்டாம்.  அந்த இந்திப் பெண் பற்றிய சம்பவத்தைக் கூட ஏன் எழுதினேன் என்றால், எப்படியும் அவள் காதுக்கு இது செல்லும் வாய்ப்பு இல்லை என்பதால்தான். 

ஜெயமோகன், எஸ்.ரா. மாதிரி இருந்திருந்தால் இப்படியெல்லாம் நான் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. ஜெயமோகன் எழுத்தைப் படித்தால் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கத் தோன்றுகிறது.  வயசில் என்னை விட சின்னவன் என்பதால் தொலைவில் இருந்தபடியே தொழுது விட்டு நகர்ந்து விடுகிறேன்.  எஸ்.ரா. முழுக்க முழுக்க தத்துவம்.  அவருடைய பட்டாம் பூச்சி கூட ஹைடேக்கர் பற்றித்தான் பாடம் எடுக்கும்.  தச்சன் கூட தஸ்தயேவ்ஸ்கி பேசுவான்.  அதனால் அவருக்கும் அந்தப் பிரச்சினை இல்லை.  நான்தான் அதீத கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது.   

கதையை எங்கே விட்டோம்.  சங்கீதா ஓட்டல்.  இட்லி சாப்பிட்டு பில்லும் கொடுத்தாயிற்று.  மூவரும் வெளியே வந்தோம்.  ராகவன் கிளம்பினார்.  நானும் கிளம்ப எத்தனிக்கையில் புத்தகத்தில் ஒரு கையெழுத்து என்றார் சுரேஷ்.  அடக் கடவுளே, பார்க்கில் நன்றாக நிழலில் உட்கார்ந்து நிதானமாகக் கையெழுத்துப் போட்டிருப்பேனே.  ஸீரோ டிகிரி.  கையெழுத்துப் போட்டு முடித்து விட்டுக் கிளம்பும்போது உங்களுக்காக ஒன்று வாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன் என்று சொல்லி அரை கிலோ தம்ரூட்டை நீட்டினார்.  பாஷா ஹல்வா தம்ரூட். 

கிட்டத்தட்ட கதையின் தலைப்பை நெருங்கி விட்டோம்.  எத்தனையோ முறை எழுதி விட்டேன்.  ஆனாலும் யாருக்கும் புரிவதில்லை.  என்ன வாங்கி வர வேண்டும் என்று கேட்டிருந்தால் ஒரு கிலோ பூனை உணவு வாங்கி வாருங்கள் என்று சொல்லியிருப்பேன்.  பூனை உணவுதான் எவ்வளவு இருந்தாலும் இன்னும் வேண்டியிருக்கிறது.  தம்ரூட் ஏற்கனவே கண்ணன் வாங்கிக் கொடுத்து விட்டார்.  அதற்கும் முன்னால் முரளி வாங்கிக் கொடுத்ததைத்தான் நானும் அவந்திகாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.  கண்ணன் கொடுத்ததை அவந்திகா எங்கள் மேனேஜரிடம் தூக்கிக் கொடுத்து விட்டாள்.  இந்த தம்ரூட்டை என்ன செய்வாள்?  பவுலிடம்தான் கொடுப்பாள்.  ஏழைகளுக்குக் கொடுப்பதில் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை.  ஆனால் பவுல் அந்த உதவிகளுக்குத் தகுதி இல்லாதவர்.  சென்ற வாரம் ஒருநாள் அவந்திகா கீழே தரைத்தளத்தில் பூனைகளுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தாள்.  குடியிருப்புக்கு வெளியே துப்புரவுத் தொழிலாளி விசில் அடித்து குப்பைப் பைகளைக் கேட்கிறார்.  வாட்ச்மேன் பவுல்தான் பைகளை எடுத்துக் கொண்டு போய் துப்புரவுத் தொழிலாளியிடம் கொடுக்க வேண்டும்.  பவுலோ விசில் சத்தம் காதிலேயே விழாதது போல் பராக்குப் பார்த்துக் கொண்டு நிற்கிறார்.  நான் இது எல்லாவற்றையும் மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  வெளியில் நிற்பவர் எத்தனை மணி நேரம் நின்று கொண்டே இருப்பார்? விசிலை விடாமல் அடிக்க விசில் சப்தத்தில் பூனைகள் தெறித்து ஓடின.  கொண்டு போயிருந்த உணவெல்லாம் வீணாகி விடும்.  அவித்த சிக்கனும் பூனை உணவும்.  அவந்திகாவே பவலைக் கூப்பிட்டு குப்பைக்காரர் குப்பை கேட்கிறார் பவுல், கொஞ்சம் கொண்டு போய்க் கொடுங்க என்றாள்.  பவுல் அதுவும் காதில் விழாதது போல் எங்கோ பார்த்துக் கொண்டு நிற்கிறார்.  குப்பைக்காரரும் ஒரு கட்டத்தில் போய் விட்டார். 

இதே மாதிரிதான் எப்போதும் செய்வார் பவுல்.  ஒரு அவசர வேலையாக அழைப்பாள் அவந்திகா.  கார் துடைச்சுக்கிட்டிருக்கேன் மேடம் என்று மறுத்து விடுவார் பவுல்.  ஆனால் இருக்கின்ற மூன்று செக்யூரிட்டிகளில் பவுலுக்கு மட்டும்தான் என் வீட்டிலிருந்து இரவு உணவு தினமும் போகும்.  அவர்தான் தூரத்திலிருந்து வருவதால் இந்த உதவி. 

பவுலின் மகளுக்குக் கல்யாணம்.  ராகவன், காயத்ரி இருவரிடமும் கேட்டேன், செக்யூரிட்டிகளின் மகள் கல்யாணத்துக்கு எத்தனை பணம் கொடுப்பீர்கள் என்று.  அவர்களும் என்னைப் போலவே அபார்ட்மெண்ட்வாசிகள்.  ராகவன் சொன்னது 500; காயத்ரி 1000.  அதுதான் நான் நினைத்ததும்.  அவந்திகா கொடுத்தது 4000.  இது இந்தக் குடியிருப்பில் உள்ள மற்ற குடும்பத்தினருக்குப் பெரும் பிரச்சினையை உண்டாக்கியது.  அவர்களெல்லாம் ஐநூறு கொடுப்பவர்கள் போல.  இப்போது இந்த நாலாயிரம் ஈகோ பிரச்சினையைக் கிளப்பி விட்டு விட்டது.  அவந்திகாவிடம் சிலர் நேரடியாகவே கேட்டார்கள்.  இது அதிகம் இல்லையா மேடம்?  ”எனக்கு வசதியிருந்தால் கல்யாணத்தையே பண்ணி வைத்திருப்பேன்.  அத்தனை வசதி இல்லாததால் நாலாயிரம் கொடுத்தேன்.”  இது தவிர தன்னுடைய மூன்று பட்டுப் புடவைகளையும் பவுலின் மகளுக்குக் கொடுத்தாள் அவந்திகா.  இதையெல்லாம் படித்து உங்களுக்கு என்ன உணர்வு ஏற்படுகிறது என்று எனக்குத் தெரியாது.  ஆனால் எனக்கு அவந்திகாவின் மீது நன்றியுணர்வு மட்டுமே ஏற்படுகிறது.  காரணம், மகாத்மாவை நீங்கள் புத்தகங்களில் படிக்கிறீர்கள்.  நான் கூடவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.  அவந்திகா தன்னுடைய பென்ஷன் பணத்தில் மட்டுமே இதையெல்லாம் செய்கிறாள். எனக்கு வரும் பணத்தைத் தொடுவதில்லை.  அதுவும் தவிர, நீ ஒரு வேட்டிதான் கட்ட வேண்டும், ஜட்டிக்குக் காசு செலவழிக்காமல் கிழிந்த வேட்டியில் கோமணம் கிழித்துக் கட்டிக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் சட்டம் போடவில்லை.  சொல்லப் போனால் இது போன்ற விஷயங்களில் அவள் தலையிடுவதே இல்லை.  கஸ்தூர் பாவிடம் நீங்கள் கேட்க வேண்டும், காந்தி செய்த காரியங்களை.  அதெல்லாம் தனிக்கதை.  இந்த தம்ரூட் கதையில் வராது. 

இப்போது நம்முடைய மெய்ன் மேட்டருக்கு வருவோம்.  நம்முடைய வாசகர் தம்பி சுரேஷ் என் மீதான அன்பு மிகுதியால் வாங்கி வந்திருந்த தம்ரூட் இன்று பவுலுக்குத்தான் போகும்.  ராகவனைக் கேட்டேன்.  அவர் ஒருநாள் சாப்பிட்டுப் பார்த்திருக்கிறார்.  பிடிக்கவில்லை.  என்ன செய்வது.  ரசனையும் ருசியும் எல்லாருக்கும் ஒன்று போலவா இருக்கிறது.  சுரேஷ் இந்த தம்ரூட்டை 250 ரூ. கொடுத்து வாங்காமல் காசை கையில் வைத்திருந்தால் நாங்கள் மூவரும் சாப்பிட்ட இட்லி பில்லாவது கொடுத்திருக்கலாம் என்று நினைத்தபடி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.   

பின்குறிப்பு: வீட்டுக்கு வந்து முதல் வேலையாக சுரேஷுக்கு ஒரு மின்னஞ்சல் எழுதினேன்.  தம்பி சுரேஷ், நீ இன்னும் வளர வேண்டியவன்.  அம்மா, அப்பா, மனைவி, பிள்ளைகள் என்று எத்தனையோ பேருக்கு நீ வாங்கிக் கொடுக்க வேண்டியிருக்கும்.  அதனால் அவர்களுக்கு என்ன தேவை என்று கேட்டு வாங்கு.  அதுதான் அவர்களுக்கு நல்லது. 

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai