எக்ஸைல்

ஸீரோ டிகிரி ஒரு cult நாவலாக மாறி விட்டது.  எப்படியும் ஒரு ஆண்டில் எழுநூறு எண்ணூறு பிரதிகள் போய் விடுகின்றன.  எனக்கு வரும் ராயல்டி ஸ்டேட்மெண்ட்டில் எப்போதுமே அதிகம் விற்ற புத்தகமாக ஸீரோ டிகிரிதான் இருக்கிறது.  அடுத்து, நண்பர்களிடையே பேசும்போது அவர்கள் அதிகம் குறிப்பிடுவதும் சிலாகிப்பதும் ராஸ லீலா.  யாருமே குறிப்பிடாத நாவல் காமரூப கதைகள்.  புறக்கணிக்கப்பட்ட நாவல் அது.  அடுத்து, யாரும் படிக்காத நாவல் என்று எக்ஸைலைச் சொல்லலாம்.  எப்போதுமே ஒன்றிரண்டு விதிவிலக்குகள் உண்டு.  ஸ்ரீராம் போல.  அட்டை ஓவியத்துக்கு நாவலை நான் விளக்கும்போது சரியாக அதைச் செய்ய முடியவில்லை.  ஸ்ரீராம்தான் சரியானபடி அதை எனக்கு எடுத்துக் கொடுத்தார்.  இத்தனைக்கும் நான் அந்த நாவலைத் தற்சமயம் பிழைதிருத்தம் செய்து கொண்டிருக்கிறேன்.  எப்படி என் நண்பர்களே அந்த நாவலைத் தவற விட்டார்கள் என்று எனக்குப் புரியவில்லை.  நாவலில் சில பல இடங்களைப் படித்தபோது உலக இலக்கியத்தில் கூட இப்படி நாம் படித்ததில்லையே என வியந்து போனேன்.  படிக்கும்போது என்னுடைய மற்ற எல்லா படைப்புகளையும் மறந்து விட்டு, இதில் மட்டுமே மனதை முழுமையாகச் செலுத்தி வாசிக்க வேண்டும்.  மஜ்னு கா டில்லா, திபெத்திய த்தாங் மது, அதில் வரும் பிராணிகள், தில்லி வாழ்க்கை எல்லாம் உலக இலக்கியத்தில் சேரக் கூடியவை.   பல இடங்களைப் படித்து நானா எழுதினேன் என்று மாய்ந்து மாய்ந்து போனேன்.  முக்கியமாக 570இலிருந்து 580 வரையிலான பக்கங்களில் வரும் விஷயங்கள் – அந்தத் துயரம், அந்த வெம்மை, அந்தக் கசப்பு நான் எந்த உலக இலக்கியத்திலும் வாசித்திராதது.  யாராலும் நம்பவும் முடியாதது.  எழுத்தாளன் பொய் சொல்லவில்லை, கதை கட்டவில்லை, அது உண்மை என்று நம்பினால் நெஞ்சம் விம்மும்.  அதற்கு மேல் வாசிக்க முடியாது.  என்ன என்று எழுதினால் என் மீது வழக்கு பாயும்.  எனவே நான் அடக்கித்தான் வாசிக்க வேண்டும்.  நாவல் உங்கள் வாசிப்புக்கானது.  உங்களில் யாரும் அது பற்றி எழுதவில்லை.  பேசவில்லை.  முருகேச பாண்டியன் மட்டுமே எக்ஸைல் பற்றி மிக விரிவாக என்னோடு பேசியிருக்கிறார்.  வாசகர்களிடையே பேசவும் தயாராக இருக்கிறார்.  அவருக்காகவே எக்ஸைலை நான் கடந்த ஒரு மாத காலமாக எல்லா வேலைகளையும் ஒத்தி வைத்து விட்டுப் பிழை திருத்தம் செய்தேன்.  இன்னும் ஒரு நூறு பக்கம் உள்ளது.  நாளைக்குள் முடித்து விடுவேன்.  இன்னும் மூன்று வாரத்தில் உங்களுக்குக் கிடைக்கும்.  இதை நான் நாவலின் ப்ரமோஷனுக்காக எழுதவில்லை.  படித்தால் படியுங்கள், இல்லாவிட்டால் உங்கள் விருப்பம் என்ற மனநிலையில்தான் இருக்கிறேன்.  ஏனென்றால், இது ஒரு வைரச் சுரங்கம்.  இதற்கெல்லாம் ப்ரமோஷன் செய்வது எனக்கு இழுக்கு.  இனிமேல் எக்ஸைல் நாவலை நான் படிக்கும்படி இருக்காது.  இப்போது படித்ததே மனதில் நிற்கும்.  முன்பு ஒருமுறை படித்திருந்தாலும் இன்னொரு முறை எக்ஸைலைப் படித்தால் அது உங்களுக்குப் பல திறப்புகளை அளிக்கும்.  ஆரம்பப் பக்கங்களில் unconventionalஆகத்தான் இருக்கும்.  அதை நான் நீக்க விரும்பவில்லை.  உம்பர்த்தோ எக்கோ, ஹாருகி முராகாமி, ரொபர்த்தோ பொலான்யோ போன்றவர்கள் ஒரு நாவலில் நூற்றுக்கணக்கான பக்கங்களுக்கு மொக்கை போடுகிறார்கள்.  அதை ஒப்பிடும்போது ஆரம்பப் பக்கங்களின் ஒரு முப்பது பக்கங்களைக் கடந்து விடலாம்.  அந்தப் பக்கங்கள் கதைசொல்லியின் பிற்காலத்தியத் தனிமைப்படுத்தலுக்கான காரணிகளாக அமைகின்றன என்பதுதான் அதன் இருப்பை நியாயப்படுத்துகின்றன.