முகமூடிகளின் பள்ளத்தாக்கு – ஒரு மதிப்புரை

அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய சாரு அவர்களுக்கு,

இது தங்களுக்கு நான் எழுதும் முதல் வாசகர் கடிதம். கடந்த ஐந்து வருடங்களாக, சரியாகச் சொல்வதானால் என் கல்லூரியின் தொடக்க நாட்களிலிருந்து தங்களின் தீவிர வாசகன்.  தற்போது குடிமைப்பணித் தேர்வுக்காக தயார் செய்துகொண்டிருக்கின்றேன். 

உங்களது படைப்புகள் என்னில், எனது சிந்தையில், உலகை அணுகும்  பார்வையில், பிறவுயிரிகளை நேசிப்பதில் என்று அவை ஏற்படுத்திய தாக்கங்கள் மற்றும் மாற்றங்கள் அனேகம். அதைப் பற்றியெல்லாம் உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அடிக்கடி தோன்றும் ஆனால் தயக்கமோ பயமோ ஏதோவொன்று அதைத் தடுத்துவிடும். 

உதாரணமாக, தாங்கள் எழுதும் பூனைக் கதைகளைப் பற்றி சிலர் கடிந்துகொள்வதாக எழுதியிருந்தீர்கள். ஆனால் அந்தப் படைப்புகளே உங்களில் ஆகச் சிறந்ததாக எனக்குத் தோன்றும். காரணம், எங்கள் வீட்டில் ஒரு பூனைப் பட்டாளமே வளர்கிறது. நாங்கள் வளர்க்கவில்லை. அவையாகவே வரும்.  பின்னர் வளர்ந்ததும் அவையாகவே சென்றுவிடும். இடையில் எங்கள் வீட்டின் ஒரு அங்கமாகவே வளரும். இப்படியாக இரண்டு பூனைகள் அடைக்கலமாக வந்ததிலிருந்து ஆரம்பித்தது இன்று ஒரு டஜனாகப் பெருகியிருக்கிறது. என் அம்மா அவை ஒவ்வொன்றிற்கும் பெயர் வைத்து மனிதர்களோடு உரையாடுவது போலவே பேசுவார்கள்.  காகங்களுக்கு, நாய்களுக்கு, பூனைகளுக்கு, அவை அருந்துவதற்கு தனியாக சிறு பானையில் தண்ணீர் வைப்பதிலிருந்து ஆரம்பித்து எங்கள் வீட்டில் அன்றாடம் அனிச்சையாக நடக்கின்ற விஷயங்களை உங்கள் எழுத்தில் படிக்கும்போது அது பெரும் வாழ்க்கை அனுபவமாகவே என்னில் பதியும். இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே. இதைப்போல இன்னும் நிறைய சொல்லலாம்.

ஆனால் இந்தக் கடிதம் அதைப்பற்றியதல்ல,

தாங்கள் தாமரைச்செல்வி, காயத்ரியுடன் சேர்ந்து மொழிபெயர்த்த முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலை வாசித்து முடித்தாயிற்று.   

எடுத்தால் கீழே வைக்க முடியாது என்று தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை.  படு சுவாரஸ்யமான நாவல். உங்களின் எழுத்தை வாசிப்பதென்பது -பலர் சொல்லியிருந்தாலும் நானும் சொல்லியே ஆகவேண்டும்- இறகால் வருடுவதைப் போல மிக லகுவாக இருக்கும். ஊரின் மிக அழகான பெண் தொகுப்பு ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்று எப்படி என்னால் நம்ப முடியவில்லையோ அதைவிட ஒருபடி மேலாகவே இந்த நாவலிலும் தோன்றியது. 

சில பகுதிகள் அதன் கருத்துகளுக்காக மீண்டும் ஒருமுறை படிக்கத்தூண்டினாலும், அதன் மொழிநடைக்காகவும் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டியது. 

உ.ம்.- கச்சிதமாகப் படைக்கப்படும் இசை சூரியனை வெற்றிடமாக்கும், நதிகளைப் பாயச் செய்யும், புலிகளைப் பூனைகளாக்கும்,  கொடூரமான சேனைகளை அசைவற்று நிற்கச் செய்யும் வலிமை மிக்கது என்பார் அவர். தனக்குப் பின்னாலிருக்கும் அலமாரியிலிருந்து  ப்ளாஸ்டிக் பையால் சுற்றப்பட்ட பொருளை அவர் கொடுத்தால், நான் அதை அப்படியே கொண்டு வந்து கருப்பு நிற இசைப்பெட்டியில் இடுவேன். பின்னர் அதனை மீண்டும் மீண்டும் மீண்டும் ஒலிக்கச் செய்து, தண்ணீருக்குள் மூழ்கியவனின் சருமத் துளை வழியே தண்ணீர் அவனுக்குள் புகுவதைப் போல அதன் ஓசை என் தசை நாளங்களுக்குள் நுழையும்வரை கேட்டுக் கொண்டேயிருப்பேன் ஒவ்வொரு முறையும் எனக்குத் தென்படும் புதுப் புது லயங்களால் நான் வியந்துபோவேன்

இப்படி நாவலின் பல பக்கங்களில் அடிக்கோடிட்டு வைத்திருக்கிறேன். 

ஆரம்பத்தில் வாசிக்கும்போது இந்த நாவல் இட்டுச்செல்கின்ற அந்த Utopia  நிலத்தின் மீது ஒருவித பற்றும், இப்படி இருந்தால் உண்மையில் நன்றாக இருக்குமே என்ற எண்ணமும் தோன்றியது. நிதானமாக யோசிக்கும்போதுதான் எவ்வளவு வன்முறையால் அந்த உலகம் பின்னப்பட்டிருப்பது புரிந்தது. அந்த வன்முறையினை உள்ளூர என் மனது ரசித்துகொண்டே வந்திருப்பது எனக்கே அவமானமாக இருக்கிறது.

ஓம் தனது ஞானத்தால் கண்டறிந்த உண்மையினை பிறருக்கு உரைக்கும் வரையில் எந்தப் பிரச்சனையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு பல அடுக்குகள் கொண்ட ஒரு அமைப்பை நிறுவும் போதுதான் பிரச்சனைகள் தொடங்குவதாக எனக்குத் தோன்றுகிறது. 

அதிலும் அவருக்குப் பிற்பாடு வருகின்றவர்கள் அந்த அமைப்பினை அவரவர்களின் வசதிக்கேற்ப மாற்றும் போது நிலைமை இன்னும் மோசமாகிறது. (நாவலின் இறுதியில் இதை மலைச்செம்போத்து திறம்படச் செய்கிறார்.)

இது இதுவரையில் தோன்றிய அனைத்து மதங்கள், கொள்கைகள் அவற்றின் உண்மை நோக்கத்திலிருந்து எவ்வளவு விலகியிருக்கிறது என்று சிந்திக்க வைக்கிறது. 

புனிதம், பரிசுத்தம், முழுமையான மீட்சி போன்ற கற்பிதங்களை நம்புகின்றவர்கள், அதை அடையும் வழிமுறைகளாக சிலவற்றைப் பின்பற்றுகின்றனர். ஆனால் உண்மை அதற்கு மாறாக அதன் மீறலில் இருக்கிறது.  இந்த உண்மை அந்த உலகின் ஒவ்வொரு அடுக்கிலும் மீண்டும் மீண்டும் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. கூர்மையான கழுத்தெழும்பு கொண்ட அந்த அன்னையாகவும், இசையால் மீட்சி தேடும் உடல் பருத்த பீமனாகவும், அர்ஜுனனின் கதை வழியாகவும், C963, QT2 வழியாகவும், மின்னும் கண்களைக் கொண்ட பெண்ணின் மூலமும் அந்த உண்மை வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கிறது.  அந்த நிலத்தின் மீட்சிமுற்றம் உண்மைகளால் நிரம்பி வழிகிறது.  

இந்த மொத்த நாவலின் செய்தியும், மின்னும் கண்களை உடையவளின் வார்தைகளிலிருந்து பின்வருமாறு வெளிப்படுவதாக எனக்குத் தோன்றுகிறது,

நீ உன் வாழ்வில் எதையும் தேடியதில்லை. எதையும் கண்டுபிடித்ததும் இல்லை. ஆனாலும் உன்னிடம் இவ்வளவு அதிகாரம் இருக்கிறது. வாழ்வின் மீதும், மரணத்தின் மீதும்…

இந்த உலகின் மோசமான குறைகளை தன் குறைகளைக் கொண்டே எதிர்கொள்கின்ற..’ அந்தக் கழிவுநீர் இன்ஸ்பெக்டரும், இந்த உலகைச் சரிப்படுத்தி விடலாம் என்று நினைப்பது வெறும் ஆணவம். அதை அப்படியே தாங்கிக் கொள்வதுதான் ஞானம் ..’ என்பதை அறிந்த பெட்டிக்கடை ஆசானும் உணர்த்துவதையே இந்த நீதிக்கதையிலிருந்து நானும் பெற்றுக்கொண்டதாகக் கருதுகிறேன்.

என்னுடைய கொள்கையே சிறந்தது, உன்னுடைய நன்மைக்காக என்றெல்லாம் சொல்பவர்கள் வன்முறையின் ஊற்றுக்கண்ணாக இருப்பதை இந்த நாவல் அப்பட்டமாகக் கூறுகிறது. இந்த நாவலின் தற்கால அவசியத்தை தாங்கள் வலியுறுத்தியதன் முக்கியத்துவம் இப்போது புரிகிறது.  நேரம் கிடைக்கும் போது மீண்டும் ஒருமுறை வாசிக்க வேண்டும் என்று அருகிலேயே வைத்திருக்கிறேன். 

தவறாக ஏதேனும் எழுதியிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். 

தங்கள் வாசகன்,

ஜெயசுப்பிரமணியன்.வெ

அன்புள்ள ஜெயசுப்பிரமணியன்,

உங்கள் கடிதம்தான் முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலுக்கு நான் படித்த முதல் மதிப்புரை.  அதுவே இந்த நாவல் பற்றி நான் என்ன நினைத்தேனோ அதை அப்படியே சொல்வதாக இருக்கிறது.  கதையில் வரும் ஓம்தான் கார்ல் மார்க்ஸ்.  ஓம்தான் ஸ்ரீராமானுஜர்.  ராமானுஜர் குளிப்பதற்காக நதிக்கரைக்குச் செல்லும் போது பிராமணர்களின் தோளில் கை போட்டுச் செல்வார்.  குளித்து விட்டுத் திரும்பி வரும்போது தீண்டத் தகாதவர்களாகக் கருதப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு சீடனின் தோள்மீது கை போட்டு வருவார்.  அந்தக் காலத்தில் அப்படிப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை கண்ணால் கண்டாலே திரும்பவும் ஸ்நானம் செய்து விடுவார்கள்.  ஒரு பிராமணர் நதியில் குளித்து விட்டு வரும்போது எதிரே ஒரு தலித் வந்து விட்டால் திரும்பவும் நதிக்குப் போய் குளித்தாக வேண்டும்.  அப்படிப்பட்ட நிலையில் ராமானுஜர் அந்த மாதிரி புரட்சியைச் செய்கிறார்.  ராமானுஜரின் பிராமண சீடர்கள் இது பற்றிக் கேட்கிறார்கள். ”என்ன இருந்தாலும் இது கொஞ்சம் ஜாஸ்தி இல்லையா?  வேண்டுமென்றே செய்வது போல் இல்லையா?” என்பது அவர்கள் பிராது.  அதற்கு ஸ்ரீராமானுஜர் சொன்னார்:

ஒரு ஸ்ரீவைஷ்ணவன் ஆகி விட்டால் அவன் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவன் ஆகி விடுகிறான். 

ராமானுஜருக்கு அடுத்து வந்த வைணவ குலம் அப்படியா இருந்தது?  ராமானுஜர் அப்படிச் சொன்னதோ அப்படியே வாழ்ந்ததோ அவரது வழித் தோன்றல்களுக்குத் தெரியவாவது தெரியுமா?  கார்ல் மார்க்ஸ் கனவு கண்ட கனவு தேசம் எப்படிப்பட்டது?  State whithers away என்பது மார்க்ஸின் கனவு.  அவரது சமதர்ம சமுதாயத்தில் அரசு என்பதே இருக்காது.  உலகம் பூராவும் ஒரே சமுதாயமாக இருக்கும்.  போர்களே இருக்காது.  தேசம் என்ற கருத்தாக்கமே இருக்காது.  தேசமே இல்லாததால் ராணுவமும் இருக்காது.  மார்க்ஸ் கனவு கண்டது ராம ராஜ்யம்.  நடந்தது என்ன?  படுகொலை.  ரத்த ஆறு ஓடியது.  சைபீரிய பனிப்பாலைகளில் மனிதர்கள் செத்து மடிந்தார்கள்.  கலைஞர்கள் குரூரமாக வேட்டையாடப்பட்டார்கள். சிறையில் அடைக்கப்பட்டார்கள். கார்ல் மார்க்ஸின் பெயரால் சீனாவில் நடந்ததும் நடந்து கொண்டிருப்பதும் வார்த்தைகளால் எழுத முடியாதவை.  ஆன்மீகத்துக்கு ஏற்பட்டதும் அதே கதிதான்.  இதைத்தான் முகமூடிகளின் பள்ளத்தாக்கு சொல்கிறது.  எல்லா நிறுவனங்களும் கடைசியில் இப்படித்தான் ஆகின்றன.  ஆனால் அந்த நாவல் ஒரு அற்புதமான வெளிச்சத்தைக் காண்பிக்கிறது.  அதை உங்கள் கடிதத்தில் உணர்த்தியிருக்கிறீர்கள்.  இன்னும் வேறு யாராவது அந்த நாவல் தரும் தரிசனம் பற்றி எழுதுவார்கள் எனக் காத்திருக்கிறேன். 

சாரு