எழுத்தாளனும் ஆன்மீகவாதியும்…

ஃப்ரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் தத்துவவாதிகள்தான் இந்தியாவில் ஆன்மீகவாதிகளின் இடத்தில் இருப்பவர்கள்.  அங்கே ஆன்மீகவாதிகளுக்கு சமூகத்தை வழிநடத்தும் அளவுக்கு அதிகாரம் கிடையாது.   திருச்சபைகளின் அதிகாரம் ஒரு பக்கம் இருந்த போதிலும் தத்துவவாதிகளுக்கே அங்கே முதல் இடம்.  தத்துவவாதிகளின் பேச்சுக்குத்தான் அங்கே அதிக முக்கியத்துவம் கிடைக்கும்.  இங்கே மோடிக்கும் ஜக்கிக்கும், மோடிக்கும் ரவி ஷங்கருக்கும் உள்ள உறவை நினைத்துப் பாருங்கள்.  ஜக்கிக்கும் ரவி ஷங்கருக்கும் சமூகத்தில் உள்ள ஸ்தானத்தை கவனியுங்கள்.  ஆதிகாலத்திலிருந்தே இந்தியாவில் இப்படித்தான் இருந்து வருகிறது.  ராஜகுரு என்று அவர்கள் அப்போது அழைக்கப்பட்டார்கள்.  இந்திரா காந்தியிடம் இருந்த தீரேந்திர பிரம்மச்சாரி.  இந்திரா காந்தி ஒரு நிர்வாண சாமியாரிடம் காலால் ஆசி வாங்கியது.  சந்திரா ஸ்வாமி என்று ஒருத்தர் இருந்தார்.  காங்கிரஸ் காலத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்தார்கள்.  இப்போதைய ஜக்கியும் ரவி ஷங்கரும் அந்த காலத்து ராஜ குருக்கள்தான்.  இது பூராவும் ஐரோப்பாவில் தத்துவவாதிகளின் இடம்.  ஆனால் அப்பேர்ப்பட்ட தத்துவவாதிகளும் பயந்து நடுங்கிய ஒரு இனம் இருந்தது.  அதுதான் எழுத்தாளர் இனம்.  அவர்கள் தத்துவவாதிகளையும் மிஞ்சியவர்களாகக் கருதப்பட்டார்கள்.  ஜான் பால் சார்த்தருக்கு ஆல்பெர் கம்யூ உயிரோடு இருக்கும் வரை கம்யூவின் மீது பொறாமை இருந்தது.  அதற்கு ஏற்றாற்போல் கம்யூவிற்கே முதலில் நோபலில் வழங்கப்பட்டது.  ஃபூக்கோ, தெரிதா போன்றோரும் திரும்பத் திரும்ப தங்கள் தத்துவக் கோட்பாடுகளுக்காக இலக்கியவாதிகளையே நாடினார்கள்.  இலக்கியத்திலிருந்தே தங்களின் கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டார்கள்.  எங்கேயோ வசித்த போர்ஹேஸ் அவர்களின் குருவாக விளங்கினார்.

நான் தமிழ்நாட்டில் சென்னை என்ற ஒரு நகரத்தில் ஸ்தாபனத்தால் புறக்கணிக்கப்பட்டவனாகவும் வாசகர்களால் கொண்டாடப்படுபவனாகவும் வாழ்ந்து வருகிறேன்.  என்னை யாரேனும் ஓஷோ பற்றிப் பேச அழைத்தால் பத்து லட்சம் ரூபாய் கொடுத்தாலும் பேச ஒத்துக் கொள்ள மாட்டேன்.  அதை விட ஒரு குப்பை மசாலா சினிமாப் படத்துக்கு வசனம் எழுதுவேன்.  அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.  ஆனால் ஓஷோ போன்ற ஆன்மீகவாதிகள் பற்றி ஒரு எழுத்தாளன் பேசுவது எழுத்தாளனாக நம்மை நாமே தாழ்த்திக் கொள்வதாகும்.  என்ன நடக்க வேண்டும் என்றால், ஜெயமோகன் பற்றி ஜக்கி இரண்டு மணி நேரம் பேச வேண்டும்.  ஆனால் துரதிர்ஷ்டம் என்னவென்றால், ஜக்கிக்குத் தமிழ் வாசிக்கத் தெரியாது.  வாசிக்கத் தெரிந்தாலும் அவர் வைரமுத்துவின் கவிதைகளையும் கமல்ஹாசனின் கவிதைகளையும் பட்டுக்கோட்டை பிரபாகரின் கதைகளையும்தான் படிக்கக் கூடும்.  ஒருவேளை இந்திரா சௌந்தர்ராஜனையும் படிக்கலாம்.  ஜெயமோகனைப் படிப்பது சாத்தியமே இல்லை.  இங்கே தமிழ்நாட்டின் கலாச்சாரம் அப்படி இருக்கிறது.   கன்னடத்தில் ஒரு பிஸினஸ்மேனின் சுயவரலாறு ஒரு இலக்கியவாதியின் நாட்குறிப்பு போல் இருக்கிறது.  அது அந்தக் கலாச்சாரத்தின் விளைவு. 

சமூகம் என்னை எப்படி நடத்தினாலும் சரி, எனக்கு நான்தான் கடவுள்.