வெகுஜன எழுத்தும் இலக்கியமும்

எக்ஸைல் பிழைதிருத்த வேலையை முடிக்கும் தறுவாயில் இருந்தேன். இடையில் ஒரு பஞ்சாயத்து வந்து விட்டது.  ”பட்டுக்கோட்டை பிரபாகரை ஏன் இப்படி அடிக்கடி வம்புக்கு இழுக்குறீர்கள்?”  அடப்பாவிகளா, உங்களுக்கு எத்தனை ஆயிரம் தடவை சொன்னாலும் புரியவே புரியாதா?  எனக்கு ஜனரஞ்சக எழுத்தின் மீது எந்தப் பகையும் இல்லை.  எந்தப் புகாரும் இல்லை.  ஒரு சமூகத்தில் எல்லா மனிதர்களுமே நகுலனையும் ஆதவனையும் படித்துக் கொண்டிருக்க முடியாது.  எனக்கே பதினைந்து மணி நேரம் தொடர்ந்து எழுதினாலோ படித்தாலோ ஒரு பத்து நிமிடம் நெட்ஃப்ளிக்ஸ் பார்க்க வேண்டும்போல்தான் இருக்கிறது.   பார்க்கவும்தான் பார்க்கிறேன்.  பத்து நிமிடம்தான்.  சுஜாதா உயிரோடு இருந்து எழுதினால் சுஜாதாவைப் படிப்பேன்.  அவர் அளவுக்கு என்னைக் கவர்ந்த வெகுஜன எழுத்தாளர் இல்லை.  ஆனால் சுஜாதாவின் சிறப்பு என்னவென்றால், அவரால் மரியோ பர்கஸ் யோசா அளவுக்கும் எழுத முடியும்.  இந்தத் தமிழ் ஜனங்களுக்கு வேண்டாம் என்று நினைத்து விட்டார்.  அதையும் மீறி கனவுத் தொழிற்சாலை என்ற நாவலையும், நகரம் போன்ற வெகுசில சிறுகதைகளையும் எழுதினார்.  இதையெல்லாம் மிகச் சமீபத்தில்தான் ராம்ஜியின் அல்லிக்கேணி நாவலை முன்வைத்து நான் எழுதியிருந்தேன்.  சுஜாதா அளவுக்கு என்னை ஈர்த்த ஒரு பாப்புலர் நாவல் அல்லிக்கேணி.  படு சுவாரசியம்.  மனதில் சோர்வு தட்டினால் அல்லிக்கேணி படிக்கலாம்.  வாஸ்தவத்தில் அப்படி வெகுஜன எழுத்தைப் படைக்க இன்று ஆட்கள் இல்லை.  ரமணி சந்திரனை ஒரு வரி படிக்க முடியவில்லை.  இந்திரா சௌந்தர்ராஜன் எழுதுவது மிஸ்ட்ரி த்ரில்லர்.  அது வேறு ரகம்.  ஆக, இன்று பட்டுக்கோட்டை பிரபாகரை விட்டால் வெகுஜன எழுத்துக்கு சொல்லிக் கொள்ளும்படி ஆட்கள் இல்லை.  அதனால்தான் திரும்பத் திரும்ப பட்டுக்கோட்டை பிரபாகரை சொல்ல வேண்டியிருக்கிறது.  இதற்கு ரமணி சந்திரனும் இந்திரா சௌந்தர்ராஜனும் வெகுஜன எழுத்தின் முடிசூடா மகாராணியான ரமணிசந்திரனும், சுபாவும் அல்லவா என் மீது கோவித்துக் கொள்ள வேண்டும்?  ஆனால் இது என்ன, பட்டுக்கோட்டை பிரபாகரும் அவர் ரசிகர்களும் கோவித்துக் கொள்கிறார்கள்?  ஒரு மேடையில் ஷங்கரை வைத்துக் கொண்டு தமிழின் வணிக சினிமாவின் நம்பர் ஒன் இயக்குனர் ஷங்கர் என்று சொன்னால் அவர் அதற்காகப் பெருமைதான் கொள்வாரே தவிர என் மீது கோவித்துக் கொள்வாரா?  ஆனால் எழுத்தாளர்களும் அவர் ரசிகர்களும் மட்டும் ஏன் அப்படிச் சொன்னால் என் மீது பாய்கிறார்கள்?  ஷங்கர் என்னைப் பார்த்து என்னை எப்படி நீங்கள் சத்யஜித் ரேயோடு ஒப்பிடவில்லை என்று கேட்பாரா?   இல்லைதானே?  அப்படித்தானே ஜெயமோகன் வேறு, பட்டுக்கோட்டை பிரபாகர் வேறு என்று சொன்னேன்?  அதில் என்ன தவறு இருக்க முடியும்?  ஒருவர் ஒரு வகை எழுத்தின் iconஆக இருக்கிறார் என்று சொன்னால் அதன் பெயர் வம்புக்கு இழுப்பதா?  பட்டுக்கோட்டை பிரபாகருக்குப் போட்டியாகப் பலர் வரும்வரை அவர் பெயரை மட்டுமேதான் சொல்ல வேண்டிய பரிதாப நிலையில் இருக்கிறது வெகுஜன எழுத்து.  அதற்கு நான் பரிகாரம் தேட முடியாது.  வெகுஜன எழுத்திலேயே ஒரு தரம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.  அந்தத் தரம் ரமணி சந்திரனிடம் இல்லை.  பட்டுக்கோட்டையாரிடமும் இந்திரா சௌந்தரராஜனிடம் உள்ளது.  ராஜேஷ்குமாரின் ஆரம்பக் கதைகளில் ஒரு ஐம்பது கதைகள் அப்படித் தேறும்.  முன்பு தீவிரமாக எழுதிக் கொண்டிருந்த சிவசங்கரி, இந்துமதி போன்றவர்களையும் இதில் சேர்க்க வேண்டும்.  உஷா சுப்ரமணியம் பெயரையும் விட முடியாது. 

நான் சொல்ல வந்தது என்னவென்றால், ஜக்கி வாசுதேவ் தமிழ் படித்தால் அவரிடம் ஜெயமோகனைத் தர மாட்டார்கள், பட்டுக்கோட்டை பிரபாகரைத்தான் தருவார்கள்.  அதுதான் இங்கே உள்ள சூழல்.  அதற்கு மாபெரும் உதாரணமாகத் திகழ்ந்தவர் நம் அப்துல் கலாம்.  தமிழகத்தில் எனக்குப் பிடித்த சிந்தனையாளர் விவேக் என்று சொன்னவர் அவர்.  சிரிக்காதீர்கள்.  சினிமாவில் விவேக் அடிக்கும் பகுத்தறிவு ஜோக்குகளெல்லாம் சிந்தனை இல்லையா?  இங்கே பட்டுக்கோட்டை பிரபாகரின் பெயரைப் போடாமல் வேறு யார் பெயரையும் போட முடியாது.  ஜக்கிக்குத் தமிழ் தெரிந்தால் ரமணி சந்திரனைப் படிக்க மாட்டார்.   ஜக்கியைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியது யார்?  பட்டுக்கோட்டை பிரபாகர்தானே?  அதைத்தான் சொன்னேன். 

வெகுஜன எழுத்தில் எனக்கு மிகவும் பிடித்தவர் ரா.கி. ரங்கராஜன்.  அவர் அந்தத் துறையில் ஒரு ஜீனியஸ்.  ஜ.ரா. சுந்தரேசன், பி.வி.ஆர். என்று பலர் இருந்தார்கள் அப்போது.  சரித்திரக் கதைக்கு வே. கபிலன், ஜெகசிற்பியன் என்று பலர் இருந்தார்கள்.  இப்போது ஒரே ஒருத்தர்தான்.  அதனால்தான் நானும் பரிதாபமாக அவர் பெயரையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறேன்.  நான் பாவம்.  என்னை விட்டு விடுங்கள்.  எனக்கு பட்டுக்கோட்டை பிரபாகர் மீது எந்தப் பிரச்சினையும் இல்லை.

எழுத்தாளனும் ஆன்மீகவாதியும் கட்டுரையைப் படித்த கையோடு ஸ்ரீராம் அழைத்தார்.  கோவையில் நகரம் பூராவும் பெரிய சுவரொட்டிகள் இருந்ததாம்.  எல்லாவற்றிலும் பெரிதாக ஓஷோ புகைப்படம்.  கீழே சிறிய எழுத்தில் ஜெயமோகன் பெயர்.  இது எனக்குத் தெரியாமலேயே ஆனால் உள்ளுணர்வால் உணர்ந்துதான் அந்தக் கட்டுரையை எழுதினேன்.  அந்தப் போஸ்டரைத் தயாரித்தவர்கள் பாவம் ஏதுமறியாதவர்கள்.  இலக்கியம் என்றால் என்ன என்றே தெரியாதவர்கள்.  மூன்று வயதுக் குழந்தையின் காதில் போட்டுக் கொண்டிருக்கும் ஜிமிக்கிக்காக அக்குழந்தையின் காதை அறுப்பவன் அது எத்தனை பெரிய பாவம் என்று தெரிந்தா செய்கிறான்?  அவனுக்குத் தங்கம்தான் ஒரே குறி.  உயிர் பற்றி அவன் அறிந்தான் இல்லை. அதேபோல் இலக்கியம் அறியா மூடர்களே அப்படி ஒரு போஸ்டரைத் தயாரிப்பார்கள். 

நான் சொல்ல வந்தது இதுதான்.  இங்கே ஆன்மீகவாதியும் கல்வியாளரும் சிந்தனையாளனும் புத்திஜீவியும்தான் எழுத்தாளனைப் பற்றி மூன்று மணி நேரம் உரையாற்ற வேண்டுமே தவிர எழுத்தாளன் இவர்களைப் பற்றிப் பேசக் கூடாது.  அடிப்படையே தவறு.  ஜெயமோகனின் உரையை ரெண்டு நிமிடம் கேட்டேன்.  சன்னி லியோனி, doggy style என்று ஆரம்பித்ததுமே நிறுத்தி விட்டேன்.  அதையெல்லாம்தான் போதும் போதுமென்று என் படைப்புகளில் எழுதி விட்டேனே, கேட்க வேறு வேண்டுமா?  ஆனால் அந்த உரை பிரமாதமாக இருந்ததாக நண்பர்கள் சொன்னார்கள்.  ஜெயமோகன் பேசுவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது. ஜெயமோகனும் எஸ்.ரா.வும் பேச்சில் மன்னர்கள். நேரிலும் சரி, மேடையிலும் சரி.  ஆனால் ஓஷோவே என் பிம்பம் மாதிரி தெரிகிறார் என்னும்போது நான் ஏன் என் பிம்பத்தைப் பற்றி என் நண்பர் பேசுவதைக் கேட்க வேண்டும்?  ஜெயமோகன் இந்தியத் தத்துவம் பற்றி, பௌத்தம் பற்றி, ஃப்ரெஞ்ச் சிந்தனாவாதிகள் பற்றி, உலக இலக்கியம் அவருள் ஏற்படுத்திய தாக்கம் பற்றி, ருஷ்ய இலக்கியம் பற்றி, மார்க்ஸீயத்தின் தோல்வி பற்றிப் பேசினால் மணிக்கணக்கில் அமர்ந்து நான் கேட்கத் தயார்.