நீங்கள் ஒரு எழுத்தாளர் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய முதல் விசிறி உங்கள் மனைவி என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களைப் போன்ற பரிதாபத்துக்கு உரிய ஜீவன் வேறு யாருமே இல்லை. ஒரு பெரிய கூட்டத்துக்கு நடுவே அம்மணமாக நடக்கும் காரியம் அது. நான் இங்கே என்னுடைய தளத்தில் எழுதுவதை இறைவனின் கிருபையின் காரணமாக அவந்திகா படிப்பதில்லை. படித்தால் என்ன ஆகும்? ஒன்று, அவளுக்கு ஹார்ட் அட்டாக் அல்லது எனக்கு ஹார்ட் அட்டாக் வரும். சந்தேகமே இல்லை. அந்த வகையில் என்னைப் போன்ற அதிர்ஷ்டசாலி வேறு எவருமிலர். சும்மா வரலாறு, சங்க இலக்கியம் என்று பஜனை பண்ணிக் கொண்டிருந்தால் மனைவி என்ன, மாமியார் கூடப் படிக்கலாம். ஆனால் நான் எழுதுவது போல் அத்தனை நிர்வாணமாக எழுதினால் அவ்வளவுதான். இது ஏன் திடீரென்று தோன்றியது என்றால், ஒரு வருடமாக கொரோனா காரணமாக குமுதம் பத்திரிகை வீட்டுக்கு வரவில்லை. கடையிலும் வாங்கச் சொல்வதில்லை. எனக்கோ நான் எழுதியதைப் பத்திரிகையில் பார்க்க வேண்டும் என்ற நப்பாசை. இந்த வயதிலும் இப்படிப்பட்ட சிறுபிள்ளைத்தனங்கள் இருக்கக் கூடாதுதான். அதனால் சமீப காலமாக எங்கள் வாட்ச்மேன் ஒருவர் வாங்கி வந்து தருகிறார். அதைப் படித்து விட்டு அவந்திகாவிடமிருந்து ஆயிரத்தெட்டு விமர்சனங்கள். எனக்கு அப்படியே மண்டையே வெடித்து விடும் போல் இருக்கிறது. அப்போதுதான் மற்ற எழுத்தாளர்களின் நிலையை நினைத்துப் பார்த்தேன்.
அப்படித்தான் என்னுடைய இன்னொரு வெல்விஷர் தினந்தோறுமே எதையாவது சொல்லி என்னை ஒட்டு மொத்தமாக எஸ்.ரா.வாகவே மாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறார். எஸ்.ரா.வுக்கு ஊரெல்லாம் நல்ல பெயர். நீயும் ஏன் அவரைப் போல் இருக்கக் கூடாது? இதில் பெரிய பிரச்சினை என்னவென்றால், அந்த வெல்விஷர் பேசும்போது எனக்கு அவர் பேசுவது சரிதான் என்றே தோன்றும். நானும் உடனடியாக இன்று ஒரு நாளாவது எஸ்.ரா.வாக இருந்து பார்ப்போம் என ஆரம்பிப்பேன். கொஞ்சம் கொஞ்சமாகத்தானே முன்னேற வேண்டும். ஆனால் இந்தப் பிரபஞ்ச வாழ்வில் மரபு அணு என்ற ஒரு விஷயம் இருந்து கொண்டிருக்கிறதே? என் விஷயத்தில் அந்த மரபு அணு ஒரு சைத்தான் மாதிரி. நான் எஸ்.ரா. மாதிரி மாற முயற்சிக்க ஆரம்பித்ததுமே அந்த சைத்தான் தன்னுடைய வேலையைத் தொடங்கும். நான் எஸ்.ரா. பக்கம் நகர நகர சைத்தான் என்னை எதிர்த்திசையில் இழுக்கும். இப்படியே ஒரு பக்கம் எஸ்.ரா.வும் ஒரு பக்கம் சைத்தானுமான போராட்டத்தில் அன்றைய தினம் கழிந்து விடும்.
உதாரணமாகப் பாருங்கள். முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவல் வந்ததும் அதற்கு ஒருவகையான விளம்பரம் செய்ய எண்ணினேன். சினிமா இயக்குனர்கள் என் வாழ்க்கை முழுவதும் தங்கள் படத்தின் விளம்பரத்துக்காக என்னைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தம்பிடி லாபம் இல்லை எனக்கு. ஆனாலும் படம் எனக்குப் பிடித்திருந்தால் கட்டுரை எழுதுவேன். பேசுவேன். அப்படி நான் பிராண்ட் அம்பாசடராக இருந்தது ராமுக்கு. அவருடைய முதல் படத்திலிருந்து ஒரே ஒரு படம் தவிர (தங்க மீன்கள்) மற்ற எல்லா படத்துக்கும் நான்தான் விளம்பரம். நண்பர் என்பதால் அதற்கெல்லாம் காசு இல்லை. என் பேச்சையே பேரன்பு படத்தின் சுவரொட்டிக்கும் மற்ற விளம்பரங்களுக்கும் வாசகமாக வைத்தார் ராம். அவருக்கு நான் நிலவு தேயாத தேசம் நூலைக் கொடுத்து பிடித்திருந்தால் ஒரு வரி எழுதுங்கள், அல்லது, யூட்யூபில் பேசுங்கள். நாலு பிரதி அதிகம் விற்கும் என்றேன். சரி செய்கிறேன் என்றார். உடனேயே படித்து விட்டு மிகப் பிரமாதமாக பத்து நிமிடம் அதைப் பாராட்டிப் பேசினார். என்னிடம். பேரன்புவுக்காக அவர் ஒரு குழுவை என் வீட்டுக்கு அனுப்பி நான் பேசுவதை ஒளிப்பதிவு செய்து அதை அப்படத்தின் விளம்பரமாகப் பயன்படுத்தினார். நான் சொன்னேன், நீங்கள் இப்போது பத்து நிமிடம் பேசியதை ஒரே ஒரு நிமிடமோ அரை நிமிடமோ பேசி அதை எனக்கு அனுப்பினால் நான் முகநூலில் போடுவேன் என்றேன். இரண்டு மூன்று முறை நினைவு படுத்தினேன். அதற்கு மேல் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. விட்டு விட்டேன்.
இந்தப் பின்னணியில்தான் முகமூடிகளின் பள்ளத்தாக்கு பற்றி ஒன்றிரண்டு வார்த்தை அவர் பேசினால் நாலு பிரதி விற்கும் என நினைத்தேன். அவர் படங்கள் பற்றி நாம் பேசியதால் இதை நாம் கேட்பதில் எந்தத் தவறும் இல்லையே என்பது என் எண்ணம். பிடித்திருந்தால் பேசலாம். பிடிக்கவில்லையென்றால் வேண்டாம். யாரும் எதற்காகவும் பொய் பேசலாகாது. நானும் வெறும் நட்புக்காகப் பிரச்சாரம் செய்வதில்லை. அழைத்தேன். எடுத்தார். விஷயத்தைச் சொன்னேன். அது சரியாக இருக்காது சார். நான் அடுத்த வாரம் ஒரு பேட்டி கொடுக்கிறேன். அதில் ஒரு வார்த்தை சேர்த்து விடுகிறேன் என்றார். மிரண்டு போனேன். எது சரியாக இருக்காது? நான் என்ன பிராத்தலுக்கா விளம்பரம் கேட்கிறேன்? உங்களுக்குப் பிடித்த ஒரு புத்தகம் – அதைப் பற்றி நாலு வார்த்தை – அதைச் சொல்வதற்கு ஏதோ ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கக் கூப்பிட்டது போன்ற தொனியில் பேசினார் ராம். சரி என்று விட்டு விட்டேன். இதை நாலே வரியில் குமுதத்தில் எழுதினேன். தங்கள் படங்களின் விளம்பரங்களுக்காக எழுத்தாளர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் இயக்குனர்கள் புத்தகங்கள் பற்றிப் பேச அழைத்தால் இப்படிச் செய்கிறார்கள் என்று ராம் பெயரைக் குறிப்பிட்டு எழுதினேன். குமுதம் வெளிவந்து ஐந்து நிமிடத்தில் ராமிடமிருந்து போன். என்ன பேசுவது என்று நான் தயாராக இல்லை. அதனால் மாலை அழைத்தேன்.
சாரை வருத்தப்படுத்தி விட்டேன் என்று நினைக்கிறேன். எத்தனை வருத்தப்பட்டிருந்தால் இதை எழுதியிருப்பீர்கள் என்று யோசித்தேன். கொஞ்சம் மனசு சரியில்லாததால் நான் உங்களோடு அன்றைய தினம் சரியாகப் பேசவில்லை. அடுத்த வாரம் சென்னை வருகிறேன். உங்களை வீட்டில் வந்து சந்திக்கிறேன். புத்தகத்தையும் வாங்கிக் கொள்கிறேன்.
எப்படி இருக்கிறது கதை? ஏற்கனவே அமெரிக்கர்கள் பாஷையில் he owes me one. இப்போது இது! ஏற்கனவே நிலவு தேயாத தேசம் பிரதி ஓசியில் கொடுத்து ஓசியில் பாராட்டும் பெற்று ஆகாயத்தில் மிதந்து கொண்டிருக்கிறேன். இப்போது முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலையும் இவரிடம் ஓசியில் கொடுத்து இவர் படித்து என்னைப் பாராட்டுவார் இல்லையா, அதையும் நினைத்து நான் ஆகாயத்தில் மிதக்க வேண்டும்! இவர்கள் தரப்பு என்னவென்றால், என் வீட்டுக்கு வருவதே இவர்கள் எனக்குத் தரும் ஆகப் பெரிய மரியாதை என்று நினைக்கிறார்கள். அப்படியே நானும் நினைக்க வேண்டும்! உண்மையில் அது எனக்கு எவ்வளவு பெரிய தொல்லை என்பது இவர்களுக்குத் தெரியாது. முகமூடிகளின் பள்ளத்தாக்கு எனக்கு என்ன ஓசியிலா கிடைக்கிறது? அல்லது, பதிப்பாளர் என்ன ஓசியில் அச்சடிக்கிறாரா? நான் என்ன கேட்டேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ராம்? இப்போது கூட புத்தகத்தை அனுப்புங்கள், படித்து விட்டு ஒரு வார்த்தை பேசுகிறேன் என்று வரவில்லை. வீட்டுக்கு வருகிறேன். போனில் பாராட்டுகிறேன்.
இனிமேல் எந்த இயக்குனர் என்னிடம் தன் படத்தின் விளம்பரத்துக்காகக் கருத்து கேட்டாலும் என் புத்தகம் பற்றி நீங்கள் முதலில் கருத்து சொல்லுங்கள் என்றே கேட்கப் போகிறேன். குமுதத்தில் இந்த விவகாரத்தைப் படித்த அவந்திகா ஆரம்பித்தாள் கச்சேரியை. அவளுக்கு சினிமா என்றாலே பிடிக்காது. அது ஒரு தனிக் கதை. ஏம்ப்பா, இந்த சினிமாக்காரங்க தயவு உனக்கு எதுக்கு? நீ பாரதிப்பா. பாரதி மாதிரி நிமிர்ந்து நிய்க்க வேண்டிய நீ இவங்க தயவை ஏன் கேட்கிறே? யார் உன் புத்தகத்தைப் பற்றிப் பேசுவது என்ற விவஸ்தை வேண்டாமா? உன் புத்தகத்தைப் பற்றிப் பேச சினிமாக்காரர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?
இப்படியே ஒரு பத்து நிமிட லெக்சர். ஒரு புத்தகத்தை – அதுவும் அந்தப் புத்தகத்தால் சமூகம் மேன்மையடையும் என்ற ஒரே காரணத்தால் விளம்பரப்படுத்த நினைத்தால் இத்தனை வில்லங்கம்! இனிமேல் ராமுடன் இது குறித்து எந்த உரையாடலும் வைத்துக் கொள்ளப் போவதில்லை என்பதால்தான் இதையும் எழுதுகிறேன். இனிமேல் எந்தப் படத்தின் விளம்பரத்துக்காகவும் நான் பேசவோ எழுதவோ மாட்டேன். சரவணன் சந்திரன் சில தினங்களுக்கு முன்பு சினிமாக்காரர்களை விளாசு விளாசு என்று விளாசித் தள்ளியிருந்தார். அந்தப் பதிவுதான் ஞாபகம் வந்தது. அதிலிருந்து ஒரு பகுதி இது:
இப்படி தமிழ்நாட்டில் பல துறைகளில் பல பிஸ்த்துக்கள் இருக்கிறார்கள். திறமையிருந்தாலும் இன்னொரு துறையில் நுழைவதற்கு விருப்பம் இல்லாமல்கூட அவர்கள் இருக்கக் கூடும். அவர்கள் மேல் வெளிச்சம் பாய்வதில்லை, பாய்ச்சுவதில்லை என்பதற்காக அவர்கள் சிறியவர்கள் ஆகி விட மாட்டார்கள். சினிமாவே பார்த்ததில்லை என்று சொன்ன பல பெரிய ஆட்களைப் பார்த்திருக்கிறேன். அதில் இந்த பல பிஸ்துகளும் அடக்கம். ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன்.
பத்து இலட்சம் பேரால் அறியப்பட்டவர்களும் பத்து பேரால் அறியப்பட்டவர்களும் இந்த பூலோகத்தில் கிடைக்கிற பெறுமதிகளுக்காகத்தான் முட்டி மோதிக் கொண்டிருக்கிறோம். சந்திர மண்டலத்தில் என்ன நடக்கிறது என்று ஆராய்ச்சி செய்கிற விஞ்ஞானியை ரெண்டு பேருக்குக்கூடத் தெரியாது. அதற்காக அவர் சிறியவர் ஆகி விடுவாரா? நட்சத்திரங்களைக் கிட்டத்தில் போய் எண்ணுகிற விஞ்ஞானிகள் எவரைக் காட்டிலும் பெரிய நட்சத்திரங்கள் இல்லையா?
பல்வேறு துறை சார்ந்து பலர் சத்தமில்லாமல் இது போல சாதனைகளை நிகழ்த்திக் கொண்டுதானிருக்கின்றனர். பாலிவுட் நட்சத்திரங்களைக் கையில் சானிடரி நாப்கின்களை ஏந்த வைத்தவர் ஒரு சாதாரண கிராமத்தான்தானே? வானத்தில் இருந்து குதித்து வந்தவர்களைப் போல நடந்து கொள்ளக்கூடாது என கங்கனா ராவத் சொல்லவில்லையா? வெற்றி என்பது எது என்பது குறித்த அறியாமை நிலவுகிற சமூகத்தில் இதைத் தெரிந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
உங்களது துறையிலும்கூட நன்னம்பிக்கையாளர்கள் பலர் அப்படி இருக்கத்தான் செய்கிறார்கள். நம் துறையில் நாம். அவர்கள் துறையில் அவர்கள். வேறு எவரைக் காட்டிலும் ஒரு கலைஞனுக்கு அந்தப் புரிதல் வேண்டும். அப்போதுதான் கலை கைகூடி வரும். முடிந்தால் அந்த மெக்கானிக் தம்பியைப் போய் ஒருதடவைத் தேடிச் சந்தித்து அவனோடு ஒரு தேநீர் அருந்தி விட்டு அவனோடு கைகுலுக்கி விட்டு வாருங்கள். இருவரது உள்ளங் கைச் சூடும் ஒன்றாகத்தான் இருக்கும் என புண்படாத தொனியில் விளக்கிச் சொன்னேன். உலகம் எல்லோருக்குமானது. அதில் அவரவர்க்கு அவரவர் இடமுண்டு. அதில் அவரவர் பேட்டையில் அவரவர் தாதா!
(மீள். ஆனாலும் இப்பவும் தேவையாக இருக்கிறது. போன வாரம்கூட ஒரு இயக்குனர், உங்களுக்கு வாய்ப்பு தர்றதே பெரிய விஷயம் என்கிற ரீதியில் பேசினார். நாளைக்கு காலையில உயிரோட எந்திருச்சா வந்து பார்க்கறேன் சார் எனப் பதமாகச் சொல்லி விட்டேன்)
இந்தப் பதிவின் பின்னணி என்ன தெரியுமா? இதோ:
சினிமா நண்பர் ஒருத்தர் உடனடியாக சென்னைக்கு கிளம்பி வந்து என்னைச் சந்திக்க முடியுமா என்று கேட்டார். பொருள் உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்கள்தானே வர வேண்டும் என்று சொன்னதற்கு சிரித்துக் கொண்டே அவர், நான் ரெண்டு படம் பண்ணியிருக்கேன் என்றார்.
எனக்காக ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்குவீர்களா எனக் கேட்டு விட்டு பொறுமையாக இப்படி அவருக்கு விளக்கிச் சொன்னேன்.
சரவணன் சந்திரன் என்ன விளக்கினார் என்பதுதான் அந்த நீண்ட மேற்கோள்.
இந்த சினிமா நட்சத்திரங்களெல்லாம் தங்கள் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? இனிமேல் என் வீட்டுக்கு வந்து என்னைச் சந்திக்க வேண்டும் என்றால் நீங்கள் அதற்காக எனக்கு 10000 ரூ. கட்டணம் செலுத்த வேண்டும். இது எனக்காக அல்ல. நான் வளர்க்கும் பதினைந்து பூனைகளுக்காக. பணமாகக் கொடுக்க முடியாவிட்டால் கிரெடிட் கார்டில் பத்தாயிரம் ரூபாய்க்குப் பூனை உணவும் வாங்கி வந்து கொடுக்கலாம்.
எனக்கும் இந்த பில்டர்களுக்கும் ஒரு ராசி உண்டு போல் இருக்கிறது. கோவைக்காரர் பற்றி எழுதியிருந்தேன். சென்ற மாதம் ஒரு பில்டர் போன் செய்தார். சென்னையின் பிரபலமான ஐந்து பில்டர்களில் ஒருவர். என்னைச் சந்திக்க வேண்டும் என்றார். வீட்டுக்கு வருவதாகச் சொன்னார். வரச் சொன்னேன். நேரம் சொன்னார். மாலை ஐந்து மணி. வரவில்லை. போனும் இல்லை. ஒரு வாரம் ஆன பிறகு அவரிடமிருந்து போன். போன வாரம் ஒரு வேலை வந்து விட்டது. மாலை சந்திக்கலாமா? ஓ சந்திக்கலாமே. வரவில்லை. போனும் இல்லை. இரண்டு வாரம் கடந்தது. பில்டர் போன். சந்திக்க முடியாமலேயே போய்க் கொண்டிருக்கிறது சார். இன்று சந்திக்கலாமா? ஓ சந்திக்காலாமே? மாலையில் சொன்ன நேரத்துக்கு வரவில்லை. போனும் இல்லை.
நேற்று நான்காவது முறையாக அவர் போன். வேலை வந்துகிட்டே இருக்கு சார். இன்னிக்கு நிச்சயம் சந்திச்சுடலாம். மாலை வரவா?
ஓ, தாராளமாக வாருங்கள்.
அதற்குப் பிறகு நான் உடனடியாக அவருக்கு ஒரு மெஸேஜ் அனுப்பினேன். இந்த மாதம் பூராவும் நான் பிஸி. அடுத்த மாத நடுவில் சந்திக்கலாம்.
ஓகே சார் என்று பதில் மெஸேஜ் வந்தது. உடனடியாக போன் நம்பர், வாட்ஸப் நம்பர் இரண்டையும் ப்ளாக் பண்ணினேன்.
எப்படியும் அடுத்த மாதம் இன்னொரு பில்டர் போன் பண்ணுவார். எடுத்த எடுப்பிலேயே சொல்லி விடலாம் என்று இருக்கிறேன். பத்தாயிரம் ரூபாய்க்கு பூனை உணவு வாங்கிக் கொண்டு வாருங்கள் என்று.
இப்போது என் சந்தேகம்: இந்தப் பணக்காரர்களுக்குப் பணம் எப்படிச் சேர்ந்தது? பணம் சம்பாதிக்க மூளை வேண்டாமா? ஒழுங்கு வேண்டாமா? இவர்களோ ஆட்டை விட மந்த புத்தி கொண்டவர்களாக இருக்கிறார்களே? எப்படிப் பணம் சேர்த்தார்கள்? இரண்டே சாத்தியம்தான் தெரிகிறது. ஒன்று, இவர்களுக்கும் பெருமாள் முருகனைப் போல் விபரீத ராஜ யோகம் இருக்க வேண்டும். அதனால்தான் பணம் சேர்கிறது. இரண்டு, இவர்கள் எழுத்தாளன் என்றால் அவனைக் கேணையன் என்று நினைக்க வேண்டும்.
எனக்கு என்னவோ இரண்டாவதுதான் சரி என்று தோன்றுகிறது.