ஒரு தரிசனம்

பின்வரும் கதையை இன்று காலை லலிதா ராம் வாட்ஸப்பில் அனுப்பியிருந்தார். ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் வேகத்தில் எக்ஸைல் பிழைதிருத்த வேலையில் இருந்த நான் ராம் என்றதும் உடனடியாக எக்ஸைல் வேலையை நிறுத்தி விட்டுப் படித்தேன். ராமின் எழுத்துக்கு நான் பரம ரசிகன். கட்டுரையாகத்தான் இருக்கும். மேலே பார்த்தால் சிறுகதை என்று இருந்தது. அவர் கதை எழுதுவார் என்று எனக்குத் தெரியாது. பெயரைப் பார்த்தால் லலிதா ராம். படித்துப் பார்த்தால் தி. ஜானகிராமன் கதை போல் இருந்தது. இதை தி.ஜா. எழுதவில்லையே என்று யோசித்தேன். தி.ஜா.வின் எல்லா கதையும் படித்திருக்கிறேன். மீண்டும் பெயரைப் பார்த்தேன். லலிதா ராம். என்னடா இது என்ற வியப்புடன் மேலே படித்தேன். இதற்கு மேல் இந்தக் கதை பற்றி வேறொரு இடத்தில் விரிவாக எழுத இருப்பதால் இங்கே இப்போது வேண்டாம். ஆனால் ஒரு முக்கியமான விஷயம். இன்னாருடைய எழுத்தில் எனக்கு இன்னாருடைய சாயல் தெரிகிறது என்று எழுதினால் உடனே இன்னாருக்கு போன் போட்டு உங்களை சாரு தி.ஜானகிராமன் என்று சொல்கிறாரே என்று கேட்டால் அவருக்கு எப்படி இருக்கும்? அதிலும் ராம் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவர். வெளியே தெரிய வேண்டாம் என்று நினைப்பவர். என்னிடம் யாராவது இப்படிக் கேட்டால், நான் ராமின் இடத்தில் இருந்தால் சாரு கெடக்கார் லூசு என்று சொல்லி விட்டு நகர்ந்திருப்பேன். தி.ஜானகிராமன் ஒரு இமையம். ராம் இன்னும் எழுதவே ஆரம்பிக்கவில்லை. ஆனாலும் என்னுடைய ரசிக மனோபாவத்தால் ஆஹா ஆஹா என்று புளகாங்கிதம் அடையும்போது இதில் இந்த பாவம் தெரிகிறதே இதில் இன்னாரின் சாயல் தெரிகிறதே என்று ரோமாஞ்சனம் ஏற்படுகிறது. இதை ஏனய்யா பெரிய பிரச்சினை பண்ணுகிறீர்கள்?

நான் இப்போதெல்லாம் யாரையும் பாராட்டவே அச்சம் கொள்கிறேன். பாராட்டுவதைக் கூட ஆரோக்கியமாக எடுத்துக் கொள்ள முடியாத நோய் பீடித்த சமூகமாக இது ஆகியிருக்கிறது. திட்டினால் ரசிக்கிறார்கள். பாராட்டினால் வம்புதான் வந்து சேர்கிறது. என்ன மாதிரி சமூகம் ஐயா இது? இதையும் ராமிடம் போய்க் கேட்டு வைத்து அவரை இன்னமும் தர்மசங்கடப்படுத்தாதீர்கள். எழுத ஆரம்பிக்கும் போதே டார்ச்சர் வேண்டாம். சரியா? இந்தக் கதையைப் படியுங்கள். அனுபவியுங்கள். ராம் உணர்ந்ததை நீங்களும் உணரலாம். கண்ணீர் கசியும். இதயம் விம்மும். ஆன்மா சந்தோஷத்தினால் நிரம்பி வழியும்.

எனக்கு என்ன தனிப்பட்ட சந்தோஷம் என்றால், இந்தக் கதையில் வரும் வேம்பு மாதிரி மனிதர்கள்தான் என்னைச் சுற்றிலும் இருக்கிறார்கள். இருபத்து நாலு மணி நேரமும் உனக்காகத்தானே வாழ்கிறேன் சாரு என்று சொல்லிக் கொண்டே இருக்கும் அவந்திகா. தன் மகனைக் கல்லூரியில் சேர்ப்பதற்காக வைத்திருந்த பணத்தில் எனக்கு துருக்கி டிக்கட் வாங்கிக் கொடுத்து விட்டு கல்லூரி சேர்க்கைக் கட்டணத்துக்காகக் கடன் வாங்கிய ராமசுப்ரமணியன், வலது கையைப் போல் எந்நேரமும் என் அருகில் இருந்து வரும் ஸ்ரீராம், அராத்து, புவனேஸ்வரி, கார்த்திக் நாகேந்திரன், ராஜா வெங்கடேஷ், ராம்ஜி, என் மீது அதீதமான ப்ரியம் கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவன், திருவல்லிக்கேணி முரளி, திருவல்லிக்கேணி கண்ணன், திருப்பூர் செந்தில், இம்மென்றால் என் முன்னே வந்து நிற்கும் முத்துக்குமார், என் குமாரர்களை ஒத்த குமரேசன், வளன் அரசு… இந்தப் பட்டியல் மிக மிக மிக நீண்டது. டக்கென்று சிலருடைய பெயர் கூட எனக்கு ஞாபகம் வராது. பாருங்கள். என் குடும்பத்தில் ஒருத்தரை விட்டு விட்டேன். வேளச்சேரி ராஜேஷ். மேல்மருவத்தூர் மருத்துவர் ரமேஷ், யாரைச் சொல்வது யாரை விடுவது. இதில் அமெரிக்க நண்பர்களைச் சேர்க்கவில்லை. 24 மணி நேரத்தில் என் கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்பித் தரும் வித்யா சுபாஷ். ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் ஃப்ரெஞ்ச் பேராசிரியை வேலை என்றால் அது எப்பேர்ப்பட்ட கௌரவம். ஒரு லட்சம் ரூபாய் சம்பளம். என்னுடைய புத்தகங்கள் பத்து ஆண்டுகளாகக் கிடைக்கவில்லை – என் புத்தகங்களைப் பதிப்பிக்க வேண்டும், நான் தயார் என்று ராம்ஜி சொன்னதும் தன் பேராசிரியர் வேலையைத் தூக்கிக் கடாசி விட்டு வந்து பதிப்பகப் பொறுப்பை ஏற்பது எப்பேர்ப்பட்ட தியாகம். இன்று காயத்ரி நான் அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இருக்கிறாள் என்றாலும் கையில் துட்டு வேண்டுமே? பதிப்பகத்திலிருந்து என்ன வரும்? வருவதையும் அதிலேயேதானே போட வேண்டும்? குடும்பத்துக்குப் போக உன் நேரம் அத்தனையும் பதிப்புத் துறைக்குத்தான் வேண்டும் என்று சொன்னேன் காயத்ரியிடம். அவளோ அதிலும் ஒரு மணி நேரம் ரெண்டு மணி நேரத்தை ஃப்ரெஞ்ச் கற்பிப்பதில் செலவிடுவது பற்றிய ஆதங்கத்தில் கேட்டால், கைச்செலவுக்குக் காசு வேண்டுமே சாரு என்கிறாள்!

கோடிகளில் படம் எடுத்துக் கொண்டிருந்த ராம்ஜி இப்போது தன் கைபேசியில் டிங் என்ற சப்தம் கேட்டால் அந்த சப்தம் உலகத்திலேயே இனிமையான இசை என்கிறார். அமேஸானில் புத்தகம் விற்றால் அந்த டிங் இசை கைபேசியில் வரும். அந்த விற்பனையில் பதிப்பாளருக்கு வரும் லாபம் பத்து ரூபாய்! கோடி ரூபாய் எங்கே, பத்து ரூபாய் எங்கே!!! ஆஹா. இவர்களெல்லாம் இந்தக் கதையில் வரும் வேம்பு அல்லவா? இவர்களை என் வாழ்வில் தர்ஸனம் கொள்ள வைத்த இறைசக்திக்கு என் நன்றி.

ராமின் கதை: