எக்ஸைல்

ஒரு மாபெரும் வேலை முடிந்தது.  எக்ஸைல் நாவலின் பிழை திருத்தம் முடித்து விட்டேன்.  பிழை திருத்தம் மட்டும் அல்ல. எடிட்டிங்.  அதனால் கூர்ந்து வாசிக்க வேண்டியிருந்தது.  பொதுவாக ஒரு படைப்பை எழுதி முடித்து விட்டு அதிலிருந்து நான் முற்றாக வெளியே வந்து விடுவேன்.  அதைத் திரும்பப் படிக்க நேர்ந்தால் அது நான் எழுதியது அல்ல.  நான் அதன் வாசகன் மட்டுமே.  அதுதான் எப்போதும் என் அனுபவம்.  பொதுவாக ஸீரோ  டிகிரியைப் பலரும் சிலாகித்துப் பேசுவதைப் பார்க்கிறேன்.  அடிக்கடி காயத்ரி.  ராஸ லீலாவை என் நெருங்கிய நண்பர்கள் அத்தனை பேருமே சிலாகிப்பார்கள்.  எக்ஸைல் நாவல் பற்றி யாருமே பேசியதில்லை.  பேசினாலும் அவ்வளவாக ரசித்தாற்போல் இருக்காது அவர்கள் பேச்சு.  அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்றே சொல்லி விடுவார்கள்.  நாம் ஒரு நாவலை எழுதிக் கொண்டிருக்கும் தருணத்தில் அதோடு நெருக்கத்தில் இருப்போம் இல்லையா, அப்படி எக்ஸைலை எழுதிக் கொண்டிருந்த கால கட்டத்தில் அதுதான் என் எழுத்தின் உச்சம் என்று நண்பர்களிடம் வாதிடுவேன்.  அது இப்போது எனக்கு ஒரு எழுத்தாளனாக அல்லாமல் ஒரு வாசகனாகவும் நினைவு வந்தது.

இதை வேறொரு நபர் எழுதியிருந்தால் உலக இலக்கியத்தின் உச்சங்களில் ஒன்று என்று சொல்லியிருப்பேன்.  இதைப் புரிந்து கொள்ள – இதன் உள் சூட்சுமங்களில் பயணம் செய்ய – இன்னும் ஐம்பது ஆண்டுகள் ஆகும் என்று தோன்றுகிறது.  ராஸ லீலாவைப் போல் இது வெளிப்படையானதல்ல; ராஸ லீலாவைப் போல் இது நெருங்கி அமர்ந்து உரையாடுவது அல்ல; ராஸ லீலாவைப் போல் பரிச்சயமான உலகமும் அல்ல.  எக்ஸைல் சொல்வது எல்லாமும் வேறோர் தளத்தைச் சேர்ந்தவை.  அறவே நமக்குப் பரிச்சயம் இல்லாதவை.  இறுதி 200 பக்கங்களைப் படிக்கும் போது ஒரு மகத்தான காவியத்தைப் படிப்பது போல் இருந்தது எனக்கு.  இதையெல்லாம் நான் எழுதவில்லை; வேறு ஏதோ சக்தியே இயக்கியிருக்கிறது என்று தோன்றியது.  பல இடங்கள் மனதின் உள்வெளித் தோற்றங்களாகச் சென்று கொண்டிருந்தன.  இறுதி ஐம்பது பக்கங்கள் ஒருவரின் ஆன்மாவையே உலுக்கக் கூடியவை.  இது எல்லாமும் என்னுடைய நெருங்கிய நண்பர்களுக்குக் கூட எப்படி எட்டாமல் போனது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 

லலிதா ராம் இசை பற்றி எழுதும் போது மாய்ந்து மாய்ந்து தோய்ந்து தோய்ந்து எழுதுகிறார் இல்லையா, அப்படி நாம் இதுவரை சந்தித்திராத வேறோர் உலகின் உணர்வுகளைப் பற்றி நம் ஆன்மாவே சிலிர்க்கும் வகையில் தன் அனுபவங்களை வார்த்தைகளால் விளக்க முற்படுகிறது எக்ஸைல்.  பல இடங்களில் எனக்கு மனம் சிலிர்த்தது.  உடல் நடுங்கியது.  யாரேனும் பார்த்திருந்தால் என் உடல் நடுங்குவதை உணர்ந்திருப்பார்கள்.  பனியில் நடுங்குவது போல் நடுங்கியது.  குறிப்பாக ஆவிகளின் அழுகை.  ஆவிகளின் துயரம்.  இது சில வாசகர்களுக்கு சிரிப்பைத் தரலாம்.  ஒரு துறவி கடவுளைக் கண்டேன் எனச் சொல்லும் போது அது மற்றவர்களுக்குத் தமாஷாகத் தோன்றும்.  தியாகராஜர் தான் ராமனை நேரில் பௌதிக உருவில் கண்டதைச் சொல்கிறார்.  நாரதரைக் கண்டதையும் ஸ்வரார்னவம் என்ற நூலை அவர் தனக்குத் தந்ததைச் சொல்கிறார்.  அதெல்லாம் கதைகள் என்கிறார்கள் பலர்.  அப்படியாகத்தான் ஒருவரின் அனுபவம் மற்றவருக்குக் கட்டுக்கதையாகத் தெரிகிறது.  அதனாலோ என்னவோ இந்த நாவல் என் நண்பர்களிடையே கூட சலனத்தை ஏற்படுத்தவில்லை. 

உலக இலக்கியத்தில் கொஞ்சம் வாசித்திருக்கிறேன் என்ற அடிப்படையில் சொல்கிறேன், எக்ஸைல் ஒரு நவீன கிளாஸிக்.  உங்களுக்கு அது சாதாரணமாகத் தோன்றினால் அதையும் நான் மதிக்கிறேன்.  ஏனென்றால், இந்த நாவல் முன்வைக்கும் அனுபவம் உங்களுக்கு இதுவரை பரிச்சயம் ஆகியிருக்காவிட்டால் எக்ஸைல் படு சாதாரணமாகத்தான் தெரியும்.  எனவே உங்களை நான் புரிந்து கொள்கிறேன். 

என்னுடைய சொந்த அனுபவத்தை விடுங்கள், என் வாசிப்பு அனுபவத்திலேயே கூட  எக்ஸைல் ஒரு கிளாஸிக் என்று சந்தேகமில்லாமல் சொல்வேன்.  இது பற்றி எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் விவாதிக்கவும் தயாராகவே இருக்கிறேன்.  அந்த அளவுக்கு நாவல் என் மனதில் தங்கி விட்டது.  நாளையிலிருந்து தியாகராஜாவில் மூழ்க வேண்டும்.