அராத்து எழுதிய ஒரு பதிவு பின்வருவது. அதைத் தொடர்ந்து என் கருத்து வரும்.
மந்தஹாஸினி எழுதும்போது சில நேரங்களில் சாருவை தொடர்பு கொண்டு, இந்த வார்த்தைக்கு தமிழில் என்ன போடலாம் சாரு எனக் கேட்டேன். அவரும் பல வார்த்தைகளுக்கு தமிழில் சொன்னார், சில வார்த்தைகளுக்கு , நான் இதை ஆங்கிலத்திலேயே போட்டு விடுவேன் என்று சொன்னார்.
வரலாற்று நாவல் என்பதால் ஆங்கிலத்தில் போட முடியாதே என்று சொல்லி விவாதித்து வார்த்தைகளை முடிவு செய்தேன். ஆனாலும் வரலாற்று நாவலில் (ஒரு பகுதி மட்டும்) நைஸாக சில ஆங்கில வார்த்தைகளை நுழைத்து இருக்கிறேன். விஷ்ணு பிரான் மற்றும் தாயார் ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்துவதாக டகால்டி செய்திருக்கிறேன்.
சாரு என்னை ஆங்கில வார்த்தைகள் போட்டு எழுதுவதாக வருத்தப்பட்டு அடிக்கடி எழுதியிருக்கும் சூழலில் இப்படி நான் அவரிடம் போன் போட்டு கேட்கும் போது , நம்மை மடக்கத்தான் இவன் இப்படிக் கேட்கிறான் என்று அவர் இடத்தில் வேறு யார் இருந்தாலும் நினைத்திருப்பார்கள். சாரு என்பதால் , அப்படி நினைக்கக் கூடிய டிசைனே அவர் மைண்ட் பேட்டர்னில் கிடையாது. அது எனக்கு நன்கு தெரியும் என்பதால்தான் அப்படிக் கேட்டேன்.
இதில்தான் ஒரு நுணுக்கம் உள்ளது. ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்குக் குர்ரமா என்று கேட்கும் கோஷ்டிதான் இங்கே பரவலாக இருக்கிறது என்பதால் இந்த பதிவு.
சாரு ஒன்றைச் சொல்வார். அதையே அப்படியே செய்தால் திட்டுவார் என்ற புகார் இருக்கிறது அல்லவா? முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவார் என்ற புகாரும் இருப்பதால் ஒரு சின்ன விளக்கம்.
இப்போது நான் கேட்டது போல வேறு ஒரு எழுத்தாளர் அடிக்கடி போன் போட்டுக் கேட்டால், செருப்பால் அடிப்பார் சாரு. நான் என்ன உனக்கு ஸ்டெனோவா? இது கூட தெரியாமல் ஏன் எழுத வந்துட்ட? என் நேரத்தைத் திருட உனக்கு என்ன உரிமை என 1, 2, 3 கட்டுரைகள் வரும். அறிவாளி வாசகர்கள் எல்லாம் திடுக்கிட்டுப் போவார்கள். எழுத்தாளர்கள் என்றாலே மெண்டல், அதிலும் சாரு பெரிய மெண்டல், அவர் சொல்வதையெல்லாம் வைத்து அவரிடம் பழக முடியாது என்று பிலாக்கணம் வைப்பார்கள்.
இன்னும் பச்சையாகச் சொன்னால், அவர் எப்ப எதுக்கு கடிச்சி வைப்பார்னே தெரியாது என்பார்கள். உண்மையில் சாருவைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாம் கொஞ்சமும் நுண்ணுணர்வு இல்லாமல் அவரை டார்ச்சர் செய்து கொண்டிருப்பவர்கள்தான். அவர் அதையெல்லாம் மரவட்டை ஊரும் போது தொந்தரவு செய்தால் சுருண்டு படுத்துக்கொள்ளுமே, அப்படி சுருண்டு கொள்வார். பொதுவில் தான் இப்படி வலி மாமே வலிப் என்று ஆடித் தீர்த்து விடுவார்.
எல்லாம் சரி, நான் இப்படி போன் போட்டுக் கேட்டதில் என்ன நுணுக்கம் என்றுதானே கேட்கிறீர்கள்? சொல்கிறேன்.
நான் அவரைச் சந்தித்த பின் முதல் ஐந்து வருடங்கள் அவரிடம் எதையுமே கேட்டதில்லை. போன் செய்ததே இல்லை. மெசேஜ் கூட அனுப்பியதில்லை. சும்மா பழகிக் கொண்டு இருந்தேன். இந்த சும்மா பழகுதல்தான் ஏனோ பலருக்கும் ஒத்துவர மாட்டேன் என்கிறது. ஒரு ஆளைத் தெரிந்த அடுத்தக் கணம், கேள்வி கேட்பது, உதவி கோருவது (அது உதவி என்று கூட உரைப்பதில்லை) டார்ச்சர் செய்வது, அறிவுரை சொல்வது, பிரசங்கம் செய்வது, இப்படி நூதனமாக பல்வேறு வகையான டார்ச்சர்கள் செய்வது என ஏறு ஏறு என ஏறுகிறார்கள்.
சில வருடங்கள் சும்மா பழகுங்கள்.
பிறகு ஒரு உறவு மலரும், நம்பிக்கை பெருகும்.
அதன் பிறகு நீங்கள் தவறே செய்தாலும் , அது தவறாகத் தெரியாது. அதற்காக மெனக்கெட்டு தவறு செய்யக் கூடாது அதே போல நான் சொல்ல வருவது பிஸினஸ் டீலிங்கும் அல்ல. முதலில் கொஞ்ச நாள் அமைதியாக இருந்து விட்டு , பிறகு உபயோகப்படுத்திக்கொள்வது அல்லது டார்ச்சர் செய்வது என்பதாக இதை புரிந்து கொள்ளலாகாது. இது காதலில் எல்லோரும் கடைபிடிக்கும் வழிமுறை.
இப்போது, நான் யாரிடமோ தொலைபேசி உரையாடலில் “சாரு ஒரு லூஸுங்க” என்று பேசி அந்த ஆடியோ சாருவுக்கு போனாலும் சாருவுக்கு எந்த கோப தாபமும் வராது. சீனி ஏனோ , எதுக்கோ வேணுமுன்னு அப்படி பேசி இருப்பான் என்று எடுத்துக்கொள்வார்.
ஆனால் இதில் இன்னொரு அதி நுட்பம் ஒன்று இருக்கிறது.இப்படியான அதி தீவிர நம்பிக்கையை உண்டு பண்ணி விட்டு தப்பாட்டம் ஆடினால், அதுதான் உலகிலேயே கேவலமான நம்பிக்கை துரோகம். நம்பிக்கை துரோகம் என்ற வார்த்தை பிரயோகம், காதல் வாழ்வில், லௌகீக வாழ்வில், வியாபார உலகில் அடிக்கடி பயன்படுத்தப்படும். ஆனால் அதிலெல்லாம் பெரிய மீனிங்க் இல்லை. ஒன்றுமில்லாத, அல்லது எல்லாமுமான இதைப்போன்ற உறவில் அதை செய்யும் போதுதான் அதற்கு கூடுதல் அர்த்தம் கிடைக்கிறது. அல்லது அதற்கான உண்மையான அர்த்தம் கிடைக்கிறது.
சரி போஸ்ட் சீரியஸாக போகிறது. எழுத்தாளர்களுடன் முதலில் சில வருடங்கள் “சும்மா பழக” முயற்சி செய்யுங்கள்.
முதல் ஒரு சில வருடங்கள் அவரிடம் “சாரி” சொல்லாமல் இருக்க முடிகிறதா என்று பாருங்கள்.
***
இதற்கு மேல் அராத்து சில உபயோகமான விஷயங்களைச் சொல்லியிருந்தாலும் ரொம்ப ரொம்பக் கெட்ட வார்த்தை பிரயோகம் பண்ணியிருக்கிறபடியால் அதை இங்கே கொடுக்கவில்லை. பிரச்சினை இதுதான். என் நண்பர்களுக்கு என் மீது பெரும் அன்பு இருக்கிறது. நான் நன்றாக இருக்க வேண்டும் என்று உளமார விரும்புகிறார்கள். இப்பேர்ப்பட்ட ஆளுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் நீங்கள் இவரைப் போல் இருங்கள், அவரைப் போல் இருங்கள் என்று அறிவுரை சொல்கிறார்கள். எல்லாவற்றையுமே நான் நன்கு செவி கொடுத்துக் கேட்டு விட்டு, அவற்றை பாலகர்களின் மழலைப் பேச்சாகத் தள்ளி விட்டு விடுகிறேன், அவர்கள் அறியாமல். அறிந்தால் வருத்தப்படுவார்கள். அவ்வளவுதான் விஷயம்.
புதிதாக வருபவர்கள் ஆயிரத்தெட்டு கேள்விகளோடு வருகிறார்கள். அவை எல்லாவற்றுக்குமே என் எழுத்தில் பதில் உண்டு. படிக்கத்தான் பொறுமை இல்லை. அவர்களிடமிருந்தும் நைஸாக நழுவி விடுவேன்.
ஆனால் எது மிகவும் எரிச்சலூட்டக் கூடியது என்றால், எந்த முயற்சியும் இல்லாமல் எந்த விலையும் இல்லாமல் எந்த இழப்புக்கும் தயாராக இல்லாமல் என்னிடமிருந்து கறக்க நினைப்பதுதான். என்னுடைய வாழ்நாள் கனவு கிர்னார் மலையை ஏற வேண்டும் என்பது. அதற்கு நான் 999 படிகள் ஏற வேண்டும். என்னால் அதிக பட்சம் 99 படிகள்தான் ஏற முடியும். 999 படிகள் ஏறினால் தத்தாத்ரேயா நடந்த மண்ணில் நடக்கலாம். பல்லாயிரம் ஆண்டுகளாக உயிரோடு இருக்கும் அகோரி குரு தத்தாத்ரேயா. லட்சத்தில் ஒருவர்தான் அவரைப் பார்க்க முடியும். ஆனால் அவர் வசிக்கும் மலையில் நாம் உலாவலாம். அதற்கு 999 படிகள் ஏற வேண்டும் இல்லையா? இதுதான் நாம் கொடுக்கும் விலை. பிரயாசை. அந்தப் பிரயாசை இல்லாமலேயே என்னிடமிருந்து கறக்க விரும்புகிறபோது அசூயை உணர்வு ஏற்படுகிறது.
ஏன் என்னிடமிருந்து இலவசமாகப் பெற விரும்புகிறீர்கள் என்று கேட்கிறேன். பணமாகக் கொடுங்கள். நான் வீடு கட்ட இல்லை. பூனைகளுக்கும் என் பயணத்துக்கும். பணம் இல்லையா. நேரத்தைக் கொடுங்கள். எப்படி நேரம் கொடுப்பது? என் புத்தகங்கள் எல்லாவற்றையும் படியுங்கள். மூன்று ஆண்டுகள் ஆகும். நானும் என் நண்பர்களுமாக இழுக்கும் தேருக்கு நீங்களும் ஒரு தோள் கொடுங்கள். எதுவுமே பண்ணாமல் கேள்வியை நொட்டினால் எனக்குக் கோபம்தானே வரும்? இதுதான் அராத்துவின் பதிவை முன்வைத்து நான் சொல்ல நினைத்தது. அராத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவன், ராம்ஜி, காயத்ரி, ஸ்ரீராம், இப்போது லலிதா ராம் போன்ற நண்பர்களின் போன் அழைப்பை நான் எந்த அவசரத்திலும் எடுத்து விடுவேன். அவர்களுக்கு நான் ஏதோ ஒரு வகையில் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். தேரோட்டத்தின் காரியதரிசியே அராத்துதான். வடத்தில் அவர் நிற்காமல் கூட இருக்கலாம். எதுவுமே செய்யாமல் என்னிடம் சந்தேகம் கேட்டால் எப்படி? நான் தான் எழுத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறேனே? மழை பொழிவதைப் போன்ற காரியம் அது. மழை தொடர்ந்து உங்களுக்கு வேண்டியிருந்தால் மரத்தை வெட்டாதீர்கள், அது மட்டுமே என் வேண்டுகோள்.
ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு சின்ன சமரசம் செய்து கொண்டால் நான் வாசகர்களிடம் சந்தாவோ நன்கொடையோ கேட்கத் தேவையிருக்காது. வாரம் ஒரு இயக்குனரோ தயாரிப்பாளரோ வசனம் எழுதச் சொல்லிக் கேட்கிறார்கள். வெறும் வசனம் அல்ல; திரைக்கதையும் சேர்த்து. எவ்வளவு சம்பளம் என்றால் ரெண்டு லட்சம். கை கூப்பி வணங்கி அனுப்பி விடுகிறேன். இந்த ரெண்டுக்கும் பெரிய ஆட்கள் வாங்குவது 70 லகரம். இலக்கியவாதிகள் வாங்குவது இருபது லகரம். ஒரு துறைக்குப் பத்து. அல்லது பதினைந்து. வசனம் மட்டும் எழுதினால் பத்து லகரம். ஆனால் ரெண்டு லட்சத்தை வாங்கிக் கொண்டு ரெண்டு நாளில் ஏனோதானோ என்றும் எழுதிக் கொடுக்கலாம். அதை வைத்து ஒப்பேற்றிக் கொள்வார் இயக்குனர். எல்லாம் லோ பட்ஜெட் படங்கள். அந்த ஏனோதானோ வேலையைத்தான் நான் செய்ய மாட்டேன். செய்ய மனம் ஒப்புவதில்லை. ஒரு விஷயத்தை நீங்கள் விலைக்கு வாங்க நினைத்தால் அதற்கான விலையைக் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். பத்து லட்சம் என்றால் ஏழு லட்சமாவது கொடுத்தால் எழுதலாம். எப்படி ரெண்டு லட்சத்துக்கு எழுதுவது? எனக்கு அவ்வளவு நேரம் இல்லையே?
வாசகர் வட்டச் சந்திப்புகளுக்கு வருபவர்களுக்கும் இதே விதிதான். நீங்கள் வெங்காயமாவது வெட்டத்தான் வேண்டும். ஒருத்தர் நான் கத்தியே பிடித்ததில்லை என்றார். அப்படியானால் கக்கூஸைக் கழுவுங்கள் என்று சொல்லி விட்டேன். இதில் நாட்டாமையோ பண்ணையார்த்தனமோ எதுவும் இல்லை. நானும் சேர்ந்துதான் கக்கூஸ் கழுவுவேன்.
எனவே சீனி போன் பண்ணி தமிழ் வார்த்தைகள் கேட்கிறார் என்றால் எந்த அவசரத்திலும் நான் போனை எடுத்து விடுவேன். அந்த அளவு அவர் எனக்காக உழைத்திருக்கிறார். குறைந்த பட்சம் நான் திட்டுவதைக் கேட்டு அவர் என்னை ஜென்ம விரோதிப் பட்டியலில் போடவில்லை. இல்லாவிட்டால் நான் அவரைப் பார்த்து “இப்படி நீங்கள் தமிழ் எழுதினால் தமிழ் செத்து விடும்” என்று சொன்னதற்கு வேறு ஆளாக இருந்தால் விஷம் வைத்திருப்பார்கள்.
அதுவும் தவிர அராத்து ஸ்ரீராம் செல்வகுமார் போன்ற ஒருசிலர் விஷயத்தில்தான் நான் சர்வ சுதந்திரமாக எழுத முடிகிறது. மற்றவர்கள் மனம் கோணி விடுகிறார்கள். எழுதி முடித்து அதை சிலருக்கு அனுப்பி, போடலாமா என்றெல்லாம் கேட்க வேண்டியிருக்கிறது. ஒரு எழுத்தாளன் நண்பனாக இருந்தால் அவனை அவன் போக்கில் விடுவதற்குக் கூடவா கற்றுக் கொள்ளக் கூடாது? நீங்களெல்லாம் அடுத்த ஜென்மத்தில் ஜி. நாகராஜன், ஜெயமோகன், மௌனி, தர்மு சிவராமு, சி.சு. செல்லப்பா போன்ற எழுத்தாளர்களுக்கு நண்பர்களாகப் பிறப்பீர்கள் என்று ஆசீர்வதிக்கிறேன்.
டி.என். ராஜரத்தினம் பிள்ளை பற்றி ஒரு விஷயம் படித்தேன். ஒரு கச்சேரியின்போது ஒரு போலீஸ் அதிகாரியின் மீது காறித் துப்பி விட்டாராம். போலீஸ் சும்மா இருப்பாரா? ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் போலீஸின் காலில் விழுந்து ராஜரத்தினத்தைக் காப்பாற்றியிருக்கிறார்கள். இன்னொரு கச்சேரியில் ரசிகர்களின் வழிபாட்டு பிம்பம் போன்ற ஒரு சங்கீதக்காரரைத் திட்டி எல்லா ரசிகர்களும் சேர்ந்து ராஜரத்தினத்தை அடித்துத் துவைத்து விட்டார்களாம். நான் அப்படியெல்லாம் இருந்திருந்தால் என் நண்பர்களுக்குத் தெரியும் சேதி. ஒரே ஒரு பர்ஸண்ட் சுதந்திரமாக எழுதுவதற்கே இந்தப் பாடு. நேரில் பழகுவதற்கோ நான் பிள்ளைப் பூச்சி. அதற்கே இந்த நெளி நெளிகிறார்கள். இருங்கள். கொஞ்ச காலம் கழித்து ஒரு வருட காலமாவது ஆர்த்தர் ரேம்போ மாதிரி வாழ்ந்து காட்டுகிறேன், அப்போது என்ன செய்கிறீர்கள் என்று பார்க்கலாம்.
சரி, கிளம்பிய இடத்துக்கு வருவோம். எதையாவது கொடுத்தால்தான் ஏதாவது கிடைக்கும். நம் உடம்பே அப்படித்தானே படைக்கப்பட்டிருக்கிறது? என் நண்பன் ஒருத்தன் இருபத்து நாலு நேரமும் குடித்தான். காலையில் எழுந்தவுடன் குடிப்பான். ஆஹா, என்ன ஒரு அற்புதமான வாழ்க்கை என்று ஏக்கப்பட்டேன். அப்படியானால் நீங்களும் குடிங்களேன் என்றான். டேய், செத்துப் போய்ருவேண்டா என்றேன். அவன் முப்பத்தைந்து வயதில் போய் விட்டான். இருபத்து நாலு மணி நேரமும் குடித்த்தாலும் நூறு வயது வரை வாழலாம் என்றால் இந்த வாக்கிங் கீக்கிங் எல்லாவற்றையும் ஏறக்கட்டி விட்டு காலையில் எழுந்தோமா பல் துலக்கினோமா மூணு பெக் ரெமி மார்ட்டினைப் போட்டோமா என்று இருக்கலாம் இல்லையா? அந்த லக்ஷுரியையெல்லாம் கடவுள் இந்த உடலுக்குக் கொடுக்கவில்லை. காலையில் எழுந்ததும் இரையைத் தேடி அலையும் தெருநாயைப் போல் வேகு வேகு என்று பார்க்கில் நெற்றி வியர்வை நிலத்தில் விழ நடந்தால்தான் உடலையும் உயிரையும் வளர்க்க முடியும். அப்படியிருக்கும்போது எந்தப் பிரயாசையும் செய்ய மாட்டேன், எனக்கு நீ நொட்டணும் என்றால் எவன் நொட்டுவான்? ஒரு புத்தகத்தை அனுப்பி இதைப் படியுங்கள் என்று வேண்டுகோள். குறைந்த பட்சம் இப்படி அனுப்பும் அன்பர் என்னுடைய ஒரு புத்தகத்தையாவது படித்திருக்கிறாரா என்றால் கிடையாது. அதனால்தான் திட்டுகிறேன், நான் என்ன நீங்கள் வைத்த ஆளா என்று.
இப்படித்தான் சு. வேணுகோபாலை நான் படித்ததில்லை என்று ஒரு பஞ்சாயத்து ஓடியது. நான் எதற்கு ஐயா சு. வேணுகோபாலைப் படிக்க வேண்டும்? உங்களில் யாரேனும் லாஸ்லோ க்ராஸ்னஹோர்க்காய் (László Krasznahorkai) படித்திருக்கிறீர்களா என்று நான் கேட்க முடியுமா? நான் அவருடைய மிக முக்கியமான நாவலான Satantangoவைப் படித்திருக்கிறேன். அதற்கான காரணங்கள் எனக்கு இருக்கின்றன. கண்ணில் தென்படும் எழுத்தாளர்களையெல்லாம் நான் படிப்பதில்லை, அவர் எந்த மொழியில் எழுதினாலும். வாசிப்புக்கான என் தேர்ந்தெடுப்பில் ஒரு முக்கியமான அரசியல் இருக்கிறது. என்னுடைய ஐரோப்பியக் கலாச்சாரத் தொடர்பினால்தான் நான் லாஸ்லோ க்ராஸ்னஹோர்க்காயைப் படித்தேன். இவர்தான் என்னுடைய மிக முக்கியமான ஆசானாகிய Bela Tarr-இன் படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதுபவர். பேலா தார் எனக்கு எப்படி முக்கியமானவர் ஆகிறார் என்றால் ஆலன் ராப் க்ரியேவின் (Alan Robbe-Grillet) எழுத்து முறைக்கு நெருங்கியவர் அவர். இது எல்லாமே என் எழுத்து இயக்கத்தோடு மிக நெருக்கமான தொடர்பு உடையது. இதையெல்லாம் என் எழுத்தை வைத்து ஆய்வு செய்பவர்களுக்குப் புரியும். இந்த நிலையில் ஆலன் ராப் க்ரியேவின் ஒரு நாவலைத்தான் நான் படிக்க முனைவேனே தவிர சு. வேணுகோபாலுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நான் எதற்காக அவரைப் படிக்க வேண்டும்? ஜெயமோகன் தஞ்சை ப்ரகாஷையே போர்னோ எழுத்து என்று எழுதியிருக்கிறார். அதில் கொஞ்சமும் எனக்கு ஆச்சரியம் இல்லை. ஏனென்றால், பிரகாஷ் எழுதிய கலாச்சாரம் ஒரு நாகர்கோவில்காரருக்கு, ஒரு திருநெல்வேலிக்காரருக்கு போர்னோ கலாச்சாரமாகத்தான் தெரியும். தெரிய வேண்டும். பொறா ஷோக்கு கதையில் ஒரு கிழவர். தாய். மகள். கிழவர் உடல் உறவு கொண்டு நீண்ட காலம் ஆனதால் ஆண் குறி முதலிரவில் இயங்கவில்லை. தாய் பார்க்கிறாள். கிழவரை எழுப்பி அவரோடு மகளுக்கு எதிரிலேயே உறவு கொண்டு, கிழவரின் மனத்தடையையும் உடல் தயக்கத்தையும் நீக்கி சரியாக்கி விட்டு, மகளிடம் ”இப்போது நீ போ” என்கிறாள். இது தஞ்சை மண். மற்ற மண்காரர்களுக்கு போர்னோவாகத்தான் தெரியும். அதனால்தான் ப்ரகாஷின் ஆத்ம நண்பர்களாகப் பழகிய வெங்கட் சாமிநாதன், அசோகமித்திரன் போன்ற பலர் ப்ரகாஷின் எழுத்து பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அதிலும் வெங்கட் சாமிநாதன் ஒரு படி மேலே போய் ப்ரகாஷ் மரணம் அடைந்த போது அஞ்சலிக் குறிப்பில் “ஓ, ப்ரகாஷ் கதையெல்லாம் எழுதுவார் என்று இப்போதுதான் கேள்விப்படுகிறேன்” என்று எழுதுகிறார். எவ்வளவு கொழுப்பும் தடித்தனமும் இருக்க வேண்டும் இப்படி எழுத?
ஆனால், தஞ்சை ப்ரகாஷ் எனக்கு ஒரு மாஸ்டராகத் தெரிகிறார். ஜெயமோகன் வெளிப்படையாகச் சொன்னார். மற்ற சனாதனவாதிகள் வாயையே திறக்கவில்லை. இலக்கியத்தில் இரு வேறு சிந்தனைப் போக்குகள் நிலவினால் இப்படித்தான் நடக்கும். இதுதான் இயல்பு. இதைப் புரிந்து கொள்ளவே முயலாமல் நீ அதைப் படிச்சியா இதைப் படிச்சியா என்று கேட்பது மதியீனம்.
அராத்துவின் பதிவைப் படித்த போது இதெல்லாம் தோன்றியது. தஞ்சை ப்ரகாஷுக்கு அதுதான் நிலைமை என்கிற போது அராத்துவை இந்த ஜென்மத்தில் யாரும் இலக்கியவாதி என்று ஏற்கப் போவதில்லை. அவரும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.