எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள மூன்று வாட்ச்மேன்களில் ஒருவர் ஜான். ஜானின் மகளுக்குக் கல்யாணம். என்னிடம் நாலாயிரம் பணம் கேட்டாள் அவந்திகா. உயிரையும் எழுத்தையும் தவிர அவள் எது கேட்டாலும் கொடுப்பேன் என்பதால் கொடுத்தேன். நாலாயிரம் ஜானுக்குக் கை மாறியது. மற்ற குடித்தனக்காரர்கள் அதிர்ச்சியும் வெளியே காட்டிக் கொள்ள முடியாத கோபமும் அடைந்தார்கள். ஒருத்தர் வெளிப்படையாகவே கேட்டார். ”ஏன் மேடம், இது ரொம்ப ஜாஸ்தி இல்லையா?” “என்னிடம் பணம் இல்லை. இருந்திருந்தால் நானே கல்யாணம் செய்து வைத்திருப்பேன்” என்றாள் அவந்திகா. கேட்டவர் தலையைத் தொங்கப் போட்டபடி போய் விட்டார். இவள் நாலாயிரம் கொடுத்ததால் இந்த வீடுகளின் ஓனர் ஐயாயிரம் கொடுக்க வேண்டி வந்தது. மற்றவர்களுக்கும் வேறு வழியில்லை. மொத்தம் ஆறு குடும்பம். எல்லாம் சேர்த்து இருபத்தஞ்சாயிரம் வந்தது.
வாங்கிக் கொண்டு வேலையிலிருந்து நின்று விட்டார் ஜான்.