3. கிள்ளுவது பற்றிய ஒரு குட்டிக் கதை (வயது வந்தவர்களுக்கு மட்டும்)

போன கதையில் Period போட்டு விட்டதால் அதற்கு மேல் தொடர முடியாமல் போனது.  பீரியட் போட்டால் அதற்குப் பிறகு தொடரக் கூடாதாமே, இந்த இங்லீஷ்காரர்கள் சொல்கிறார்கள்.  அந்தக் கதையின் நீதி என்னவென்றால், யாராலெல்லாம் என் முன்னாள் கனவுக் கன்னி சமந்தாவை பொதுவெளியில் செல்லமாகக் கிள்ள முடிகிறதோ அவர்கள் மீதெல்லாம் எனக்குப் பொறாமை எனக் கொள்க. 

சரி, இந்தக் கதைக்கு வருவோம்.  அப்போது என் வயது இருபத்து மூணு.  என் அத்தை முறை வரும் பெண்மணியின் வயது இருபத்தெட்டோ என்னமோ.  இப்போது நான் ரொம்பவே திருந்தி விட்டபடியால் பெண்மணி என்று எழுதுகிறேனே ஒழிய அவரை பெண்மணி என்று எழுதுவது இலக்கணப்படியும் தவறுதான், எல்லா எதிக்ஸ் படியும் தவறுதான்.  சிலுக்கு ஸ்மிதாவை பெண்மணி என்று சொல்வீர்களா?  சிலுக்கு ஸ்மிதா இளம் மஞ்சள் வெயில் நிறத்தில் இருந்தால் எப்படி இருப்பார்?  அதுதான் என் அத்தை முறை வரும் பெண்ணும்.  பார்த்தால் மூச்சு நின்று விடும்.  ஆனால் முறை சரியாக வராது.  பிராயமும் என்னை விட அஞ்சாறு கூடுதல்.  இது எல்லாவற்றையும் விட முக்கியமான பிரச்சினை, அந்த அத்தை முறை பெண்ணுக்குக் கல்யாணமும் ஆகி விட்டது.  (அன்பார்ந்த லே அவ்ட் ஆர்ட்டிஸ்ட் அவர்களுக்கு, என்னுடைய லத்தீன் அமெரிக்க சினிமா என்ற புத்தகத்தின் பத்தொன்பதாம் பக்கத்தில் தமிழ்ச் சினிமா என்று போட்டிருக்கிறீர்கள்.  Cinema என்பதை நாம் ச்சினிமா என்று சொல்வதில்லை.  ஸினிமா என்றே சொல்கிறோம்.  ஆனால் நான் இலக்கணப் பிழை செய்து விட்டதாய் நினைத்து நீங்கள் ச் சேர்த்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.  இல்லாவிட்டால், அந்த நூலின் முந்தைய பதிப்பாளர் அப்படிச் செய்திருக்கலாம்.  அந்த மாதிரி இந்தக் கதையில் ”அத்தை முறை பெண்ணுக்கு” என்று வந்துள்ள இடத்தில் முறைக்குப் பக்கத்தில் ”ப்” சேர்த்து விடாதீர்கள்.  முறைப்பெண் என்று ஆகி இது பயங்கரமான இன்செஸ்ட் ஆபாசக் கதையாக மாறி விடும்.  இனிமேல் எந்தக் காரணம் கொண்டும் நான் ட்ரான்ஸ்க்ரஸிவ் கதைகள் எழுதுவதில்லை என்று சபதம் பூண்டிருப்பதால் அத்தையையே முறைப்பெண் என்று எழுதி விட்டான் என்ற பயங்கரமான குற்றச்சாட்டு இந்த அப்பாவி மேல் வந்து விடும்.  ஏற்கனவே அடியேன் மீது அப்படிப்பட்ட பல பழிகள் இருப்பதால் ஒரே ஒரு ”ப்” என்ற எழுத்தைச் சேர்த்து என் இலக்கிய வாழ்வைப் பாழடித்து விடாதீர்கள் தாயே, தயவுசெய்து.)

சரி, நாம் கதைக்கு வருவோம்.  இப்படித்தான் பல்வேறு பிரச்சினைகளால் குட்டிக் கதைகள் பெருங்கதைகளாக மாறி விடுகின்றன பாருங்கள்.  நாம் குட்டிக் கதைகளிலேயே நிற்போம்.  அந்த அத்தை முறை பெண்ணுக்குக் கல்யாணமும் ஆகி விட்டிருந்தது.  ஒருநாள் – எல்லாம் வயதுக் கோளாறு என்றுதான் இப்போதைய ஞான நிலையில் நினைக்கத் தோன்றுகிறது – வெளியே சுற்றி விட்டு வீட்டுக்கு வந்தேன்.   வேலைக்கு விண்ணப்பித்து, போட்டித் தேர்வில் பாஸ் ஆகி, வேலைக்கான உத்தரவுக்கு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரம்.  வீட்டில் யாரும் இல்லை.  அந்த அத்தை முறை பெண் மட்டுமே தோட்டத்திலிருந்து உள்ளே வந்தார்.  வா ரவி, ஏன் இவ்ளோ லேட்டு என்று கேட்டுக் கொண்டே என் முன்னே வந்து குதிர்ந்து நின்றார்.  எனக்கு மூச்சு ஒருக்கணம் நின்றது.  ஷிஃபான் சேலை.  வெயிலின் இளம் மஞ்சள் நிறம்.  எதுவுமே யோசிக்கவில்லை. 

பிற்பாடு பல காலம் கழித்துத்தான் அந்த சேலையின் பெயர் ஷிஃபான் என்றே தெரியும்.  அப்போதெல்லாம் அதை வெங்காயச் சருகு சேலை என்பார்கள். எல்லாம் நாகூருக்கு இருந்த சிங்கப்பூர் தொடர்பு.  அத்தை முறை பெண் தெலுங்கு.  என் நைனாவின் உறவு இல்லையா.  அதனால்.  தெலுங்கு என்றாலே என் அம்மாவுக்கு ஆகாது.  அதுவும் ஷிஃபான் சேலை என்றால் கொன்றே விடுவார்கள்.  அன்றைக்கு எப்படி அந்த அத்தை முறை பெண்ணுக்கு அது சாத்தியமாயிற்றோ தெரியவில்லை.  எனக்கு மிக நெருக்கமாக நின்று கொண்டிருந்ததால், நேராகப் பார்த்தால் முகத்தைக் குத்தி விடும் போலிருக்கிறதே என பார்வையைத் தாழ்த்தினேன்.  அத்தை முறை பெண் நேருக்கு நேராக நிற்காமல் சற்றே சாய்கோணத்தில் நின்றதால் என் கண் பார்வையில் இடுப்பு நின்றது.  வெயிலின் இளம் மஞ்சள் நிறம்.  டக்கென்று அவர் இடுப்பை லேசாகக் கிள்ளி விட்டேன்.

அந்த க்ஷணமே பளார் என்று ஒரு அறை விழும் என்று நினைத்து உள்ளுக்குள் நடுங்கிப் போனேன்.  ஆனால் அந்த அத்தை முறை பெண்ணோ களுக்கென்று சிரித்தபடி “ச்சீ நாயே” என்று சொல்லியபடி உள்ளே போய் விட்டார். 

அப்போதும் எனக்கு பயம் போகவில்லை.  அன்று சாய்ங்காலம் எல்லோரும் கூடியிருந்த வேளையில் அந்த அத்தை முறை பெண் என் அம்மாவிடம் “வதின… நம்ம ரவிக்குத்தான் வேலை கிடைச்சாச்சே.  கல்யாணம் எப்ப?  நான் வேணா பொண்ணு பாக்கட்டா.  நம்ம ஆலங்குடிச்சேரி நாய்க்கர் குடும்பத்துலயே லட்டு லட்டா கெடக்குதுங்க… கொமரிங்க… இவனுக்கும் வயசு ஆகுதுல்ல?” என்றார்.

”ஏண்டி, கொழுப்பெடுத்த குந்தானி…” என்று ஆரம்பித்து அம்மா சொன்ன முழு பதிலையும் இங்கே எழுதினால் இது ஆபாசக் கதை என்று சொல்லி விடுவீர்கள் என்பதால் அதைத் தணிக்கை செய்கிறேன்…

***