ஒருமுறை கல்கி நேர்காணலில் அமிர்தம் சூர்யா ஒரு கேள்வி கேட்டார். அது ஒரு ஜாலி பேட்டி என்பதால் ஜாலி கேள்விதான். உங்களுக்கு யார் மீது பொறாமை? சூர்யா எதிர்பார்த்த பதில் ஜெயமோகன் என்று புரிந்தது. ஆனால் எனக்கு எப்போதுமே ஜெ. மீது பொறாமை இருந்ததில்லை. ஏனென்றால், அவரிடம் after all ஒரு ஜாக்வார் கார் கூட இல்லை. நிதானமாக உட்கார்ந்து எழுத கரீபியன் கடலில் ஒரு தீவு இல்லை. மேலும், என்னை எத்தனை பேர் திட்டுகிறார்களோ அதைவிடக் கம்மியாகத்தான் அவரைத் திட்டுகிறார்கள். இயல் விருது எல்லாம் வாங்கியவர். அட, பத்மஸ்ரீயை மறந்து போனேனே? ஜெயமோகனுக்கு பத்மஸ்ரீ கொடுக்க ஜெ. அதை இடது கையால் தூக்கிப் போட்ட கதையை யாராலும் மறக்க முடியுமா? எனக்கெல்லாம் பத்மஸ்ரீ கொடுத்தால் கொடுத்தவன் காலில் விழுந்து வாங்கிக் கொள்வேன், தெரியுமா? எனவே எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டவன் என்ற பெருமையும் அடியேனைத்தான் சேருகிறது. ஆக, எந்த விதத்திலுமே ஜெ. நான் பொறாமைப்படக் கூடிய நிலையில் இல்லை. ஆனாலும் ஒருத்தர் இருக்கிறார். ஜெயமோகனின் நண்பர்தான். அவர்தான் சத்குரு என்று அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ். அவர் மீது எனக்கு எப்போதுமே பொறாமை உண்டு. வாழ்க்கை என்றால் அப்படி வாழ வேண்டும் ஐயா. தமிழர்களுக்குத் தமிழ் மீது மொழி உணர்வு மட்டும் அல்ல, வெறியே உண்டு. ஆனால் ஜக்கிக்குத் தமிழ் சரியாகப் பேசக் கூடத் தெரியாது. பேசவே தெரியாது என்கிற போது எழுதுவது படிப்பது பற்றியெல்லாம் பேச்சே இல்லை. ஆனாலும் தமிழர்களின் சத்குரு ஜக்கிதான். மேலும், பிலிப்பைன்ஸ் அதிபரின் மனைவி இமெல்டாவுக்கு அடுத்த படியாக அலங்கார ஆடைகள் வைத்திருப்பவர் ஜக்கி. நானோ அலங்கார ஆடைகளின் வெறியன். ஆனால் சோத்துக்கே சிங்கியடித்துக் கொண்டிருக்கும் நான் அந்த மாதிரி ஆசையெல்லாம் படலாமா? சத்குருவை ஒருநாள் பார்த்த ஆடையில் இன்னொரு நாள் பார்க்க முடியவில்லை. ஓட்டுவதோ புல்லட் பைக். ஹெலிகாப்டர் கூட வைத்திருப்பாரோ என்னவோ, எனக்கு சைக்கிள் கூட விடத் தெரியாது. அன்று ஒருநாள் பாருங்கள், யோகி ராம்தேவைப் பின்னால் உட்கார்த்தி வைத்துக் கொண்டு புல்லட்டில் அவர் சென்ற ஸ்டைல்! அடடா, அந்த க்ஷணமே நான் அவருடைய ஈஷாவில் மெம்பராகி விடலாம் என்று நினைத்து விட்டேன். ஆனால் என் சிநேகிதி ஒருத்தியின் ஞாபகம் வந்து விட்டது. அவளுக்கு முழங்கால் வரை கூந்தல் தொங்கும். அவளும் இப்படித்தான் ஜக்கி மீது பித்தாகி ஈஷாவில் சேர்ந்தாள். சரி, நம்மால் முடியாததை அவளாவது செய்கிறாளே என்று இருந்தேன். ஒருநாள் பார்த்தால் மொட்டைத் தலையோடு வந்து நிற்கிறாள். அங்கே சேர்ந்தால் மொட்டை அடிக்க வேண்டுமாமே, அப்படியா. என்னமோ தெரியவில்லை. ஆனால் யோகி ராம்தேவை தன் புல்லட்டின் பின்னால் வைத்துக் கொண்டு ஜக்கி டுட்டுட்டுட்டுட்டுட்டுட்டுட்டுட்டுட்டுட்டுட்டென்று புல்லட்டில் பாய்ந்த பிறகு நடந்தது இன்னொரு பயங்கரம். புல்லட்டிலிருந்து இறங்கியதும் யோகி ராம்தேவ் சாஷ்டாங்கமாக ஜக்கியின் கால்களில் விழுந்து வணங்கினார். ஒருவேளை உயிரோடு இறக்கி விட்டதற்கு நன்றிக்கடனா? ஒன்றும் புரியவில்லை எனக்கு. ஜக்கி துறவி அல்ல என்று நினைக்கிறேன். ராம்தேவ் துறவிதானே? துறவிகள் சம்சாரிகளின் காலில் விழலாமோ? ஆனால் ஜக்கி என்றால் எல்லாம் நடக்கும். பாரதத்தின் கிரிக்கெட் icon சச்சின் ஜக்கியோடு மேடையிலேயே கிரிக்கெட் ஆடுகிறார். ஒரு காலத்தில் என் கனவுக் கன்னியாக இருந்த சமந்தா என்ற தேவதையைத் தொட்டுக் கிள்ளி விளையாடுகிறார் சத்குரு. இதெல்லாம் யாருக்குய்யா வரும்? ஜக்கி கிள்ளினால் சத்குரு விளையாடுகிறார் என்கிறீர்கள். நான் கிள்ளினால் காமக் கொடூரன் என்பீர்கள். எனக்கு நன்றாகத் தெரியும் உங்களை. நீங்களெல்லாம் ஆளுக்குத் தகுந்தாமாதிரி பேசக் கூடியவர்கள். இதைச் சொல்வதற்கா இவ்வளவு எழுதினாய் என்று கேட்க வேண்டாம். நான் ரொம்பக் கோபத்திலும் பொறாமையிலும் இருக்கிறேன். கோபம் கடவுள் மீது. பொறாமை சத்குரு மீது. அதனால், உங்களுக்கு என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் எப்போதாவது ஜக்கியை சந்தித்தால் இன்ன மாதிரி சாருவுக்கு உங்கள் மீது பொறாமை என்பதை மறக்காமல் அவரிடம் சொல்லி விட வேண்டியது. சரியா? அவ்வளவுதான். Period.