சாரு,
மாயமான் வேட்டையின் மொழி இன்னும் சற்று அடர்த்தியாக இருந்திருக்கலாம் இல்லையா? உங்களுடைய நேனோ, நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்கள், உன்னத சங்கீதம் போன்ற கதைகள் வெகு அடர்த்தியான மொழியில் எழுதப்பட்டதுதானே? மேலும், “கரும்புத் தின்னக் கூலியா?” போன்ற தேய்வழக்குகளை இந்தக் கதையில் பயன்படுத்த வேண்டுமா?
காயத்ரி. ஆர்.
முதல் கேள்வி பற்றி சில நண்பர்கள் என்னிடம் முன்பே விவாதித்தது உண்டு. அடர்த்தியான மொழி என்பது சிறுபத்திரிகைகளின் ஒரு தன்மை. பெரும் வணிகப் பத்திரிகைகளின் தட்டையான மொழிக்கு எதிராக சிறுபத்திரிகைகள் வரித்துக் கொண்ட ஒரு மதிக்கத்தக்க குணாம்சம் அது. மௌனி அதில் மன்னர். ஆனால் ஒரு சிக்கல் இருக்கிறது. மௌனியின் கதைகள் ஒரே ஒரு கருவை மட்டுமே திரும்பத் திரும்ப கையாள்கின்றன. காதல் தோல்வி. அந்தக் கதைகளை சுஜாதாவின் மொழியில் எழுதியிருந்தால் ஒரு ஆள் சீந்தியிருக்க மாட்டார்கள். ஆனால் அடர்த்தியான மொழியைக் கையாண்டதால் புதுமைப்பித்தனாலேயே சிறுகதையின் திருமூலர் எனப் போற்றப்பட்டார் மௌனி. அதே சமயம், மௌனியை ஒருவர் வெறும் அடர்த்தியான மொழியினால் மட்டுமே உயர்ந்த இடத்தைப் பிடித்தவர் என்றும் தீர்மானமாகச் சொல்லி விட முடியாதபடி தத்துவம் சார்ந்த நுணுக்கங்களைத் தனது கதைகளில் கொண்டு வந்தவர். எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம் என்ற அவரது கேள்வியை நம்மால் மறந்து விட முடியுமா என்ன, என்னதான் அது ஷேக்ஸ்பியரின் மொழிபெயர்ப்பு என்றாலும் கூட? பௌத்தத்திலும் இந்திய சூன்யவாதத் தத்துவத்திலும் மௌனி ஒரு அறிஞர் என்பதையும் இங்கே நாம் மறந்து விடலாகாது. அவர் இலக்கிய நூல்களை விட தத்துவம் சார்ந்த நூல்களையே அதிகம் வாசித்தார். விட்ஜென்ஸ்டைன் அவருக்குப் பிடித்த தத்துவாசிரியர். ஆனால் மௌனி எதிர்பார்த்த அடர்த்தியான மொழி புதுமைப்பித்தனிடம் இல்லாததாலேயோ என்னவோ புதுமைப்பித்தன் கதைகள் மீது மௌனிக்கு அத்தனை மரியாதை இல்லை. அதே சமயம், புதுமைப்பித்தன் எடுத்துக் கொண்ட சமாச்சாரங்களுக்கு அவர் பயன்படுத்திய மொழி தமிழின் உச்சக்கட்ட சாதனை. மொழியில் அவர் செய்திருக்கும் சாதனைகள் பாரதியையும் விஞ்சியவை. மொழி என்கிற போது நான் பாணியைப் பற்றி மட்டுமே சொல்லவில்லை. ஒரு பிரதியின் செயல்தளங்களின் சாளரங்கள் அனைத்தையும் திறந்து புத்தொளியைப் பாய்ச்சுவதும், பிரதி உருவாக்கத்தின் அச்சு விசைகளில் புரட்சிகரமான மாற்றங்களை நிகழ்த்துவதும்தான் மொழியில் செயல்படுவதாகும். அதனாலேயே தமிழ் உரைநடை எழுதுகின்ற அத்தனை ஆத்மாக்களும் புதுமைப்பித்தனுக்குத் தங்கள் முதல் நன்றியைத் தெரிவித்தாக வேண்டும்.
இப்போது யோசிக்கும்போது, நான் எடுத்துக் கொண்டது புதுமைப்பித்தனின் பாணியையே என்று தோன்றுகிறது. இதெல்லாம் பிரக்ஞாபூர்வமாக நடக்கும் காரியம் அல்ல. காரணம், நான் நீண்ட காலமாக புதுமைப்பித்தனை மறுத்து வந்தவன். காரணம், சாதியம். ஆனால் சித்தாந்தரீதியாக இலக்கியத்தை அணுகினால் யாருமே தேற மாட்டோம், ஷேக்ஸ்பியர் உட்பட. இந்த நிலையில், நான் பித்தனை முன்பு மறுத்து வந்தாலும் ஆதவன் பித்தனின் வாரிசு, நான் ஆதவனின் வாரிசு. ஆக, நான் பித்தனிடம் சித்தாந்தத் தடிகளைப் போட்டாலும் என்னையும் அறியாமல் எனக்குள் பித்தன் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்பதை இப்போது அவனை சாவகாசமாக வாசிக்கும்போது புரிகிறது.
மேலும், அடர்த்தியாக எழுதுதல் என்பது மௌனிக்குப் பிறகு சுந்தர ராமசாமியிடமிருந்து தொடங்கியது. இது பற்றி விரிவாகவே ஜே.ஜே. சில குறிப்புகளுக்கு நான் எழுதிய விமர்சனத்தில் எழுதியிருக்கிறேன். “கிரிக்கெட்டை முன்வைத்து புத்திஜீவிகளிடம் ஒரு முட்டாள் சொல்லிக் கொண்டது…” என்ற கதையிலும் கிண்டல் அடித்திருக்கிறேன். டப்பாவுக்குள் ஒன்றுமே இருக்காது. காலி டப்பா. ஆனால் வெளியே ஜிகினா பேப்பரால் மூடியிருக்கும். அடர்த்தியான மொழியில் எழுதப்பட்ட பெரும்பாலான கதைகள் இப்படி காலி டப்பாவுக்கு வெளியே சுற்றப்பட்ட ஜிகினாக் காகிதங்கள்தான். க.நா.சு., செல்லப்பா, எம்.வி. வெங்கட்ராம், தி.ஜானகிராமன், கு.ப.ரா., ந. பிச்சமூர்த்தி போன்ற யாருமே அடர்த்தியான மொழியைக் கையாண்டதில்லை. லா.ச.ரா. மட்டுமே விதிவிலக்கு. ஆனால் லா.ச.ரா.வைக் கூட அடர்த்தியான மொழி என்று சொல்ல முடியாது. அவர் கதையே வேறு. அவர் மொழி ஒரு கனவு சாம்ராஜ்யம். அது ஒரு நனவிலி மொழி. அது வேறு.
அடர்த்தியான மொழி இலக்கியரீதியாக வெற்றியடைந்தது என்பதற்குத் தமிழின் சமகால எழுத்தில் இரண்டு உதாரணங்களைச் சொல்லலாம். ஒன்று, ஜெயமோகனின் கொற்றவை. இரண்டு, பா. வெங்கடேசனின் எல்லா புனைவுகளும். குறிப்பாக, பாகீரதியின் மதியம். அந்த நாவலில் சில வாக்கியங்கள் மூன்று பக்கங்கள் நீளுகின்றன. அந்தப் பாணியை அந்தப் பிரதி கோருகிறது. பா. வெங்கடேசனின் கதை சொல்லும் முறையே அப்படித்தான் இருக்கிறது. அதை வாசிப்பதே உனக்கு ஒரு சவால். அவருடைய தீவிர வாசகர்கள் என ஐம்பது பேர் இருக்கலாம். ஐந்து பேர் இருந்தாலும் கூட அவர் உலகின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர்தான் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. அவர் சராசரி வாசகர்களுக்கானவர் அல்ல. எழுத்தாளர்களின் எழுத்தாளர். இங்கே கோணங்கியைக் கொண்டு வரக் கூடாது. கோணங்கியின் மொழி அந்தக் கால சித்த வைத்தியர்களின் மொழி போல் ரகசிய சங்கேதங்களால் ஆனது. அதை கோணங்கியே விளக்கினால்தான் புரியும். சமயங்களில் அவருக்கே அது புரியாமலும் போகலாம். ஒருவேளை அதை Automatic writing என்று சொல்லலாமோ என்று நினைக்கிறேன். அதில் ஆய்வு செய்வது என் வேலை அல்ல. கோணங்கியின் எழுத்து அந்த வகையில் இலக்கியத்துக்கு உதவாது. மனோதத்துவ அறிஞர்களுக்கு சோதனைப் பிரதியாக உதவலாம். ஆனால் பா. வெங்கடேசன் வேறு. அடர்த்தியான எழுத்துக்கு ஒரு மகத்தான உதாரணம் பா. வெங்கடேசனின் புதினங்கள்.
ஜெயமோகன் பலவிதமான முறைமைகளில் எழுதுகிறார். சிற்றெறும்பு என்ற கதையைப் படித்தபோது இதை பாலகுமாரன் இன்னும் சிறப்பாக எழுதுவாரே எனத் தோன்றியது. ஆனால் அடர்த்தியான மொழி. என்ன பயன்? ஜெயமோகனை ஆதர்சமாகக் கொண்டு ஒரு நூறு பேராவது எழுதுகிறார்கள். இளைஞர்கள். எல்லோருக்கும் அந்த அடர்த்தியான மொழி கைகூடியிருக்கிறது. ஒரு குறுநாவல் போட்டியில் பார்த்தேன். பத்து பேருடைய மொழி ஒரே மாதிரி இருந்தது. ஒரே மாதிரி என்றால்? நடுவர் என்பதால் எழுதியவர்களின் பெயர் தெரியாது எனக்கு. ஒரே நபர் அந்தப் பத்து கதைகளையும் எழுதியிருப்பது போல் இருந்தது. முழுக்க முழுக்க ஜெயமோகனின் அடர்த்தியான மொழி. சும்மா ஒரு ஆள் சாப்பிட்டாயா என்று கேட்கிறான். அதற்குக் கூட ஒரு அடர்த்தியான மொழிப் பிரயோகம்தான். பிறகு போட்டி முடிந்து கதைகள் வெளிவந்த பிறகு அந்தப் பத்து பேரும் ஜெயமோகனின் தீவிர வாசகர்கள் என்பதை அறிய முடிந்தது.
சிற்றெறும்பு என்ற சாதாரணமான கதையை எழுதிய ஜெயமோகன் தான் கொற்றவை என்ற கிளாஸிக்கையும் எழுதியிருக்கிறார். ஆனால் ஜெ.வை ஆதர்சமாகக் கொண்டு அவரது மொழியைப் பின்பற்றும் இளைஞர்களால் கொற்றவை போன்ற ஒரு கிளாஸிக்கை உருவாக்க முடியுமா? ஜெயமோகன் ஒரு மாஸ்டர். ஆசான்களைப் பின் தொடர்தல் என்பது அடர்வனத்தில் ஒரு ஆசானின் வழித்தடத்தைப் பின் தொடர்ந்து செல்வது போன்ற காரியம் அன்று. கலையில் ஆசானைப் பின் தொடர்தல் என்பது வேறு வகையானது. உதாரணமாக, சுந்தர ராமசாமி பள்ளியிலிருந்து வந்த ஜெயமோகனிடம் சு.ரா.வின் ஒரு தடயம் கூட இல்லாததை கவனிக்கலாம். ஜெயமோகனுக்குத் தமிழில் முன்னோடிகள் இல்லை. எனக்கும் அநேகமாக தமிழில் முன்னோடிகள் இல்லை. என் எழுத்தில் புதுமைப்பித்தனின், ஆதவனின் செல்வாக்கு/பாதிப்பு என்பதெல்லாம் ஸ்டைல் பற்றியது. ஒட்டுமொத்த செயல்பாடு/இயக்கம்/perception என்று எடுத்தால் என்னுடைய முன்னோடிகளை நீ ஃப்ரெஞ்சில்தான் பார்க்கலாம். நாம் அது பற்றி நிறைய பேசியிருக்கிறோம். கலையில் ஆசான்களைப் பின் தொடர்தல் என்பது புறவயமானதல்ல என்பதே நான் சொல்ல முயற்சிப்பதன் சாரம். அது முழுக்க முழுக்க அகவயமானது. ஆசானின் தரிசனத்தைப் பெற்றுக் கொண்டு, உள்வாங்கிக் கொண்டு கடவுளைத் தேடி நாம் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டும். நமக்காக வேறு எவரும் புசிக்க முடியாது என்பதைப் போன்றது இது. கடவுள் என்ற இடத்தில் நீ எதை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்.
இன்றைய தினம் நான் பல இளைஞர்களின் எழுத்து அடர்த்தியாகவும் உள்ளீடு அற்ற காலி டப்பாவுமாகவே இருப்பதைக் காண்கிறேன். அதே சமயம், இதற்கு மாறாக வேறு பல இளைஞர்கள் தனித்துவமான வெளிப்பாட்டைக் கொண்டவர்களாகவும் நம்பிக்கை தருபவர்களாகவும் இருக்கிறார்கள். ஜெயமோகனிடமிருந்து வரும் சுனில் கிருஷ்ணன், எந்தப் பின்னணியும் இல்லாத மயிலன் சின்னப்பன் போல தனித்துவம் மிக்க பலரும் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். (இப்போதைய என் கால நெருக்கடி இல்லாவிட்டால் இவர்கள் இருவரையும் பற்றி விரிவாக எழுதியிருப்பேன்.)
சுருக்கமாகச் சொல்கிறேன். வணிக எழுத்தின் தட்டையான மொழிக்கு எதிராக ஒரு கலாச்சார ஆயுதமாக அறிமுகமான அடர்த்தியான மொழி இன்று ஒரு மோஸ்தராக மாறி விட்டது. அந்த மோஸ்தர் என்னைப் போன்ற மாஸ்டர்களுக்குத் தேவையில்லாதது. என்னுடைய பெட்டியின் மேலே ஜிகினாக்கள் கிடையாது. உள்ளே இருப்பது வைரம். என்னுடைய மொழி உன்னை ஏமாற்றி விடும். இதில் ஒன்றுமே இல்லை என்று தோன்றும். படிக்க ஜாலியாக இருக்கும். ஆனால் உள்ளே இருப்பது மிக அரிதான வாழ்வியல்/உளவியல் சிடுக்குகளைப் பற்றிய கேள்விகள். அந்தக் கேள்விகளைக் கேட்கவே இத்தனை நூற்றாண்டுகளைக் கடந்து வர வேண்டியிருந்திருக்கிறது. ரமண மகரிஷியின் தோற்றத்தையும் இன்றைய கார்ப்பொரேட் சாமியார்களின் தோற்றத்தையும் இதற்கு நான் உதாரணமாகச் சொல்லுவேன். ரமணர் பிச்சைக்காரரைப் போல் தோற்றமளிக்கிறார். அவரே இன்றைய கார்ப்பொரேட் சாமியாரைப் போல ஜடாமுடியும் தங்க ருத்ராட்ச மாலைகளும் அணிந்து கொள்வதைப் போன்றதுதான் அடர்த்தியான மொழியில் எழுதுவதும். இப்படிச் சொல்வதால், நான் அடர்த்தியான மொழிக்கு எதிரி என்று அர்த்தமல்ல. தியாகராஜா நாவல் வெகு அடர்த்தியான மொழியில் எழுதப்பட்டு நீயே “இது யாருக்கும் புரியாது” என்று சொன்னதால்தான் இப்போது கொஞ்சம் லகுவான மொழியில் தளர்த்திக் கொண்டிருக்கிறேன். ஆக, ஒவ்வொரு கதையின் உள்ளடக்கம்தான் அதற்கான மொழியைத் தேர்ந்தெடுக்கிறது.
உன்னுடைய இரண்டாவது கேள்வி, தேய்வழக்கு பற்றியது. க்ளீஷே. இதெல்லாம் தீட்டு என்று முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை நினைத்துக் கொண்டிருந்தேன். ரொலாந் பார்த்தைப் படிக்கும் வரை. எம்ஜியார் படமா, சே. அப்படியான மனோபாவம். ஜனரஞ்சகமான எல்லாமே தீட்டு. பார்த் ஜனரஞ்சகக் கலை வெளிப்பாடுகளை சமூக நீரோட்டங்களைப் புரிந்து கொள்வதற்கான மாதிரிகளாகக் கொள்கிறார். ஆக, ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர் தனது தட்டையான கதையில் எழுதும் கரும்பு தின்னக் கூலியாவுக்கும் என்னைப் போன்ற ஒரு பின்நவீனத்துவப் படைப்பாளி எழுதும் கரும்பு தின்னக் கூலியாவுக்கும் எக்கச்சக்கமான வித்தியாசம் உள்ளது. தேய்வழக்குப் பிரயோகங்கள் என்னுடைய மகத்தான படைப்புகளினூடே வரும் விளையாட்டுக் கீறல்கள். அவை என்னுடைய அடையாளம். Chanel 5 திரவியம் தெளித்துக் கொண்டவர் ஒரு இடத்துக்கு வந்து போனதன் அடையாளத்தைப் போல. ஸீரோ டிகிரியில் இது போன்ற தேய்வழக்குகள் எக்கச்சக்கமாக உண்டு. கர்னாடக முரசு கதை முழுக்கவுமே தேய்வழக்குகள்தான். வேல் வேல் வெற்றிவேல், முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்று அந்தக் கதையில் ஒரு இடம் வரும். தேய்வழக்குகள் கலையாக மாறும் அற்புதத் தருணம் அது. அதே போன்றதுதான் கரும்பு தின்னக் கூலியாவும். அங்கே வாவ் வாவ் என்று போட்டால் அதில் பகடி இல்லை. கரும்பு தின்னக் கூலியா என்பதில் சுய எள்ளலும், ஆண் பெண் கவர்ச்சி குறித்த நக்கலும் உள்ளது.
***
மாயமான் வேட்டை குறித்து எனக்கு வந்த அத்தனை கடிதங்களையும் வெளியிடுவது எனக்கு லஜ்ஜையான விஷயம். சுமார் இருபது பேர் எழுதியிருக்கிறார்கள். இதேபோல் இன்னும் முந்நூறு கதைகளுக்கான சரக்கு உள்ளது. இந்தக் கதையை நான் சென்ற ஆண்டே நண்பர்களிடம் நேரில் சொல்லியிருக்கிறேன். இதேபோல் இன்னும் இமயமலைக் கதைகள், தாய்லாந்துக் கதைகள், உஸ்பெக்கிஸ்தான் கதைகள் என்று ஏராளம் உள்ளன. ஆனால் சீலே கதைகள் மட்டுமே ஒரு ஆயிரம் பக்கம் தேறும். ரொபர்த்தோவின் கதை ஒரு நாவல். எனக்குக் கார் ஓட்டிய பராகுவாய் இளைஞனின் கதை ஒரு குறுநாவல். ரொபர்த்தோவின் வயது இப்போது 68. மனைவியின் வயது 28. இரண்டு சிறு குழந்தைகள். நம்மூரில் முப்பது வயதுக்காரர் குழந்தைகளோடும் பள்ளிக்கூடத்தோடும் போராடுவது போல் 68 வயதில் போராடுகிறார் ரொபர்த்தோ. நம்மூரை விட வாழ்க்கை கஷ்டம். இலவசங்கள் கிடையாது. குழந்தைகளின் படிப்புக்குத் தெருத் தெருவாகப் பிச்சை எடுக்க வேண்டும். அப்படிப் பிச்சை எடுத்துப் படிக்க வைத்தால் குழந்தைகள் பதினேழு வயதிலேயே நமக்கு எதிரிலேயே தம் அடிக்கும். பெண் குழந்தையாக இருந்தால் காண்டம் வாங்கக் காசு கேட்கும். கொடுக்காவிட்டால் அடுத்த மாதமே வயிற்றைத் தள்ளிக் கொண்டு வரும். எல்லாவற்றையும் நேரில் பார்த்தேன். 90 வயது ஆனாலும் உழைத்துத்தான் தின்ன வேண்டும். இந்தியாவைப் போல் எல்லா கஷ்டமும் உண்டு. கூடுதலாக குளிர். நிலையான சம்பாத்தியமும் இல்லை. பணத்தைத் தவிர வேறு யோசனையே இல்லாத வாழ்வு. ஏய்யா இந்த வயதில் கல்யாணம் பண்ணிக்கிட்டே என்றால், வேசிகளிடம் மட்டுமே போவது சலிப்பாக இருக்காதா உனக்கு என்று எதிர்க் கேள்வி. இன்னும் நிறைய இருக்கிறது சொல்ல…