எக்ஸைல் வாசிப்பு

ஆயிரம் பக்கம் எழுதியிருக்கிறேன். ஆனால் அதை யாருமே சரியாகப் படிக்கவில்லையோ என ஐயுறுகிறேன். பதினான்காம் அத்தியாயம் – ஹம் தும் ஏக் கம்ரே மே பந்த் ஹோ – அந்த அத்தியாயத்தை மட்டும் படிக்கவே ஒரு வாரம் ஆகுமே? எல்லோரும் அப்படியே பக்கங்களைப் புரட்டி விட்டார்களோ எனத் தோன்றுகிறது. அதேபோல் பதின்மூன்றாம் அத்தியாயம் தாவர சங்கமம். அதையும் அப்படியே கடந்து விட்டார்கள்.

எக்ஸைல்தான் என்னுடைய நாவல்களில் சரியாக வாசிக்கப்படாமல், விவாதிக்கப்படாமல் போய் விட்டது. நாவல் வெளிவந்ததும் அது பற்றிப் பரந்து பட்ட அளவில் விவாத அரங்குகள் நடத்த வேண்டும் என்று நினைக்கிறேன். முப்பது பேர் கூடினால் கூடப் போதும். நாவல் நன்றாக இல்லை என்று நிராகரிக்கக் கூட செய்யலாம். ஆனால் ஆயிரம் பக்க நாவலை நிராகரிப்பதற்குக் கூட பெரும் விவாதங்களை முன்னெடுக்க வேண்டாமா? நீங்கள் அனைவரும் பதின்மூன்றாம், பதினான்காம் அத்தியாயங்களை எப்படி எதிர்கொண்டீர்கள் என்று நான் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த இரண்டு அத்தியாங்களும் மிகப் பெரிய கால எந்திரப் பயணத்தைக் கோருபவை அல்லவா? தாவர சங்கமம் 2000 ஆண்டுகள். ஹம் தும் ஏக் கம்ரே மே பந்த் ஹோ – 50 ஆண்டுகள்.

வாசகர்களின் உதாசீனம் பயங்கரமாக இருக்கிறது. நான் தூரத்தில் இருப்பவர்களைச் சொல்லவில்லை. ஈடுபாடு இல்லாதவர்கள் அப்பால் செல்லுங்கள், நான் வாசகர் வட்ட நண்பர்களைச் சொல்லுகிறேன்.

நாவல் இன்னும் மூன்று வாரத்தில் வந்து விடும். விவாதத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கார்த்திக் நாகேந்திரனையோ ஸ்ரீராமையோ தொடர்பு கொள்ளவும். மே மாதம் ஸூம் மூலம் கலந்துரையாடல் நடக்கும். கட்டணம் எதுவும் இல்லை. நானும் கலந்து கொள்வேன். ஆனால் நான் வெறும் பார்வையாளன் தான்.