எக்ஸைல் வாசிப்பு (2)

சற்று நேரத்துக்கு முன்பு ஒரு நண்பர் எனக்கு போன் செய்தார். இதுதானே மீரா என்று ஒரு புகைப்படத்தை அனுப்பினார். மிரண்டு போனேன். சீலேவிலிருந்து நீங்கள்தான் அனுப்பினீர்கள் என்றார். சீலே பயணக் கட்டுரையின் ஆரம்ப அத்தியாயங்களை குமுதத்திலும் எழுதினேன். அதில் இந்தக் கதை விஷயங்கள் இல்லை. ஆனால் அலெஹாந்த்ரா என்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இருந்தது. ரொபர்த்தோ புகைப்படம் இருந்தது.

மாயமான் வேட்டையில் பழைய கோணல் பக்கங்களின் சாருவைப் பார்த்தேன் என்றார். எங்கே போய் விடும்?

எக்ஸைல் போன்ற நாவலை இதுவரையிலான வாசிப்பு அனுபவத்தில் நான் எதிர்கொண்டது இல்லை என்றே நினைக்கிறேன். ஒரு கதாபாத்திரமே நாவலின் இடையில் புகுந்து நாவலாசிரியனை கன்னாபின்னா என்று திட்டுகிறது. இன்னொரு பாத்திரம் ”நீ சும்மா இரு, நானே என் கதையைச் சொல்லி விடுகிறேன், உன்னால் ஒரு பெண்ணாகிய என் கதையை சரியாகச் சொல்ல முடியவில்லை” என்று தானே கதை சொல்ல ஆரம்பிக்கிறது. இதெல்லாம் கதாசிரியனின் யுக்தியாக அல்லாமல், அந்தப் பாத்திரங்களின் மொழியே வேறு மாதிரி இருக்கிறது. அஞ்சலி, கொக்கரக்கோ என்ற இருவரின் பாத்திரங்களும் அவர்களின் மொழியும் நாவலை வேறு தளத்துக்குக் கொண்டு செல்கின்றன. ஒரு வாசகனாக இதை வாசிக்கையில் ஒரு பொக்கிஷத்தைப் போல் உணர்கிறேன். இதன் அருமை பலருக்கும் தெரியாமல் போய் விட்டது. ந. முருகேச பாண்டியன் மட்டும் விடாமல் சொல்லிக் கொண்டே இருந்தார். வினீத்தும் ஒரு காரணம். வினீத் தூண்டி விடாமல் இருந்தால் நான் இப்போது இந்தப் பிழைதிருத்தத்தில் ஈடுபட்டிருக்க மாட்டேன். முடிக்கப் போகிறேன்.