என் தேர்தல் கணிப்பு:
திமுகவுக்கு 190 இலிருந்து 200 வரை இடங்கள் கிடைக்கும்.
அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்காதிருந்தால் இன்னும் கூடுதலான இடங்களைப் பெற்றிருக்கலாம்.
ஸ்டாலினுக்குக் கூட்டல் கழித்தல் தெரியாது, யாகாவாரயினும் நா காக்க என்ற குறளையெல்லாம் நாப் பிறழாமல் சொல்ல வராது என்பதெல்லாம் முதல்வராக அமர்வதற்கான தகுதிக் குறைவு என்று நான் நினைக்கவில்லை. முதல்வர் பதவி என்பது கலெக்டர் வேலை அல்ல. கருணாநிதி, எம்ஜியார், ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை விட ஸ்டாலின் திறமை வாய்ந்த முதல்வராக இருப்பார் என்பதில் எனக்கு ஒரு துளியும் சந்தேகம் இல்லை.
மற்றபடி கீழ்மட்ட திமுக தொண்டர்கள் வழக்கம் போலவே அநியாய ஆட்டம் போடுவார்கள் என்பதிலும் சந்தேகம் வேண்டாம். அப்படி ஆட்டம் போடாமல் இருந்தால் இன்னொரு ஐந்து ஆண்டுகள் கிடைக்கும். இல்லாவிட்டால் அதிமுக தான்.
முதல்வர் ஸ்டாலினை விட கமல் சட்டசபையில் பிஸியாக இருப்பார். ஆட்டோகிராஃப் போட வேண்டும் இல்லையா? அதற்கு. தனது வாழ்க்கையின் மிக மோசமான பகுதியை கமல் அனுபவம் கொள்ள நேரிடும். சினிமாவில் பாரதிராஜா போன்ற பெரும் இயக்குனர்களாலேயே மிக மரியாதையுடன் நடத்தப்பட்ட கமல்ஹாசன் மய்யத்துக் கட்சியின் ஒற்றை எம்மெல்லேவாக அநியாயத்துக்கு லோல்படப் போகிறார். சினிமாவில் ஒரு முடிசூடா சக்ரவர்த்தி சட்டசபையில் ஒரு ஓரமாக துணை நடிகர் மாதிரி அமர நேர்வதை எண்ணி எனக்கே மனம் சங்கடப் படுகிறது. அதை நினைத்து அவர் யாருக்கும் புரியாத பாஷையில் ஒரு விளக்கதைச் சொல்லி விட்டு சட்டசபைக்குச் செல்வதையே புறக்கணிக்கவும் செய்யலாம். என்ன நடக்குமோ தெரியாது. ஆனால் அவர் எம்மெல்லேதான்.
வருகின்ற ஐந்து ஆண்டுகளில் ஒரு நல்ல நிர்வாகம் இருக்கும். பிராமணர்களின் எதிர்பார்ப்புதான் பொய்க்க இருக்கிறது. ஆனால் பிராமணர்கள் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள். வரலாற்றில் புத்தரையும் சமீபத்தில் பெரியாரையுமே தாங்கியவர்கள். இந்த ஜுஜுபி மேட்டரெல்லாம் அவர்களுக்கு எம்மாத்திரம்? இன்று என் நண்பர் (பிராமணர்) விரக்தியின் உச்சத்தில் திமுக 220 வரும் சார் என்றார். பிராணர்களால் என்றைக்குமே தமிழ் psyche-ஐப் புரிந்து கொள்ள முடியாது என்றேன். தமிழ்நாட்டைத் தன் ராஜ்ஜியத்துக்குள் இணைக்க வேண்டும் என்பது அசோகனின் வாழ்நாள் கனவு. அவனாலேயே முடியவில்லை. ஆதியோகியாலும், அமித் ஷாவினாலுமா முடியும்? இன்னும் 2000 ஆண்டுகளுக்கு அது சாத்தியம் இல்லை.