இந்தப் பதிவை என்னுடைய வாசகர் வட்ட நண்பர்கள் பலரும் ரசிக்க மாட்டார்கள். அதேபோல் விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்களும் ரசிக்கப் போவதில்லை. இருந்தாலும் எனக்குத் தோன்றுவதை எழுதித்தானே ஆக வேண்டும். வேறு வழியில்லை. என்னுடைய மிகத் தீவிரமான வாசகர்கள் பலர் என்னுடன் நெருக்கமான நட்பில் இருப்பவர்கள். விசேஷ காலங்களில் எனக்குப் புது வேட்டி சட்டை வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு நெருக்கம். அதே சமயம் மதத் தீவிரவாதியின் பிடிவாதத்தோடும் உறுதியோடும் ஏதாவது ஒரு நடிகருக்கு ரசிகராகவும் இருப்பார்கள். ரசிகர் என்றால் சாதாரணமாக அல்ல. ரொம்பத் தீவிரம். நடிகர் என்ன உளறினாலும் சரி, ஆஹா ஓஹோதான். இடையிடையே சந்தேகம் வேறு வந்து விடும், நம் சாருவுக்கு அவரைக் கண்டால் ஏன் ஆகவில்லை? ஏன் இப்படிக் காண்டாகிறார்? என்ன பிரச்சினை ரெண்டு பேருக்கும்? நம் கமலையே எடுத்துக் கொள்ளுங்கள். ரஜினிக்கு சினிமாவின் உயரிய விருது. என்ன செய்யலாம்? வாழ்த்து சொல்லலாம். இல்லாவிட்டால் – அதாவது, ரஜினிக்கு அந்தத் தகுதி இல்லை என்று நினைத்தால் ரஜினியையோ விருது கமிட்டியையோ திட்டலாம். சமூகத்தைத் திருத்த நினைப்பவர் முதலில் தன் மனசாட்சிக்கும் சமூகத்துக்கும் கொஞ்சம் உண்மையாக இருக்க வேண்டும் அல்லவா? அதை விட்டு விட்டு அது என்ன அப்படி ஒரு தீசல் வாழ்த்து? தீசல் என்ற வார்த்தையைத் தவிர வேறு எந்த வார்த்தையும் அதற்குப் பொருத்தம் இல்லை.
இதோ இன்னும் இரண்டொரு ஆண்டுகளில் பெருமாள் முருகனுக்கு புக்கர் கிடைக்கப் போகிறது. அப்போது புக்கரைத் திட்டி நியூயார்க் டைம்ஸிலோ ஆர்ட்ரெவ்யூ ஏஷியாவிலோ ஒரு முழுநீளக் கட்டுரை எழுதுவேன். எப்படியென்றால், நம் நாட்டுப் பாம்பாட்டிகளுக்கும் கழைக்கூத்தாடிகளுக்கும் இன்ன பிற ethnic கலைஞர்களுக்கும் மேல்நாட்டில் செம மவுசு உண்டு. அந்த மாதிரிதான் இலக்கியத்திலும் ethnic-ஆக எழுதினால் புக்கர் கிடைக்கும். நோபலோ புக்கரை விட சீரழிந்து கிடக்கிறது. பத்ரிக் மோதியானோ (Patric Modiano) என்று ஒரு குப்பை ஃப்ரெஞ்ச் எழுத்தாளர். அவருக்கு நோபல். அதை விடக் கொடுமை, ஒரு பாடலாசிரியருக்குக் கொடுத்தார்கள். Bob Dylan. இவரை விட வைரமுத்து நல்ல பாடலாசிரியர். எனவே வைரமுத்துவுக்கு நோபல் கிடைத்தால் அவர் பாராட்டுக்குரியவர்தான். நோபல் அந்த அளவுக்குப் போய் விட்டது.
சரி, நாம் என் வாசகர்களுக்கு வருவோம். எனக்கு சாருவும் பிடிக்கும், ரஜினியும் பிடிக்கும் அல்லது கமலையும் பிடிக்கும் என்று சொல்வது எப்படி இருக்கிறது தெரியுமா? எனக்கு காந்தி என்றால் உயிர். அதே சமயம் கோட்ஸேவுக்கு நான் தீவிரமான ரசிகன். ஏன் தான் காந்தியும் கோட்ஸேயும் ரெண்டுபட்டுக் கிடக்கிறார்கள், அவர்களுக்குள் என்ன பிரச்சினை என்றே தெரியவில்லை, மேலும், எனக்கு ஹிட்லரையும் ரொம்பப் பிடிக்கும், இன்றைய தேவை ஹிட்லர்தான், அவர் கோவையில் நிற்க வேண்டும், ஆன்மீகத்தில் நான் ரமணரின் சீடன். தினமும் ரமண பஜனம் செய்து விட்டுத்தான் ஒரு நாளையே தொடங்குவேன் என்று சொன்னால் அவரை நீங்கள் என்னவென்று அழைப்பீர்கள்? அவர்தான் சாருவின் தீவிர வாசகர். என் வாசகர் வட்டத்தில் பாதி பேர் இப்படித்தான். பிடித்த நடிகரைப் பற்றிப் பேசினால் வேட்டியை அவிழ்த்துப் போட்டு விட்டு ஆடுவார்கள்.
விஷ்ணுபுரம் வட்டம் எப்படித் தெரியுமா? ரொம்ப விவரம். இப்படிப்பட்ட லூசுத்தனமெல்லாம் இருக்காது. எல்லோருமே சாக்ரடீஸ், பிளேட்டோ மொழியில்தான் எழுதுவார்கள். நேரில் சந்தித்தால் அப்துல் கலாம் எப்பேர்ப்பட்ட சிந்தனையாளர் என்று ஒன்றரை மணி நேரம் விவாதிப்பார்கள். மிஷ்கின் தஸ்தயேவ்ஸ்கியை விடப் பெரிய மனிதாபிமானி என்று கட்டுரை எழுதுவார்கள். நானே அதில் மதிமயங்கி ஷேர் பண்ணுவேன். மணி ரத்னம் படங்களில் அமார்த்யா சென்னின் பொருளாதாரச் சிந்தனை மிளிர்வதாக எழுதுவார்கள். மிளிர்வதாக என்பது என்னுடைய தேய்வழக்கு. அவர்களின் வார்த்தை இன்னும் பெலமாக இருக்கும். இயக்குனர் ஷங்கரின் காட்சி அமைப்புகளில் மைக்கேல் ஏஞ்ஜலோவின் ஓவியப் பாணி தெரிகிறது என்று ஒரு இலக்கியத் தரமான கட்டுரை வரும். ஆனால் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர்கள் பாராட்டும் ஒவ்வொரு ஆளுமையும் ஏதாவது ஒரு வகையில் ஆசானோடு தொடர்பில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சீந்தக் கூட மாட்டார்கள். அப்படி ஒருத்தர் இருக்கிறார் என்பதே தெரியாதது போல் இருந்து விடுவார்கள்.
விஷ்ணுபுரம் வட்ட நண்பர்களின் இன்னொரு மேன்மையான பண்பு என்னவென்றால், நேரில் பழகுவதற்கு ஒவ்வொருத்தரும் தங்கக் கம்பி. இங்கே சாரு வட்டம் மாதிரி துக்கிரிகள் அல்ல. இங்கே தண்ணி போடாதவர்களின் அக்குறும்பே எட்டு பெக் அடித்தவனின் அக்குறும்புக்கு மேலாக இருக்கும். பெயரைப் போட கை துடிக்கிறது. கொலை வெறி ஆகி விடுவார்கள் என்பதால் போடவில்லை. இப்படிப் பல ரகம். நானும் நம்முடைய க்ரூப்பில் ஒரு விஞ்ஞானி, ஒரு ஐயேயெஸ், ஒரு மில் முதலாளி, ஒரு பண்ணையார் என்று வருவார்களாக்கும் என்று பார்க்கிறேன். ம்ஹும். ஐந்து ஆண்டுகள் சீர்திருத்தப் பள்ளியில் இருந்தேன் என்று சொல்லி வருகிறார் ஒர்த்தர். நீங்கள் சத்தியமாக நம்ப மாட்டீர்கள். ஒருத்தர் நாலு கொலை பண்ணி விட்டு பெயிலில் வந்திருக்கிறார். அவர் என் தீவிர வாசகர். தன்னுடைய ஜெயில் சூப்ரண்ட் குமுதத்தில் நான் எழுதும் பக்கங்களைக் கிழித்து விட்டு குமுதத்தைக் கொடுக்கிறார் என்று புகார் சொன்னார் என்னிடம். ”அவன் எழுதுவதைப் படித்தால் நீ இன்னும் பல கொலைகள் செய்வாய்” என்கிறாராம். நீங்கள் நம்ப மாட்டீர்கள். சமீபத்தில் நடந்த கதை.
இந்த கோஷ்டியிலேயே ரொம்ப soberஆன ஆள் செல்வகுமார் மட்டும்தான். அவர் மட்டுமே விதிவிலக்கு. ஸ்ரீராமும் தெளிவுதான். ஆனால் ஸ்ரீராம் வருகிறார் என்றாலே ஐயோ டாக்டரா என்று எல்லோரும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று பதுங்கி விடுவார்கள். இத்தனைக்கும் அவர் ஊசியெல்லாம் போட மாட்டார். தங்கமான மனிதர். ஆனாலும் எல்லோருக்கும் டாக்டர் என்றால் ஒரு பீதி. அதிசயமான விஷயம் என்னவென்றால், இந்த உலகத்திலேயே அவந்திகா பயப்படும் ஒரே ஹ்யூமன் பீயிங் ஸ்ரீராம். அதேபோல் ஸ்ரீராமுக்கும் அவந்திகாவைக் கண்டால் பயம்தான். இதற்காகவே ஸ்ரீராமை வீட்டுக்குள் அழைக்காமல் வெளியிலேயே டாட்டா சொல்லி விடுவேன். இத்தனைக்கும் ரெண்டு பேருமே embodiment of loveதான். எனக்குமே ஏன் எல்லோரும் ஸ்ரீராமைக் கண்டு பீதி அடைகிறார்கள் என்பது புரியாத புதிர்தான். பழகுவதற்குப் பச்சைக் குழந்தை. பார்க்கவும் அப்படியே. இருந்தாலும் மனித வெடிகுண்டைப் பார்த்தது போல் ஓடுகிறார்கள். என்னதான் செய்வாரோ எனக்குத் தெரியவில்லை.
ஆனால் செல்வாதான் இதிலும் ஸ்கோர் பண்ணுகிறார். அவர் டாக்டர் ஸ்ரீராமின் வாடா போடா நண்பர். ரெண்டு பேருமே டீடோட்டலர்கள். ரெண்டு பேரும் வெறும் டீயைக் குடித்தபடி மவுண்ட் ரோடு டீக்கடையில் அதிகாலை நாலு மணி வரை பேசிக் கொண்டிருப்பார்கள்.
நான்தான் ஒரு கதையே எழுதியிருந்தேனே, தாய்லாந்து யாவ் நாய் தீவில் என் வாசகர் வட்ட நண்பர்கள் என்னை நீலப்படம் எடுக்க ஒரு விடியோவே செட் பண்ணி வைத்திருந்தார்கள் என்று. நல்லவேளை, அன்றைய தினம் என்னை அந்தப் புண்ணியவான் தஸ்தயேவ்ஸ்கிதான் காப்பாற்றினார். அவர் மட்டும் இந்தப் பூவுலகில் பிறந்திருக்காவிட்டால் என் நிலை என்ன ஆகியிருக்குமோ? ஆனால் ஒன்று, எனக்காக உயிரையும் கொடுப்பார்கள். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ரேஷன் கடையில் கொரோனா உதவித் தொகை கொடுத்தால் அதைக் கொண்டு வந்து என்னிடம் கொடுக்கிறார் ஒருத்தர் என்றால் பாருங்களேன். அந்த அளவு உயிரை வைத்திருக்கிறார்கள். அதே அளவு உயிரை சினிமா நடிகருக்கும் எப்படி வைத்திருக்கிறார்கள் என்றுதான் என் குழப்பம்.
இத்தனையும் சொல்லி விட்டு அராத்துவைப் பற்றிச் சொல்லவில்லையே? வேண்டாம், நாவல்தான் எழுத வேண்டும். அப்புறம் என் வாசகிகள்? வேண்டாம். ஒவ்வொரு ஜீவனுமே மனித வெடிகுண்டுதான். எப்போது என்ன நடக்கும் என்று கடவுளுக்கே தெரியாது.
மூவர் என்று சொல்லி விட்டு இருவராகப் போய் விட்டதே? அப்படித்தான். எஸ்.ரா.வுக்கும் ஜெ. போலவே ஏராளமான வாசகர் திரள் உண்டு. ஆனால் எஸ்.ரா.வைப் போலவே அவர்களும் மர்மமானவர்கள். எஸ்.ரா. தண்ணி அடிப்பாரா? அடித்து விட்டு நிறுத்தி விட்டாரா? அல்லது, தொட்டதே இல்லையா? அரசியலில் அவர் கருத்து என்ன? சாமி கும்பிடுவாரா? நாஸ்திகரா? சைவமா? அசைவமா? காபி பிடிக்குமா? டீயா? எதுவுமே யாருக்குமே தெரியாது. எல்லாம் மர்மம். அதைப் போலவே அவரது வாசகர்களும் மர்மம்தான். ஆனால் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள் என்பதை புத்தக விழா சமயத்தில் அவரிடம் கையெழுத்துக்குக் குவியும் கூட்டத்திலிருந்து கண்டு கொள்ளலாம். அதனால் அவர்களை இங்கே சேர்க்கவில்லை.