இப்போலாம் என்ன பாராவோட ரொம்ப க்ளோஸ் போல இருக்கு?
இந்த கொரோனா காலத்துல என்ன க்ளோஸ்? கொரோனாவே எல்லாத்தையும் க்ளோஸ் பண்ணிக்கிட்டு இருக்கு, நீங்க வேறே…
இல்ல. கவனிச்சுக்கிட்டுத்தான் வர்றேன். பழக வேணாம்னு சொல்லல. அவரும் நல்ல மாதிரிதான். ஆனா உங்களோட ராசி என்னன்னா நீங்க யாரோட க்ளோஸா ஆனாலும் அவங்க பிறகு உங்களுக்கு எதிரியா மாறிட்றாங்க. பாருங்க, நீங்கதானே சொன்னீங்க, வெளி ரங்கராஜன் தன் வாழ்நாளிலேயே திட்டி எழுதின ஆள் நீங்கதான்னு… அதனால சொல்றேன்.
சேச்சே. பாரா மேட்டர்ல அப்படி நடக்க வாய்ப்பே இல்ல. ஏன்னா, அவ்ரு ஒரு நம்ப முடியாத மனிதர்.
அப்டீன்னா?
எனக்குத் தெரிஞ்ச ரெண்டு பேர். அவங்களோட கடவுளே பூமிக்கு மனுஷனா எறங்கி வந்து பழகினா கூட அடிதடி வந்துரும். ஆனா இந்த பாரா பல ஆண்டுகளா அந்த ரெண்டு ட்ராகுலாவுக்கும் நெருங்கின நண்பர். அந்த ஆளு கிட்ட ஏதோ ஒண்ணு இருக்கு.
என்னமோ என் மனசில தோண்றதை சொல்லிட்டேன். நான் சொன்னா தப்பினது இல்லை. பார்த்துக்கோங்க.
***
அது என்னவோ வாஸ்தவம்தான். அந்த நண்பர் சொன்னது எதுவும் இது வரை தப்பினது இல்லை. ஆனால் பாரா விஷயத்தில் தப்பி விடும். பாராவிடம் அப்படி ஏதோ ஒன்று இருக்கிறது. இல்லாவிட்டால் அப்படி இரண்டு ட்ராகுலாக்களோடு கூடிக் குலவுவது சாத்தியமே இல்லை.
இன்னொரு விஷயம். அப்படியே என்னோடு பழகி விட்டு என்னைத் திட்டினால்தான் என்ன என்று கேட்கிறேன். சில பெண்களோடு பழகுகிறோம். ஏதோ சந்தர்ப்பத்தில் என்னென்னவோ பேசுகிறோம். அது நடந்து பத்து ஆண்டுகள் கழித்து நேற்று அறிமுகமான நண்பர் ஒருத்தர் பத்து ஆண்டுகளுக்கு முன் அந்தப் பெண்ணுக்கு நான் எழுதின கடிதத்தை எனக்குக் காண்பிக்கிறார். இதை என்னவென்று சொல்வது? இது எப்படிய்யா உனக்குக் கிடைத்தது என்று கேட்டால், நேற்று அவள் உங்களைப் பற்றி ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தாள், அப்போது காண்பித்தாள் என்கிறார். அதனால் இப்போதெல்லாம் எந்தப் பெண்ணிடமாவது பேசினால் பத்திரிகைக்குப் பேட்டி கொடுக்கும் விதத்திலேயே பேசுகிறேன். நீ ரொம்ப அழகு என்று எக்ஸ் என்ற பெண்ணிடம் சொன்னேன் என்றால் மறுநாள் இயக்குனர் இமயம் என்னிடம் கேட்கிறார், சாரு நீங்க நம்ம நீரஜாவுக்கு ரொம்ப க்ளோஸ் போல இருக்கே என்று. பெண்களோடு ஒரு வார்த்தை பேசவே பயமாக இருக்கிறது. என்னதான் இருந்தாலும் ஆண்கள் விஷயத்தில் அவ்வளவு பயம் இல்லை. அதிலும் பாரா விஷயத்திலா பயப்பட வேண்டும்? அவர் கல்கியிலிருந்த காலத்திலிருந்தே தெரியுமே?
இன்னொரு விஷயம். எனக்கு ஒரு நல்லதோ கெட்டதோ நடப்பதாக இருந்தால் அது யார் மூலமாகவாவது நடந்தே தீரும். இல்லாவிட்டால் பெருமாள் முருகன் போய் நியூயார்க் டைம்ஸ் தலையங்கத்தில் போய் உட்காருவாரா? சரி, எதற்கு எல்லாவற்றுக்கும் அவரையே இழுக்க வேண்டும் பாவம். என்னையே எடுத்துக் கொள்வோம். தருண் தேஜ்பால் அப்போது ஒரு பிரதம மந்திரி மாதிரி. ஒரு தேசியக் கட்சியின் ஜென்ரல் செக்ரடரியே அவருடைய ஸ்டிங் ஆபரேஷனால் பதவி விலகினார். பிரதம மந்திரிக்குக் கொடுத்த அதே ட்ரிபிள் எக்ஸ் சீச்சீ… ட்ரிபிள் Z பாதுகாப்பு தருணுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ஏனென்றால், அவரைக் கொல்ல பாகிஸ்தான் கொலையாளிகளை அனுப்பியது. கொலையாளிகளை இந்திய ராணுவம் பிடித்து விட்டது. வாஜ்பாய் பிரதம மந்திரி. தருண் பாஜகவை கிழிகிழி என்று கிழித்துக் கொண்டிருக்கிறார். தருணைக் கொலை செய்து கொலைப் பழியை பாஜகவின் போட பாகிஸ்தான் திட்டம். அதன் மூலம் பாஜக ஆட்சியைக் கவிழ்ப்பதுதான் நோக்கம். விஷயம் வெளியே வந்ததும் தருணுக்கு எத்தனை பாதுகாப்பு கிடைத்திருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட ஒருத்தர் ஸீரோ டிகிரி என்ற நாவலைப் படித்து விட்டு என்னைத் தேடி அழைத்துப் பாராட்டி, அந்த நாவலை ஸ்வீடனில் உள்ள ஒரு சர்வதேச விருதுக்குப் பரிந்துரைத்து… அப்புறம் அவருக்கு நடந்ததெல்லாம் வேறு கதை.
சே, கதை எங்கோ போய் விட்டது. பாராவுக்கும் எனக்குமான நட்பினால் அவருக்கோ எனக்கோ எந்த பாதகமும் வராது என்பதுதான் நான் சொல்ல வந்தது.
இது இந்தக் குட்டிக் கதையின் முன்சுருக்கம். இனிதான் கதையே. முகநூலில் இப்போதெல்லாம் எனக்கு பாராவின் போஸ்டுகள் மட்டுமே வருகின்றன. இன்று அவர் தன் மனைவியிடம் தன்னைப் பற்றிக் கேட்டதை எழுதியிருந்தார். அம்மா, நீ என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்?
ஆஹா, இதே கேள்வியை நான் அவந்திகாவிடம் ரெண்டு நாளைக்கு ஒரு தடவையாவது கேட்டு விடுவேன். ஒவ்வொரு தடவையும் அவள் “நீ பாரதிப்பா, நான்தான் சொல்லிட்டே இருக்கேனே, உனக்கு அதில் என்ன சந்தேகம்?” என்பாள். ஏம்மா, நான் குடிப்பேனேம்மா என்பேன். பாரதியும்தான் கஞ்சா குடிப்பாராம்ல. என்னை என்ன ஒண்ணும் தெரியாதவள்னு நினைச்சியா. எனக்கு எல்லாம் தெரியும்.
எனக்கு என்ன சந்தேகம் என்றால், கணவர்கள்தான் மனைவிகளைப் பற்றி பொய் பொய்யாய் அவிழ்த்து விடுவார்கள். ஒரு எழுத்தாளனைத் தெரியும். அவன் வீட்டில் அவனுக்கு தினமும் ஏச்சு பேச்சுதான். ஏன் இந்த உதவாக்கரை எழுத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறாய் என்று. ஆனால் என் இலக்கிய வாழ்வுக்கு ஆதாரமான இவள் என்று மனைவி பெயரைப் போட்டு சமர்ப்பணம் செய்தான். செய்யாவிட்டால் உதை கிடைக்கும் போல. அப்படித்தான் நூற்றுக்கு நூறு ஆண்களும். ஆனால் பெண்கள் சமர்த்து. உண்மையைச் சொல்லி விடுவார்கள். என் கணவரா. அவர் ஒரு வேஸ்ட். அவர் ஒரு தண்டம். அவரோடு என்னைத் தவிர வேறு ஒர்த்தனாலும் குடும்பம் நடத்த முடியாது. கணவனுக்கு நேராகவே சொல்லி விடுவார்கள். பெண்ணடிமைத்தனமாவது வெங்காயமாவது, அதெல்லாம் நூறு வருஷத்துக்கு மின்னே.
இதை பாராவிடம் சொன்னேன். பாரதி விஷயத்தை. அவர் நம்பவில்லை. நானே இட்டுக்கட்டி சொல்கிறேன் என்று நினைத்து விட்டார் போல.
இது உண்மை என்றால் உங்கள் மனைவி ஒரு தெய்வம். நிற்க வைத்து சேவியுங்கள். பொய்யாகவே இருந்தாலும் உலகப் பொண்டாட்டிகள் யார் வாயிலும் இதெல்லாம் வராது.
என்னிடம் சொன்னது மட்டும் இல்லை. புத்தக விழாவில் ஒரு நிகழ்ச்சியில் அவளை திடீரென்று மேடைக்கு அழைத்துப் பேசச் சொன்ன போது அரை மணி நேரம் இப்படிப் பேசி எல்லோரையும் கண் கலங்க வைத்து விட்டாள். எனக்குத் தெரிந்து ஜக்கிக்கு அடுத்தபடியாக மதி மயக்கும் பேச்சு இவளுடையதுதான்.
சரி, மணி பத்தேகால். காலை நாலு மணிக்கு எழுந்தது. பசி மயக்கத்தில் விழுந்து விடுவேன் போலிருக்கிறது. போய் தோசை போட்டு சாப்பிட்டு விட்டு அவளுக்கு ரெண்டு தோசை போட்டு வைக்க வேண்டும். கீழே பூனைகளுக்கு சாப்பாடு கொடுக்கப் போயிருக்கிறாள்.
கதையில் பிழை இருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள். கொலைப் பசி. ஓடுகிறேன்…